இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

• உள்ளத்தில் திடம்!! வரலாற்றில் இடம்!! உழைப்பு என்பது தவம்!! சாதனை என்பது வரம் !! முடியும் வரை முயற்சி எந்நாளும் தரும் மகிழ்ச்சி ;

.

Wednesday, March 30, 2016

விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன் வாழை...

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*தரகர் இல்லாத விற்பனையில் அதிக லாபம்.

*ஒரு தாரில் 100 பழங்கள்.

*ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்.

*மாசிப்பட்டம் ஏற்றது.

*செம்மண்ணில் நன்றாக வளரும்.

ரசு கொள்முதல் செய்யாத அல்லது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத எந்தவிளைபொருளுக்கும் விலை உத்தரவாதம் கிடையாது. அதற்கு வாழையும் விதிவிலக்கல்ல. மாதப் பயிர்களில் வெள்ளாமை செய்யும் பயிர்களுக்கு விலை கிடைக்காமல் போனாலே, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் வாழை போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு விலை இல்லாமல் போனால், என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், ‘வாழை சாகுபடியில் அப்படிப்பட்ட சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து நஷ்டமில்லாமல் சம்பாதிக்க முடியும்’ என்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணப் பெருமாள். தற்போது பரவலாக அனைத்து ரக வாழைகளுமே விலை வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையிலும் கூட... விற்பனையில் சில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம், நிலையான விலையில் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறார், மணிவண்ணப் பெருமாள்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இளையநயினார்குளம் கிராமத்தில் உள்ளது, மணிவண்ணப் பெருமாளின் வாழைத்தோட்டம். பஞ்சகவ்யா தயாரிக்கும் பணியில் இருந்த மணிவண்ணப் பெருமாளிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். 

‘பசுமை விகடன்’ தூண்டிய விவசாய ஆசை!

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே நாகர்கோவில்லதான். பூர்வீகமாவே நாங்க விவசாயக் குடும்பம். ஆனா, நான் சின்ன வயசுல விவசாயம் செஞ்சதில்ல. டிப்ளமோ இ.சி.இ படிச்சிட்டு கோயம்புத்தூர்ல நாலு வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, நாகர்கோவிலுக்கே திரும்பி வந்து மளிகைக் கடை வெச்சிருந்தேன். 1993-ம் வருஷத்துல நம்மாழ்வாரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் எழுதின கட்டுரைகளையெல்லாம் படிக்க ஆரம்பிச்சதும் இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. ஆனாலும் விவசாயத்தை ஆரம்பிக்கலை.  அப்பறம் ‘பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சது. அதை, முதல் இதழ்ல இருந்து படிச்சுக்கிட்டு இருக்கேன். இதுவரை வெளியான அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமா பொக்கிஷம் மாதிரி வெச்சிருக்கேன். அதைப் படிக்க படிக்கத்தான் விவசாயத்து மேல அதிக ஆர்வமும், இயற்கை விவசாயம் செய்யணும்கிற எண்ணமும் வந்துச்சு.

பாடம் சொல்லித்தந்த வாழை!

ஆறு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஊருக்கு (இளையநயினார்குளம்) வந்து இந்த நிலத்தை வாங்கினோம். இது, என் மனைவி ஊர். இந்த நிலம் மொத்தம் ஒன்பதரை ஏக்கர். செவல் கலந்த மணல். 2012-ம் வருஷம்தான் முதல்முறையா அரை ஏக்கர் நிலத்துல கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்ததால காய்கள் நல்லா திரட்சியாத்தான் இருந்துச்சு. ஆனா, விலை கிடைக்கலை. இனிமேல் வாழையே சாகுபடி செய்யக்கூடாதுனு முடிவெடுத்துட்டேன்.

அடுத்து அரை ஏக்கர் நிலத்துல கத்திரி, அரை ஏக்கர் நிலத்துல குட்டைப்புடலைனு சாகுபடி செஞ்சேன். ‘விவசாயியே வியாபாரியா மாறணும்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதை மனசுல வெச்சு காய்கறிகளை நாமளே விற்பனை செய்யலாம்னு முடிவு செய்து நாகர்கோவில்ல இருக்கிற கடைகளுக்கும் உள்ளூர் கடைகளுக்கும் நேரடியா விற்பனை செய்தேன். ஒருகட்டத்துல உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பு கிடைச்சதால வெளியூர்களுக்குப் போறதை நிறுத்திட்டேன்” என்று சொல்லும்போது, மணிவண்ண பெருமாளுக்கு செல்போனில் ஓர் அழைப்பு வர அதற்கு பதிலளித்து விட்டு, நம்மிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன்!

“நாகர்கோவில் சந்தைக்குப் போகும் போதுதான் நேந்திரன் ரக வாழையை எடை முறையில விற்பனை செய்றதைப் பாத்தேன். வாழை குறித்து விசாரிச்சப்போ, பேயன் ரக நாட்டு வாழைக்கு எப்பவும் தேவை இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஒரு ஏக்கர் 60 சென்ட் பரப்புல பேயன் ரக வாழையை நடவு செஞ்சுட்டேன். இப்போ, அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். மத்த ரக வாழைகளுக்கு இப்போ விலை குறைவா இருக்கிற நேரத்துலயும் எனக்குக் கட்டுப்படியான விலை கிடைச்சுக்கிட்டிருக்கு. இப்போ, வாழை தவிர்த்து, 60 சென்ட் நிலத்துல சம்பங்கியும் இருக்கு. மீதி நிலத்தை  உழுது போட்டிருக்கேன். ரெண்டு ஏக்கர் நிலத்தில் தென்னையும், மீதமுள்ள இடத்தில் சுழற்சி முறையில் காய்கறிகளும், கீரைகளும் போடலாம்னு இருக்கேன்” என்ற மணிவண்ணப் பெருமாள், தனது விற்பனைச் சூத்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

பழமாகத்தான் விற்பனை!

“நான், இயற்கை விவசாயத்துல விளைவிக்கிறதால சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலினு மூணு ஊர்கள்ல உள்ள இயற்கை அங்காடிகள்லதான் வாழையை விற்பனை செய்றேன். அதனால, இருக்கிற ஆர்டரை பொறுத்துதான் குலையை வெட்டுவோம். மொத்தமா, அத்தனை வாழைக்குலைகளையும் (வாழைத்தாரைத் தான் இப்படிச் சொல்கிறார்கள்) வெட்டி விற்பனைக்கு அனுப்புறப்போதான் விலை கிடைக்காம கஷ்டம் வரும். மாசத்துக்கு 10 குலையில இருந்து 50 குலை வரைதான் வெட்டுவோம். குலை வெட்டுனதும் ஒரு ரூமுக்குள்ள அடுக்கி... மண்பானையில் வாழைச் சருகை வெச்சு ஒரு ராத்திரிக்கு புகைமூட்டம் போடுவோம். காலையில 6 மணிக்கு குலைகள்ல இருந்து சீப்பு சீப்பாக வெட்டி எடை போட்டு பேப்பர் சுற்றி விற்பனைக்கு அனுப்புவோம். இப்படி மூட்டம் போட்ட காய், அடுத்தநாள் சாயங்காலம்தான் மஞ்சள் நிறத்துக்கு வரும். இதை அஞ்சு  நாள் வரை கூட வெச்சு விற்பனை செய்ய முடியும். கடைகளுக்கு அனுப்புறது போக, உள்ளூர்க்காரங்க எங்க வீட்டுக்கே வந்தும் வாங்கிட்டுப் போறாங்க” என்றார்.
ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்!

நிறைவாக  மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த மணிவண்ணப் பெருமாள், “ஒரு குலையில் உள்ள பழங்கள், 6 கிலோ முதல் 10 கிலோ எடை வரை இருக்கும். ஒரு குலையில 10 சீப்புகள் வரை இருக்கும். ஒரு கிலோவுக்கு 10 பழங்கள் வரை இருக்கும். ஒரு குலையில இருந்து சராசரியா 7 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ 35 ரூபாய்ல இருந்து 45 ரூபாய் வரை விலை போகும். இதுவரை (16.03.16) 820 கிலோ பழங்களை அறுவடை பண்ணி,  கிலோ 35 ரூபாய்னு விற்பனை செய்ததுல 28 ஆயிரத்து 700 ரூபாய் கிடைச்சிருக்கு. ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்துல 1,900 கன்னுகள் வரை நட்டாலும் 1,800 மரங்கள்தான் தேறும். இன்னும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ வரை அறுவடை பண்ணலாம். அதுல சொத்தைக்காய்கள், வீணான காய்கள் எல்லாம் போக 9 ஆயிரம் கிலோ பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். 9 ஆயிரம் கிலோ பழங்களுக்கும் குறைந்தபட்ச விலையா 35 ரூபாய் கிடைச்சாகூட 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்தக் கணக்குல மொத்த வருமானம்னு பார்த்தா 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதுல 69 ஆயிரம் ரூபாய் வரை செலவு போக, எப்படியும்  2,74,000 ரூபாய்  லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்’ என்றவர்  அறுவடையில் மும்முரமானார். 
தொடர்புக்கு,
மணிவண்ணப் பெருமாள்,
செல்போன்: 98651-31290.

முக்கோண நடவில் செழிக்கும் வாழை!

ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தில் பேயன் வாழை சாகுபடி செய்யும் விதம் குறித்து மணிவண்ணப் பெருமாள் சொன்ன விஷயங்கள் இங்கே...

6 அடி இடைவெளி!

வாழை சாகுபடிக்கு வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை என்றாலும், செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. மாசிப்பட்டம்தான் வாழைக்குச் சிறந்த பட்டம். தை மாதம் தொடக்கத்தில் உழுது 20 நாட்கள் இடைவெளி விட்டு 2 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி அடுத்த உழவு செய்ய வேண்டும். அடுத்து 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஓர் உழவு செய்து... வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 6 அடி என்ற இடைவெளியில்  முக்கோண நடவு முறையில் குழி எடுக்க வேண்டும். குழியின் அளவு அரை அடி சதுரம், ஓர் அடி ஆழம் இருக்க வேண்டும். இந்தக் கணக்கில் 1 ஏக்கர் 60 சென்ட் பரப்பில் 1,900 குழிகள் வரை எடுக்கலாம்.

பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி!


ஒரு குழிக்கு ஒரு விதைக்கிழங்கு என்ற விகிதத்தில் நடவு செய்ய வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து... அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்த கரைசலில் மூழ்க வைத்து எடுத்து நிழலில், 20 நிமிடங்கள் உலர்த்தி விதைநேர்த்தி செய்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு விதைக்கிழங்கும் அரை கிலோ எடைக்கு அதிகமாக இருக்க வேண்டும். விதைத்த இருபது நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சலாம். சொட்டுநீர் அமைப்பது நல்லது. விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள் இலைகள் தளிர்க்கும்.
சுழற்சி முறையில் ஊட்டக்கரைசல்கள்!

விதைத்த 20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி இ.எம் திறமி நுண்ணுயிரிக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். மாதம் ஒரு முறை ஒவ்வொரு கன்றுக்கும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் ஊற்ற வேண்டும் (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது). பிண்ணாக்குக் கரைசல் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமிலக்கரைசல் 20 மில்லி புங்கன் எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். புங்கன் எண்ணெய்க்குப் பதிலாக,  வேப்பெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது என்றாலும், முன்னெச்சரிக்கையாக வருமுன் காப்பது போல இரண்டாவது மாதத்தில் இருந்தே இஞ்சி+பூண்டுக் கரைசல் தெளித்து வருவது நல்லது.

மூன்றாவது மாதத்தில் மூடாக்கு!

மூன்றாவது மாதத்தில் இருந்து பண்ணையில் கிடைக்கும் இலைதழைகளைக் கொண்டு வாழையின் தூரைச் சுற்றி மூடாக்கு இட வேண்டும். இதனால் நீர் தேவை குறையும். 3, 7 மற்றும் 12-ம் மாதங்களில் ஒவ்வொரு வாழைக்கும் கைப்பிடி அளவு வேப்பம் பிண்ணாக்கை தொழுவுரத்தில் கலந்து தூரில் இட்டு மண் அணைக்க வேண்டும். அவ்வப்போது பக்கக்கன்றுகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். வாழை, குலை தள்ளிய பிறகு, குலைக்கு நேர் எதிர்திசையில் இருக்கும் பக்கக் கன்றை மட்டும் மறுதழைவுக்காக வளர விட வேண்டும். 8 மாதத்துக்கு மேல் பூக்கள் வர ஆரம்பிக்கும். 10-ம் மாதத்தில் குலையில் இருந்து பூவை ஒடித்து விட்டு குலையின் நுனித்தண்டில்... 

200 மில்லி பஞ்சகவ்யா நிரப்பிய பாலிதீன் பாக்கெட்டைக் கட்டி விட வேண்டும். அப்படிக் கட்டும் போது குலையின் நுனி, கரைசலுக்குள் மூழ்கியவாறு இருக்க வேண்டும். குலை நுனி மூலம் பஞ்சகவ்யா உறிஞ்சப்பட்டு காய்கள் நல்ல திடமாக வளரும். சுவையும் அதிகமாக இருக்கும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். 13-ம்  மாதத்தில் இருந்து தேவையைப் பொறுத்து குலைகளை வெட்ட ஆரம்பிக்கலாம்.

பிண்ணாக்குக் கரைசல்!

10கிலோ கடலைப் பிண்ணாக்கை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு பிண்ணாக்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்த நாள் பார்த்தால் முழு தண்ணீரையும் பிண்ணாக்கு உறிஞ்சியிருக்கும். அதில் பாதியளவு எடுத்து இன்னொரு டிரம்மில் போட்டு இரண்டு டிரம்களிலும் தண்ணீரை நிரப்பி... காலையும், மாலையும் கலக்கி விட வேண்டும். நான்காவது நாள், இக்கரைசலுடன் சமபங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்தால் பிண்ணாக்குக் கரைசல் தயார்.

இஞ்சி+பூண்டுக் கரைசல்!

இஞ்சி 10 கிலோ, பூண்டு 10 கிலோ, பச்சைமிளகாய் 10 கிலோ ஆகியவற்றை உரலில் இடித்து 25 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாட்கள் முழுவதும் ஊற வைத்து... மூன்றாவது நாள் வடிகட்டினால் இஞ்சி+பூண்டு கரைசல் தயார்.  10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.
இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Tuesday, January 5, 2016

பந்தல் சாகுபடியில் நவீனம்

காந்திகிராமம்:பந்தல் காய்கறிகள் சாகுபடியில் புதிய 'பெட் ஒயர்' தொழில் நுட்பத்தை காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் விவசாயிகளுக்கு பரிந்துரைத்துள்ளது.காய்கறிகள் உற்பத்தியில் பந்தல் தொழில் நுட்பம் புதிய முறை. இதில் கட்டுக் கம்பிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கிலோ ரூ.68க்கு விற்பனையாகும் கட்டுக்கம்பிகள் ஏக்கருக்கு 400 கிலோ தேவைப்படும். இதனால் ஒரு ஏக்கருக்கு ரூ.27 ஆயிரத்து 200 செலவாகிறது.
"Enter your caption here"
விவசாயிகள் கம்பிகளுக்கு மட்டுமே கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதுதவிர பந்தல் அமைப்பதற்கான வேலிக்கருங்கற்கள், சொட்டுநீர் பாசனத்திற்கான வசதிகள், தெளிப்பான்கள், பறவை வலை உள்ளிட்டவைகளுக்கு அதிக பணம் 
"Enter your caption here"
செலவாகிறது. இதனால் பந்தல் காய்கறிகள், திராட்சை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்தனர்.இதனை ஆய்வு செய்த காந்தி கிராம பல்கலை வேளாண் அறிவியல் மையம் 'பெட் ஒயர்' எனும் புதிய தொழில் நுட்பத்தை கடந்த 6 மாதங்களுக்கு முன் பரிட்சார்த்த முறையில் அறிமுகப்படுத்தியது. ஆய்வுக்காக பல்கலையின் வேளாண் அறிவியல் மைய வளாகத்தில் 'பெட் ஒயர்' தொழில் நுட்பத்தில் பீர்க்கங்காய் பந்தல் அமைக்கப்பட்டது.

இதன் மூலம் பந்தல் சாகுபடியில் ஒரு ஏக்கருக்கு 80 கிலோ 'பெட் ஒயர்' பயன்படும். ஒரு கிலோ 'பெட் ஒயர்' ரூ.150க்கு கிடைக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் செலவாகிறது. இதன்மூலம் ரூ.15 ஆயிரம் சேமிக்கப்படுகிறது.அத்துடன் 200 கிலோ மீட்டர் வேகத்துடன் அடிக்கும் காற்று, கொட்டித் தீர்க்கும் மழையால் இந்த பெட் ஒயர் துருப்பிடிப்பதும் இல்லை.
வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் செந்தில்குமார் கூறியதாவது: பந்தல் காய்கறிகள் சாகுபடியில் சிறந்த பயனை 'பெட் ஒயர்' தொழில்நுட்பம் வழங்கியுள்ளது. மழை, வெப்பம் என மாறிய தட்பவெப்ப நிலையிலும் துருப்பிடிக்காமலும், சேதாரம் ஆகாமலும், திறன் குறையாமலும் உள்ளது. விவசாயிகள் தாராளமாக பயன்படுத்தலாம், என்றார்.

வாழை சாகுபடியில் பெட்
ஒயரின் பங்களிப்பு :


1. சூறாவளி காற்றிலிருந்து பாதுகாப்பு.
2. ஒரு ஏக்கருக்கு 30 kg பெட் ஒயர் 
மட்டுமே போதுமானது. 
3. ஒரு ஏக்கருக்கு ஒயர் ரூ 6,000 மற்றும் 
கட்டுவதற்க்கான செலவுகள் 
ரூ 10,000 மொத்தம் ரூ 16,000. 
4. 220 கிலோ மீட்டர் காற்றின் வேகத்தை
தாங்கக் கூடியது. 
5. அதிகபடியான எடையும் தாங்கக்கூடியது.
6. ஒரு ஏக்கருக்கு ரூ 35,000 வரை சேமிப்பு . 
7. சுற்று சூழலுக்கு பாதுகாப்பானது. 
8. நீண்ட நாட்கள் உழைக்க கூடியது.
9. பலமுறை உபயோகப் படுத்தலாம்.
10. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் 
பெட் ஒயர் பாதுகாப்பில் அதிக மகசூல்
மற்றும் இலாபம் அடைந்திருக்கிறார்கள்.

பெட் ஒயர் சிறபியல்புகள் :

1. தோட்டபயிர்களான பீர்கங்காய்,
புடலங்காய்,பாகற்காய்,அவரை மற்றும் 
சுரக்காய் போன்ற காய்கறி பயிர்களுக்கு 
பந்தல் அமைத்து சாகுபடி செய்தால்
அதிகப்படியான மகசூல் பெறலாம்.
2. பெட் ஒயர் கொண்டு பந்தல் அமைத்தல்
எளிய முறையில் வழுவான ,மிக குறைந்த 
செலவில் செய்யக் கூடியது.
3. பெட் ஒயர் பலவிதமான காற்றையும், 
அதிக வெப்பத்தையும்,மேலும்
எடையையும் தாங்கக் கூடியது.
4. ஒரு ஏக்கருக்கு காய்கறி பந்தல்
அமைக்க 85 kg பெட் ஒயர் மட்டுமே போதும்.
5. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்
பெட் ஒயர் பாதுகாப்பில் அதிக மகசூல் 
மற்றும் இலாபம் அடைந்திருக்கிறார்கள்.
6. பலமுறை உபயோகப்படுத்தலாம்.
7. பூச்சி மருந்தின் தாக்கம் ஏதுமில்லை.

தொலைபேசி :

+91 4324 250160

விற்பனையாளர் :

+91 96557 11928


Thursday, December 31, 2015

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை!

22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! 
ரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்.
பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு  மணி நேர பயண தூரத்துல இருக்கிற மாதிரி நிலம் தேடுனேன். அப்படி 2001-ம் வருஷம் கிடைச்சதுதான் இந்த நிலம். எங்க வீட்டுல இருந்து 50 கிலோ மீட்டர் தூரம்தான். மொத்தம் மூணே முக்கால் ஏக்கர். பக்கத்துலேயே ரெண்டே கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சிருக்கேன். மொத்தம் ஆறு ஏக்கர். இதுல, நாலு ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, சவுண்டல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களைப் போட்டிருக்கேன். ஒண்ணே கால் ஏக்கர்ல ஏ.டி.டீ-43 நெல் இருக்கு. மீதி இடங்கள்ல கிணறு, மாட்டுக் கொட்டகை, பாதை எல்லாம் இருக்கு.
பயிற்சிக்குப் பிறகு பண்ணை!
பால் பண்ணை வைக்கணும்னு முடிவு பண்ணிட்டதால ‘கே.வி.கே’வில் மாடு, கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை எடுத்துக்கிட்டு... ஆரம்பத்துல ஆறு கலப்பின மாடுகளை வாங்கினேன். அவை மூலமா, தினமும் 20 லிட்டர் வரை பால் கிடைச்சது. தனியார் பால் பண்ணைக்குத்தான் பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். அதோட, இயற்கை முறையில பசுந்தீவனங்கள், காய்கறி, சோளம், சாமை, தினைனு சாகுபடியும் செய்துட்டு இருந்தேன். சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால விற்பனைக்கு பிரச்னையில்லை. ஒரு கட்டத்துல சிறுதானிய விவசாயத்துல கவனம் போனதால மாடுகளை சரியா கவனிக்க முடியாமப் போயிடுச்சு. ஆனா, இப்போ மறுபடியும் பால் உற்பத்தியில முழுகவனத்தையும் திசை திருப்பியிருக்கேன்.
கைகொடுத்த வங்கிக்கடன்!
பால் விற்பனைனு மட்டும் நின்னுடாம மதிப்புக் கூட்டல் செய்து கூடுதல் லாபம் பாக்கணும்னு முடிவு பண்ணி... வங்கியில 35 லட்ச ரூபாய் கடன் வாங்கி, பால் பண்ணையை விரிவுபடுத்தினேன். கிணறு வெட்டி, நிலத்தைச் சரிபடுத்தினேன். அதோட, தார்பார்க்கர், சாஹிவால், சிந்தினு நாட்டு மாடுகளையும், பால் மதிப்புக் கூட்டல் இயந்திரங்களையும் வாங்கினேன். இப்போ மொத்தம் 22 மாடுகள் இருக்கு. பால் பண்ணை ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடியப் போகுது. இப்ப, தினமும் 150 லிட்டர்ல இருந்து
180 லிட்டர் வரை பால் கிடைக்குது.
இயற்கைப்பாலுக்கு கூடுதல் ருசி!
இயற்கை விவசாயத்தில் விளைந்த தீவனங்களை மட்டுமே சாப்பிடுற நாட்டு மாடுகளோட பால்ங்கிறதால, என் பண்ணை பால் நல்ல திக்கா, ருசியா இருக்கும். இந்த பாலுக்கு பிராண்ட் பெயர் பதிவு செஞ்சு, சிறுதொழிலுக்கான சான்றையும் வாங்கி பாக்கெட்ல அடைச்சு சென்னையில இருக்கிற பசுமை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன். நல்ல வரவேற்பு இருக்கு. மீதமுள்ள பால்ல ஆர்டரைப் பொறுத்து பனீர், வெண்ணெய், நெய் தயாரிச்சு விற்பனை செய்றேன். அப்படியும் பால் மீதமானா தனியார் பண்ணைகளுக்கு ஊத்திடுவேன்” என்ற ஹரிபிரசாத், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்புப் பற்றிச் சொன்னார்.
அட்சயப் பாத்திரம்!
“பால் பண்ணை வெக்கிறவங்க, பாலை மட்டும்தான் பணமா பாக்குறாங்க. அதனாலதான் சிலசமயங்கள்ல நஷ்டம் வந்துடுது. ஆனா, பசு ஒரு அட்சயப் பாத்திரம் மாதிரி. அது கொடுக்குற அத்தனையும் மதிப்புமிக்கது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. சாணம், சிறுநீரை விற்பனை செய்றேன். பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றேன். யாகத்துக்கான வறட்டி தயார் பண்ணி விற்பனை செய்றேன். தார்பார்க்கர் மாட்டுச்சாண வறட்டி யாகத்துக்கு நல்லதுங்கிறதால எப்பவும் ஆர்டர் இருந்துகிட்டே இருக்கு. ஒரு லிட்டர் சிறுநீரை எட்டு ரூபாய்னும், ஒரு வறட்டியை மூணு ரூபாய்னும் விற்பனை செய்றேன்.
‘இப்ப என்கிட்ட மொத்தம் 22 மாடுகள் இருக்கு. இதன் மூலமா மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்குது. இதுல, பசுமை அங்காடிக்கு லிட்டர் 55 ரூபாய் விலையில தினமும் 50 லிட்டர் கொடுக்கிறேன். மாசத்துக்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. நெய், பனீர், வெண்ணெய் விற்பனை மூலமா சராசரியா மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. தனியார் பண்ணைக்குக் கொடுக்கிற பால் மூலமா மாசத்துக்கு 34 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்குது. சிறுநீர், சாணம், பஞ்சகவ்யா, வறட்டி, கோழி  முட்டை, வாத்து முட்டை விற்பனை மூலமா மாசத்துக்கு சராசரியா 33 ஆயிரம் ரூபாய் வருது. ஆக மொத்தம் மாசம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல, 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்ச ரூபாய் லாபமா நிக்குது. அதுல, கடனுக்கான தவணைத் தொகையா மாசம் 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. மீதி 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்குது. வங்கிக் கடனை அடைச்சப் பிறகு, மாசம் ஒரு லட்சம் சொளையா கைக்கு கிடைக்கும்’’ என்ற ஹரிபிரசாத், மாடுகளுக்கான நோய் மேலாண்மை பற்றியும் பேசினார்.
தீவனத்தோடு மருந்து!
“மாடுகளுக்கு கோமாரி, சப்பை நோய்னு சீசனுக்கு தகுந்தாப்புல நோய்கள் வரும். அந்தந்த சீசனுக்குத் தகுந்த மாதிரி நோய் வர்றதுக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுட்டா நோய்த்தாக்குதலைத் தவிர்த்துடலாம். அதுபோக, மடிவீக்க நோய்தான் பெரும் பிரச்னை. அது எப்ப வரும்னே தெரியாது. அதுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கண்டிப்பா அவசியம். நாங்க பெரும்பாலும் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கிட்டத்தான் ஆலோசனை கேட்டுக்குவோம். அது போக, எங்க மாடுகளுக்கு... வாரத்துல ஒரு நாள் தீவனத்தோட வேப்பிலை; ஒரு நாளைக்கு பூண்டு; ஒரு நாளைக்கு மஞ்சள்னு கொடுத்துடுவோம். அதுனால பெருசா நோய் தொந்தரவு இல்லாம ஆரோக்கியமா இருக்கு.
பண்ணையில இருக்கிற வாத்துகள் மாட்டு ஈ, உண்ணிகளையெல்லாம் பிடிச்சு தின்னுடுது. அதனால பாதி பிரச்னை சரியாகிடுது. பொதுவா, மாடுகளை தினமும் குளிப்பாட்டணும். ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியா கவனமா பார்க்கணும். சில மாடுக தீவனம் எடுக்காம இருக்கும். சில மாடுக சோர்வா இருக்கும். அந்த மாடுகளுக்கு என்ன பிரச்னைனு பாத்து அதை சரி செய்யணும். ஆகமொத்தம் முறையா செய்தால் பால் பண்ணை நிச்சயமா லாபம் கொழிக்கும் தொழில்ங்கிறதுல சந்தேகமேயில்லை” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்லி விடைகொடுத்தார் ஹரிபிரசாத்.
தொடர்புக்கு,
ஹரிபிரசாத்,
செல்போன்: 99406-69714.
வெண்ணெய்க்கு தார்பார்க்கர்!
வெண்ணெய் எடுக்க தார்பார்க்கர் மாட்டுப்பாலை மட்டுமே பயன்படுத்தும் ஹரிபிரசாத், ‘‘பழைய கால முறைப்படி பானையில வெச்சு கடைஞ்சி வெண்ணெய் எடுக்கிறேன். 25 லிட்டர் பாலுக்கு 5 கிலோ வெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ வெண்ணெய் 700 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. 5 கிலோவுக்கு 3,500 ரூபாய் கிடைக்கும். விசேஷ நாட்கள்ல வெண்ணெய் ஆர்டர் அதிகமாக வரும்’’ என்கிறார்.
பலே பனீர்!
மதிப்புக் கூட்டுப் பொருட்கள் செய்வதற்கு முறையாகப் பயிற்சி எடுத்திருக்கும் ஹரிபிரசாத், ‘‘பனீர் தயாரிக்க அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. பால்ல எலுமிச்சைச்சாறை விட்டா, கால் மணி நேரத்துல பால் புளிச்சுடும். 5 லிட்டர் பாலுக்கு, ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிஞ்சு விடலாம். புளிச்சு கெட்டியான பாலை, வடிகட்டி பனீர் தயாரிக்கிற கருவியில போட்டு இடியாப்பம் பிழியிற மாதிரி பிழிஞ்சா, தண்ணியெல்லாம் சுத்தமா வடிஞ்சு கட்டியான பனீர் கிடைக்கும். அதை அப்படியே பாக்கெட் பண்ணிக் கொடுத்திடலாம். ஒரு கிலோ பனீர் தயாரிக்க 10 லிட்டர் பால் தேவை. ஒரு கிலோ பனீர் 400 ரூபாய்க்கு விற்பனையாகுது” என்கிறார்.
கைசெலவுக்கு முட்டை!
சில ரக கோழிகளையும் வளர்க்கிறார் ஹரிபிரசாத். அவற்றைப் பற்றி பேசும்போது, ‘‘எங்க பண்ணையில 150 நாட்டுக்கோழிகள் இருக்கு. கிரிராஜா, வனராஜா ரகக் கோழிகளைத்தான் வளர்க்கிறேன்.
இதுகளுக்காக தனியா கொட்டகை கிடையாது. அப்பப்ப தீவனம் கொடுக்கிறது, தடுப்பூசிகள் போடுறதோட சரி.
காலையில கிளம்பி தோட்டம் முழுக்க மேய்ஞ்சுட்டு, சாயங்கால நேரத்துல அதுகளா அடைஞ்சுக்கும். அடைக்கு வெக்கிறது போக மீதி முட்டைகளை மட்டும் விற்பனை செய்றோம். கோழிகளை விற்பதில்லை. அதேமாதிரி வாத்துகள் மூலமா கிடைக்கிற முட்டைகளை மட்டும்தான் விற்பனை செய்றேன். இந்த முட்டை வருமானம் கைசெலவுக்கு சரியா இருக்குது’’ என்று குஷியாகச் சொல்கிறார்.
துரை.நாகராஜன்
படங்கள்: எஸ்.சந்திரமௌலி

35 ஏக்கர்... ஆண்டுக்கு ரூ.18 லட்சம்...இணைய விற்பனையில் கலக்கும் இளம் விவசாயி!


தேடலும், புதுமையான முயற்சிகளும் மட்டுமே வெற்றிக்கான சூத்திரங்கள். இதை முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களால்தான் வெற்றிக்கனியைப் பறிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், தெளிவான திட்டமிடலோடு, முயற்சி செய்பவர்கள், வெற்றிக்கனியை சுலபமாகப் பறித்து விடுகிறார்கள். அப்படிப்பட்ட வெற்றியாளர்களில் ஒருவர்தான், இளம் விவசாயி ஜெயந்த்.
கிராமத்திலேயே குடியிருந்தும் சிலரால், சரியாக விவசாயத்தைக் கவனிக்க முடியாமல் போய் விடுகிறது. ஆனால், சென்னையில் கணினித்துறையில் பணியாற்றிக்கொண்டே... தேனி மாவட்டத்தில் உள்ள தனது தோட்டத்தில் விவசாயத்தையும் செய்து வருகிறார், ஜெயந்த். அதோடு, தனது விளைபொருட்களை இணையம் மூலமாக விற்பனையும் செய்து வருகிறார்.
போடிநாயக்கனூர் பரமசிவன் கோவிலில் இருந்து, கரடுமுரடான பாறைகள் நிரம்பிய ஒற்றையடிப் பாதையில் 8 கிலோ மீட்டர் பயணித்தால் வருகிறது, தொடா என்ற பகுதி. இந்தப்பகுதி, தென்மேற்குப் பருவக்காற்று தேகத்தைத் தழுவிச்செல்லும் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது, ஜெயந்த்தின் தோட்டம். பன்னாட்டு நிறுவனத்தில் வேலை செய்யும் கணினித்துறை  இளைஞர் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல்... மண்ணின் மைந்தராக வேஷ்டி, சட்டையில் விவசாயியாக வரவேற்றார், ஜெயந்த்.
தெம்பு கொடுத்த, ‘பசுமை விகடன்’!
‘‘இந்த இடத்துல எங்க பூர்வீக நிலம் 35 ஏக்கர் இருக்கு. இங்க எந்த வகையிலயும் இயற்கையைச் சேதப்படுத்தாம விவசாயம் செய்றோம். மலையடிவாரத்துல இருக்கிறதால நிலம் சரிவாகத்தானிருக்கும். இதனால மழை பெஞ்சுதுனா, தண்ணீர் நிக்காம கீழ ஓடிடும். தாத்தா காலத்தில தட்டைப்பயறு, மொச்சைனு மானாவாரி வெள்ளாமைதான் பாத்தாங்க. அப்பா விவசாயம் பார்க்க வந்ததும், கீழ் நோக்கிப் போற தண்ணியை அங்கங்க தடுத்து இறவைப் பயிர்களை சாகுபடி செய்ய ஆரம்பிச்சாரு. மா, முருங்கைனு நடவு பண்ணி, மாமரங்களுக்கு இடையில புளிய மரங்களை ஊடுபயிரா வெச்சாரு. அது இப்ப வனம் மாதிரி ஆகிப்போச்சு.
நான் தலையெடுத்ததுக்கப்புறம் புதுமையா ஏதாவது செய்யலாம்னு தோணிக்கிட்டே இருக்கும். எதேச்சையா ‘பசுமை விகடன்’ அறிமுகமானதும் எனக்கு புதுத்தெம்பு கிடைச்ச மாதிரி ஆகிப்போச்சு. ‘விளைபொருட்களை இடைத்தரகர்கள் மூலமா விற்பனை செய்றதை விட, மதிப்புக்கூட்டி நேரடியா விற்பனை செஞ்சா அதிக லாபம் கிடைக்கும்’னு ‘பசுமை விகடன்’ கட்டுரைகள் தொடர்ந்து, எனக்கு சொல்லிக்கிட்டே இருந்துச்சு” என்று சொல்லி இடைவெளி விட்ட ஜெயந்த் தொடர்ந்தார்.
அங்கீகாரம் அவசியம்!
“அதனால, என்னோட படிப்பையும், அப்பாவோட அனுபவத்தையும் இணைச்சு, எங்க தோட்டத்து விளைபொருட்களைச் சந்தைப்படுத்த முடிவு செஞ்சேன். அதற்காக எண்ணைத் தயார்படுத்திக்கிட்டேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்துல பழங்கள் மதிப்புக்கூட்டல் பற்றி ஆறு மாத பயிற்சி எடுத்துகிட்டேன்.
என்னோட பண்ணை, ‘அங்ககப் பண்ணை’ என்பதற்கான சான்றிதழையும் பல்கலைக்கழகம் மூலமா வாங்கினேன். இதனால எங்க பண்ணையோட விவரம், ஆன் லைன்ல ஷேர் ஆச்சு. இதன் மூலமா சில வியாபார விசாரணைகள் வந்துச்சு. உடனே, நான் ஒரு வெப்சைட் உருவாக்கினேன். குறைஞ்சபட்சம் மூணு கிலோவுல இருந்து ஆர்டர் வாங்க ஆரம்பிச்சேன். இதனால இடைத்தரகர் பிரச்னையில்லாம மாம்பழத்தையும், புளியையும் நேரடியா விற்க முடிஞ்சது. கூடிய சீக்கிரத்துல ஒரு ‘ஆப்ஸ்’ அமைக்கப் போறேன்.
தரமான பொருள், விலை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், வாங்குறதுக்கு இங்க ஆட்கள் தயாரா இருக்காங்க. அதுக்கு முதல் தேவை உங்க பண்ணைக்கான சரியான அங்கீகாரம். அடுத்தது, வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற விற்பனை” என வெற்றி ரகசியம் உதிர்க்கும் ஜெயந்த், வார நாட்களில் சென்னையிலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தோட்டத்திலும் என தேனீயாக சுற்றிச்சுழன்று வேலை பார்க்கிறார்.
ஈரம் காக்கும் தேங்காய் நார்!
“இந்த 35 ஏக்கர் நிலத்துல, அப்பா 900 மா மரங்களை நட்டுட்டாரு. நான், 420 மா மரங்களை நட்டு இருக்கேன். எங்ககிட்ட கல்லாமை (கல்லாமணி), செந்தூரம், அல்போன்சா, இமாம்பசந்த், மல்கோவா, காளப்பாடி, காசாலட்டு, நாட்டு ரகம், ஊறுகாய் ரகம்னு பலவகையான மாமரங்கள் இருக்கு. மரத்துக்கு மரம் 30 அடி இடைவெளியில், இரண்டு அடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து, கன்றுகளை நடவு செய்திருக்கோம். மாங்கன்றுகளை சுத்தி, தேங்காய் நார் போட்டு வைச்சிருவோம். 15 நாளைக்கு ஒரு தடவைதான் தண்ணி கட்டுவோம். தேங்காய் நார் போடுறதால, வறட்சி காலத்துலயும் ஈரப்பதம் அப்படியே இருக்கும். 
பூச்சிகளை அழிக்கும் முசுடு!
மரங்கள்ல இயற்கையாகவே இருக்கிற முசுடு எறும்புகளை நாங்க அழிக்கிறது இல்லை. அது ஒரு இயற்கைக் காப்பான். தேவையில்லாத பூச்சிகளை இந்த எறும்புகள் தின்னுடுது. மரத்தின் அடியில படர்ந்திருக்கிற சிலந்தி வலைகளையும் நீக்குறது இல்ல. சிலந்தியும் பூச்சிகளைப் பிடிச்சி தின்னுடுது. பூ பிடிக்குற காலங்கள்ல 10 லிட்டர் தண்ணியில 300 மில்லி பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிச்சா பூ உதிர்றது இல்லை. மாமரம் 4 வருஷத்துலேயே காய்க்க ஆரம்பிச்சாலும், ஏழாவது வருஷத்துல இருந்துதான் நல்ல மகசூல் கொடுக்கும். இப்ப எங்ககிட்ட மொத்தம் 900 மா மரங்கள், 1,000 புளிய மரங்கள் இருக்கு. மாவுல வருஷத்துக்கு 120 டன் வரைக்கும் மகசூல் எடுத்திருக்கோம்.
இந்த வருஷம் பூ பிடிக்கற சமயத்துல மழை பெய்ஞ்சதால மகசூல் குறைஞ்சிடுச்சு. 30 டன் தான் மகசூல் கிடைச்சிது. இதை இணையம் மூலமா விற்பனை செஞ்சோம். சென்னையில இருக்கிற 90 கடைகள்ல நேரடியாவும் விற்பனை செஞ்சோம். அதனால, கூடுதல் லாபம் கிடைக்குது” என்ற ஜெயந்த் நிறைவாக, விலை மதிக்கமுடியாத மனநிம்மதி!
“அல்போன்சா கிலோ 60 ரூபாய்; மல்கோவா கிலோ 75 ரூபாய்; செந்தூரம் கிலோ 55 ரூபாய்; காசாலட்டு கிலோ 50 ரூபாய்; இமாம்பசந்த் கிலோ 75 ரூபாய்; காளப்பாடி கிலோ 95 ரூபாய்னு விற்பனை செய்றோம். இந்த வருஷம் கிடைச்ச 30 டன்னுக்கும், சராசரியா பார்த்தா கிலோவுக்கு 60 ரூபாய் விலை கிடைச்சது. அந்த வகையில 18 லட்ச ரூபாய் வருமானம். விதை நீக்கி சுத்தம் செய்த புளி 1,600 கிலோ கிடைச்சது. இதை கிலோ, 130 ரூபாய்க்கு விற்பனை செய்ததுல, 2 இலட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைச்சது. 
மரங்கள் பராமரிப்பு, புளி சுத்தம் செய்து பேக் செய்ய ஆன செலவுக்கு எல்லாம் புளியில கிடைச்ச வருமானம் போனாலும்... மாம்பழத்துல கிடைச்ச வருமானம் அப்படியே லாபம். ஆக, 35 ஏக்கர் மா, புளி மூலமா இந்த வருஷம்  18 லட்ச ரூபாய் லாபம். எந்தத் தொழில்லயும் இந்தளவுக்கு வருமானம் கிடைக்காது. அதை விட விலை மதிக்க முடியாதது, விவசாயத்துல கிடைக்குற மனநிம்மதி” என்று முத்தாய்ப்பாகச் சொன்னார்.
தொடர்புக்கு,
ஜெயந்த்,
செல்போன்: 99620-08974
ம.மாரிமுத்து
படங்கள்: வீ.சக்தி அருணகிரி

இயற்கையை இம்சிக்காத பாசனம்!
‘‘எங்க தோட்டம் சரிவா அமைஞ்சிருக்கிறதால தேவைப்படுற இடங்கள்ல 20 அடி நீளம், ஒரு அடி அகலம், 2 அடி ஆழத்துல நீரைத் தேக்கக் குழிகளை அமைச்சிருக்கோம். குழியில எடுத்த மண்ணைப் பக்கத்துலயே கரையா போட்டிருக்கோம். இதனால, பெய்யுற மழைத் தண்ணி, குழிக்குள்ள தேங்கித்தான் அடுத்த பகுதிக்குப் போகும். அதோட பண்ணையில நாலு இடத்துல பண்ணைக்குட்டையும் அமைச்சிருக்கோம்.
அங்கங்க இருக்கிற சுனைகள்ல இருந்து வழிஞ்சு வர்ற நீரை ஓரு இடத்துல தேக்கி, தொட்டி மாதிரி கட்டியிருக்கோம். அந்தத் தொட்டியில இருந்து குழாய் மூலமா பாசனம் செய்றோம். இங்க முழுக்க முழுக்க, ‘புவி ஈர்ப்பு விசை’ மூலமாகத்தான் பாசனம் நடக்குது. வருஷத்துக்கு நாலு தடவை ஆடு,மாடுகளை இலவசமாக மேய்ச்சலுக்கு அனுமதிப்போம். இதன் மூலமா கிடைக்கிற கழிவுகள் மண்ணுக்கு நல்ல உரமாகிடுது. மரங்களுக்கு இடையில இருக்கிற களைச்செடிகளை மடக்கி வெட்டிப் போட்டு மூடாக்கா பயன்படுத்துறோம். அதுவே கொஞ்ச நாள்ல மட்கி உரமாகிடும். இதனால நிலமும் சூடேறாது” என்கிறார், ஜெயந்த்.

பண்ணை

4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!
‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள்... என்று பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய ஆலோசனை! இதைத் தெளிவாகப் பின்பற்றி வஞ்சகமில்லாமல் வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருக்கும் சதுப்பேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்.
சாத்துக்குடி, எலுமிச்சை, மா, மல்லிகை, முல்லை, முள்ளில்லா மூங்கில், தேக்கு ஆகிய பயிர்களோடு... ஆடு, கோழி என கால்நடைகளையும் வளர்க்கிறார், மணிவண்ணன். ஒரு காலை வேளையில், வாஞ்சையோடு ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.
“10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, பெங்களூருல ஒரு கடையில மூணு வருஷம் வேலை பார்த்தேன். அங்க ஓரளவுக்கு எலக்ட்ரீசியன் வேலையைக் கத்துக்கிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி வந்து எலக்ட்ரிகல் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க கிராம சுத்துவட்டாரத்துல எலக்ட்ரீசியன் யாரும் இல்லாததால நல்ல வருமானம். அப்பா கூட சேர்ந்து 4 ஏக்கர்ல விவசாயமும் பார்த்தேன். கல்யாணம் ஆனதும் சொத்தைப் பிரிச்சாங்க. அதுல ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல மல்லாட்டை (நிலக்கடலை), உளுந்துனு பயிர் செஞ்சுக்கிட்டு இருந்தேன். பெருசா வருமானம் இல்லாட்டியும், ஆர்வத்தால விவசாயத்தை விடாம செய்துக்கிட்டிருந்தேன்.
ஒரு தடவை போளூருக்குப் பக்கத்துல இருக்குற பர்வதமலைக்குப் போயிருந்தப்போ ஒரு தோட்டத்துல ’ரெட் ரோஸ்’ சாகுபடி செய்திருந்தாங்க. அதைப் பார்த்ததும், எனக்கும் ஆசை வந்தது. உடனே, வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்ல இருந்து ரோஜா நாற்றுகளை வாங்கிட்டு வந்து, 40 சென்ட்ல நட்டேன். அது நல்லா வளர்ந்து தினம் 500 ரூபாய் அளவுக்கு (23 ஆண்டுகளுக்கு முன்பு) வருமானம் கொடுத்தது. அந்த சமயம் என்னோட அண்ணன் அவரோட நிலத்துல வாழை நட்டார். அதனால, பொதுக்கிணறுல தண்ணீர்ப் பற்றாக்குறை வந்துடுச்சு. அதனால, ரோஜா சாகுபடியை விட்டுட்டேன்” என்ற மணிவண்ணன் தொடர்ந்தார்.
வறட்சியைச் சமாளிக்க முல்லை!
“வறட்சியைத்தாங்கி வளர்ற பூக்களைப் பத்தி விசாரிச்சப்போ, முல்லைப்பூ பத்தி சொன்னாங்க. 33 சென்ட் நிலத்துல 300 முல்லைச் செடிகள நடவு செய்தேன். வீட்டுல இருக்குற ஆட்களே பராமரிச்சோம். மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைச்சது. அந்த வருமானத்துல ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினோம். பிள்ளைகளையும் படிக்க வெச்சு கல்யாணம் செய்து கொடுத்தோம்.
சாத்துக்குடிக்கு ஊடுபயிராக மல்லிகை!
அப்பறம் ஒண்ணரை ஏக்கர்ல பங்கனப்பள்ளி, அல்போன்சா மா ரகங்கள்ல 100 செடிகளை நட்டோம். அதுல 30 செடிகள் பட்டுப்போச்சு. இப்போ 70 மரங்கள் நிக்குது. ஆட்கள் பிரச்னை அதிகமானதால, முல்லைச் செடிகள்ல இருந்து பூவெடுக்குறதை நிறுத்திட்டு, நாற்று உற்பத்திக்காக குச்சிகளை மட்டும் வெட்டி அனுப்புறோம். 40 சென்ட் நிலத்துல தண்டு மூலமா உருவாக்கின சாத்துக்குடியை நட்டு, அதுக்கு இடையில மல்லிகைச் செடிகளை ஊடுபயிரா நட்டுருக்கோம். சாத்துக்குடி ரெண்டரை வருஷத்துலேயே காய்ப்புக்கு வந்திடுச்சு. மல்லிகையிலயும் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. 10 சாத்துக்குடிச் செடிகள் பழுதாகிடுச்சு. அந்த இடங்கள்ல எலுமிச்சைச் செடிகளை நடவு செய்துட்டேன். இப்ப எலுமிச்சையெல்லாம் 5 வருஷத்து மரமா நிக்குது.
தோட்டத்துல திருட்டு அதிகமா இருந்ததால, 8 அடி உயரத்துக்கு நிலத்தைச் சுத்தி வேலி போட்டோம். வேலியை ஒட்டி 1,000 தேக்கு கன்னுகளை நட்டுருக்கோம். 4 வருஷம், 3 வருஷம், 2 வருஷ மரங்களா இருக்குது” என்று மணிவண்ணன் நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி.
2 கோழியிலிருந்து 200 கோழிகள்!
“வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற இடத்துல ஆடு வளர்க்கலாம்னு 19 தலைச்சேரி பெட்டை ஆடுகள், 1 போயர் கிடா வாங்கிட்டு வந்து பரண் அமைச்சு வளர்த்தோம். 40 மாசம் கடந்த நிலையில, 48 ஆடுகளா பெருகி நிக்குது. தாதுஉப்பு கொடுக்காததால 24 குட்டிகள் பிறந்து நாலு மாசத்துலயே இறந்திடுச்சு. சரியா பராமரிச்சிருந்தா இழப்பைத் தவிர்த்திருக்கலாம்.
ஆட்டுத்தீவனத்துக்காக கோ-4, வேலிமசால் வளர்க்கிறோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் 3 கிலோ பசுந்தீவனமும், 60 கிராம் அடர்தீவனமும் கொடுக்கிறோம். தினமும் 5 கிராம் தாதுஉப்பையும், 10 கிராம் சமையல்உப்பையும் தண்ணில கலந்துகுடிக்கக் கொடுப்போம்.
தோட்டத்துக்கே குடிவந்த பிறகு, ரெண்டு கோழி வாங்கி வளர்த்தோம். அந்தக்கோழியில இருந்து கிடைச்ச முட்டைகள்ல வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தினது போக மீதியை அடை வைச்சு, 75 பெட்டைகள், 10 சேவல்கள்னு பெருக்கினோம். 6 மாசத்துக்கு முன்ன இன்குபேட்டர் வாங்கினோம். அதுல 200 முட்டைகளைப் பொரிக்க வெச்சதுல பாதி அளவுக்குத்தான் பொரிஞ்சுது. அந்தக் குஞ்சுகளுக்கு ரெண்டு மாசம் வயசாகுது. அதுக்கடுத்து பொரிச்ச குஞ்சுகள் புரூடர்ல இருக்கு. இப்போ 100 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சிருக்கோம்” என்று கால்நடைக் கணக்குகளைச் கச்சிதமாகச் சொன்னார் தமிழ்ச்செல்வி.
ஆட்டு எரு மட்டும்தான் உரம்!
தொடர்ந்த மணிவண்ணன், “வருஷத்துக்கு ரெண்டு முறை ஆட்டு எருவைத்தான் சாத்துக்குடிக்கும், பூஞ்செடிகளுக்கும் உரமா கொடுக்கிறோம். ஒவ்வொரு தடவையும் ஒரு சாத்துக்குடி மரத்துக்கு 10 கிலோ அளவுலயும், பூச்செடிகளுக்கு ஒரு கிலோ அளவுலயும் கொட்டிடுவோம். கோழிகளை மேய விடும்போது எருவைக் கிளறி விட்டு மண்ணோடு மண்ணா ஆக்கிடும். சாத்துக்குடிக்கு பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறதில்ல. பூச்செடிகளுக்கு மட்டும்தான் ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். இயற்கையான முறையிலேயே பூச்சிகளை விரட்ட முடியும்ங்கிற தகவல் தெரியும். ஆனா, அதை இன்னும் செயல்படுத்தி பார்க்கல. அடுத்து, மா மரங்களுக்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்ல.
மொத்தம் இருக்குற நாலு ஏக்கர் நிலத்துல ஒன்றரை ஏக்கர்ல மா; 40 சென்ட்ல சாத்துக்குடி, எலுமிச்சை, மல்லிகைப்பூ; 34 சென்ட்ல முல்லை; 65 சென்ட்ல பசுந்தீவனம்; 25 சென்ட்ல முள்ளில்லா மூங்கில்; 16 சென்ட்ல வீடு, ஆட்டுக்கொட்டகை, கோழிக்கொட்டகை இருக்கு. இப்போ தனியா, 30 சென்ட்ல சாத்துக்குடியோட மல்லியை நட்டு வெச்சிருக்கேன். 40 சென்ட் நிலத்தை மல்லாட்டைப் போடுறதுக்காக விட்டு வைச்சிருக்கேன்” என்றவர், வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
“70 மா மரங்களையும் வருஷத்துக்கு 15 ஆயிரம் ரூபாய்னு மூணு வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டிருக்கேன். 40 சென்ட்ல 40 சாத்துக்குடி மரங்கள் இருக்கு. ஒவ்வொரு மரத்துலயும் சராசரியா 120 கிலோ வீதம், 40 மரத்துல இருந்து 4 ஆயிரத்து 800 கிலோ காய் கிடைக்கும். சராசரியா கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்தாலே... ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். ஒரு எலுமிச்சை மரத்துல 1,000 காய்கள் வீதம், 10 எலுமிச்சை மரங்கள்ல இருந்து 10 ஆயிரம் காய்கள் கிடைக்குது. ஒரு காய் சராசரியா ரெண்டு ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. சாத்துக்குடி, எலுமிச்சை ரெண்டுலயும் செலவு போக... ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும்.
ஊடுபயிரா இருக்குற 500 மல்லி செடியில் இருந்து தினமும் 3 கிலோ முதல் 12 கிலோ வரைக்கும் பூ கிடைக்கும். சராசரியா தினம் 5 கிலோனு வெச்சுக்கிட்டா, மாசத்துக்கு 150 கிலோ. சராசரி விலையா கிலோவுக்கு 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டா 15 ஆயிரம் ரூபாய். இதுல, பறிப்பு, பூச்சிக்கொல்லிக்கு 6 ஆயிரம் ரூபாய் செலவு போக 9 ஆயிரம் ரூபாய் லாபம். ஒரு வருஷத்துக்கு சராசரியா 72 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும் (4 மாதங்களுக்கு மல்லிப்பூ பறிப்பு இருக்காது). 34 சென்ட் நிலத்துல இருக்குற முல்லைச் செடிக் குச்சிகளை நாற்று உற்பத்திக்கு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவு போக 50 ஆயிரம் ரூபாய் லாபம்” என்ற மணிவண்ணன் நிறைவாக,
“ஆடுகளை இதுவரைக்கும் விற்பனை செய்யல. அடுத்த வருஷத்துல இருந்துதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். தற்சமயம் 26 பெட்டை ஆடுகள் இருக்கு. ஒரு ஆடு 2 வருடங்களில், 3 முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் 2 குட்டிகள் வீதம் 2 ஆண்டுகளில் 6 குட்டிகள் கிடைக்கும். 26 ஆடுகள் மூலமா, ஒரு வருஷத்துக்கு 78 குட்டிகள் கிடைக்கும். குட்டிகள் வீதம் அதை 6 மாதம் வளர்த்து விற்பனை செய்தா ஒரு ஆடு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
வருஷத்துக்கு 1,500 நாட்டுக்கோழிகளை உருவாக்கி, நாலு மாசத்துக்கு வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். நாலு மாசம் வளர்க்கும்போது, ஒரு கோழி முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை வரும். ஒரு கிலோ உயிர் எடைக்கு 200 ரூபாய் கிடைக்கும்.
பயிர்களைப் பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட மூணு லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் வருது. கால்நடைகள்லயும் எதிர்பார்த்தபடி விற்பனை அமைஞ்சிட்டா வருஷத்துக்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேல லாபம் எடுத்துடுவேன்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
வாஸ்துக்கோழி!
நாட்டுக்கோழிகளுடன் சுற்றித்திருந்த அழகுக்கோழிகளை பற்றி பேசிய தமிழ்செல்வி, “இந்த வெள்ளைக் கோழிகளுக்கு வாஸ்துக்கோழினு பேரு. பார்க்குறதுக்கு அழகா இருக்கும். வாஸ்துப்பிரச்னை இருக்குற வீட்டுல இந்தக் கோழியை வளர்த்தா பிரச்னை தீரும்னு சிலர் சொல்றாங்க.
இதே மாதிரி மயில் கழுத்துக்கோழினு ஒண்ணு இருக்கு. இது பார்க்குறதுக்கு மயில் மாதிரியான நிறத்துல லேசான கொண்டையோட இருக்கும். இந்தக் கோழிகள் ஜோடி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகுது” என்றார்.
மழைக்கால நடவு!
சாத்துக்குடி மற்றும் மல்லிகைச் செடி நடவு பற்றிப் பேசிய மணிவண்ணன், “சாத்துக்குடி, மல்லி இரண்டுக்குமே புரட்டாசி முதல் கார்த்திகை வரை உள்ள பட்டம் நடவுக்கு ஏத்தது. நிலத்தை களை நீங்கும் அளவுக்கு உழவு ஓட்டி வரிசைக்குவரிசை
20 அடி, செடிக்குச்செடி 18 அடி இடைவெளியில சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்யலாம். இரண்டு சாத்துக்குடிச் செடிகளுக்கு இடையில் நான்கு அடி இடைவெளியில மல்லிகைச் செடிகளை நடவு செய்யணும்.
சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்ய 2 அடி நீள, அகல, ஆழத்தில குழி எடுக்கணும். மல்லிகைச் செடிகளுக்கு ஒரு அடி நீள, அகல, ஆழத்துல குழி எடுத்தாலே போதுமானது. குழியை ஒரு வாரம் ஆறப்போட்டு, ஒரு கிலோ அளவுக்கு ஆட்டுச்சாணத்தையும், மேல் மண்ணையும் தள்ளி செடிகளை நடவு செய்யணும். பருவமழையிலேயே செடிகள் வேர் பிடிச்சு, துளிர்த்து வந்து விடும்.’’
15 ஆண்டுகளில் ரூ50 லட்சம்!
வேலி ஓர தேக்கு மற்றும் மூங்கில் பற்றிப் பேசிய மணிவண்ணன், “1,000 தேக்குக் கன்னையும், வளர்த்து மரமாக்கினால், 15 முதல் 20 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 50 லட்ச ரூபாய் கிடைக்கும். தண்ணீர் தேங்கி களை அதிகமாக முளைக்கும் 25 சென்ட் நிலத்தில முள்ளில்லா மூங்கில் இருக்கு. இதை 10 ஆண்டுகள் வளர்த்து ஒட்டு மொத்தமாக விற்பனை செய்தா 100 டன் மூங்கில் கிடைக்கும். ஒரு டன் 4 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 4 லட்ச ரூபாய் கிடைக்கும்” என்கிறார்.
தொடர்புக்கு,
மணிவண்ணன்,
செல்போன்: 93610-53327
 காசி.வேம்பையன்
 படங்கள்: கா.முரளி

காய்த்துக் குலுங்கும் நெல்லி... பூத்துக் குலுங்கும் சம்பங்கி...


அசர வைத்த அய்யாவின் ஆலோசனை!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: க.சத்தியமூர்த்தி
‘‘நம்மாழ்வார் என்கிற ஆலமரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விழுதுகள் உருவாகி தனித்தனி மரங்களாகத் தழைத்து அவர் பெயரை உரக்கக் கூறிக் கொண்டிருக்கின்றன. அந்த அற்புத ஆலமரத்தில் நானும் ஒரு சிறு விழுது” என்கிறார், கரூர் மாவட்டம், பரமத்தி அடுத்துள்ள வேட்டையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரன். நம்மாழ்வார் சொல்லிக்கொடுத்த பாடத்தை அச்சுப் பிசகாமல் தனது பண்ணையில் நடைமுறைப்படுத்தியும் வருகிறார், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான மனோகரன்.
பண்ணையின் முகப்பில் வரிசைகட்டி நிற்கின்றன, நான்கு வேப்பமரங்கள். வேப்பிலைகள் தாலாட்டும் மரத்தில் மாட்டப்பட்டிருக்கிறது, நம்மாழ்வார் புகைப்படம். புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருக்கும் நம்மாழ்வாருக்கு மலர் தூவி வணங்கி விட்டு நம்மிடம் பேச வந்தார், மனோகரன்.
காக்கிச்சட்டைக்குள் பசுமைத்தேடல்!
“நம்மாழ்வார் அய்யா, மறைவுக்குப் பிறகு அவரோட படத்தை அவர் மிகவும் நேசித்த வேப்பமரத்திலேயே மாட்டி வெச்சு மரியாதை செய்துக்கிட்டு இருக்கேன். தினமும் பண்ணைக்குள் நுழைந்ததும் படத்துக்கு மலர் தூவி வணங்கிட்டுத்தான் பண்ணை வேலைகளை ஆரம்பிப்பேன்.
கரூர்ல இருக்கிற என்னோட வீட்டு பூஜை அறையிலும் அய்யாவோட படம் இருக்கு. என்னோட விவசாய வாழ்க்கைக்கு வழிகாட்டிய அவர், என்னைப் பொறுத்தவரை கடவுளுக்குச் சமமானவர்.
நான் 35 வருஷம் காவல்துறையில வேலை பார்த்தேன். போலீஸ் வேலையில இருந்தாலும்... விவசாயத் தேடல் தீவிரமா இருந்துச்சு. நேரம் கிடைக்கும்போதெல்லாம் என்னோட பூர்விகத் தோட்டத்துக்குப் போயிடுவேன். அங்க, எனக்குத் தெரிஞ்ச அளவுல வெள்ளாமை செய்துக்கிட்டு இருந்தேன். அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ பரிச்சயமாச்சு. அதைத் தொடர்ந்து வாசிக்க ஆரம்பிச்சதுல இயற்கை விவசாயம் பத்தித் தெரிஞ்சிக்கிட்டேன். அப்பறம்தான் நம்மாழ்வார் அய்யாவோட பழகுற வாய்ப்பு கிடைச்சது.
வானகத்துல அவரை அடிக்கடி போய் பார்த்துட்டு வருவேன். என் முகத்தைப் பார்த்ததுமே, ‘வாங்க... இன்ஸ்பெக்டர்’னு வாய் நிறைய கூப்பிட்டுக் கட்டி அணைச்சு வரவேற்பார். அந்த அரவணைப்பு மனசுக்கு இதமா இருக்கும். ரிட்டையர்டு ஆனதுக்கப்பறம் அய்யா கொடுத்த பல பயிற்சிகள்ல கலந்துக்கிட்டேன். கரூர் குருதேவர் பள்ளியில் நடந்த நாலு மாத பயிற்சி ரொம்ப முக்கியமானது. அங்கு கத்துக்கிட்ட தொழில்நுட்பங்களை என்னோட பண்ணையில தீவிரமா நடைமுறைப்படுத்திக்கிட்டு இருக்கேன்.
வருஷம் ஆச்சு அஞ்சு... இப்போ இல்லை நஞ்சு!
நம்மாழ்வார் அய்யா, அறிமுகமாகி அஞ்சு வருஷம் ஆகுது. இந்த அஞ்சு வருஷத்துல என்னோட தோட்டம் முழு இயற்கை விவசாயப் பண்ணையா மாறிடுச்சு. தொழுவுரம், ஆட்டுக்கிடை, மூடாக்கு, மேட்டுப்பாத்தி, இருமடிப்பாத்தி, ஊடுபயிர்னு ஒண்ணு விடாமல் நடைமுறைப்படுத்தியிருக்கேன். நாட்டு மாடுகள், ஆடுகளையும் வெச்சிருக்கேன். பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், பூச்சிவிரட்டி, அரப்புமோர்க்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் இங்கேயே தயாரிச்சு தேவைப்படுற நேரத்துல பயிர்களுக்குக் கொடுக்கிறேன். அய்யா காட்டிய வழியால் என்னோட தோட்டம் இப்ப நஞ்சில்லா மண்ணா மாறி இருக்கு” என்ற மனோகரன், சற்று இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்.
விண்ணைப் பார்க்காத மண் !
“உயிர்ப்புடன் இருக்கிற மண்ணுலதான் அனைத்துச் சத்துக்களும் இருக்கும். ‘அடிமண்ணுல ஈரப்பதம் இருக்கணும். அப்படீனா... மண்ணு மேல சூரிய வெயில் படக்கூடாது. பயிர் மேலதான் படணும். அந்த மண்ணு உயிர்ப்புடன் இருக்க பசுமைப்போர்வை போத்தணும். அதாவது மண்ணு, கண்ணுக்குத் தெரியாதபடி, கொள்ளு, நரிப்பயறு, தட்டைனு ஊடுபயிரா விதைச்சு விடணும். அது வளர்ந்து மண்ணுக்குப் போர்வையா இருந்து அடி ஈரத்தைக் காப்பாத்தி பிரதானப் பயிர் வாடாமப் பாத்துக்கும். அதோட இந்த ஊடுபயிர்கள் பிரதானப் பயிருக்கான தழைச்சத்தையும் கொடுக்கும். ஊடுபயிரா ஒரு வருமானத்தையும் கொடுப்பதோடு இலைகள் மட்கி மண்ணுக்கும் உரமாகும். அந்த ஊடுபயிர்களின் கொடிகள் காய்ஞ்சு கால்நடைகளுக்கும் தீவனமாகும்’- இப்படிக் கதை போல எளிமையா சொல்லி குழந்தைக்குக் கூட விவசாயத்தைப் புரிய வெச்சிடுவார், அய்யா.
பண்ணைக்கு வந்தார்... பல நுணுக்கங்கள் தந்தார்!
2012-ம் வருஷம் ஜூன் மாசம் 3-ம் தேதி என்னோட வாழ்கையில மறக்கமுடியாத நாள். என்னுடைய நீண்ட நாள் வேண்டுகோளுக்கு இணங்க என்னோட பண்ணைக்கு வந்தார், நம்மாழ்வார் அய்யா. வந்தவர் என்னுடைய ஒன்பது ஏக்கர் நிலத்தையும் அங்குலம் அங்குலமாக நடந்து நின்று நிதானித்து சுற்றிப் பார்த்தார். எங்க பகுதியில் மேய்ச்சல் நிலங்களைச் சுற்றிலும் காட்டு முள் மரமான கிளுவையை வெச்சு வேலி அமைச்சிருப்பாங்க. இந்த மரத்தோட முள், நங்கூரக்கொக்கி மாதிரி இருக்கும். மனிதர்கள், விலங்குகள்னு எதுவும் உள்ள வர முடியாது. முள்ளு குத்துச்சுனா காயம் படாம உருவி எடுக்குறது ரொம்ப கஷ்டம். ஒணான் கூட நுழைய பயப்படும் கிளுவை வேலிகள்ல படர்ந்து கிடந்த கோவைக் கொடிகளையும் அதுல தொங்கின கோவைப் பழங்களையும் பார்த்து அய்யா ரொம்ப ஆச்சர்யப்பட்டார். உயிர்வேலியில் படர்ந்து கிடந்த பல்வேறு மூலிகைக் கொடிக ளையும் அடையாளம் கண்டு சொன்னார்.
அப்போ, ‘இன்னிக்கு பல நன்மைகளைக் கொடுக்கிற இது போன்ற உயிர்வேலிகளை அழிச்சிட்டு, பல ஆயிரம் ரூபாய் செலவு பண்ணி நிலத்தைச் சுற்றிலும் தூண்கள் நட்டு முள்கம்பி வேலிகளை அமைக்கிறாங்க. இதனால பயிருக்கும் சுற்றுச்சூழலுக்கும் எந்த நன்மையும் இல்லை. ஆனா, கரூர், தாராபுரம், காங்கேயம் பகுதிகள்ல இன்னும் இது போன்ற உயிர்வேலிகளைக் காப்பாத்திக்கிட்டிருக்காங்க. இந்த கிளுவை அரண் போல நிலத்தைச் சுத்தியும் இருக்கும். அதுல படர்கிற தழை, தாம்புகள் கால்நடைகளுக்குத் தீவனமாயிடும். செலவே இல்லாத இந்த உயிர்வேலிகளைக் கண்டிப்பாக காப்பாத்தணும்’னு அய்யா ஆதங்கத்தோட சொன்னார்.
மேட்டுப்பாத்தியில் நாட்டுக் காய்கறி!
‘ஒவ்வொரு பண்ணையிலும் கொஞ்சம் இடத்திலாவது காய்கறிச் செடிகள் கண்டிப்பா இருக்கணும்’னு நம்மாழ்வார் சொல்வார். ‘நிலத்துல வெயில் படுற இடத்துல மேட்டுப்பாத்திகள் அமைக்கணும். அதில் நம்ம வீட்டுக்குத் தேவையான நாட்டு ரக காய்கறிகளை உற்பத்தி செஞ்சு நஞ்சு இல்லா உணவை முதலில் நம்ம குடும்பத்துக்குக் கொடுக்கணும். ஆர்வம் உள்ளவங்க அதிக பரப்பளவுல நாட்டுக் காய்கறிகளை உற்பத்தி செஞ்சு... சந்தைகளில் விற்பனை செஞ்சு வருமானம் பார்க்கலாம்’னு சொல்வார். அதனால நானும் மேட்டுப்பாத்தியில நாட்டுக் காய்கறிகளை சாகுபடி செய்துக்கிட்டு இருக்கேன்” என்ற மனோகரன் சம்பங்கித் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்.
பூ உதிர்வதைத் தடுத்த அமுதக்கரைசல்!
“50 சென்ட்ல சம்பங்கி சாகுபடி செய்றேன். அந்த வயலைச் சுற்றிப் பார்த்த நம்மாழ்வாருக்கு என்னுடைய சாகுபடி முறையில் முழுதிருப்தி இல்லை. பூக்கள் சீராக இல்லாமலும், உதிர்ந்து கிடப்பதையும் பார்த்த அவர், அதைச் சீராக்கி அதிக மகசூல் எடுக்கிற வித்தையைச் சொல்லிக் கொடுத்தார். 15 நாட்களுக்கு ஒரு முறை பாசனத் தண்ணீர்ல அமுதக்கரைசலைக் கலந்து விடச் சொன்னார். அவர் சொன்னது போலவே செய்தேன். ஆறே மாதங்கள்ல நல்ல பலன் கிடைத்தது. பூக்கள் உதிராம மகசூல் கூடியது. இன்றைய தேதியில் நாள் ஒன்றுக்கு 20 கிலோ சம்பங்கி பறித்து விற்பனை செய்றேன்.
சரம் சரமாய் நெல்லி!
இங்க ஒன்பது மலைநெல்லி மரங்கள் இருக்கு. ஆனா, காய்ப்பு சிறப்பா இல்லை. அந்த மரங்கள் பக்கத்துல வந்து கொஞ்ச நேரம் நின்னு பார்த்த நம்மாழ்வார், ‘நெல்லிக்காய் ஆயுளைக் கூட்டும் அற்புதக்கனி. மலைப்பிரதேசத்தில் நன்றாக வளரக்கூடிய மரம். இங்கு அந்த அளவுக்கு சிறப்பாக வளராது. இருந்தாலும் நான் சொல்லுற விஷயத்தை நடைமுறைப்படுத்திப் பாருங்க...
மலைப்பயிர்கள் இயற்கையாக வளரக்கூடியவை. உரம், தண்ணீர் தேவையில்லை. காய்ச்சலும் பாய்ச்சலும்தான் அதற்கான தொழில்நுட்பம். அதோடு மழைக்காலத்துக்கு முன்பாக ஒவ்வொரு மரத்தைச் சுற்றிலும் 25 கிலோ ஆட்டு எருவைக் கொட்டி, அது மேல வளமான செம்மண்ணைக் கொட்டி மூடி விடணும்.
2 லிட்டர் பஞ்சகவ்யா கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மரத்தை சுற்றிலும் நேரடியாக ஊற்றணும். வருஷத்துக்கு இரண்டு முறை இதைச் செய்து பார்த்துட்டு என்கிட்ட சொல்லுங்க’னு சொன்னார்.
அதே போல செய்தப்போ நெல்லிக்காய் காய்ச்சு குவிஞ்சுது. போன வருஷம் ஒரு மரத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைச்சுது. மலைநெல்லியில ஊறுகாய் தயாரிச்சிருக்கேன். அது ரொம்ப சுவையா இருக்கும். நினைத்தாலே எச்சில் ஊறும். ஆனா, அதை சுவைக்கத்தான் இப்போ நம்மாழ்வார் இல்லை” என்று ஆதங்கப்பட்ட மனோகரன், தொடர்ந்தார்.
மரங்களின் அவசியம்!
“என்னுடைய பண்ணைக்கு நடுவில் ஒரு சின்ன மாந்தோப்பு இருக்கு. அங்க மர நிழல்ல கயிற்றுக்கட்டில் போட்டு ஓய்வெடுத்த நம்மாழ்வார் அய்யா, பண்ணையில் விளைந்த மாம்பழத்தை சுவைத்தார். அப்படியே மாமரங்கள்ல கவாத்து பண்றது பத்தியும் சொல்லிக் கொடுத்தார். ஒரு நாள் முழுக்க எனது பண்ணையில் இருந்து ஏகப்பட்ட ஆலோசனைகளைச் சொல்லிட்டு கிளம்பும்போது, ஒரு வேம்புக்கன்னையும், ஒரு புங்கங்கன்னையும் நட்டு வைத்தார். அதை நடவு செய்றப்போவும், ‘ஒவ்வொரு பண்ணையைச் சுற்றிலும் மரங்கள் அவசியம். அதுவும் வேம்பு, புங்கை, பூவரசு மரங்கள் ரொம்ப அவசியம். காற்றுச் சுத்தம், வெப்பத்தணிவு, பறவைகள் இருப்பு மூன்று இயற்கை நிகழ்வுகளும் நடைபெற இது முக்கியம்’னு சொன்னார்” என்ற மனோகரன், நிறைவாக,
வணக்கத்துக்குரியவர் ஆக்கிய அடக்க குணம்!
“அய்யாவுக்கு பிடிச்ச வேப்ப மரத்தில்தான் அவர் படத்தை மாட்டியிருக்கேன். அய்யாவை பொருத்தவரை, தான் சொல்லித்தரும் விஷயங்களை நியாயப்படுத்தி பேசமாட்டார். வலியுறுத்தவும் மாட்டார். ‘நான் சொல்ற தொழில்நுட்பங்களை உங்கள் வயல்ல நடைமுறைப்படுத்திப் பாருங்கள். திருப்தி இருந்தால் தொடருங்கள். நம்மாழ்வார் சொல்றார்ங்கிறதுக்காக எதையும் செய்யவேண்டாம்’னு ஒவ்வொரு கூட்டத்துலயும், பயிற்சியிலயும் சொல்வார். அந்த ‘அடக்க குணம்’தான் அவரை வணக்கத்துக்குரியவர் ஆக்கியிருக்கு. என்னைப் பொறுத்தவரை அவர் பசுமைத் தெய்வம்தான்” என்று சொல்லி  நம்மாழ்வாருக்கு வீர வணக்கம் வைத்து விடைகொடுத்தார். 
தொடர்புக்கு,
மனோகரன்,
செல்போன்: 94430-08689.

செண்டுமல்லி 77 ஆயிரம் ரூபாய்...குண்டுமல்லி 34 ஆயிரம் ரூபாய்...


மகத்தான லாபம் கொடுக்கும் மலர்கள் !

இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்
விவசாயத்தில் ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் எனக் கிடைக்குமாறு பிரித்துக் கொண்டு விவசாயம் செய்ய வேண்டும் என்று விவசாய வல்லுநர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இப்படி வருமானம் தரும் பயிர்களில் காய்கறிகள், கீரைகள், பூக்கள் போன்றவை தினசரி வருமானத்துக்கு ஏற்ற பயிர்களாக இருந்தாலும், அவற்றில் முதலிடம் வகிப்பவை பூக்கள்தான்! 
பூ சாகுபடியில் பெரிய தேவையே... வேலையாட்கள்தான். ஆனால், இன்றைக்கு வேலை ஆட்கள் கிடைப்பது பிரச்னையாக இருக்கும் நிலையிலும், அதைச் சமாளித்து வெற்றிகரமாக வருமானம் ஈட்டி வருகிறார்கள் பூ விவசாயிகள். அந்த வகையில் பெண்களுக்கு அழகு சேர்க்கும் 'குண்டுமல்லி’யையும், பூ மாலைகளுக்கு அழகு சேர்க்கும் 'செண்டுமல்லி’யையும் இயற்கை முறையில் சாகுபடி செய்து நல்ல மகசூல் எடுத்து வருகிறார், இயற்கை விவசாயி பாஸ்கர்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் கிராமத்தில் இருக்கிறது, பாஸ்கரின் பூந்தோட்டம். மல்லிகைப் பூக்களை சாக்குப்பையில் கொட்டி தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பாஸ்கரிடம் பேச்சுக் கொடுத்தபோது, ''நான் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்ஜினீயரிங் படிச்சிருக்கேன். பூர்வீகமாகவே விவசாயக் குடும்பம். காய்கறிகள், பருத்தி, கடலைனு பட்டம் பாத்து விதைப்போம். படிக்கும்போதே லீவு நாள் முழுக்க முழுக்க தோட்டத்துலதான் வேலை. பாலிடெக்னிக் முடிச்ச அடுத்த வருஷமே அப்பா விபத்துல காலமாயிட்டாங்க. குடும்பத்துல நான் ஒரே பையன்தாங்குறதுனால விவசாயத்தைத் தொடர வேண்டியதாகிடுச்சு. விவசாயத்துல முழுமையா இறங்கி 15 வருஷம் ஆகுது' என்று முன்னுரை கொடுத்த பாஸ்கர், தொடர்ந்தார்.
'சுத்துபட்டு கிராமங்கள்ல எல்லாருமே சொல்லி வெச்ச மாதிரி காய்கறிகள், கடலையைத்தான் போடுவாங்க. அதுக்கு அடிக்கடி விலை கிடைக்காம போயிடும். அதனால, வெள்ளாமையை மாத்துவோம்னுதான் பூ சாகுபடியில இறங்கினேன். எங்க பகுதியில பூ சாகுபடி அதிகம் கிடையாது. அரை ஏக்கர்ல குண்டுமல்லி, அரை ஏக்கர்ல கோழிக்கொண்டை, அரை ஏக்கர்ல செண்டுமல்லினு சாகுபடி செய்தேன். அடியுரமா தொழுவுரம் கொடுத்துட்டு ரசாயன உரம் போட்டுத்தான்  விவசாயம் செஞ்சேன். ஆனா, அதுல கணக்குப் பாக்கிறப்போ, ரசாயன உரத்துக்கும், பூச்சிக்கொல்லிக்கும் மட்டுமே அதிக செலவு ஆயிக்கிட்டிருந்துச்சு. எப்படியோ சமாளிச்சுதான் விவசாயம் பண்ணிட்டு இருந்தேன்.
மூணு வருஷத்துக்கு முன்ன சொட்டு நீர் அமைக்கலாம்னு முடிவு பண்ணுனேன். அதுக்காக, யோசனைகள் கேக்கலாம்னு முக்கூடலைச் சேர்ந்த இயற்கை விவசாயி சுப்பிரமணியனைச் சந்திச்சேன். அவர், தோட்டத்துக்கு வந்து பூக்களைப் பாத்துட்டு, 'பூக்கள் சுருங்கிப் போயி இருக்கே, ரசாயனம் உரம் பயன்படுத்துறீங்களா?’னு கேட்டார். 'ஆமா, பூச்சித்தாக்குதலும் அதிகமா இருக்கு. இதைக் கட்டுப்படுத்த வேற ஏதும் மருந்து இருக்கா’னு கேட்டேன். அவர்தான் இயற்கைப் பூச்சிவிரட்டி பத்தியும் ரசாயன உரத்துக்கு மாற்றா ஜீவாமிர்தம் பத்தியும் சொன்னார்.
உடனே ஜீவாமிர்தம் தயாரிக்க ஆரம்பிச்சிட்டேன். அவர் சொன்ன மாதிரி ஜீவாமிர்தம் தெளிச்ச அஞ்சு நாள்லயே மாற்றம் தெரிஞ்சது. பூக்கள் தரமாவும், வெளிர் நிறமாகவும், காம்புகள் நீளமாவும் பூக்க ஆரம்பிச்சது. அப்போதான் எனக்கு ரசாயன முறைக்கும் இயற்கை முறைக்குமான வித்தியாசம் தெரிஞ்சது. உடனடியா, 'இனி ரசாயன உரத்தையும் பூச்சிக்கொல்லியையும் பயன்படுத்தவே கூடாது’னு முடிவெடுத்துட்டேன். மூணு வருஷமா இயற்கை விவசாயம்தான்' என்ற பாஸ்கர்,  
'80 சென்ட்ல குண்டுமல்லி இருக்கு. ஒரு ஏக்கர்ல செண்டுமல்லி இருக்கு. செண்டுமல்லி 90 நாள் பயிர். ஆனா அதுவும் வருஷம் முழுக்க கிடைக்கிற மாதிரி சுழற்சி முறையில பண்ணிட்டு இருக்கேன். வெள்ளி, செவ்வாய்க் கிழமைகள், முக்கியப் பண்டிகைகள், விசேஷ தினங்கள்ல ஒரு கிலோ மல்லி 500 ரூபாய்க்கு மேல விற்பனையாகும். கல்யாண முகூர்த்த நேரங்கள்ல கிலோ ஆயிரம் ரூபாய் வரைகூட விலை போகும். அதனால மல்லியில நஷ்டம்ங்கிற பேச்சுக்கே இடமில்லை. அதேமாதிரி, செண்டுமல்லி இல்லாத கதம்பமோ, பூமாலையோ இருக்காது. அதனால அதுக்கும் எப்பவும் தேவை இருக்கு. இந்த ரெண்டு பூக்களையும் இயற்கை முறையில சாகுபடி செஞ்சா போதும். விவசாயத்துல வருமானம் இல்லைங்கிற பேச்சே இருக்காது'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னார்.      

செண்டுமல்லி சாகுபடி!
'மல்லியைப் போலவே செண்டுமல்லிக்கும் நிலத்தைத் தயார் செய்யவேண்டும். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டிராக்டர் தொழுவுரத்தை இறைத்து உழவுசெய்து 5 நாட்கள் ஆற விட வேண்டும்.  பிறகு, பார் பாத்தி பிடித்து, செடிக்குச் செடி ஒன்றரை அடி இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 அடி இடைவெளியில் நாற்றுகளை ஈர நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை சொட்டுநீர் மூலமாகக் கொடுக்க வேண்டும். 40ம் நாளில் இருந்து பூக்கள் பூக்கும். அதிலிருந்து 3 நாட்களுக்கு ஒரு பறிப்பு வீதம் சராசரியாக 15 பறிப்புகள் பறிக்கலாம். நடவு செய்த 90ம் நாள் வரை பூக்கள் கிடைக்கும். ஒரு பறிப்புக்கு 150 முதல் 200 கிலோ வரை கிடைக்கும்.’
 தண்டுத்துளைப்பானுக்கு வேப்பங்கொட்டைக் கரைசல்!  
பூக்களின் காம்பு சுருங்கிய நிலையிலும், பூக்கள் சிவப்பு நிறமாகவும், காய்ந்தும், காம்புகளில் துளையும் தெரிந்தால் தண்டுத்துளைப்பானின் தாக்குதல் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். 10 கிலோ வேப்பங்கொட்டையை இடித்து, 10 லிட்டர் மாட்டுச் சிறுநீரில் ஒருவாரம் ஊற வைத்து... அதில் 300 மில்லி கரைசலை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்தால் தண்டுத்துளைப்பான் கட்டுப்படும். 
இயற்கை மகத்துவம்!
'ரசாயன முறையில மல்லி சாகுபடி செஞ்சா மல்லியோட ஆயுள் 7 முதல் 8 வருஷம்தான். ஆனா, இயற்கை முறையில சாகுபடி செய்தா மல்லி 15 வருஷம் வரை மகசூல் கொடுக்கும்னு சொல்றாங்க. ரசாயன முறையில விளைஞ்ச மல்லி, பறிச்ச 5 மணி நேரத்துக்குள் மலர்ந்துடும். மலர்ந்துட்டா விலை போகாது. ஆனா, இயற்கை முறையில விளையுற மல்லிக்கு காம்பு நீளமா இருக்கிறதோட, 8 மணி நேரம் வரை மலராம வாசனை குறையாம இருக்கும். அதனாலேயே இயற்கை முறை பூக்களுக்கு சந்தையில் வரவேற்பு அதிகம்' என்கிறார், பாஸ்கர்
 ஆண்டுக்கு ஒரு முறை அடியுரம்!  
ஒரு ஏக்கருக்கு... ஒரு டன் தொழுவுரம், 70 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு, 50 கிலோ அசோஸ்பைரில்லம்  நான்கையும் கலந்து ஒரு வாரம் வைத்திருந்து... இக்கலவை உரத்தை ஆண்டுக்கு ஒரு முறை செடிக்கு
3 கிலோ வீதம் அடியுரமாக வைக்க வேண்டும். அப்போதுதான் செடிகளின் வளர்ச்சி சீராக இருக்கும். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தால், களைகள் மண்டாது. 
செண்டுமல்லி நாற்று... கவனம்!
10 அடிக்கு 8 அடி பாத்தி அமைத்து, அதில் 3 அங்குல இடைவெளியில் வரிசையாக குச்சி மூலமாக கோடு போட்டு விதையைத் தூவி லேசாக மண் போட்டு மூட வேண்டும். விதை தூவிய 4ம் நாள் முளைப்பு தெரியும். 18 முதல் 22 நாட்களுக்குள் நாற்றைப் பறித்து நிலத்தில் நடவு செய்ய வேண்டும். 22 நாட்களுக்கு மேலாகிவிட்டால், பூக்கும் பருவத்துக்கு வந்துவிடும். அதன் பிறகு செடி வளராமல் போய்விடும்!
 செண்டுமல்லி காலையில், குண்டுமல்லி மாலையில்!
''நான் திருநெல்வேலி டவுன், பூ சந்தையிலதான் விற்பனை செய்றேன். செண்டுமல்லியை அதிகாலையில பறிச்சு 10 மணிக்குள்ளேயும், மல்லியை மாலையிலும் விற்பனைக்கு அனுப்புறேன். 90 நாள்ல 2 ஆயிரத்து 250 கிலோ வரை செண்டுமல்லி கிடைக்குது. சராசரியா கிலோ 50 ரூபாய்னு 1 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். இதில் 35 ஆயிரம் ருபாய் செலவு போக, 77 ஆயிரத்து 500 ரூபாய் லாபமாகக் கிடைக்கும்.
குண்டுமல்லியில தினமும் 15 கிலோவுல இருந்து 20 கிலோ வரை மகசூல் கிடைக்குது. குறைந்தபட்சம் 15 கிலோனு வெச்சுக்கிட்டா, மாசம் 450 கிலோ கிடைக்கும். சராசரியா கிலோ 120 ரூபாய்னு கணக்கு வெச்சுக்கிட்டா, 450 கிலோ மல்லி மூலமா 54 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல, செலவு 20 ஆயிரம் ரூபாய் போக மாசத்துக்கு 34 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்' என்கிறார், பாஸ்கர்.

சீரான வளர்ச்சி கொடுக்கும் கார்த்திகைப் பட்டம்!
குண்டுமல்லி, செண்டுமல்லி ஆகியவற்றை சாகுபடி செய்யும் விதம் பற்றி பாஸ்கர் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...
'மணல் கலந்த வண்டல் மண் நிலம் பூ சாகுபடிக்கு ஏற்றது. குண்டுமல்லி நடவு செய்ய கார்த்திகைப் பட்டம் சிறந்தது. இந்தப் பட்டத்தில் மழை பெய்வதால் அடுத்த இரண்டு மாதங்கள் வரையிலும் தண்ணீர் இல்லாமல்கூட செடிகள் வளரும். இந்தப் பட்டத்தில் செடிகளின் வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.
தேர்வு செய்த நிலத்தை புரட்டாசி மாதம் ஐந்து கலப்பையால் உழவு செய்து, பத்து நாட்கள் காயவிட வேண்டும். பத்து நாட்கள் இடைவெளியில் தொடர்ந்து மூன்று முறை உழவு செய்ய வேண்டும். பிறகு, வாய்க்கால்களை அமைத்துக் கொண்டு  5 அடி இடைவெளியில் ஒன்றரை அடி ஆழம் ஒரு அடி விட்டம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும்.  
ஒவ்வொரு குழியிலும் தலா 200 கிராம் தொழுவுரம், வேப்பம் பிண்ணாக்கு, கடலைப்பிண்ணாக்கு ஆகியவற்றை இட்டு 7 நாட்கள் ஆறவிட்டு, மூன்று மாத வயதுடைய மல்லிகைச் செடிகளை நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள், இரண்டாவது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து வாரம் இருமுறை தண்ணீர் விட்டால் போதுமானது.
நடவு செய்த 60ம் நாளில் பூக்கள் தென்படும். பூக்கத் தொடங்கி ஓர் ஆண்டு வரை தினம் அரை கிலோ அளவு பூக்கள் கிடைக்கும். 2ம் ஆண்டில் தினம் 3 முதல் 5 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். 3ம் ஆண்டில் தினம் 8 முதல் 12 கிலோ வரை பூக்கள் கிடைக்கும். அதற்குப் பிறகு மகசூல் அதிகரிக்கத் தொடங்கி தினமும் 15 முதல் 20 கிலோ வரை பூக்கள் கிடைக்கும்.’

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites