இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, January 14, 2012

சாண எரி வாயு


சாண எரி வாயு ஏன்? எதற்காக?
 • கிராமங்களில் சாணத்தை எருவாட்டி ஆக்கி எரிபொருளாகப் பயன்படுத்துவர் அல்லது அப்படியே உரமாகப் பயன்படுத்துவர். இந்த இரண்டு உபயோகங்களையும் ஒன்றாக நமக்கு சாண எரிவாயுக்கலன் மூலம் மட்டுமே கிடைக்கிறது
 • சாண எரிவாயுக் கலனுக்குள் சாணத்தை செலுத்துவதன் மூலம் ”மீதேன்" என்ற எரிவாயு கிடைக்கிறது. அது நமக்கு பெட்ரோலியம் வாயுவைப்போன்று சமையலுக்குப் பயன்படுகிறது
 • சாண எரிவாயுக் கலனிலிருந்து எரிவாயு தயாரித்த பின் வெளிவந்த மீத கழிவான சாணம் நல்ல சத்துள்ள உரமாகப் பயன்படுகிறது
  பயன்கள்
 • இவ்வாறு மாட்டுச் சாணத்தை மட்டுமல்ல, அதன் மூத்திரத்தையும், மனிதர்களின் மலத்தையும் கூட சாண எரிவாயுக்கலன் மூலம் எரிபொருளாகவும் இயற்கை உரமாகவும் மாற்ற முடியும்.
 • இவை அந்த கலனுக்குள் சென்றபின் உற்பத்தியாகும் உரம் சத்து நிறைந்ததாக உள்ளது.
 • தொற்று நோயை உண்டாக்கக்கூடிய ஈக்களோ, கொசுக்காளோ மற்றவைகளோ உற்பத்தியாகாது.
 • வெளியே வரும் வாயு பிரகாசம் இல்லாமல், ஆனால் வெப்பம் தரும் நீலநிற ஜ்வாலை கொழுந்து விட்டு எரிகிறது. கிட்டத்தட்ட பாதி நேரத்தில் சமையல் முடிந்து விடுகிறது.
 • மற்ற எரிபொருள்களில் இருப்பதைப் போல “மீத்தேன்” வாயுவில் புகை இல்லை. சூடாக்கும் பாத்திரங்கள் தொடர்ந்து பளபளப்புடன் இருக்கும்


அரசு அங்கீகரித்துள்ள சாண எரிவாயுக் கலன்களின் வடிவமைப்புகள்
தற்பொழுது மத்திய அரசு கீழ்க்கண்ட, நான்கு விதமான சாண எரிவாயு சாதனங்களை, மான்யம் பெறுவதற்கு அங்கீகரித்துள்ளது.
 1. கிராமத் தொழில் ஆணைக்குழு இரும்பு டிரம் எரிவாயு கலன்
 2. கதர் கிராம ஆணைக்குழு ஃபைபர் டிரம் எரிவாயு கலன்
 3. கான்கிரீட் சுவர் டிரம் கலன் (பெரோ சிமெண்ட் வடிவம்)
 4. பந்து வடிவ நிலையான கூடார கலன் (தீன பந்து வடிவம்)
இவைகள் அமைக்க கிராமத்தில் ஏற்கனவே பயிற்சி பெற்ற கொத்தனார்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்தவித எரிவாயு கலனில் கட்டிடத்தை எளிதில் கட்டி முடித்து விடலாம். தரமான டிரம்மை கிராம அளவில் பரிசோதித்து வாங்கவேண்டும்.


கதர் கிராமத் தொழில் ஆணைக் குழுவின் இரும்பு டிரம் மற்றும் ஃபைபர் டிரம் எரிவாயுக் கலன்
அமைப்பு
 • சாண எரிவாயுக் கலனில் போதிய அளவில் ஒரு ஜீரணிப்பான் இருக்கிறது.
 • மாட்டுச்சாணம், மூத்திரம், மலம் மற்றும் கால்நடை தீவனத்தில் மீதமுள்ளதையோ அல்லது காய்கறிகளை சிறு துண்டுகளாக வெட்டிப் போட்டவற்றை அது நன்கு நொதிக்க வைக்கிறது.
 • இந்த ஜீரணிப்பானுக்கு மேலே அதை மூடிக்கொண்டு வாயு பீப்பாய் இருக்கிறது. நொதிக்க வைத்தல் மூலம் வரும் வாயு இதில் சேருகிறது. சரியான அழுத்தத்தில் ‘வாயு குழாயில்’ இது வாயுவை செலுத்துகிறது.
 • வாயு உபயோகமாகும் இடங்களுக்கு அதாவது சமையல் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், காஸ் என்ஜின்கள் ஆகியவைகளுக்கு பிரஷ்ஷர் குறையாமல் வாயு குழாய் மூலம் செலுத்துகிறது.
 • கோபர் கேஸ் ஸ்டவ்கள், கோபர் காஸ் விளக்குகள், இன்ஜின்கள் ஆகியவைகளுக்கு வேண்டிய விசேஷ வடிவமைப்பில் காஸ் சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
  சாண எரிவாயு கலனை இயக்குவது எப்படி
 • ஜீரணிப்பான் என்று கூறப்படும் நொதிக்கலவைக்கும் தொட்டி, செங்கல், சிமெண்ட், கலவை ஆகியவைகளால் கட்டப்படுகிறது அல்லது கட்டிடம் கட்டுவதற்குக் கிடைக்கும் மற்ற உபயோகமான பொருள்களால் கட்டப்படுகிறது. லேசான எஃகுத் தகடுகள் அல்லது ஃபைபர்களாஸ் முதலியவற்றைக் கொண்டு வாயு பீப்பாய் செய்யப்படுகிறது. ஃபைபர் கிளாஸ் அழுத்தப் பாலியஸ்டரால் செய்யப்பட்ட வாயு பீப்பாய்களுக்கு முதலில் அதிகமாகச் செலவாகும். ஆனாலும் பின்னால் அவைகளுக்கு வர்ணம் பூசவேண்டிய அவசியம் இருக்காது. அவைகளில் துருப்பிடிக்கவும் செய்யாது.
 • காஸைக் கொண்டு செல்வதற்கான குழாய்கள் இரும்பினாலோ அல்லது கருப்பு பாலித்தீனாலோ செய்யப்பட்டிருக்க வேண்டும். அதனுடைய உள்விட்டம் 1 அங்குலம் அல்லது 32 மில்லி மீட்டருக்குக் குறையக் கூடாது. தகட்டின் கனம் 4.7 மில்லி மீட்டருக்கு குறையக்கூடாது. பாலித்தீன் பைப்புகள் மலிவானவை, பொருத்துவதும் எளிது. வீட்டுக்குள் 3/4 அங்குலம் அல்லது 1/2 அங்குலம் ஜி.ஐ பைப்புகள் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.
 • கதர் கிராமத் தொழில் கமிஷன் அங்கீகாரம் பெற்ற அடுப்புகள் அல்லது விளக்குகள் தான் பயன்படுத்த வேண்டும். ஏனெனில், அவைகளின் திறன் ஏற்கனவே சோதிக்கப்பட்டு நிரூபணமானதாகும்.
 • சாணத்தையும் கால்நடைகளின் மூத்திரத்தையும் சேகரித்து கலவை தொட்டியில் அவைகளை நிரப்பி, தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி உள்குழாய் வழியாக உள்ளே செலுத்துவது. இவ்வாறு இயந்திரத்திற்குள் போகும் கலவைக்குச் சமமான அளவு சாண கரைசல் வெளியே வரும். அது பக்குவமாகி பலன் தரக்கூடியதாக இருக்கும். அந்தக் கலவையை உரக்குழியில் உடனே விட்டு, பண்ணைக் கழிவுகள் அல்லது வீட்டுக் குப்பைகளை அடுக்கடுக்காகப் போட்டு மூடிக்கொண்டு வரவேண்டும்.


தீனபந்து எரிவாயுக் கலனின் அமைப்பும் செயல்படும் விதமும்
 • கலனின் அடிப்பாகம் கால்பந்து வடிவில் கான்கிரீட் கலவையில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டிடச் செலவு குறைக்கப்படுகிறது. அதாவது கான்கிரீட் குழிவாகப் போடப்படுவதால் மேலே கட்டப்பட வேண்டிய கட்டிடத்தின் அளவு (கொள்ளளவு) குறைக்கப்படுகிறது. அதன்பின் கான்கிரீட் மேலே இருந்து அரைப்பந்து வடிவில் முடிந்து விடுவதால் செலவு குறைக்கப்படுகின்றது. அளவுகளில் தவறு எற்பட வாய்ப்பில்லை.
 • சாணம் ஊற்றுவதற்காக 6 அங்குல குழாய் பொருத்தப்பட்டு அதன் மேல் சாணக்கரைசலைத் தயாரிப்பதற்கான சிறிய கரைக்கும் தொட்டியைக் கட்டிக் கொள்ளலாம்
 • சாணம் வெளிவரும் தொட்டிபெரிய அளவில் கட்டப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனெனில் எரிவாயு அதிகமாக உற்பத்தியாகும் பொழுது அதிக அளவில் பொங்கிக் கூடாரத் தொட்டியிலிருந்துசாணக் கரைசல் வெளிவரும் தொட்டியில் ஏறி நிற்கும்.
 • இவ்வாறு சாணம் வெளிவரும் தொட்டியில் உள்ள சாணத்தின் மட்டம், எரிவாயுவை எரிக்க ஆரம்பித்தால் வெளிவரும் தொட்டியிலுள்ள சாணக் கரைசல் கீழே இறங்க ஆரம்பிக்கும். இங்ஙனம் சாணம் வெளிவரும் தொட்டியில் சாண மட்டம் ஏறி இறங்குவதிலிருந்து சாதனம் நன் முறையில் இயங்குவதையும், எவ்வளவு எரிவாயு உற்பத்தியாகின்றது அல்லது இருக்கிறது என்பதை உணரலாம்.
  தீனபந்து வடிவக் கலனின் சிறப்பியல்புகள்
 • கிராமத்தில் கிடைக்கக்கூடிய செங்கல், சிமெண்ட், மணல் மற்றும் ஜல்லிக் கற்களால் அடுப்பு கட்டப்படுகிறது.
 • தரைக்கடியிலேயே கட்டி முடிக்கப்படுகிறது.
 • நீடித்த உழைப்பு கொண்டது.
 • பராமரிப்பு செலவே கிடையாது.
 • பயிற்சி பெற்ற கிராமத்து கொத்தனார்களே எளிதில் கட்டக்கூடியது.
 • குளிர் காலத்தில் வாயு உற்பத்தி அதிகமாகக் குறைவதில்லை.
 • குறைந்த செலவில் கட்டப்படக்கூடியது.


நிலையான கூடார மாடல்
சாதனம் அமைக்கும் பொழுது முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய குறிப்புகள்
 • சரியான கொள்ளளவு தேர்வு செய்யப்பட்ட வேண்டும்.
 • தோண்டிய மண், குழிக்கு அப்பால் 1/2 மீட்டர் தூரத்தில் கொட்டப்பட வேண்டும்.
 • கான்கிரீட் கலவை சுத்தமான, இதற்கென தயார் செய்யப்பட்ட இடத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.
 • முதல் தரமான சேம்பர் செங்கற்களையே பயன்படுத்த வேண்டும்.
 • சுவற்றின் வெளிப்புறம் மண் அல்லது மணலால் நிரப்பப்பட வேண்டும்.
 • சுவற்றின் மேற்பகுதியின் சுற்றுப்புறத்தில் விடப்படும் இடைவெளியில் மண் மற்றும் தூசு போன்றவைகளை விழாத வண்ணம் பார்த்து கொள்ளவேண்டும்.
 • இந்த இடைவெளியில் 1 : 3 சிமெண்ட் கலவையால் நீர் அதிகம் சேர்க்கப்பட்ட நிலையில் ஊற்றப்பட்டு நிரப்பப்பட வேண்டும்.
 • சாணம் உட்புகும் / வெளிவரும் தொட்டியின் வெளிப்புறச் சுவர்கள் பொய் தளத்தை பிரித்த பிறகே கட்டப்பட வேண்டும்.
 • பொய்த்தளத்தை பிரிப்பதற்கு வசதியாக இரு தற்காலிக தூண்கள் சாணம் உட்புகும், வெளிவரும் தொட்டிகளுக்காக விடப்பட்ட துளைகளின் அருகாமையில் அமைக்கப்பட வேண்டும்.
 • பொய்த்தளம் (மண்டபம்) கட்டும் பொழுது சரிவு ஏதும் ஏற்படா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • மண்டபத்தின் வெளிப்பூச்சு உட்பூச்சு ஆரம்பித்த அந்த நாளிலேயே முடிக்கவேண்டும்.
 • செங்கற்களை பொய்த்தளத்தின் மீது அடுக்கும் பொழுது வாயு வெளிவரும் குழாயை சிறிய கம்பிகளை வெல்டு செய்து மண்டப மையத்தில் பொருத்தி விட வேண்டும்.
 • சாணம் உட்புகும் / வெளிவரும் தொட்டிகள் கான்கிரீட் அல்லது மரப் பலகைகள் கொண்டு மூடி வைக்கவேண்டும்.
 • செங்கல் கூடாரத்தை மணல் அல்லது மண் கொண்டு மூடி விடவேண்டும்.
 • கரிசல் மண் போன்ற பிரச்சனைக்குரிய இடங்களில் சாண எரிவாயு சாதனம் அமைக்கும் பொழுது 2 அடி உயரத்திற்கு ஒரு முறை ஆர்.சி.சி கான்கிரீட் பெல்ட் அமைத்து கட்டவேண்டும்.


கட்டி முடித்த சாதனத்தை இயக்கும் முறை
 • இரண்டு மூன்று வாரங்களுக்கு சாதனத்தை நீர் ஊற்றி நன்கு பதப்படுத்திய பிறகு சாதனத்தை நிரப்ப ஆரம்பிக்க வேண்டும்.
 • சாதனத்தை ஒரே நாளில் நிரப்ப முயலுவது கடினம். ஒரு மாத சாணத்தை சேமித்து வைத்து உலர்ந்த சாணத்தை நீக்கிவிட்டு நிரப்பலாம்.
 • சாணத்தை நீருடன் 1:1 என்ற விகிதத்தில் நிரப்ப வேண்டும்.
 • கதர் மற்றும் கிராம தொழில் ஆணைய வடிவமைப்பாக இருந்தால் சாணக் கழிவு வெளிவரும் குழாய் நிரம்பி வழியும் வரை ஊற்றலாம். நிலையான கூடார வடிவமைப்பாக இருந்தால் மண்டபத்தின் அடிமட்டம் (சாணம் வெளிவரும் தொட்டி விரிவடையும் மட்டம்) வரை தான் ஊற்றலாம்.
 • வாயு வெளிவரும் குழாயை மூடி விட வேண்டும். சாணம் நிரப்பிய இரு வாரங்களில் வாயு உற்பத்தி தொடங்கும் இதற்கு மேலும் சாணக் கரைசலை ஊற்றக் கூடாது.
 • நிலையான கூடார அமைப்பாக இருந்தால் ஓரிரு வாரங்களில் சாணம் உட்புகும் வெளிவரும் தொட்டிகளில் சாண மட்டம் தானாக உயருகிறதா என்று பார்க்க வேண்டும். இவ்வாறு சாண மட்டம் உயர்ந்து கொண்டே வந்து சாணம் வெளிவரும் தொட்டியின், மேல் மட்டத்தில் விடப்பட்ட வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்து விட்டால் சாதனம் சரியாக இயங்க ஆரம்பித்து விட்டது என்று அறியலாம்.
 • சாதனம் சரியாக இயங்குகின்றதா எனத் தெரியவேண்டுமானால் காலையில் சாணம் வெளிவரும் தொட்டியில் சாண மட்டம் உயர்ந்த இடத்தில் ஒரு கோடு போட்டு வைக்கவேண்டும். பின்னர் வாயுவை சமையலுக்குப் பயன்படுத்தியவுடன் மட்டம் தானாக இறங்க ஆரம்பிக்கும். அவ்வாறு ஒரு அடி முதல் இரண்டு அடிவரை இறங்க ஆரம்பித்தவுடன் குறித்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாலையில் மட்டம் தானாகவே உயரவேண்டும். வாயுவைப் பயன்படுத்தியவுடன் மட்டம் இறங்கிவிடும். இவ்வாறு நடைபெற்றால் சாதனம் நல்லமுறையில் செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
 • கதர் மற்றும் கிராமத் தொழில் ஆணைய வடிவமைப்பாக இருந்தால் வாயு உற்பத்தி ஆனவுடன் இரும்புக் கொப்பரை மேலே சென்றுவிடும். நாம் வாயுவைப் பயன்படுத்திய உடன் இரும்புக் கொப்பரை கீழே இறங்கிவிடும். இந்த நிலையைக் கொண்டு சாதனம் நல்ல முறையில் இயங்குகின்றது என்று அறியலாம்.
நிதியுதவி
மத்திய அரசாங்கத்தின் வழக்கமற்ற எரிசக்தி ஆதாரத்துறை, இந்த காஸ் இயந்திரம் / சாண எரிவாயுக் கலன் அமைப்பதற்காக மானியத் தொகையை கதர் கமிஷன் மூலம் அளிக்கின்றது. இந்த மானியத் தொகை அமைக்கப்படும் காஸ் இயந்திரத்தின் அளவையும், அமைக்கப்படும் இடத்தையும், (அதாவது மலைப்பாங்கான நிலம், அல்லது சாதாரண நிலம்) மற்றும் அமைக்கப்படும் நபரையும் (சிறு விவசாயி, குறு விவசாயி, நிலமற்ற தொழிலாளி) பொறுத்தது. இந்த மானியத் தொகை ஒவ்வொரு வருடமும் மத்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும். மூன்று மாடுகளும், சாண எரிவாயுக் கலனை நிறுவக்கூடிய அளவு வீட்டில் இடமும் உள்ள எந்த விவசாயியும் அதைப் பெறுவதற்காக காதி கமிஷனையோ அல்லது மாவட்டங்களில் உள்ள சர்வோதய சங்க கதர் பவன்களையோ அணுகலாம்.


உபேயாகமான புள்ளி விவரம்


ஒரு மாட்டிலிருந்து  எவ்வளவு (பசுஞ்) சாணம் கிடைக்கிறது?
இதைப்பற்றி திட்டவட்டமான கணக்குக் கொடுக்கமுடியாது. மாடு பெரியதா, சிறியதா, அது உண்ணும் தீனி, அது தொழுவத்தில் கட்டப்படுகிறதா அல்லது மேய்ச்சல் நிலத்திற்குப் போகிறதா என்பதையெல்லாம் பொறுத்தது அது. ஆனாலும் தொழுவத்தில் உள்ள குறிப்பிட்ட வயது வந்துள்ள நடுத்தர மாடுகளின் விஷயத்தில் கீழ்க்கண்ட கணக்கைச் சராசரியாக வைத்துக் கொள்ளலாம்.
       எருமை = ஒரு நாளைக்கு சுமார் 15 கிலோ
       காளை அல்லது பசு = சுமார் 10 கிலோ
       கன்றுகள் = சுமார் 5 கிலோ
ஒரு கிலோ பசுஞ் சாணத்திலிருந்து உற்பத்தியாகும் (காஸ்) வாயு 1.3 கன அடி.
சாண எரிவாயு சாதனத்தின் அளவு
எத்தனை மாடுகள் அல்லது ஆட்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான் எந்த இடத்திலும் ஒரு சாண எரிவாயு சாதனத்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். மிகச் சிறிய சாண எரிவாயுக் கலனின் அளவு 2 கன மீட்டர். இதற்கு 2-3 மாடுகள் வேண்டும்.


சாண எரிவாயு சாதனத்தின் அளவு
சமையல் செய்ய-ஒருநபருக்குஒருநாளைக்கு 8 கன அடி அல்லது 0.227 கன மீ.
விளக்குஎரிக்க100மெழுகுவர்த்தி ஒளியுள்ள விளக்குக்கு-4.5 கன அடி அல்லது 0.127 கன மீ
என்ஜின்களை இயக்க -15 கன அடி அல்லது 0.425 கன மீ.
ஒரு குதிரை சக்திக்கு
      ஒரு மணிக்கு


காஸ் இயந்திரம் (சாண எரிவாயுக் கலன்) நிறுவுவதற்கான முன்னோடித் தேவைகள


மாடுகள் எண்ணிக்கை
காஸ் இயந்திரம் நிறுவ விரும்பும் தனிப்பட்டவர் அல்லது ஸ்தாபனத்திடம் போதுமான கால்நடைகள் இருக்கவேண்டும். அதுவும் கூடியவரை தொழுவத்தில் நிற்கக்கூடியவைகளாக இருக்கவேண்டும். மேய்ச்சலுக்குப் போகக்கூடிய கால்நடைகளாக இருந்தால், மேய்ச்சல் நிலத்திலேயே சாணம் விழுந்துவிடும். அவைகளிடமிருந்தும் கூட இரவு நேரத்தில் தொழுவத்தில் சாணம் கிடைக்கும். ஆனால் அப்படி எவ்வளவு சாணம் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் 45 கிலோவுக்கு குறையாத பசுஞ்சாணம் கிடைக்காவிட்டால், மிகமிகச் சிறிய காஸ் இயந்திரம் நிறுவுவது கூடக் கட்டுப்படியாகாது. அந்த அளவிலாவது சாணம் கிடைத்தால், இரண்டு கன மீட்டர் (60 கன அடி) காஸ் இயந்திரத்தை நிறுவ முடியும்.
ஒரு நடுத்தரப் பசு அல்லது எருமை அல்லது காளை சராசரியாக நாள்தோறும் போடும் பசுஞ்சாணம் 10 கிலோ என்று வைத்துக் கொள்ளலாம். கொங்கணம் அல்லது அஸ்ஸாம் அல்லது மற்ற மலைப் பகுதிகளில் உள்ளது போல் மிகச்சிறிய மாடாக இருந்தால், சாணம் மிகவும் குறையும். மிகப்பெரிய எருமைகள் ஒரு நாளைக்கு 20 கிலோ வரை சாணம் போடக்கூடும். ஆனால் இவைகளெல்லாம் தொழுவத்தில் இருக்கும் கால்நடைகளுக்கான கணக்குதான். இதைத் தவிர முற்றிலும் மலத்தைக் கொண்டே உரம், காஸ் தயாரிக்கக்கூடிய இயந்திரங்களும் இருக்கின்றன. அவைகளில் மிகச்சிறிய காஸ் இயந்திரத்திற்குக் குறைந்தது வயது வந்த 60 பேர் இருக்க வேண்டியது அவசியம். விடுதியில் அல்லது பொது கக்கூஸ் இருக்கும் இடங்கள் போன்றவற்றில் தான் இது சாதாரணமாக சாத்தியமாகும். அங்கும் கூட சேர்க்கப்படும் தண்ணீரின் அளவு ஒரு முக்கியமான அம்சமாகும். ஒருவர் மலம் கழிக்கும் போது ஒரு லிட்டருக்கும் மேல் தண்ணீர் செலவழிக்கக் கூடாது. இல்லையேல் தண்ணீர் அதிகமாகி நன்றாக நொதிப்பதில்லை.
எத்தனையோ அம்சங்கள் வேறுபடுவதால், இத்தனை மனிதர்கள் அல்லது கால்நடைகள் தாம் வேண்டுமென்று சரியாகக் கூறமுடியாது. ஆனாலும் இரண்டு கனமீட்டர் காஸ் இயந்தித்தை நிறுவுவதற்குச் சராசரியாக சுமார் 3 கால்நடை அல்லது 60 பேர் அவசியமாகும் என்று சொல்லலாம். எண்ணிக்கை அதிகமாகும் அளவிற்கு பெரிய காஸ் இயந்திரம் நிறுவலாம்.
சாணம் அல்லது மலம் தவிர, தோலுரிக்கும் இடங்களில் கழிவுப் பொருள்கள் போதுமான அளவு கிடைப்பதாக இருந்தால், அங்கும் காஸ் இயந்திரம் நிறுவமுடியும். அப்படிப்பட்ட இடங்களில், இறந்த கால்நடைகளின் வயிற்றில் இருந்த சாணம், தோல் உரிக்கும் போது கிடைக்கும் கழிவுப் பொருள்கள் ஆகியவைகளை காஸ் இயந்திரத்தில் போடலாம். பன்றி வளர்க்கும் இடங்கள், கோழிப் பண்ணைகளில் அவைகள் போடும் மலம், எச்சம் ஆகியவை போதுமான அளவு கிடைப்பதாக இருந்தால் அவற்றை இதற்காக உபயோகப்படுத்தலாம்.


இட தேவைகள்
காஸ் இயந்திரத்தை நிர்மாணிக்கவும், வெளியே வரும் கழிவை நிரப்புவதற்கான குழிகள் வெட்டவும் போதுமான இடம் வேண்டும். தொழுவத்திற்கு மிக அருகிலும், மற்றொரு புறம் காஸ் உபயோகமாகும் இடத்திற்கு உபயோகப்படுத்துவதற்காக, சாணத்தை நீண்ட தூரம் கொண்டுவருவது விவேகமாகாது. சாதாரணமாக இந்த தூரம் 20 மீட்டருக்கு மேல் போகாமல் இருப்பது நல்லது.
காஸ் இயந்திரம் வெடிக்கும் அபாயம் எதுவும் இல்லை என்பதும், துர்நாற்றம் வீசும் அல்லது ஈ பரவும் பிரச்சனை எதுவும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கவையாகும். ஆகையால் வீட்டுக்கு அருகில் காஸ் இயந்திரத்தை நிறுவுவதற்கு எந்த வித ஆட்சேபணையும் இல்லை.
ஏற்கனவே குறிப்பிட்டது போல, வெளியேவரும் கழிவைக் கம்போஸ்ட் உரமாக்குவதற்குப் பல குழிகள் தோண்டுவதற்கு போதுமான இடம் காஸ் இயந்திரத்தின் அருகில் இருக்கவேண்டும்.
ஆனாலும் ஒரு கிணற்றுக்கு 15 மீட்டர் தூரத்திற்குள் காஸ் இயந்திரத்தை நிர்மாணிக்கக்கூடாது. ஏனெனில், சில சந்தர்ப்பங்களில், சாணம் அல்லது மலத்தின் கலங்கல் ஊறி கிணற்றில் கலக்கும் அபாயம் இருக்கிறது.


தண்ணீர்
போதுமான அளவு தண்ணீர் கிடைக்க வேண்டும். சாதாரணமாக காஸ் இயந்திரத்தில் ஊற்றப்படுவதற்கு முன்னர் சாணம் சம அளவு தண்ணீரில் கலக்கப்படுகிறது. ஆகவே, போதுமான அளவு தண்ணீர் கிடைக்காவிட்டால் காஸ் இயந்திரத்தைப் பற்றி நினைத்துக் கூடப்பார்க்க முடியாதென்பது இயற்கையே.
காஸ் பயன்பாடு
காஸ் இயந்திரத்தில் உள்ள ஜீரணிப்பானிலிருந்து கிடைக்கும் உரம் பெரும் மதிப்புள்ளது தான் என்றாலும், உற்பத்தியாகும் காஸ் ஏதாவது ஒரு வழியில் பயன்படுவதற்கான வழிகாண வேண்டும். வீட்டிலிருந்து வெகுதூரத்தில் உள்ள கோசாலை அல்லது மாட்டுத் தொழுவத்தில் காஸ் இயந்திரம் இருந்தால், அதிலிருந்து உற்பத்தியாகும் காஸை எரிபொருளாகப் பயன்படுத்துவது கஷ்டமானதாய் இருக்கும். அதே இடத்தில், இந்த காஸை ஒர் என்ஜினை இயக்குவதற்குப் பயன்படுத்துவதற்காக இருந்தாலும், அதற்கு வேண்டிய காஸ் உற்பத்தி செய்யப் போதுமான சாணம் கிடைக்கவேண்டும். ஆகையால், காஸ் உபயோகமாகக் கூடியவாறு பக்கத்தில் குடியிருப்புகள், பொது சமையற்கூடம், அல்லது கோசாலையில் பால் கொதிக்கும் ஏற்பாடு ஆகியவை இருக்கின்றனவா என்று பார்த்து திட்டமிட வேண்டியது அவசியம்.
காஸ் இயந்திர நிருமாணம்
(1) ஜுரணிப்பான்
இது ஒரு வகைக் கிணறு. பூமிக்கடியில் தோண்டி, கல்வைத்துக் கட்டப்படுவது. கிணற்றின் ஆழம் சுமார் 12 அடி (3.5 மீட்டர்) யிலிருந்து 20 அடி (6 மீ. வரை) அதில் போடக்கூடிய (சாணம் போன்ற) பொருட்களின் அளவைப் பொருத்து விட்டம் 4 அடியிலிருந்து (1.2 மீட்டர்) 20 அடி வரை (6 மீட்டர்) வேறுபடும். இந்த கிணற்றை, நடுவில் கட்டப்பட்டுள்ள ஒரு சுவர் இரண்டு அரை வட்டப்பகுதிகளாகப் பிரிக்கிறது. நடுச்சுவரின் இரண்டு பக்கங்களிலும் சாய்வாக இரண்டு குழாய்கள் கிணற்றின் அடித்தளத்தை எட்டும் அளவுக்கு வைக்கப்படுகின்றன. கிணற்றின் மேல் தளம் வரையிலுள்ள இந்த சிமெண்ட் குழாய்கள் அடைக்கப்படாமல் திறந்திருக்கின்றன. இந்தக் குழாயில் ஒன்று கரைசலை உள்ளே செலுத்தவும், மற்றொன்று கழிவை வெளியே கொண்டு வரவும் பயன்படுகிறது. 4:5 என்ற விகிகத்தில் சாணமும் தண்ணீரும் கலக்கப்படுகின்றன. உள்ளே செலுத்தும் குழாய் வழியாக இது ஊற்றப்படுகிறது. கிணறு நிரம்பி பின், இதில் செலுத்தப்படும் அளவுக்கு கழிவு வெளிக்குழாயில் வந்து விழுகிறது. வெளிக்குழாய் உள்குழாயை விடச் சற்றுத் தாழ்ந்த மட்டத்தில் இருக்கும். 30 நாட்களுக்குத் தேவையான கரைசல் இருக்கும் முறையில் தான் கிணறு அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் அது நிரப்படுகிறது. ஆகவே, எப்போதாவது உள்வழியாக ஏதாவது ஒரு பொருளைச் செலுத்தினால் அதற்குச் சமமான கழிவு வெளியே வந்துவிடுகிறது.
(2) வாயு பீப்பாய் 
இலேசான எஃகுத் தகடு அல்லது கண்ணாடி நார் தகட்டினால் செய்யப்பட்ட பீப்பாய் இது. இது கிணற்றின் வாயில் ஒரு மூடிபோல் அமைந்திருக்கிறது. கரைசலில் இது அமிழ்ந்து, இதற்காகவென்றே கிணற்றில் கட்டப்பட்டுள்ள விளிம்பில் உட்காருகிறது. ஜீரணிப்பானில் போடப்பட்டுள்ள சாணத்திலிருந்து உருவாகும் வாயு இந்தப் பீப்பாயில் சேருகிறது. பீப்பாயில் வாயு சேரச்சேர அது மேலே எழுகிறது. அதில் சேர்ந்த வாயு மேலே (இதற்காகவென்றே வைத்துள்ள) குழாயின் மூடியைத் திறந்தவுடன் அதன் வழியாக வெளியே செல்லுகிறது . அப்படிப்பட்ட வாயுவை 100 அடி (30 மீட்டர்) தூரத்துக்குள் தேவைப்படும் போது சமையலுக்கோஅல்லது காஸ் விளக்குகளுக்கோ உபயோகப்படுத்திக் கொள்ளலாம். கிணற்றுக் கட்டிடத்தின் மத்தியில் குழாய் பொருத்தப்பட்டிருக்கிறது. வாயு பீப்பாய் மேலேயும், கீழேயும் இறங்கும் போது, அது சாயாது சரியான முறையில் இயங்க இந்தக் குழாய் உதவுகிறது. கீழே உற்பத்தியாகும் காஸ் அடிப்பாகம் வழியாக மட்டுமல்லாமல் வேறு எநத் வழியிலும் செல்ல முடியாதபடி எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருக்கின்றன. பீப்பாய்க்கு அடியில் சேரும் வாயு மீது பீப்பாயின் கனத்தின் அளவுக்குப் பிரஷ்ஷர் இருக்கிறது. இந்த பிரஷ்ஷர் மிகவும் குறைச்சல் தான். (அதாவது 3 அங்குலத்திலிருந்து (7.5 செ. மீட்டர்) 6 அங்குலம் (15 சென்டி மீட்டர்) வரை தண்ணீர் மட்டம், அதே சமயம் சமையல் ஸ்டவ் அல்லது காஸ் விளக்குக்கு இந்த அழுத்தம் போதுமானது.


வாயு இயந்திர உற்பத்தி பொருள்கள் உபயோகம்
வாயு இயந்திரத்தின் இரண்டு பிரதான உற்பத்திப் பொருள்களாவன (1) எரிபொருளாக வாயு     (2) உரம்.


எரிபொருள் பொருள்களைச் சூடாக்கவோ அல்லது விளக்குகளை எரிக்கவோ அல்லது இயந்திரங்களை இயக்கவோ வாயு பயன்படுத்தலாம். இதில் 55% மீதேனும் 45% கரியமில வாயுவும் இருக்கின்றன. இந்த வாயுவின் கலவை வேறு. கோல் கேஸ் அல்லது புர்ஷேன் காஸ் கலவை வேறு. ஆகவே இதைப் பயன்படுத்துவதற்கான பர்னர்கள், விளக்குகள் போன்றவைகளை விசேஷமான முறையில் அமைக்க வேண்டியிருக்கிறது. நீண்ட ஆராய்ச்சிக்குப் பின், இந்த காஸுக்கு ஏற்ற கருவிகளின் டிஸைன்களை கதர் கிராமத் தொழில் கமிஷன் தயாரித்திருக்கிறது. கோல் காஸுக்கான ஸ்டாண்டர்டு கருவிகளின் அளவுக்கு இந்தக் கருவிகள் பயனளிக்கின்றன. அதே சமயம், கோல் காஸ் அல்லது லி.நி.றி. காஸ் பர்னர்களில் கோபார் காஸைப் பயன்படுத்தினால் பலன் குறைச்சலாகவே இருக்கிறது. (அதாவது 60 சதவீதத்திற்கு பதிலாக 35 சதவீதம்) ஆகையால் சாண எரிவாயுவின் முழு பலன் கிடைக்க, கமிஷன் நிர்ணயித்துள்ள அடுப்புகளையும், விளக்குகளையும் பயன்படுத்த வேண்டியது அவசியம்.


கரிம வாயு ஆயில் எஞ்சின் பராமரிப்பு :
சாண எரிவாயுவும் டீசலும் இரட்டை எரிபொருளாக என்ஜினை இயக்கவும், சாண எரிவாயுவை மட்டும் கொண்டு பெட்ரோல் என்ஜினை இயக்கவும் முடியும். இதற்கு என்ஜினில் காற்று அல்லது எரிபொருள் கலவை உட்புகும் குழாயுடன் சாண எரிவாயு சாதனத்தில் இருந்து வரும் குழாயை இணைக்கவேண்டும். எஞ்சின் நல்ல முறையில் இயங்குவதற்கு வாயுவுடன் சிறிதளவு நீர் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும். இதற்கு எற்கனவே சுத்தப்படுத்தப்பட்ட வாயுவை சுண்ணாம்பு உள்ள பாத்திரத்தின் வழியே செலுத்தி சுத்தப்படுத்தலாம். எஞ்சினை இயக்குவதற்கு சாண எரிவாயுவை பயன்படுத்துவது மூலம் எஞ்சினில் கரிபடியும் தன்மை மிகவும் குறைகிறது. மேலும் என்ஜின் ஒரே சீராக இயங்குவதற்கும், உராய்வை கட்டுப்படுத்தும் எண்ணெய் கெட்டுப்போகாமல் இருப்பதற்கும் வழி செய்கிறது. இதனால் உராய்வை கட்டுப்படுத்தும் எண்ணெயை அடிக்கடி மாற்றத் தேவையில்லை.
ஒரு குதிரை சக்தி கொண்ட என்ஜினுக்கு ஒரு மணி நேரத்திற்கு தேவைப்படும் வாயு அளவு 16 லிருந்து 19 கன அடி. ஒரு கன மீட்டர் கலன் ஒரு நாளைக்கு 35 கன அடி வாயுவை உற்பத்தி செய்யும். கரிம வாயுவினால் இயங்கும் என்ஜின்களுக்கு குளிர வைப்பது தேவைப்படுகிறது. டீசல் என்ஜினில் காற்று உட்செல்லும் குழாயுடன் ஒரு துளைக் கருவியை  பொருத்தி அத்துடன் கரிம வாயு வரும் குழாயை இணைத்து விடவேண்டும். எப்படியும் 20 சதவீதம் டீசலும் 80 சதவீத கரிம வாயும் தேவைப்படுகிறது. ஏனெனில் கரிம வாயுவின் எரிநிலை காற்றைவிட சற்று கூடுதலாக உள்ளது. 5 குதிரை சக்தியுள்ள இயந்திரம் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் டீசலினால் இயங்கினால் ஒரு மாதத்திற்கு 120 லிட்டர் டீசல் ஆகும். ஆனால் மேலே குறிப்பிட்ட கால அளவிற்கு கரிம வாயுவும் டீசலும் ஆன கலவையினால் ஆன எரிபொருளை உபயோகித்தால் அந்த எந்திரத்திற்கு 24 லிட்டர் டீசல் மட்டும் போதும். ஒரு மாதத்திற்கு இதனால் 96 லிட்டர் டீசல் மீதப்படுகிறது.
கரிம வாயுவினால் இயங்கும் இயந்திரங்களில் பலவகை உள்ளன. தண்ணீர் மற்றும் காற்றினால் குளிர வைக்கும் இயந்திரங்களில் 3 குதிரை சக்தி முதல் 75 குதிரை சக்தியுள்ள இயந்திரங்கள் உள்ளன. இயந்திரத்தில் கரிம வாயு தீர்ந்து விட்டால், இயந்திரத்தை தானே டீசலில் இயங்கவைக்கும் ஏற்பாடு உள்ளது. கரிமவாயு மற்றும் டீசல் கலவையில் இயங்கும் இயந்திரத்தினால் வெளியேறும் புகையை வெளியேற்றும். மேலும் கரிமவாயுவை உபயோகப்படுத்தும் போது கார்பன் வடிவது குறைவாக இருக்கும். டீசலினால் இயங்கும் இயந்திரத்தோடு ஒப்பிடும் போது கரிமவாயுவினால் இயங்கும் இயந்திரம் நன்கு பராமரிக்கப்படுகிறது.
டீசல் தட்டுப்பாடும், மின்சாரம் கிடைப்பதில் சிரமமும் இருக்கும் இவ்வேலையில், கரிமவாயுவை உபயோகித்து நீர் இறைக்கும் இயந்திரங்களை இயக்குவது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு செலவில் கணிசமான மிச்சத்தையும் நாட்டில் பொருளாதார சுபிட்சத்திற்கும் வழி வகுக்கும். விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள எண்ணற்ற நீர் இறைக்கும் இயந்திரங்களை இவ்வாறு மாற்றி அமைத்துப் பயன்பெறலாம்.
மேலும் ஒரு குதிரை சக்தி உள்ள ஆயில் எஞ்சின் ஒரு மணி நேரம் ஓடுவதற்கு 0.45 கன மீட்டர் கரிமவாயு தேவைப்படும். எனவே, ஐந்து குதிரை சக்தி உள்ள ஆயில் எஞ்சினை நான்கு மணி நேரம் இயக்குவதற்கு 9 கன மீட்டர் கொள்ளளவு உள்ள கரிமவாயு கலன் அமைக்கப்படவேண்டும். இதனை அமைக்க குறைந்த பட்சம் 10 முதல் 15 கால்நடைகள் தேவைப்படும்.
உரம்:
காஸ் இயந்திரத்திலிருந்து கிடைக்கும் உரத்தைப் பலவழிகளில் பயன்படுத்தலாம்.
வெளியே வரும் கழிவில் நைட்ரஜன். காளான் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அது நன்கு பக்குவமாகி, மாவுபோல் இருக்கிறது. பாசன நீருடன் கலந்து அதை மிகவும் அனுகூலமான முறையில் பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தும்போது உரத்திலிருந்து அதிகபட்ச பலன் கிடைக்கிறது. ஏனெனில் அந்தப் புதுக் கழிவில் 2 சதவிகிதத்துக்கு மேல் நைட்ரஜன் சத்து இருக்கிறது. மண்ணுடன் மிக நன்றாகச் சேரக்கூடிய நிலையிலும் அது இருக்கிறது.
பாசன நீருடன் இந்தக்கழிவை உபயோகப்படுத்த முடியாவிட்டால், கம்போஸ்ட் உரத்தை வெகுவேகமாக மக்க வைப்பதற்கு அதைப் பயன்படுத்தலாம். அவ்வாறு செய்வதற்கு காஸ் இயந்திரத்துக்கு அருகிலேயே பல கம்போஸ்ட் குழிகளைத் தோண்ட வேண்டும். கழிவை ஒரு வாய்க்கால் வழியாக அந்தக் குழிகளில் பாய்ச்ச வேண்டும். புல், இலைகள், வைக்கோல், தட்டை போன்ற தாவரப் பொருள்களையும் எல்லாவிதமான கழிவுப் பொருள்களையும் குழியில் ஒர் அளவுக்கு போட்டு அதன் மேல் கழிவைப் பாய்ச்ச வேண்டும். அதன் மேல் மேலும் ஓர் அடுக்கு தாவரக் கழிவுப் பொருள்களைப் போட்டுக் கழிவை மேலே விடவேண்டும். இவ்வாறு குழி நிரம்பும் வரை செய்யவேண்டும் அதன் பின்பு கேஸ் இயந்திரத்திலிருந்து வரும் கழிவை வேறொரு குழியில் விடவேண்டும். அப்படியே தொடர்ந்து செய்து வரவேண்டும். எத்தனை குழிகள் என்பது அங்கங்குள்ள நிலைமையைப் பொருத்தது. காஸ் இயந்திரத்திலிருந்து வரும் கழிவில் நிறைய நுண் அணுக்கிருமிகள் இருப்பதும், கழிவில் சேர்ந்துள்ள பொருட்களும் கம்போஸ்ட் உரம் வேகமாக மக்குவதற்குத் துணை புரிகின்றன என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
அல்லது, கழிவை ஒவ்வொரு குழியாகப் பாய்ச்சி நிரப்பிக் கொண்டு வரலாம். பல நாட்களாக கழிவு ஒரு குழியில் நிரம்பிவிட்டால் அடுத்த குழியை நிரப்பலாம். இரண்டாவது அல்லது மூன்றவாது குழி நிரம்பும்போது, உரத்தைத் தோண்டி எடுக்கும் பக்குவத்துக்கு முதல் குழி காய்ந்திருக்கிறது. அதைத் தோண்டி உரத்தை எடுத்தபின். மறுபடியும் கழிவை நிரப்புவதற்கு அதைப் பயன்படுத்தலாம், இந்த முறையில் காயும் போது. ஒரளவு நைட்ரஜன் இழப்பு எற்படுகிறது. ஆனால் அதே சமயம் சரியாக உரத்தை எடுத்து உபயோகிப்பது எளிதாகிறது. ஈரமான புதுக் கழிவில் 3 சதவிகிதம் நைட்ரஜன் இருக்கிறது என்றும் அது காயும் போது 2 சதவிகிதத்திற்கு குறைந்துவிடுகிறது என்றும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
கோபார் காஸ் உரமும், ரசாயன உரமும் சேர்ந்து ஊட்டச்சத்து மிக்க இயற்கை ஆதார உரமாகவும் இருக்கமுடியும். அதாவது அம்மோனியம் சல்பேட், சூப்பர் பாஸ்பேட் முதலிய இரசாயன உரங்களை அதனுடன் சேர்த்து மிக நயமான, இயற்கை ஆதார உரக் கலவையைத் தயார் செய்யலாம். சாண எரிவாயுக் கலனிலிருந்து வெளிவரும் கரைசல், மண் புழு உரம் தயாரிப்பதற்கு மிகவும் உபயோகமாக உள்ளது. இது உரத்தின் தரத்தையும். உற்பத்தி திறனையும் அதிகரிக்கிறது.
குறைபாடுகளும் அவற்றினை நிவர்த்தி செய்தலும்
சரியான முறையில் பராமரித்து வந்தால் சாண எரிவாயுக் கலன் பல ஆண்டுகளுக்கு பழுதுபடாது. நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான சாண எரிவாயு கலனின் சொந்தக்காரர்களின் அனுபவம் இதுவே.
1. செரிக்கும் பகுதி சுவரில் விரிசல் ஏற்படுதல், மற்றும் அடித்தளம் இறங்குதல் : சாண எரிவாயு கலத்தின் செரிக்கும் பகுதி விரிசல் ஏற்பட்டால் மற்றும் அடித்தளம் இறங்கினால் சுவரின் பின் பகுதியில் மணல் சரியாக நிரப்பப்படாமல் இருக்கலாம். இவ்வகையான பழுதை சரிசெய்ய சுவரின் பின்புறம் சரியாக மணலால் நிரப்பப்பட வேண்டும்.
2. மத்தியில் உள்ள பிரிக்கும் சுவர் இடிதல் (இரும்பு வாயு கொள்கலம் உள்ளதில்) : சுவரின் இருபக்கமும் உள்ள சாணக் கரைசலின் சமமான அழுத்தம் இல்லாமல் இருந்தால் மத்தியில் உள்ள பிரிக்கும் சுவர் இடிந்து விடும். இதை சரிசெய்ய ஆரம்பத்தில் சாணக் கரைசலை பிரிக்கும் சுவருக்கு இருபக்கமும் சமமாக நிரப்பி வரவேண்டும்.
3. வாயு ஒழுக்கு : இரும்பு வாயுக் கொள்கலன் சரியாக வெல்டு செய்யாமல் இருந்தாலும். வாயு சேகரிக்கும் கூடு சரியாக கட்டப்படாமல் இருந்தாலும் வாயு ஒழுக்கு ஏற்படும். இதை சரி பார்த்து பழுது பார்க்கவேண்டும்.
4. வாயு குழாயில் தண்ணீர் தங்குதல்
தண்ணீர் நீக்குவது சரியாகப் பொருத்தாமல் இருந்தால் வாயுக் குழாயில் தண்ணீர் தங்கி விடும். இதை சரி செய்ய வாயுக் குழாய்களைப் பொருத்துதல் வேண்டும். 5. முதலில் சாணக் கரைசலை நிரப்பியபின் வாயு வராமை:சாணக்கரைசலை நிரப்பியபின் வாயு வர வாய்ப்பில்லை. கரைசலை ஊற்றி 2 அல்லது 3 வாரங்கள் வரை பொறுத்திருந்து பின்பு வாயுவை உபயோகிக்கலாம்.
6. இரும்பு கொள்கலம் உயராமல் இருத்தல் மற்றும் உள்நுழையும் வெளிவரும் பகுதியில் சாணக்கரைசலின் மட்டம் உயராமல் இருத்தல் சாணக் கரைசல் போதுமான அளவு இல்லாமல் இருந்தாலும் கொள்கலத்திலும் குழாயிலும் வாயு ஒழுக்கு ஏற்பட்டாலும் கனமான அடை இருந்தாலும் மேற்கண்ட குறைகள் எற்படும். இதை சரி செய்ய தேவையான கரைசலை நிரப்ப வேண்டும். பின்பு அதை சரிபார்க்க வேண்டும். கொள்கலத்தைச் சுற்றி மூங்கில் கொண்டு கரைசலைக் கலக்க வேண்டும்.
7. சாதனத்தில் வாயு இருந்தும் அடுப்புக்கு வராதிருத்தல்:வாயுக் குழாய் அடைத்தாலும், தேவையான அழுத்தம் இல்லாததாலும், வாயு வெளிவரும் வழியில் ஆடை அடைத்தாலும் வாயு வராது. இதை சரி செய்ய குழாயில் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும். வாயுக் கொள்கலத்தின் மேல் சுமையை அதிகரிக்கவேண்டும். வெளிச் செல்லும் வால்வை திறந்து தண்ணீர் அழுத்தத்தால் சரி செய்யவேண்டும்
8. வாயு எரியாமல் இருத்தல்:
முதலில் வரும் வாயுவில் கரியமிலவாயு கலந்து இருக்கும். அதனால் வாயு எரிய வாய்ப்பிருக்காது. சாணக் கரைசலை சரியாகக் கலந்து ஊற்றாவிட்டாலும் வாயு வராது. இதற்கு சரியான விகிதத்தில் தூசி மற்றும் குப்பை கூளங்கள் இல்லாத சாணத்தை கரைத்து ஊற்ற வேண்டும்.
9. அடுப்பிற்கு மேல் அதிக உயரத்தில் சுவாலை எரிதல்: வாயு அழுத்தம் அதிகம் இருந்தாலும் அல்லது அடுப்பில் வாயு வரும் குழாயில் கரி பிடித்திருந்தாலும் அடுப்பிற்கு மேல் அதிக உயரத்தில் சுவாலை எரியும். வாயு வெளிவிடும் வால்வை சரிசெய்து அடுப்பை சுத்தம் செய்தால் இக்குறை நீங்கும்.
10. சுவாலை இறங்கி அணைதல்:
தேவையான அழுத்தம் இல்லாமல் இருந்தால் சுவாலை இறங்கவும், அணையவும் வாய்ப்பு உண்டு. சில சமயங்களில் வாயுவின் அளவு குறைவாக இருந்தால் இவ்வாறு ஏற்படும். இதற்கு வாயுவின் அளவை சரிபார்க்க வேண்டும்.
11. வாயு கொள்கலத்தையும் குழாயையும் அரித்தல்:
பராமரிப்பு சரியில்லாமல் இருந்தால் இவ்வாறு ஏற்படும். துருப்பிடித்த பகுதிகளை நீக்கி பெயிண்ட் அடித்தால் குறை நிவர்த்தியாகி விடும்.
12. சாணக் கரைசல்கள் உள் செல்லும்,வெளிச் செல்லும் குழாயை பரீசிலனை செய்தல் (இரும்பு வாயுக் கொள்கலம் உள்ள சாதனம்) : சுத்தமான கரைசல் ஊற்றாவிட்டால் குழாயில் அடைப்பு ஏற்படும். கால் நடைகளின் சாணக்கரைசல் மட்டும் ஊற்றுதல் மற்றும் குழாயை சுத்தமாக செய்தால் இக்குறை நீங்கும்.
13. சாதனத்தை சுற்றிலும் சுத்தமில்லாதிருத்தல் வெளி வந்த சாணக் கரைசல் அப்புறப்படுத்தாமல் இருந்தால் இவ்வாறு ஏற்படும். இதற்கு மத்திய உரக் கலவைக்கு சாணக் கரைசலைக் செலுத்தி உபயோகிக்க வேண்டும்.


இன்டேன் எரிவாயுவும் சாண எரிவாயுவும் -ஒருஒப்புமை
இன்டேன் எரிவாயு
சாண எரிவாயு
1. எரிவாயு கசிவு ஏற்பட்டால் பெரும் விபத்துக்கள் ஏற்படலாம்சமையல் செய்யும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பானது
2. சிலிண்டருக்குப் பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறதுஎரிவாயுவிற்குக் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை
3. சிலிண்டரில் எரிவாயுவின் இருப்பை கணக்கிடுவது கடினம்எரிவாயு இருப்பை தொட்டியின் மூலம் கணக்கிடுவது சுலபம்
4. சமையலுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்சமையல் செய்வதுடன். விளக்கு எரிப்பது, என்ஜின்களை இயக்குவது போன்ற பிற உபயோகங்களுக்குப் பயன்படுத்தலாம். வளமான உரமும் கிடைக்கிறது.
5. ஒவ்வொரு தடவை சிலிண்டர் வாங்கும் போது பணத்தை செலவிட வேண்டியுள்ளது.சாதனம் கட்டி முடித்து இயக்கிய பிறகு செலவேதும் செய்ய வேண்டியதில்லை


சாண எரிவாயுக்கலனை நன்கு பயன்படுத்துவதற்கு
செய்ய வேண்டியவை
செய்யக்கூடாதவை
1. நம்மிடம் உள்ள கால் நடைகளின் அளவுக்கேற்ப சாண எரிவாயுக் கலனின் அளவைத் தீர்மானிக்கலாம்போதுமான கால்நடைகள் இல்லாமல் பெரிய அளவிலான சாண எரிவாயுக்கலன் அமைக்கக்கூடாது
2. சாண எரிவாயுக் கலனை நமது வீட்டின் சமையலறைக்கும், மாட்டுத் தொழுவத்திற்கும் பொதுவாக அருகில் இருக்குமாறு அமைக்கலாம்.சாண எரிவாயுக்கலனை, நீண்ட தூரத்தில் அமைக்கக்கூடாது. ஏனெனில் எரிவாயுவைக் கொண்டு வரும் குழாயையும் நீண்ட தூரத்துக்கு கொண்டு வர வேண்டிய அதிக செலவைத் தவிர்க்கவும்.
3. சாண எரிவாயுக்கலன் மீது, நாள் முழுவதும் சூரிய ஓளி விழும்படி அமைக்கவும்.மரத்தின் நிழலுக்குக் கீழ் சாண எரிவாயுக்கலன் அமைக்கக் கூடாது
4. சாண எரிவாயுக்கலன் கட்டி முடிக்கப்பட்ட பின் நன்கு உலர்வதற்காக குறைந்தது 10 அல்லது 15 நாட்கள் பொறுக்க வேண்டும்.சாண எரிவாயுக்கலன் கட்டி முடித்தவுடன் உலரும் முன் உபயோகித்தால் அதில் விரிசல் வெடிப்புகள் ஏற்பட்டு விடும்.
5. சாண எரிவாயுக் கலனில் உள்ள ஜீரணிப்பானைச் சுற்றி நன்றாக மண் போட்டு மூடவேண்டும்நல்ல முறையில் மண்ணால் மூடப்படாத ஜீரணிப்பானில் வெடிப்புகள் விரிசல்கள் ஏற்படும்.
6. சாணத்தையும். தண்ணீரையும் 4 : 5 என்ற விகிதத்தில் கலந்து உட்செலுத்த வேண்டும்.சாணத்தையும் தண்ணீரையும் குறிப்பிட்ட விகிதம் இல்லாமல் கூடவோ குறையவோ கலந்தால் நல்ல முறையில் எரிவாயு தயாராகாது.
7. 4 க.மீ அல்லது அதற்கு மேலும் அளவுள்ள சாணக் கலனுக்கு (முதன் முதலில். இருபுறமும் சரிசமமாக (சாணத்தையும் தண்ணீரையும் கலந்த) கரைசலை உட்செலுத்த வேண்டும்சரிசமம் இல்லாமல் கரைசலை ஒருபுறமாக உட்செலுத்தினால் கலனில் உள்ள மையச்சுவர் உடைய வாய்ப்பு உள்ளது.
8. சாணக்கரைசலில் மணல், செத்தை மற்றும் திடப் பொருட்கள் இருக்கக்கூடாதுமணல் மற்றும் செத்தை போன்ற திடப்பொருட்கள் சாண எரிவாயு உற்பத்தியைப் பாதிப்பது மட்டுமன்றி கலனுக்குள் அவை அடைப்புகளை உருவாக்கும்.
9. சாணக்கரைசலை ஊற்றிய பின் சாண எரிவாயுக் கொள் கலனை (பீப்பாய்) அதற்குரிய இடத்தில் கவிழ்த்து மையத்தில் உள்ள குழாய் மூலம் கவிழ்த்து வைக்கவேண்டும்பீப்பாயின் மீதுள்ள ‘கேட்வால்வு’ எனப்படும் திறப்பானை நன்கு மூடி வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் பொழுது மட்டும் திறக்க வேண்டும்.
10. பீப்பாய்  ஒரு நாளைக்குஇரண்டு அல்லது மூன்று முறை சுற்றி விடவேண்டும்.அவ்வாறு சுற்றாவிட்டால் நாளடைவில் சாணம் மற்ற அசுத்தப் பொருட்களும் சேர்ந்து கெட்டிப்படும்.
11. எரிவாயு தயரான பின்பு தொடர்ச்சியாக உபயோகிக்க வேண்டும்.எரிவாயு அதற்குரிய அடுப்பிலோ அல்லது விளக்குகளிலோ மட்டுமே உபயோகிக்க வேண்டும். நேரடியாக வாயுவை, எரியுமா என்று சரிபார்க்க கூட எரித்துப் பார்க்கக்கூடாது.
12. எரிதிறன் அதிகமாகக் கிடைக்க அங்கீகரிக்கப்பட்ட அடுப்புகளையும் விளக்குகளையும் மட்டுமே உபயோகிக்கவும்.அங்கீகரிக்கபடாத அடுப்புகள், விளக்குகளில் எரி வாயு வீணாகும் வாய்ப்பு உள்ளது.
13. அடுப்பில் நீலநிற ஜுவாலையாக அடுப்பை எரிப்பதனால் அதிக சூடு கிடைக்கும்.மஞ்சள் நிற ஜுவாலையாக எரிந்தால் சூடு அதிகம் கிடைக்காது. எரிவாயு வீணாகும்.
14. வாரம் ஒருமுறை எரிவாயு உடன் வந்த தண்ணீர் துளிகள் தேங்கியுள்ளவற்றை அதற்குரிய குழாய் மூலமாக வெளியேற்றவும்.அவ்வாறு வெளியேற்றாவிட்டால் நீர்த்துளிகள், எரிவாயுடன் கலந்து சரியாக எரியவிடாது.
15. வாரம் ஒரு முறை பீப்பாயை வெளிப்புறமாகக் கழுவவும்.பீப்பாயை அசுத்தமாக வைக்கக் கூடாது.
16. எரிவாயுக் கலனிலிருந்து வெளிவரும் சாணக் கழிவை அதற்குரிய உரக்குழியில் விடவும்.உரக்குழி 3 அடி ஆழத்துக்கு மேல் தோண்டக்கூடாது.
17. ஒரு வருடத்திற்கோ அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ பீப்பாய்க்கு கருப்பு வர்ணம் பூச வேண்டும்.பீப்பாயை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.


வீடுகளுக்கான ஷக்தி-சுரபி-இயற்கை எரி வாயு உற்பத்தி கலன்
biogasஷக்தி-சுரபி ஒரு சமையல் கழிவு அடிப்படையிலான இயற்கை எரிவாயு உற்பத்தி கலனாகும். வழக்கமான இயற்கை எரிவாயு உற்பத்தி கலன்களின் முறையைப் போலவே இது செயல்படுகிறது, ஆனால், நகர்ப்புறத் தேவைகளுக்கு ஏற்ப திருத்தியமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கலனில் காணப்படும் பாகங்களாவன, கழிவு உட்புகுத்தும் குழாய், கிரகிக்கும் கலன், வாயு கொள்கலன், நீர் உறை, வாயு எடுத்துச்செல்லும் அமைப்பு மற்றும் வாயு வெளிசெல்வதற்கான குழாய். தமிழ்நாடு, கன்னியாகுமாரியில் அமைந்திருக்கும் விவேகானந்தா கேந்திரா, இயற்கை ஆதாரங்களுக்கான முன்னேற்ற திட்டத்தால் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
வழக்கமான இயற்கை எரிவாயு உற்பத்தி கலனை ஒப்பிடும் போது, ஷக்தி-சுரபி எவ்விதத்தில் மாறுபட்டதாக உள்ளது?
 • வழக்கமான இயற்கை எரிவாயு உற்பத்தி கலன்களுக்கு மாட்டு சானம் ஒரு முக்கிய இடுபொருள் ஆகும். ஒவ்வொரு நாளும் மாட்டு சானத்தை நன்றாக கரைத்து, கஞ்சி போல் ஆக்கி வாயு கொள்கலன் உள் ஊற்ற வேண்டும். ஆனால், ஷக்தி-சுரபியில் மாட்டு சானமானது ஆரம்ப நிலையில் மட்டும் தேவை. பிறகு, தேவையான எரிவாயு உற்பத்திக்கு, சமையல் கழிவு மற்றும் பிற கழிவுகள் (மீதியான சமைத்த உணவு (சைவம் / அசைவம்), காய்கறி கழிவு, மாவு மில்லில் இருந்து கிடைக்கும் கழிவு, உணவல்லா எண்ணெய் வித்துக்களின் பிண்ணாக்குகள் (வேம்பு, காட்டமணக்கு) போன்றவை மட்டுமே போதுமானது.
 • கவர்ச்சிகரமான இரண்டு நிறங்களில், 500 மற்றும் 1500 லிட்டர் கொள் அளவுகளில் இவை கிடைக்கின்றன.
 • பொருத்துவதற்கு அல்லது இடமாற்றம் செய்வதற்கு எளிதாக இது இருக்கிறது. மேலும், தனிப்பட்ட ஒரு வீடாக இருந்தால், பின்புறத்திலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் மேற்பரப்பு அல்லது சன்ஷேட் (நிழலீட்டில்) இதை அமைக்க முடியும்.
 • தேவைப்படும் மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்கக்கூடியவை
செயல்பாடுகள்
 • சமையல் எரிவாயுவின் 0.43 கிலோவுக்கு சமமான 1 கியூபிக் மீட்டர் பையோகாஸ் உற்பத்திக்கு, கிட்டத்தட்ட 5 கிலோ கழிவுப் பொருட்கள் தேவைப்படுகிறது. ஒரு வீட்டிற்கு தேவைப்படும் 20 மணி நேர எரிசக்தியை தரக்கூடிய 5 கிலோவாட் சக்தி, 100 கியூபிக் மீட்டர் பையோகாஸினால் உற்பத்தி செய்யப்படுகிறது.
 • செயல்முறை சுகாதாரமானது. பறக்கும் பூச்சிகள் மற்றும் துர்நாற்றம் காணப்படாது.
 • பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த மற்றும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை தடுக்க இந்த கலன் மேலும் உதவிபுரிகிறது. கலன்களின் சீரணிக்கப்பட்ட வெளிச்செல்லும் குழம்பு நல்ல இயற்கை உரமாகவும் செயல்படுகிறது.
மேலும் அதிக விவரங்களுக்கு, தொடபுக்கொள்ள
விவேகானந்தா கேந்திரா, இயற்கை ஆதாரங்களுக்கான முன்னேற்ற திட்டம் (வி.கே.என்.எ.ஆர்.டீ.இ.பி), விவேகானந்தாபுரம், கன்னியாகுமரி – 629 702, தமிழ்நாடு
ஈமெயில் . vknardep@gmail.com
தொலைபேசி: 04652 246296 மற்றும் 04652 -247126.
மதுரை:கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் சார்பில், வேலையில்லா இளைஞர்களுக்கு 'பயோகாஸ் பிளான்ட்' அமைக்க, இலவச தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.கிராமப்புறங்களில் பயோகாஸ் பிளான்ட் அமைக்க, மானியம் தரப்படுகிறது. மானியத்தொகை தற்போது 8000 ரூபாயாக அதிகரித்துள்ளது. ஐந்தாண்டு 'வாரண்ட்டி' கொடுக்கப்படுகிறது.
இலவச தொழில்நுட்ப பயிற்சிக்கு குறைந்தது எட்டாவது படித்திருக்க வேண்டும். பேச்சுத்திறமை வேண்டும். 'பிளான்ட்' கட்டுவதற்கான தொழில்நுட்பம் கற்றுத்தரப்படும். 15 நாட்கள் பயிற்சி. ஒரு 'பிளான்ட்' அமைக்க, கே.வி.ஐ.சி., 1500 ரூபாய் ஊக்கத்தொகை தருகிறது. பயிற்சி குறித்த விவரங்களுக்கு மதுரை, பை பாஸ் ரோட்டில் உள்ள கதர் கிராமத் தொழில்கள் ஆணையத்தை (0452 - 238 6792) அணுகலாம்.

2 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites