இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, June 1, 2012

பக்கெட் பால்

'பால் வித்து கிடைக்கற காசு, தீவனத்துக்கே சரியாப் போகுது. பாலுக்கும் கட்டுப்படியான விலை கிடைக்கிறதில்ல. இதுல சம்சாரிக எங்க நாலு காசு சம்பாதிக்கிறது?'' என பால் மாடு வளர்க்கும் விவசாயிகள் புலம்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், ''வழக்கமான முறையில இல்லாம, வேற மாதிரி யோசனை பண்ணினா.... இந்தப் புலம்பலைப் புறமுதுகிட்டு ஓட வெச்சுடலாம். இதுக்கு நானே உதாரணம்'' என்று நம்பிக்கை வார்த்தைகளில் பேசுகிறார் 'செங்கல்பட்டு' முகுந்தன்.

''மற்றவர்களுக்கெல்லாம் பெரிதாகப் பலன் கொடுக்காத பால், இவருக்கு மட்டும் எப்படி வருமானத்தைக் கொண்டு வருகிறது..?'' என்ற கேள்வியோடு முகுந்தனைச் சந்தித்தோம்.
''இதுல பெரிய சூட்சமம் எதுவுமே இல்லை. பால் மாடு வச்சிருக்கற விவசாயிக பால் உற்பத்தி செய்றதுல கெட்டிக்காரத்தனமா இருக்கறாங்க. ஆனா, அதை விக்கிறதுல அக்கறைக் காட்டுறதில்ல. 'கறந்தப் பாலை வீட்டுலயே வந்து யாராவது வாங்கிட்டுப் போனா போதும்'கிற மனநிலையிலதான் இருக்காங்க. இந்த சோம்பலை சாக்கா வச்சு வியாபாரிகளும், நிறுவனங்களும் லிட்டர் 12 ரூபாயிலிருந்து 15 ரூபா வரைக்கும் வாங்கி, வெளிச்சந்தையில லிட்டர் 20 ரூபாயிலிருந்து 25 ரூபா வரைக்கும் விக்குறாங்க. உற்பத்தி செய்றவங்களுக்குக் கிடைக்கிறதைவிட, இடையில வாங்கி விக்குறவங்களுக்கு அதிக லாபம் கிடைக்குது. இதெல்லாம் பாத்த பின்னாடி, கறந்தப் பாலை அப்படியே சொஸைட்டிக்குக் கொடுத்துட்டு, 'அப்பாடா'னு உட்கார எனக்குப் பிடிக்கல. ஒரு லிட்டர் பாலுக்கு சொஸைட்டியில 13 ரூபாய் 50 பைசாவிலிருந்து, அதிகபட்சமா 15 ரூபாய் வரைக்கும் கொழுப்புச் சத்துக்கு ஏற்ப பணம் கொடுப்பாங்க.
இந்தப் பணமும் 15 நாள் கழிச்சுதான் கிடைக்கும். பல ஊர்கள்ல 30 நாள் கழிச்சுதான் கிடைக்குது. 'இந்தப் பிரச்னைக்கெல்லாம் ஒரே தீர்வு... நாம உற்பத்தி செய்ற பாலை நாமே விக்குறதுதான்'னு முடிவு செஞ்சேன். 'கிராமத்திலகூட பால் பாக்கெட் வந்துவிட்ட இந்தக் காலத்துல நம்மால பாலை நேரடியா விற்க முடியுமா'னு ஆரம்பத்துல சந்தேகமாகத்தான் இருந்தது. ஆனா, ஒரு சொட்டு கூட தண்ணி ஊத்தாம, கறந்தவுடனே பாக்கெட்ல அடைச்சு, அடுத்த ஒரு மணி நேரத்துல கொடுத்ததும்... விற்பனை பிரச்னையில்லாமப் போயிடுச்சி. ஒரு லிட்டர் பாலை 24 ரூபாய்க்கு விற்கிறேன். ஆனா, கடையில் ஒரு லிட்டர் பால், 25 முதல் 28 ரூபாய் வரை விக்கிறாங்க.
மாதம் 14 ஆயிரம் கூடுதல் வருமானம்!
ஒரு நாளைக்கு 50 லிட்டர் பாலை நான் சொஸைட்டிக்குக் கொடுத்தா... அதிகபட்சம் 750 ரூபாய் கிடைக்கும். அதே பாலை நேரடியாக விற்கும்போது 1,200 ரூபாய் கிடைக்குது. ஆக, ஒரு மாசத்துல கூடுதலா 14 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இன்னொரு பெரிய நன்மை... உடனுக்குடன் நமக்குப் பணம் கிடைக்குறதுதான். 
பால் வாங்குறவங்களுக்கும் நிறைய நன்மை. அதாவது, கடையில வாங்குறதைவிட குறைஞ்ச விலை. பாலும் புதுசா இருக்கும். கடையில நாம வாங்கற பாலெல்லாம்... புதுப் பால் கிடையாது. பல நாளைக்கு முன்னயே கறந்து, பதப்படுத்தி, பால் பவுடராக மாத்தி, தேவைப்படுறப்ப தண்ணியை ஊத்தி, பாலாக மாத்தி கொடுக்குற பால். இப்படிப் பதப்படுத்தின பால்ல இயற்கையான சுவை இருக்காது. ஆனா, நீங்க கறந்து கொடுக்கற புதுப் பாலைக் குடிச்சு பழகுனவங்க, பாக்கெட் பால் பக்கம் போகவே மாட்டாங்க'' என்றவர், பாலை நேரடியாக விற்பனை செய்யும்போது சந்திக்கவேண்டிய சிரமங்களைப் பற்றியும் சொல்லத் தவறவில்லை. ''சிலர், 'கடையில வாங்குற பால்ல நிறைய தண்ணி சேர்க்கலாம். வீட்டில வந்து ஊத்துற பால்ல அது முடியாது'னு சொல்வாங்க. பொதுவா... எந்தப் பாலா இருந்தாலும், அதுல அதிகம் தண்ணி சேர்த்தா... சத்துக் குறைஞ்சு போயிடும். குழந்தைகளுக்குப் பால்ல தண்ணி கலக்காம காய்ச்சிக் கொடுக்குறதுதான் நல்லது. இதை எல்லாம் நாமதான் பொறுமையா எடுத்துச் சொல்லணும். கடையில் விக்கிற பால்ல கொழுப்புச் சத்து அதிகம்னு நினைக்கிறாங்க. இது உண்மையில்ல. எல்லா மாட்டுப் பால்லயும் 4% முதல் 6 % வரை கொழுப்புச் சத்து இருக்கும். இதையும் நாம தெளிவுப் படுத்தணும்.
அலையத் தேவையில்லை..!  
பிறகு, 'கறந்ததும் கொடுத்தோமா.. காசு வாங்கினோமா'னு இல்லாம, வீடு வீடா போய் யார் பால் ஊத்துறது?'னு ஒரு கேள்வி உங்களுக்கு வரலாம். ஆனா, சுத்தமானக் கறவை மூலம் கிடைக்கற புதுப் பாலைக் கொடுக்குறப்ப... தேவையிருக்கறவங்க தேடி வந்து வாங்கிட்டுப் போவாங்க. இது என் அனுபவத்துல நான் பார்த்த உண்மை. அதுவுமில்லாம அங்க இங்க அலையாம... ஒரே ரோடு, ஒரு காலனி, அடுக்குமாடி குடியிருப்புனு ஒரே இடத்தில நிறைய பாலை விக்கலாம். இந்தப் பாலை பாக்கெட்ல அடைச்சி கொடுத்தா... வாடிக்கையாளர்களை சுலபமா ஈர்க்கலாம். பாக்கெட் போடுற இயந்திரம் எல்லா ஊர்கள்லயும் எளிதா கிடைக்குது. இதுக்கு அதிகமா செலவாகாது. பாக்கெட்ல போட்டுக் கடைகள்லயும் கொடுக்கலாம். குறைஞ்ச விலையில பாட்டிலை வாங்கி அதுலயும் அடைச்சுக் கொடுக்கலாம். 


நாம் செய்யவேண்டிய ஒரே பெரிய செலவு, எந்நேரமும் ஓடக்கூடிய ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்குறதுதான். சில நேரங்கள்ல விக்காம தேங்குற பாலைக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சு, மறுநாள் காலையில வித்துடலாம். கறக்குற பாலை அப்பப்ப விற்கமுடியும்னு நினைக்கறவங்களுக்குக் குளிர்சாதனப் பெட்டியும் தேவையில்லை. 
 

இந்த முயற்சியில ஜெயிக்கணும்னா... இதை ஒரு வேலையா எடுத்து செய்றதுக்கு நமக்கு அக்கறை இருக்கணும். பாலை பாக்கெட் போட, அதைக் கொண்டு போய் கடைகளில் போட, பணம் வசூலிக்க, தயாராயிருக்கணும். ஆரம்பத்துல 50 லிட்டர் பால் மட்டுமே விற்பனை செய்றப்ப... அதிக முதலீடோ, அலைச்சலோ இருக்காது. உங்கப் பாலுக்கு இருக்கும் வரவேற்பைப் பொறுத்து, அளவைக் கூட்டிக்கலாம்'' என்று ஆக்கப்பூர்வமான யோசனைகளோடு முடித்தார் முகுந்தன்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites