இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, June 5, 2012

குட்டைச் செடிகள் (போன்சாய்) வளர்ப்பு மற்றும் உலர் மலர் அலங்காரம்

போன்சாய்
போன்சாய் என்னும் குட்டைச் செடிகளின் வளர்ப்புக் கலையானது ஜப்பானில் 13 – ஆம் நூற்றாண்டில் தோன்றி இன்று உலகமெங்கும் பரவிக் காணப்படுகிறது. ஜப்பானிய மொழியில் “போன்” என்றால் “ஆழமற்ற தட்டுகள்” என்னும் “சாய்” என்றால் “செடிகள்” என்றும் பொருள்படும். மற்றும் போன்சாய் கலை மூலம் 100 முதல் 200 வயதான மரங்களையோ, செடிகளையோ கூட தொட்டிகளில் வளர்க்க முடியும். பொதுவாக போன்சாய் செடிகளின் வயது கூடும் போது தென் விலை மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.
Bonsai
நகர மக்களின் செடி மற்றும் மரம் வளர்க்கும் ஆவலை போன்சாய் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம். செடிகளை வளர்ப்பதற்கு போதிய இடவசதி இவர்களுக்கு இல்லை. குறுகிய இடங்களிலேயே ஓரளவு முயற்சி செய்தாலே போன்சாய் செடிகளை வளர்க்கலாம். வீட்டு மாடிகளிலும் இவற்றை வைத்துப் பராமரிக்கலாம். வரவேற்பு அறைகளில் வைப்பதற்கு உகந்த அழகிய பூக்கும் மரங்களையும், பூஜை அறையில் வைப்பதற்கு ஏற்ற ஆழ் மற்றும் வேல் போன்ற மரங்களையும், சாப்பாட்டு அறையில் விரும்பி வைக்கப்படும் அழகிய பூக்கும் சிறு மற்றும் பெரு மரங்களையும் இந்தக் குட்டைச் செடிகள் வளர்ப்புக் கலையின் மூலம் எளிதாகப் பராமரிக்கலாம். மேலை நாடுகளில் இருப்பது போன்று நமது நாட்டிலும் முக்கிய நகரங்களில் போன்சாய் வளர்ப்போர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அழகுக் கலையாகத் தோன்றி போன்சாய் கலையானது இன்று வணிக ரீதியாக வருமானம் கொடுக்கும் தொழிலாகவும் மாறி வருகின்றது. சில நூறு ரூபாய்கள் முதல் பல அயிரம் ரூபாய்கள் வரை இந்த போன்சாய் குட்டைச் செடிகள் விலை பெறுவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை உணரலாம்.
Bonsai
பாறை வெடிப்புகளிலும் பாழடைந்த கட்டிடங்களின் சுவர்களிலும்  இயற்கையாக வளரும் செடிகள் இயல்பாகவே குட்டையாகக் காணப்படும். இது போன்ற செடிகளின் குட்டைத் தன்மையை எளிதாகப் பயன்படுத்தி போன்சாய் செடிகளாக மாற்றி விடலாம். மேலும் நாற்றுப் பண்ணைகளில் தொட்டிகளில் நீண்ட நாட்கள் விற்பனையாகாமல் வைக்கப்பட்டிருக்கும் செடிகளும் குட்டையாக வளர்ந்து,  முதிர்ந்து காணப்படும். இது போன்று குட்டையாக வளரும் செடிகளை சேகரித்து போன்சாய் கலைக்குப் பயன்படுத்த வேண்டும்.
பொதுவாக சிறிய, குறுகலான இலையுதிராத தன்மை கொண்ட மரம் மற்றும் செடி வகைகளே போன்சாய்க்கு மிகவும் உகந்தவை. கனிகள் மற்றும் மலர்கள் கொடுக்கும் மரங்கள் மற்றும் செடிகளை போன்சாய் செய்யும் போது அழகும், மதிப்பும் கூடுதலாக இருக்கின்றன. பழமரங்களில் மாதுளை,  சப்போட்டா, ஆரஞ்சு, அத்தி, புளி ஆகியனவும், பாலைவன ரோசா, போகன்வில்லா, குல்மாகர் ஆகிய தாவரங்களும் , வேம்பு, இலுப்பை, வாகை, ஆல், அரச மரம், புங்கம் ஆகிய மரங்களும் பைன், ஜப்பான் டேபிள், பீச், ஆப்ரிகாட், ரோடா டெண்டிரான், சைப்ரஸ் ஆகிய பிரதேச மரவகைகளும் போன்சாய் கலைக்கு மிகவும் ஏற்றவை.
Bonsai
செடி வெட்டும் கத்திரி, அலுமினியம் மற்றும் தாமிரக் கம்பி, கம்பி வெட்டும் கத்தி, குறடு, மண் அள்ளும் கரண்டி போன்ற கருவிகள் போன்சாய் வளர்ப்பில் பெரிதும் பயன்படுவனவாகும். பல்வேறான ஆழமில்லாத பூந்தொட்டிகள் போன்சரய் வளர்ப்புக்குத் தேவைப்படுகின்றன.
போன்சாய் வளர்ப்புக்குத் தேவையான பொருத்தமான தொட்டிகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். செடிகளின் வடிவங்களுக்கேற்ப முக்கோணம், செவ்வகம், வட்டம், நீண்ட வட்டம் போன்ற வடிவுள்ள ஆழமற்ற தொட்டிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் தொட்டிகளின் உயரம் 15 செ.மீ க்கு மிகாமல் இருக்க வேண்டும். போன்சாய் செடிகளின் வண்ணத்தோடு ஒத்துப்போகும் வகையில் நீலம், கெட்டிப் பச்சை,கரும் பழுப்பு போன்ற நிறமுடன் கூடிய தொட்டிகளையே பயன்படுத்த வேண்டும் அல்லது தேவையான வடிவமுள்ள மண்தொட்டிக்கு பொருத்தமான வர்ணம் பூசியும் இதற்குப் பயன்படுத்தலாம்.
Bonsai
போன்சாய் வளர்ப்புக்குத்  தொட்டிகளின் அடிமட்டத்தில் உள்ள துளையில் கம்பி வலை அல்லது உடைந்த மண்தொட்டி துண்டு கொண்டு அமைத்து அதிகப்படியான நீர் மட்டும் வெளியேறுமாறு வைக்க வேண்டும். தொட்டிகளில் முதலில் ஒரு வரிசை சிறிய உடைந்த செங்கல் துண்டுகளை வைத்து அதன் மேல் மண் இருபாகம் , மக்கிய சாணம் ஒரு பாகம் மற்றும் இலை மட்கு ஒரு பாகம் என்ற அளவில் கலந்து நிரப்ப வேண்டும். தொட்டி கலவை நிரப்பிய பின்னர் இத்தகைய தொட்டிகளின் செடியை மாற்றி நட வேண்டும். செங்கல், கருங்கல் துண்டுகள் போன்றவற்றையும் எடுத்து நடுவில் போதிய அளவு தோண்டிய பின்னர் மண் கலவை நிரப்பியும் போன்சாய் செடிகளை வளர்க்கலாம்.
Bonsai
போன்சாய் செடிகளைப் பல்வேறு வடிவங்களில் வளர்க்கலாம். குடை வடிவம், சாய்ந்த வடிவம், நீர் வீழ்ச்சி வடிவம், ‘எஸ்’ போன்ற ஆங்கில எழுத்து போன்ற வடிவம் ஆகியவை இவற்றுள் அடங்கும். போன்சாய் மரச் செடிகளைத் தனி மரமாகவும், இயற்கைக் காடுகள் போன்று திட்டமாகவும் வளர்க்கலாம். குடை போன்ற வடிவத்தில் செடிகளைப் பயிற்சி செய்வதற்குக் கிளைகளின் நுனிப் பகுதியில் சிறிய கற்களைக் கட்டித் தொங்க விட வேண்டும். தேவையான வடிவங்களை உருவாக்க தாமிரம் அல்லது அலுமினியக் கம்பிகளைக் கொண்டு கிளைகள் மீது சுற்றி ஏற்ற வடிவங்களில் கிளைகளை மாற்றலாம். சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை கம்பிகளை அப்படியே விட்டு வைத்துப் பின்னர் அகற்றி விட வேண்டும். அப்போது கிளைகள் அந்த வடிவத்திலேயே இருக்கும்.
செடிகளை மிகவும் குட்டையாக வளர்ப்பது மிகவும் முக்கியமானதாகும். வளரும் நுனிகளை வாரத்திற்கொருமுறை கிள்ளி விடுவதன் மூலம் உயரம் இரண்டு அடிக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சிக் குறைப்பான்களான சைக்கோசெல் அல்லது பி.ஏ  போன்ற இரசாயனங்களை லிட்டருக்கு 4 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமும் செடிகளைக் குட்டையாக்க முடியும். மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கொருமுறை செடிகளை புதிய தொட்டிகளில் மாற்ற வேண்டும். தொட்டிகளை மாற்றுவதை சூன் – சூலை மாதங்களிலேயே செய்ய வேண்டும். இது சமயம் கூடுதலாக வளர்ந்துள்ள மற்றும் காய்ந்து போன வேர்கள், கிளைகள் அனைத்தையும் வெட்டி அகற்றி விடுதல் வேண்டும்.
போன்சாய் செடிகளுக்கு போன்சாய் வளர்ப்புக்கென்றே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உரக்கலவைகளையே பயன்படுத்த வேண்டும். போன்சாய் செடிகள் மிகவும் சிறிய தொட்டிகளில் வளர்க்கப்படுவதால் மாதம் ஒரு முறை கடலை பிண்ணாக்கு மற்றும் வேப்பம் பிண்ணாக்கை ஊற வைத்த கரைசலை ஊற்ற வேண்டும். புதிய தொட்டிகளில் மாற்றிய ஒரு மாதம் வரை எந்த விதமான இரசாயன உரமும் இடக்கூடாது. கோடையில் தினம் இருமுறையும் இதர பருவங்களில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இடைவெளியிலும் தேவைக்கேற்ப நீர் விட வேண்டும்.
உலர் மலர் அலங்காரம்
இயற்கை வனப்பு மிகுந்த அழகிய மலர்கள் பறித்த பின்னர் மிகவும் குறுகிய நாட்களே இருக்கின்றன.  பெரும்பாலான மலர்கள் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே மலர்கின்றன. இத்தகைய மலர்கள் மிகவும் குறுகிய காலத்தில் வாடிவிடும் தன்மையைப் பெற்றுள்ளன. இது போன்ற விழாக்களுக்கும், அலங்காரங்களுக்கும் வருடம் முழுவதும் மலர்கள் தேவைப்படுகின்றன. இது போன்ற காரணங்களால் மலர் பயன்படுத்துதல் வளர்ந்து வருகிறது. இம்முறையில் உலர வைத்து பதப்படுத்தப்பட்ட மலர்களையும் அழகு இலைகளையும் கொண்டு மலர் அலங்காரங்கள், வாழ்த்து மடல்கள் போன்றவற்றை அழகுபடுத்தவும் முடியும்.
உலர் மலர்களையும், உலர் இலைகளையும் தயாரிக்க நல்ல சூரிய வெளிச்சம் நிலவும் நாட்களில் செடியின் மீதுள்ள காலைப் பனி நீங்கிய பின்னர் சேகரிக்க வேண்டும். அறுவடை செய்த பின்னரும் மலர்களில் பனி நீர்த் துளிகள் காணப்பட்டால் அவற்றை உறிஞ்சும் காகிதம் கொண்டு ஒற்றி அகற்றி விட வேண்டும். நீர்ப் பாய்ச்சிய உடன் மலர்களைப் பறிக்காமல் நீர்ப் பாய்ச்சி ஓரிரு நாட்கள் கழித்து பின்னரே செடிகளின்று மலர்களைப் பறிக்க வேண்டும். நிறம் வெளிராமல் புதிதாக மலர்ந்த மலர்களைத் தேவையான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்தவுடன் காலந்தாழ்த்தாமல் உலர்த்த வேண்டும். இல்லாவிடில் இதழ்கள் வாடி தேவையான மலர் வடிவத்தினை இழந்து விடும்.
Bonsai
உலர்த்தும் முன்னர் தேவையற்ற பாகங்களை வெட்டி அகற்றிவிட வேண்டும். அவற்றை காகிதங்களுக்கிடையில் வைத்து அதன் உருவ அமைப்பு போன்றே அழுத்தி வைக்க வேண்டும். உறிஞ்சும் காகிதங்களுக்கு இடையிலோ அல்லது உலர் கலன்களில் செயற்கையாக பராமரிக்கப்படும் வெப்பத்திலோ மலர்களை உலர்த்தலாம். மலர் வகைகளுக்கேற்றவாறு உலர்த்தும் வெப்பநிலையையும், உலர்த்தும் காலமும் மாறுபடுகிறது. எனவே மலர் வகைகளைத் தனித் தனியே உலர்த்த வேண்டும்.
கெலிகிரைசம், லிம்மோனியம் போன்ற மலர்களைத் தழைகீழாக கட்டி விடுவதன் மூலம் காற்றில் உலர்த்தலாம். இவ்வாறு உலர்த்துவதால் இம்மலர்கள் தங்கள் புத்தம் புதுத் தன்மையிலிருந்து மாற்றங்களையும் அடைவது இல்லை.
இலைகளையும், மலர்களையும் வெள்ளை மணல், சிலிக்காஜெல், போராக்ஸ் போன்றவை அடங்கிய உலோக, பிளாஸ்டிக் அல்லது மண்கலன்களில் வைத்து அறை வெப்ப நிலையையே உலர்த்தலாம். இம்முறையில் உலர்த்தும் போது மலர்கள் உலர நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளும்.
உலர் ஊடகத்தில் வைக்கப்பட்ட மலர்களை தினமும் சூரிய ஒளியில் உலர வைப்பதன் மூலம் மலர்கள் விரைவில் உலர்ந்து விடும். மின்சாரம் மூலம் வெப்பப் படுத்தப்படும் ஓவன்களிலும் மலர்களை மிக விரைவாக உலர்த்தலாம். இம்முறையில் உலர்த்த ஒவ்வொரு வகை மலர்களுக்கும் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை தேவைப்படும். உதாரணமாக ரோசா மலர்களை 40 – 45 o செ. வெப்பநிலையில்  48 மணி நேரம் வைப்பதன் மூலம் உலர்த்தலாம். ஆனால் கிளாடியோலஸ் மலர்கள் இந்த வெப்பநிலையில் உலர 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும்.
நுண்ணலைகளால் வெப்பப் படுத்தப்படும் ஓவன்களில் சிலிக்கா ஜெல்லில் பதப்படுத்தப்பட்ட மலர்களையும், இலைகளையும், மண்பாண்டங்களில் வைத்து உலர்த்தலாம். இதுவும் ஒரே சீராக மற்றும் விரைவாக உலர்த்தும் முறையாகும்.
மிகவும் மெலிந்த பூக்காம்புகளைக் கொண்டுள்ள மலர்களின் காம்புகளை அகற்றி விட்டு 5 செ.மீ நீளமான மெல்லிய கம்பியில் மலர்களை இணைத்து உலர்த்திப் பயன்படுத்தலாம். ஆழமற்ற தட்டுகளில் அடிப்பரப்பில்  5 செ.மீ அளவில் உலர் ஊடகத்தில் ஒன்றை (போராக்ஸ், வெள்ளை மணல்) நிரப்பி அவற்றின் மேல் மலரை ஒழுங்காக வைக்க வேண்டும். சாமந்தி, டேலியா, ரோசா, மெரிகோல்டு போன்றவற்றை அவற்றின் மலர்க்காம்புகளுடனேயே உலர்த்தலாம். இவ்வாறு உரல் ஊடகத்தில் பாதுகாக்கப்பட்ட மலர்களை, ஓவனில் ஏற்ற வெப்பநிலையில் சரியான காலம் வரை உலர்த்த வேண்டும். நன்கு உலர்ந்த மலர்களை உலர் ஊடகத்தினின்று வெளியே எடுத்து மலர்களில் ஒட்டியுள்ள ஊடகத் துகள்களை அகற்றி அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு உலர்த்திய மலர்களையும், இலைகளையும் கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் ஜார்களில் சிலிக்கா ஜெல் படிகங்களுடன் சேமித்து வைக்கலாம்.
உலர் மலர்களையும், உலர் இலைகளையும் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கலன்களிலுள்ள ஈரப்பதம், காற்று மற்றும் தூசு போன்றவற்றால் பாதிக்காத வகையில் மூடி அறைகளில் அலங்காரமாக வைக்கலாம்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites