சாதாரணமாக வரைய தெரிந்திருந்தாலே போதும் உங்கள் வீட்டு வரவேற்பரை சுவரில் நீங்களே வரைந்த படத்தைக்கொண்டு அழகுப் படுத்திட முடியும். இதற்கு நன்றாக வரைய தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.. பொதுவாக எல்லோருக்கும் ஒரு சிறு பூவாவது வரைய தெரிந்து இருக்கும் இல்லையா! அதனால் அதற்கு எப்படி வண்ணங்கள் தீட்டுவது என்று பார்ப்போம்.
அதிக வண்ணங்கள் கூட அவசியமில்லை. தேவையானவை 5 அல்லது 6 நிறங்கள் அது வாட்டர் கலரா அல்லது ஆயில் கலரா என்பது உங்க விருப்பம். (இங்கே நான் பயன்படுத்தி இருப்பது ஆயில் பெயிண்ட்) 50 x 70cm அளவில் ஒரு பெரிய தாள் அல்லது கேன்வஸ் போர்ட், இரண்டு பிரஷ், பென்சில் கூடவே கொஞ்சம் பொறுமை நிறைய ஆர்வம்... !
செம்பருத்தியோ ரோஜாவோ அல்லது தாமரையோ முதலில் உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு பூவை ஒன்றின் பக்கம் ஒன்றாக பெரியதும் சிறியதுமாக நான்கைந்து பூக்களை பென்சிலால் வரைந்துக்கொள்ளுங்கள். இலைகள் கூட அவசியமில்லை. இங்கே நான் வரைந்திருப்பது ஐரோப்பிய நாடுகளில் பரவலாக பூக்கும் ‘கொக்லிக்கோ’(Coquelicot(Fre.) - Poppy(Eng.)) மலர்கள்.
எப்போதும் வண்ணங்களை தேர்ந்தெடுப்பதில்தான் அதிக கவனம் தேவை. முதலில் டார்க் கலரை கொண்டு பூக்களற்ற மற்ற பகுதியில் பெயிண்ட் பண்ணுங்க. அது உங்க வீட்டு வரவேற்பரையில் உள்ள கர்ட்டன் கலரிலோ... டேபிள் க்ளாத் கலரிலோ இருந்தால் கூடுதல் அழகை கொடுக்கும்.
வெறும் ஒரே நிறத்தைக்கொண்டு தீட்டாமல் ஓரங்களில் கொஞ்சம் கருப்பு நிறத்தையும் உட்புறமாக கொஞ்சம் வெள்ளையும் கலந்தால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
அடுத்து பூக்களுக்கான நிறத்தை தேர்வு செய்துக்கொள்ளுங்கள். சிகப்பு, ஆரஞ்சு, பிங்க், நீலம்..... இப்படி எந்த நிறமாக இருந்தாலும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நிறம் ஏற்கனவே தாளில் கொடுக்கப் பட்டிருக்கும் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட் ஆக இருந்தால் பார்க்க பளிச்சென்று இருக்கும். பூவிதழ்களின் ஓரங்களில் கொஞ்சம் அழுத்தமாக, டார்காகவோ அல்லது லைட்டாகவோ வண்ணம் தீட்டினால் ஒவ்வொரு இதழ்களும் தனித்தனியாக தெரியும். பூத்தண்டுகளுக்கு பச்சையும் இடையிடையே கொஞ்சம் கருப்பு நிறமும் கலந்து அடித்து விடுங்கள்.
பொருத்தமாக ஃபிரேம் செய்து விட்டால், அவ்வளவுதான்.... ஒரு சிம்பிளான பெயிண்டிங் ரெடி! காசுக் கொடுத்து வாங்கும் பொருளை விட நாமே தீட்டிய ஓவியத்தைக்கொண்டு வீட்டை அழகுப்படுத்துவது சந்தோஷம்தானே! உங்களுக்குள் இருக்கும் வரையும் திறனை வெளிக்கொண்டு வரும் சிறு முயற்சியாக இது இருக்கட்டுமே.. கொஞ்சம் வரைந்துதான் பாருங்களேன்!
0 comments:
Post a Comment