இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, September 14, 2013

தேங்காய் நார் கழிவில் செழி செடிகள்

ஆண்டுக்கு இரு பருவ மழை, எப்போதும் சூரிய ஒளி, அனைத்து வகை மரம் செடி கொடிகளும் உயிரினங்களும் வளரக்கூடிய சூழல், சுழற்றியும்  தழுவியும் செல்லும் காற்று, உள்ளம் குளிர வைக்கும் பனி என்று இயற்கை நமக்கு அளித்த வரங்கள் ஏராளம். செம்மண், கரிசல், வண்டல் என மண்  வளமும் தாராளம். இவற்றை நாம் முழுதாக பயன் படுத்துவதில்லை என்பதே உண்மை. 
Coconut fiber waste plants flourish!
மண் வளம் குறைந்த, கடுங்குளிர் கொண்ட வெளிநாடுகளில் எப்படி விவசாயம் நடக்கிறது? அதிலும் குறிப்பாக ஹாலந்தில்தான் உலகிலேயே அதிக  அளவு மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. எப்படி? அவர்கள் மண்ணுக்கு பதிலாக பயன்படுத்தும் பொருள்தான் முக்கிய காரணம். அந்தப் பொருளும்  நம் நாட்டில் இருந்தே அதிக அளவு ஏற்றுமதி ஆகிறது. ஆம்... நாம் தினந்தோறும் சமையலுக்குப் பயன்படுத்தும் தேங்காய்தான் அந்த பொருள்.  தேங்காய் நார் துகள்கள்தான் அங்கு விவசாயத்துக்குப் பயன்படுகின்றன!

தேங்காய், தேங்காய் நார் மற்றும் தேங்காய் மட்டையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் காயிர் ஃபைபர், காயிர் சிப்ஸ் மற்றும் காயிர் பித். இதில்  காயிர் ஃபைபர் என்பது சோபா, வாகனங்களில் இருக்கைகள் செய்யவும் மெத்தைகள் செய்யவும் பயன்படுகிறது. காயிர் சிப்ஸ் என்பது தேங்காய்  மட்டையை சிறுதுண்டுகளாக வெட்டுவது, காயிர் பித் என்பது நாரிலிருந்து விழும் கழிவு. இவை இரண்டும் விவசாயத்துக்குப் பயன்படுகிறது.
தேங்காய் நார் துகளை உலர வைத்து, செங்கல் போன்று தயாரிக்கப்படுகிறது. 

இந்த செங்கல்லை உதிர்த்து தண்ணீரில் ஊற வைத்தால் 5 மண் தொட்டிகள் அளவு கிடைக்கும். இயற்கையாகவே அதிகம் உரம் தேவைப்படாது.  தண்ணீரின் தேவையும் மிகக்குறைவு.
Coriander up to the strawberries!

காயிர் பித் (மண்ணுக்கு மாற்று) பயன்படுத்துவதால் என்ன பயன்?

1. சத்துகளை செடி உறிஞ்சும் அளவு அதிகரிக்கும்.
2. குறைந்த அளவு உரம் போதுமானது.
3. வறட்சியை தாங்கும் சக்தி அதிகரிக்கும்.
4. குறைந்த அளவு நீர் போதுமானது.
5. மண்ணில் நன்மை தரும் நுண்ணுயிர்களின் செயல்பாடு அதிகரிக்கும்.
6. முளைப்புத்திறன் கூடுவதால் அதிக நாற்றுகள் கிடைக்கும்.
7. வேர் வளர்ச்சி அதிகரிக்கும். 
8. செடிகள் ஆரோக்கியமாகவும் பசுமையாகவும் காணப்படும்.

எப்படி?

செங்கல் போல கட்டிகளாக கிடைக்கும் இவற்றை பெரிய பக்கெட்டில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி வைத்தால், நன்கு ஊறி உதிராக மண் போல  மாறும். பெரிய தேங்காய் மட்டை சிலவற்றை தொட்டியின் அடியில் போடவும்.அதன் மேல் சிப்ஸ் எனப்படும்  சிறிய துண்டுகளாக வெட்டிய தேங்காய்  மட்டையை பாதி நிரப்பவும். இவை கிடைக்காவிட்டால் பொடி நார் கழிவே போதும்.

இத்துடன் ஈ.எம். கரைசல், ‘வேம்’ பூஞ்சானம், ஹுயுமிக் அமிலம் மற்றும் மண்புழு உரம் சேர்த்து கலந்து தொட்டியின் அளவுக்கு நார்கழிவை நிரப்பவும்.
இனி விதை நட வேண்டியதுதான். மண் போன்று தண்ணீரை தேக்கி வைக்கும் தன்மை அதிக அளவில் இல்லாததால், குறைந்த அளவு தண்ணீர்  தெளித்தாலே போதும். இருவேளை தண்ணீர் விடவேண்டிய அவசியம் இல்லை.

‘‘ஈ.எம். என்பது ஒருவகை நுண்ணுயிரி. ஈ.எம்., கரும்புச் சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை (1 : 1 : 20 விகிதத்தில்) கலக்க வேண்டும். அதாவது, ஒரு  பங்கு ஈ.எம்., ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை 20 பங்கு தண்ணீர் ஆகியவற்றை 2 லிட்டர் பாட்டிலில் கலந்து ஒரு வாரம் வரை காற்று புகாமல் நொதிக்க  வைக்க வேண்டும். தினம் ஒரு முறை மூடியை திறந்து மூட வேண்டும். ஒரு வாரம் கழித்து பாட்டிலில் வெண்மையாக ஆடை போல படிந்திருக்கும்.  அதன் பின் ஒரு பக்கெட் தண்ணீருக்கு 5 மூடி ஊற்றி செடிகளில் தெளிக்கலாம். 

இவற்றை அதிகபட்சம் 2 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். சமையலறை, குளியலறை போன்ற இடங்களிலும் இதை உபயோகிக்கலாம்.  விரைவாக உலர்ந்து ஈரமின்றி இருப்பதுடன், ஈக்களும் வருவதில்லை. துர்வாசனை இல்லை. வீடு துடைப்பதற்கும், வாகனங்களை கழுவுவதற்கும், சிறு  குழந்தைகளின் உள்ளாடைகளை சுத்தம் செய்யவும்கூட ஈ.எம். ஏற்றது. செலவு மிகமிகக் குறைவு என்பதுடன், இது ஒரு மிகச்சிறந்த  இயற்கைப்பொருள். புனே, கோவை மாநகராட்சிகள் கழிவுகளை ஈ.எம். கொண்டுதான் மக்க வைத்து மறுசுழற்சி செய்கிறார்கள்!’’ என்கிறார்  தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட், ‘வேம்’, ஹுயுமிக் அமிலம் பற்றியும் விளக்குகிறார்.

வேம் (VAM )  என்னும் வேர் பூஞ்சானம். Vesicular Arbuscular Mycorrhiza என்பதன் சுருக்கமே வேம். இது தாவரங்களுக்கு பயன் அளிக்கக்கூடிய  வேர் பகுதியில் காணப்படும் ஒரு வகை பூஞ்சானம். தாவர வேர்களில் ஒட்டிக்கொண்டு வேரையும் மண்ணையும் இணைத்து மண்ணிலுள்ள  பாஸ்பரஸை நேரடியாகவும், மற்ற சத்துகளையும் நீரையும்  மறைமுகமாகவும் எளிதாக உறிஞ்சி தாவரங்களுக்கு தரும். இது வேர்களை அதிக  அளவில் உண்டாக்குவதால் விளைச்சல் அதிகரிக்கவும் உதவு கிறது. பூஞ்சானம் என்பதால் மண் அல்லது மணலுடன் சேர்ந்து இருக்கும். செடி அல்லது  விதை வைக்கும் போது இவற்றை மணலில் கலந்து வைக்கலாம்.

ஹுயுமிக் அமிலம் என்பது நிலக்கரியில் இருந்து கிடைக்கும் ஒரு வகை உரம். மண்ணோ, தேங்காய் நார் கழிவோ... தொட்டியில் நிரப்பியதும் எப்படி  விதை அல்லது நாற்று தேர்வு செய்வது? எந்தச் செடிக்கு என்ன அளவு தொட்டி அல்லது பிளாஸ்டிக் பை? அடுத்த இதழில் பார்க்கலாம்! 

வாசலில் காய் வண்டிக்காரரும், கூடையில் காய் கொண்டு வரும் பெண்ணும், மூலைக்கடை அண்ணாச்சியும் கொசுறாக தந்த கொத்தமல்லித்தழையை  இப்போது கிராம் கணக்கில் துல்லியமாக எடை போட்டு பன்னாட்டுக் கடைகளில் வாங்குகிறோம். கீரை என்ற பெயரில் வாடி வதங்கிப்போன ஒரு  பச்சைக் கட்டை தலையில் கட்டியதை அறியாமல், வீட்டுக்கு வந்து கழுவியதும் அதுவும் சாயம் போகும் கெமிக்கல் உலகில் வாழ்கிறோம். 

எல்லா விஷயங்களுக்கும் மாற்று இருக்கும் இவ்வுலகில் இதற்கு இல்லாமலா போகும்? அபார்ட்மென்ட்டோ தனிவீடோ - ஒரு கையளவு இடம்  இருந்தால் கூட அதில் அருமையாக அழகுத்தோட்டம் அமைக்கலாம். கொத்தமல்லி முதல் மல்லிகை வரை, தக்காளி முதல்  ஸ்ட்ராபெர்ரி வரை  நாமே வளர்க்கலாம். 

கிச்சன் கார்டன் அமைக்க

இதற்கு முதல் தேவை கொஞ்சம்  ஆர்வம்... கொஞ்சம் முயற்சி... கொஞ்சம்  திட்டமிடல்... அவ்வளவுதான்! என்னதான் சூப்பர் மார்க்கெட்டில் கிலோ  கணக்கில் காய்கள் வாங்கினாலும் நாமே வளர்த்த இரண்டு தக்காளியின் சுவை வேறு எதிலும் வராதே. அது மட்டுமல்ல... தோட்டம் என்பது  மனதையும் உடலையும் ரிலாக்ஸ் செய்ய உதவும் சூப்பர் விஷயம்!  கிச்சன் கார்டன் என்பது பிளாஸ்டிக் கப்புகளிலும் தண்ணீர் பாட்டில்களிலும் ஏதோ  ஒரு செடி வளர்த்து கொசு உற்பத்தியை பெருக்குவதல்ல. 

உண்மையில் பெட் பாட்டில்களை வேறு விதமாக பயன் படுத்த முடியும். பாரம்பரிய முறையில் உரம் முதல் அனைத்தும் நாமே தயாரிக்க முடியும்.  அதிக நேரமோ பணமோ தேவையில்லை. அபார்ட்மென்ட் வாசிகள் மொட்டை மாடியை பயன்படுத்தலாம். குழுவாக இணைந்து தினம் ஒருவர் என்ற  முறையில் கூட பராமரிக்கலாம். குழந்தைகளையும் ஈடுபடுத்தலாம்.

என்னென்ன தேவை?


கிச்சன் கார்டனில் அடிப்படைத் தேவைகள் மிகக் குறைவே. மண் தொட்டிகள் எப்போதுமே நல்லது. மண்ணுக்கு நீரை உறிஞ்சி குளிர்ச்சியை தக்க  வைக்கும் தன்மை உள்ளதால் செடிகளின் பசுமைக்கு அது கேரண்டி. மண் தொட்டிகளின் கலரில் பிளாஸ்டிக் தட்டுகள் கிடைக்கின்றன. அதன் மேல்  தொட்டி வைத்தால் தரை பாழாகாது. மொட்டை மாடிக்கு ஏற்ற சிமென்ட் தொட்டி, மண் தொட்டி, மற்றும் ‘யுவி ட்ரீட்’ செய்த செடி வளர்க்கும் பைகள்  கிடைக்கின்றன. தேங்காய் மட்டை, மண், மண்புழு உரம், மூடியில் துளை இட்ட சிறிய பெட் பாட்டில், விதை போன்றவற்றை ரெடி செய்த பிறகு,  விதைகளை நர்சரியில் வாங்கலாம். 

மண் மரம்  மழை மனிதன்!


இருக்கிற இத்தினியூண்டு இடத்தில் எப்படி ஏராளமாக வளர்ப்பது, தண்ணீர் சிக்கனம், எந்தச் செடியை எப்படிப் பராமரிப்பது என்பது பற்றியெல்லாம்  அடுத்து வரும் இதழ்களில் விளக்க இருக்கிறார் கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கச் செயலர் பா.வின்சென்ட். இவர் 20  ஆண்டு கால இந்தியன் வங்கி பணிக்குப் பின் விருப்ப ஓய்வு பெற்றவர். சிறுவயது முதல் இவரது பொழுதுபோக்கே அலங்காரச் செடிகள்  வளர்ப்பதுதான். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளரான இவர், இப்போது வெட்டிவேரை பிரபலப்படுத்துவதையும் நாற்றுகள் உற்பத்தி, இயற்கை விவசாயம்,  இயற்கை இடுபொருள்கள், மழைநீர் சேமிப்பு, மரம் வளர்ப்பு, மருத்துவச் செடிகள் பற்றி வலைப்பூவில்   (maravalam.blogspot.in) பகிர்வதையும்  ஆர்வமுடன் செய்து வருகிறார்.

(நன்றி குங்குமம் தோழி)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites