இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, September 14, 2013

என்னால முடியும்னா பெண்ணால முடியும் தானே?

இரும்பு மனுஷி...

ஜானகி ரவிச்சந்திரனை இப்படி அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ராணிப்பேட்டையில் இயங்கும் பிரமாண்ட வால்வ் தொழிற்சாலையான  ‘குளோப் காஸ்ட்’டின் முதுகெலும்பே இவர்தான். சரியான நேரத்தில் இவர் எடுத்த சரியான முடிவு, இன்று 450 குடும்பங்களின் வயிற்றில் பால்  வார்த்திருக்கிறது. 

சுமார் 450 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்த மிகப்பெரிய தொழிற்சாலை. அந்த 450 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரம் நபர்களுக்கும், அந்தத்  தொழிற்சாலையே ஆதாரம். திடீரென ஒரு நாள் அந்தத் தொழிற்சாலை இழுத்து மூடப்படுகிறது. அத்தனை குடும்பங்களும் அடுத்த வேளை  சாப்பாட்டுக்கும், இதர தேவைகளுக்கும் வழி தெரியாமல் நிற்கிற அந்தக் காட்சி, கற்பனை செய்யவே நமக்கெல்லாம் பதைபதைக்கிறதில்லையா?

ஜானகி ரவிச்சந்திரனுக்கும் அப்படித்தான் இருந்திருக்கிறது. பதற்றத்தையும் பதைபதைப்பையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சரியான நேரத்தில் அவர்  எடுத்த சரியான முடிவால், வாழ்விழந்த அத்தனை குடும்பங்களுக்கும் இன்று வழி பிறந்திருக்கிறது. அந்தக் கதையை ஜானகியின் வார்த்தைகளிலேயே  கேட்போம். ‘‘எங்கப்பா ராம்தாஸ், ஆர்மியில கேப்டனா இருந்தவர். அவர் பார்த்திட்டிருந்த பிசினஸ்ல நான் நிறைய ஹெல்ப் பண்ணியிருக்கேன்.  அப்பாவோட ஆபீசுக்கு எதிர்லதான் ஸ்கூல். பெல் அடிக்கிற வரை அப்பாகூட இருந்துட்டு, பெல் சத்தம் கேட்டதும், புத்தகப் பையைத் தூக்கிட்டு  ஓடுவேன். 

அந்தளவு சின்ன வயசுலேருந்தே எனக்கு பிசினஸ் பிடிக்கும். இன்டஸ்ட்ரியலிஸ்ட் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை. எம்.காம்., ஐ.சி.டபிள்யூ.ஏ.  படிச்சேன். பிரபல துப்பறியும் நிபுணர் குலோத்துங்க சோழன், என் அக்காவோட கணவர். அவர்கிட்ட துப்பறியும் நிபுணரா கொஞ்ச நாள் வேலை  பார்த்தேன். நேரம் கிடைக்கிற போதெல்லாம் தூர்தர்ஷன்ல தொகுப்பாளராகவும், பகுதிநேர டாகுமென்டரி தயாரிப்பாளராகவும் இருந்திருக்கேன். 

வேலை விஷயமா, சோனி நிறுவனத்துல வேலை பார்த்திட்டிருந்த ரவிச்சந்திரனை சந்திச்சேன். ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.  தூர்தர்ஷன் உள்ளிட்ட மற்ற சேனல்களோட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கான உபகரணங்களோட தேவை அதிகரிக்க ஆரம்பிச்ச நேரம் அது.  நானும் கணவரும் ஜப்பான்ல உள்ள சோனி நிறுவனத்தோட விநியோகஸ்தர்களா நியமிக்கப்பட்டோம். அப்புறம் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ்ல தீவிரமா  இறங்கினோம். 

இப்படிப் பல விஷயங்கள்ல பிசியா இருந்த போதும், என் மனசு முழுக்க இன்டஸ்ட்ரியலிஸ்ட் ஆகணுங்கிற கனவு குறையாம அப்படியே இருந்தது.  சேஷசாயி குழுமத்தோட பிரபலமான ‘சீ கால்ட்ஸ்’ நிறுவனம் ராணிப்பேட்டையில இயங்கிட்டிருந்தது. 25 வருஷ தொழிற்சாலை அது. வால்வ்  இன்டஸ்ட்ரி யில, அந்த நிறுவனத்துக்கு முக்கிய இடமிருந்தது. என்ன, ஏதுன்னு தெரியாம திடீர்னு ஒரு நாள் அந்த கம்பெனியை மூடிட்டாங்க. அதை  விற்கறதுக்கான டென்டர்ல நான் கலந்துக்கிட்டு, எடுத்தேன். 

எங்கெல்லாம் அதிக அழுத்தத்துல திரவப்பொருள்கள் பாயுதோ, மனிதர்களால கையாள முடியாதோ, அதைக் கட்டுப்படுத்தற வால்வுகளை ‘அலாய்  கேஸ்டிங்’னு சொல்வோம். அதை உற்பத்தி பண்ற தொழிற்சாலைங்கிற அளவுக்குத்தான் நான் டென்டர்ல எடுத்த கம்பெனியை பத்தி எனக்குத்  தெரியும். மத்தபடி அந்தத் துறையில எனக்கு எந்தவிதமான பின்னணியோ, அனுபவமோ இல்லை. ஃபேக்டரியை பிரிச்சு, பார்ட் பார்ட்டா விலை பேசி  எடுத்துட்டுப் போக ஒரு பெரிய கூட்டமே காத்திட்டிருந்தது. 

என்னோட நோக்கம் அது இல்லை. ஏதோ ஒரு தைரியத்துல எடுத்தாச்சு. என்னன்னு தான் பார்ப்போமேங்கிற ஐடியாவுல ஒருநாள் மூடிக்கிடந்த  தொழிற்சாலைக்குப் போனேன். 25 வருஷப் பாரம்பரியம் உள்ள ஒரு பிரமாண்ட தொழிற்சாலை, கம்பீரமெல்லாம் இழந்து, பாழடைஞ்சு நின்னதைப்  பார்த்தப்ப, வாழ்ந்து கெட்ட மனிதரைப் பார்க்கற மாதிரி மனசுக்கு சங்கடமா இருந்தது. வாட்ச்மேன் மட்டும் என்கூடவே வந்தார். 

அவர்கிட்ட பேச்சு கொடுத்தப்ப, அவர் அதே ஃபேக்டரியில ஒரு பெரிய பதவியில, கை நிறைய சம்பளத்துல வேலை பார்த்தவர்னும், இப்ப பிழைப்புக்கு  வழியில்லாம வாட்ச்மேன் வேலை பார்க்கிறதாகவும் சொன்னப்ப, எனக்குக் கண் கலங்கிடுச்சு. அது மட்டுமில்லை, அவரை மாதிரி நூத்துக்கணக்கான  பேர், வேலையில்லாம வீட்ல சும்மா இருக்கிறதும், அவங்க பிள்ளைங்க படிப்பு கெட்டுப் போய் நிற்கறதையும் கேள்விப்பட்டப்ப, எல்லாருக்கும் ஏதாவது  செய்தாகணுங்கிற உத்வேகம் வந்தது. 

அத்தனை நாள் நான் பார்த்துக்கிட்டிருந்த மத்த எல்லா வேலைகளையும் என் கணவர் பொறுப்புல விட்டுட்டு, முழு நேரமும், அந்த ஃபேக்டரியை சரி  பண்றதுலயே செலவழிச்சேன். முதல் வேலையா, நிறுவனத்தை மூட என்ன காரணம்னு ஆராய்ச்சி பண்ணினேன். ரெண்டு ஊழியர்கள், கொஞ்சம்,  கொஞ்சமா பணத்தைக் கையாடல் பண்ணியிருந்தது தெரிய வந்தது. அதைக் கவனிக்காம விட்டதோட விளைவு, கம்பெனியே நஷ்டமாகிற அளவுக்குப்  போய், அத்தனை பேர் வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியிருந்தது. 

யாரோ செய்த தவறால, விசுவாசமா வேலை பார்த்த மத்தவங்க பாதிக்கப்படக்கூடாதுன்னு முதல் கட்டமா சிலரை மறுபடி வேலைக்கு எடுத்தேன்.  ‘குளோப் கேஸ்ட்’டுன்னு பேரை மாத்தினோம். நான் உள்ளே அடியெடுத்து வச்ச நிமிஷத்துலேருந்து, ஒவ்வொரு மெஷினையும் அக்குவேறு,  ஆணிவேறா தெரிஞ்சுக்கிட்டேன். என்ன மூலப்பொருள் தேவை, மார்க்கெட் நிலவரம் என்னங்கிறதையும் கவனிச்சேன்.

என் பார்வைக்குத் தப்பாம எதுவும் நடந்துடாம எச்சரிக்கையா இருந்தேன். ஆறே மாசத்துல புதுசா செட் பண்ணின மாதிரி, மொத்தமா மாத்தி,  வேலையை ஆரம்பிச்சோம். எந்த ஊருக்கு, எந்த நாட்டுக்குப் போனாலும், அங்க என் ரூம்ல உட்கார்ந்துக்கிட்டே, ராணிப்பேட்டையில ஃபேக்டரியில  என்ன நடக்குதுன்னு பார்க்கப் பழகினேன். 

ஃபீனிக்ஸ் பறவை மாதிரி ஃபேக்டரி நிமிர்ந்து எழுந்து நின்னது. இன்னிக்கு இந்தியாவுல உள்ள பிரபல நிறுவனங்கள் பலதுக்கும் நாங்கதான் அலாய்  கேஸ்டிங் சப்ளை பண்றோம். பிசினஸ் பிக்கப் ஆக ஆரம்பிச்ச நேரம், மின்சார வெட்டு மூலமா அடுத்த பிரச்னை வந்தது. ஆனாலும் நாங்க  பயப்படலை. சோலார் பவர் மூலமா மின்சார உற்பத்தி பண்ணி, ஃபேக்டரியை இயக்கறதுக்கான எல்லா வேலைகளையும் பண்ணிட்டோம்.able to I can That woman Thane?


இந்த தொழிற்சாலையை நான் கைப்பற்றின போது, ‘உன்னால இதெல்லாம் முடியுமா’ன்னு கேட்காத ஆளே இல்லை. ‘உன்னால முடியுமா’ங்கிற அந்த  வார்த்தைகளோட பின்னணியில ‘பெண்ணால முடியுமா’ங்கிற கேள்விதான் மறைஞ்சிருந்தது. எல்லா நெகட்டிவான விஷயங்களையும் பாசிட்டிவா  எடுத்துக்கக் கத்துக்கிட்டேன். வாழ்க்கையில யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை? 

ஐயோ... எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு உட்காரக்கூடாது. பிரச்னைகளை எதிர்கொண்டு, அதுலேருந்து மீண்டு வர்றவங்கதான் இன்னிக்கு எல்லா  துறைகள்லயும் தலைவர்களா இருக்காங்க. பெண்கள் மனதளவுல ரொம்பவே ஸ்ட்ராங்கானவங்க. அவங்க மனசு வச்சா, முடியாத காரியம் எதுவுமே  இல்லை. என்னால முடியும்னு நிரூபிச்சுக் காட்டிட்டேன். என்னால முடியும்னா, பெண்ணால முடியும்தானே அர்த்தம்?’’ - நியாயமாகக் கேட்கிறார்  இரும்பு மனுஷி!

- ஆர்.வைதேகி 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites