செங்கல்லுக்கு
மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக்
என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த
தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். ஹாலோ பிளாக்ஸ் தயாரிப்பு, தொழில்நுட்பம் பற்றி கடந்த வாரம் அலசியதற்கு
வந்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாகவே இந்த வாரம் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்.
புதிய தொழில்நுட்பத்தில்
நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த
நண்பனாக இருப்பதாலும், கட்டுமானத்துறையில்
இப்போது ஃப்ளை ஆஷ் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்புச் செலவு அதிகம் என்றாலும், செங்கல்லின் தேவை தவிர்க்க
முடியாதது என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனல் மின்
நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான் முக்கிய மூலப் பொருள். 'சிமென்ட்
செங்கல்’, 'சிமென்ட்
கல்’ எனவும்
அழைக்கப்படுகிற இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ், செங்கல்லை விடவும் நீடித்து
உழைக்கும். மற்றும் சீக்கிரத்தில் உடையாது. இந்த தன்மைகளால் கட்டட வேலைகளில்
பெரிதும் நம்பகத் தன்மையை அடைந்து விட்டது.
ஆண்டுக்கு 90 மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் இந்தியாவின் அனல்
மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில் இன்னும் அதிகளவில் இந்த
நிலக்கரி சாம்பல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். பொது வாக நமது நாட்டில்
மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின்
நிலையங்களே பூர்த்தி செய்வதால்,
இந்த
கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம்.
குறிப்பாக தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், மற்றும்
வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து எளிதாகக் கிடைத்து விடுவதால் இதன் அருகில்
இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு இந்த தொழில் செய்வது கூடுதல் வாய்ப்பாகக்
கருதப்படுகிறது.
பயன்பாடுகள்
இந்த ஃப்ளை ஆஷ் கற்களைக் கொண்டு கட்டப்படும்
கட்டடங்கள் நல்ல உறுதியாக இருப்பது முக்கியமான விஷயம். இதன் வடிவம் மற்றும் அளவு
கட்டட வேலைகளை சுலபமாக்குகிறது. தண்ணீர் கசிவின்மை, வலிமை, நெகிழ்வுத்தன்மை
போன்ற கான்கிரீட்டை உறுதிப்படுத்தும் பண்புகள் இந்த கற்களில் இருப்பதால் கட்டட
பொறியாளர்களின் முதன்மை தேர்வாக இது இருக்கிறது.
தயாரிக்கும் முறை
நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புகல் 10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களை சரியான விகிதத்தில் சேர்க்க வேண்டும். 8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை
ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கல் கிடைத்துவிடும்.
ஹாலோ பிளாக் தயாரிப்பு முறைதான் இதற்கும் என்றாலும், இதனை 48 மணி
நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கற்கள் மீது தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள்
கூடுதல் அடர்த்தியாகும்.
இயந்திரங்கள்
மெக்கானிக்கல், ஹைட்ராலிக் மற்றும் ஸ்டேஷனரி போன்ற இயந்திரங்கள் இதில் பயன்
படுத்தப்படுகிறது. இந்த மூன்றும் வெவ்வேறு வகையான அளவுகளில் கற்களை தயாரித்து
தருகின்றன. எனவே வசதிக்கு தகுந்தாற்போல், உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில் இயந்திரத்தை வாங்கிக்
கொள்ளலாம். இந்த இயந்திரங்கள் கோயம்புத்தூரில் மட்டுமே கிடைக்கிறது.
ஆட்கள்
ஒரு யூனிட்டுக்கு 20 பணியாளர்கள் வரை தேவைப்படுவார்கள். சந்தை வாய்ப்பு
சாதாரண செங்கலுக்கு பதில்
தற்போது நவீன தொழில்நுட்பத் தில் தயாரிக்கப்படும் இந்த ஃப்ளை ஆஷ் எனும் சிமென்ட்
செங்கல் கட்டுமானத் துறையில் அதிகளவில் பயன்படுத்துகிறார் கள். எனவே இதற்கான சந்தை
வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. கமிஷனுக்கு வாங்கிச் செல்லும் ஏஜென்டுகள், கட்டட பில்டர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் நேரடி
வாடிக்கையாளர்கள்.
ஃபைனான்ஸ்
சொந்த இடமாக இருந்தால்
உற்பத்திச் செலவு குறையும். கட்டடம் மற்றும் சிவில்
வேலைகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும்
இயந்திரத்திற்கு பதினாறு லட்சம் ரூபாய், செயல்பாட்டு
மூலதனம் ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.
மூலதனம்
நிறுவனர் ஐந்து சதவிகித
மூலதனமாக 1.25 லட்சம் ரூபாய் வரை போட
வேண்டியது வரும். மீதமுள்ள 95% அதாவது 23.75 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து கடனாக
பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்
இந்த தொழில் பிரதம மந்திரி
வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 8.75 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது
இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத்திற்குப் பிறகுதான் வரவு
வைக்கப்படும்.
சாதகம்
இந்த தொழிலுக்கு தேவையான
முக்கிய மூலப் பொருளான நிலக்கரி சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்து
வந்தது. அனல் மின் நிலைய உலையில் இருந்து 20% நிலக்கரி சாம்பல்களை இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்
உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே
இனி மூலப் பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பது இந்த தொழிலுக்கு சாதகமாக
இருக்கிறது.
பாதகம்
இயந்திரத்திலிருந்து
செங்கல் வந்ததும் காயவைத்த பின்பு தண்ணீர் ஊற்றி கல்லை கடினப் படுத்த வேண்டும்.
இந்த வேலை மழைக்காலத்தில் சுலபமாகிறது. மிதமான மழையினால் இந்த தொழிலில் எந்தவித
பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பலத்த மழை எனில் கொஞ்சம் தொய்வு ஏற்படும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : வெ. பாலாஜி
|
0 comments:
Post a Comment