இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, September 4, 2013

எந்த ஊரில் என்ன வாங்கலாம்

உலகின் மிகப் பெரிய பனியன் சந்தை திருப்பூர். தரம், வடிவமைப்பு உள்பட எல்லாவற்றிலும் சர்வதேச எதிர்பார்ப்பிற்கு  தன்னை அப்டேட் செய்து கொண்டிருப்பதால் இந்த பிஸினஸ் ரேஸில் வீழ்ந்திடாமல் ஓடிக்கொண்டிருக்கிறது திருப்பூர் குதிரை.
இந்த பனியன் பிரதேசத்தில் 'காதர் பேட்டைஎன்றொரு ஏரியா உங்களுக்குத் தெரியுமா? திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிர்புறம் இருக்கும் இந்த காதர் பேட்டை 'செகண்ட்ஸ் பனியன்என்றழைக்கப்படும் சிறிய அளவிலான டேமேஜ்களுடைய பனியன் துணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் ஏரியா. இந்த பேட்டையின் ஓராண்டு டேர்ன் ஓவர் சுமார் சில நூறு கோடிகளைத் தாண்டுமாம்.  
அப்படி என்னதான் நடக்கிறது காதர் பேட்டையில்? என்று இறங்கி அலசினோம்.  பிளாட்ஃபார்ம் கடையில் ஆரம்பித்து மெகா ஷோரூம்கள் வரை இந்த செகண்ட்ஸ் துணிகளை விற்பனை செய்யும் கடைகள் அறுநூறுக்கும் மேல் இருக்கின்றன.
எப்படி உருவானது இந்த காதர் பேட்டை என்பதுகுறித்து சொன்னார் 'திருப்பூர் செகண்ட்ஸ் பனியன் ஓனர்ஸ் அசோசியேஷன்துணைத் தலைவரான நாகராஜ். 
''1965-ம் ஆண்டுவாக்குல இந்த காதர் பேட்டை உருவாச்சு. திருப்பூர்ல இருக்கிற பனியன் கம்பெனிகளுக்கு பல நாடுகள்ல இருந்து டி-ஷர்ட், பனியன், ஷார்ட்ஸ், நைட் பேன்ட்ஸ் மாதிரியான துணிகளை தயாரிச்சு தரச் சொல்லி ஆர்டர் கொடுப்பாங்க. ஒரு லட்சம் பீஸ் ஆர்டர் கிடைச்சதுன்னா, ஒரு லட்சத்து பத்தாயிரம், இருபதாயிரம்னு தயாரிப்பாங்க கம்பெனி ஓனர்கள். காரணம், சில துணிகள் மெஷின்ல சிக்கி கிழிஞ்சிடும், மெஷின்ல உள்ள ஆயில் பட்டுடும். இது மாதிரி பிரச்னைக்குள்ளான பீஸை ஏற்றுமதி பண்ண மாட்டாங்க.

இப்படி கழிக்கப்பட்ட துணிகளை குறைஞ்ச விலையில மொத்தமா வாங்கிட்டு வந்து அப்படியேயும் அல்லது ஓட்டை விழுந்த இடத்துல பேட்ச் ஒர்க் பண்ணியும், ஆயில்பட்ட இடத்தை வாஷ் பண்ணியும் விற்பனை செய்யுறதுதான் காதர் பேட்டை பிஸினஸ் ஸ்டைல்'' என்றார் நாகராஜ்.
''நல்ல குவாலிட்டியான டி-ஷர்ட்டை ஷோரூம்ல போய் வாங்கினா ஐநூறு, அறுநூறு ரூபா சொல்லுவாங்க. ஆனா, அதே டி-ஷர்ட் சின்னதா ஒரு ஓட்டையோட இருக்குதுன்னா, இந்த காதர் பேட்டையில வெறும் முன்னூறு ரூபாய்க்கு கிடைக்கும். குழந்தைகளுக்கான ஜட்டி 10, 15 ரூபாயில் ஆரம்பித்து, பெரியவர்களுக்குத் தேவைப்படுகிற துணிகள் வரை மிகக் குறைந்த விலையில் இங்கு வாங்கிவிடலாம். தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர் சமயங்களில் புதுத் துணிகள் பிஸினஸுக்கு இருக்கிற வரவேற்புக்கு நிகரான டிமாண்ட் இங்கேயும் இருக்கும்'' என்றும் சொன்னார் அவர்.
''காதர் பேட்டையில வெறும் சில்லறை விற்பனைகள் மட்டுமல்ல, மொத்தமா கொள்முதல் பண்ணிட்டு போயி வெளிமாநிலங்கள், வெளிநாடுகள்ல விற்கிற பிஸினஸையும் ஆயிரக்கணக்கான ஆளுங்க பண்ணிட்டிருக்காங்க'' என்கிறார்கள் இங்கு கடை நடத்தும் வியாபாரிகள்.
இந்த செகண்ட்ஸ் துணிமணிகளை நம் வியாபாரிகள் வாங்கிச் செல்வது ஒருபக்கமிருக்க,  சமீப காலமாக வெளிநாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் பெரிய அளவில் வாங்கிச் சென்று, நைஜீரியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் அதிக விலை வைத்து விற்கிறார்களாம். ''இதனால் உள்ளூர்க்காரர்களின் வியாபாரம் கெடுவதோடு, அரசாங்கத்தின் வருமானமும் குறைகிறது. முதலில் இவர்களை கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்கள் செகண்ட்ஸ் வியாபாரிகள்.
அடுத்தமுறை திருப்பூர் போனால் காதர் பேட்டைக்குப் போக மறக்காதீர்கள்!
- எஸ்.ஷக்தி,
படங்கள்: வி.ராஜேஷ்
(நாணயம் விகடன் இதழில் இருந்து)


2 comments:

தாங்கள் வருகைக்கு நன்றி

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites