இறைந்து கிடக்கும் டூ வீலர் உதிரி பாகங்களுக்கு நடுவே பரபரவென வேலை பார்க்கிற சத்யா, சென்னையில் இயங்கும் பிரபா டி.வி.எஸ் நிறுவனத்தின் ஒன் அண்ட் ஒன்லி லேடி மெக்கானிக். ஆண்களால் மட்டுமே கையாளப்படுகிற வஸ்துகளாகப் பார்க்கப்படும் கிரீஸ், ஆயில், போல்ட், ஸ்பேனர் இவற்றோடுதான் இவருக்கு நாள் முழுக்க வேலை. அழுந்த வாரிய தலையும் அழுக்கேறாத யூனிஃபார்முமாக ஃபுல்ஃபார்மில் வேலை செய்துகொண்டிருந்தவரிடம் பேசினோம்.
��மதுரையை அடுத்த திருநகர்தான் சொந்த ஊர். ஏழாவதோட ஸ்கூலைவிட்டு நிறுத்திட்டாங்க. 14 வயசுல கல்யாணம் முடிஞ்சு சென்னைக்கு வந்தேன். குடும்பம், குழந்தைகள்னு ரொம்ப பிஸியா இருந்தாலும் ஏதாவது கைத்தொழில் கத்துக்கணும்னு நினைப்பேன். அது வித்தியாசமானதாவும் சவாலானதாவும் இருந்தா நல்லா இருக்குமேன்னு தோணும். சின்ன வயசுல இருந்தே பேன்ட், ஷர்ட் போட்டு வேலை பார்க்கணும்னு ஆசை. சென்னையில பொறந்து வளர்ந்தவங்களுக்கு இது சாதாரணமா தெரியலாம். ஆனா என்னை மாதிரி குக்கிராமத்திலிருந்து வந்தவங்களுக்கு அது வாழ்நாள் கனவு!
என் கனவுக்கு என் பிள்ளைகள் வடிவில் வாய்ப்பு கிடைச்சுது. அவங்க படிக்கற ஸ்கூல்ல பிரபா டி.வி.எஸ்ஸும் இன்னோவேட்டிவ் கிளப்பும் சேர்ந்து பெண்களுக்கான மெக்கானிக் டிரெயினிங் கொடுக்குறதா கேள்விப்பட்டு, முதல் ஆளா போய் நின்னேன். ஓசூர் டி.வி.எஸ் கம்பெனிக்கு கூட்டிட்டுப் போய் டிரெயினிங் கொடுத்தாங்க. இந்தியாவோட மிகப் பெரிய டூ வீலர் கம்பெனியை நேர்ல பார்த்ததும் அசந்து நின்னுட்டேன். ஒரே பிரமிப்பா இருந்துச்சு.
டிரெயினிங் முடிஞ்சதும் பிரபா டி.வி.எஸ்ல வேலைக்கு எடுத்துக்கிட்டாங்க. அங்கே ஒரு வருஷம் டிரெயினியா இருந்து அப்புறம் கம்பெனி மெக்கானிக்காயிட்டேன். ஒரு பொம்பளை, மெக்கானிக் வேலை பார்க்கலாமான்னு சுத்தியிருக்கறவங்க கேட்டப்போ எனக்கு சப்போர்ட்டா இருந்தார் என் கணவர். எங்க வீடு தாம்பரத்துல இருக்கறதால் அங்கே இருந்து கம்பெனிக்குப் போக ஒரு மணி நேரமாகிடும். காலையில சீக்கிரமே எழுந்து வேலை பார்ப்பேன். அவரும் என் கூடவே எழுந்து குழந்தைகளை ஸ்கூலுக்கு ரெடி பண்ணுவார்.
கூட வேலை பார்க்கிறவங்க என்னை ரொம்ப மரியாதையா நடத்துவாங்க. ஏதாவது டவுட் கேட்டாலும் சொல்லித் தருவாங்க. அவங்க எல்லாம் மெக்கானிக் படிப்பு படிச்சுட்டு வேலைக்கு வந்தவங்க. நான் பொண்ணுங்கறதால வேலையில எந்த சலுகையும் கிடையாது, அதை நான் எதிர்பார்க்கவும் மாட்டேன். வேலையில எதுக்கு ஆண், பெண் வித்தியாசம்? ஒவ்வொரு மாசமும் மத்த மெக்கானிக்குகளுக்கு கொடுக்கப்படற அதே டார்கெட்தான் எனக்கும். இந்த அப்ரோச்தான் என்னை உற்சாகத்தோட இயங்க வைக்குது.
�ஆம்பளைங்களுக்கு நடுவுல வேலை பார்க்குறே, பார்த்து நடந்துக்கோ�ன்னு பார்க்கிற இடத்துல எல்லாம் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சுவிடுவாங்க சிலர். எங்கே வேலை பார்த்தாலும் நம்ம வேலையில நாம தெளிவா இருந்தா பிரச்னையில்லை. என் பிள்ளைகள் என்னை லேடி மெக்கானிக்னுதான் கூப்பிடுவாங்க. அவங்க பெருமைப்படற மாதிரி பெஸ்ட் மெக்கானிக்னு பேர் வாங்கணும்�� என்று சொல்லிவிட்டு, ஸ்பேனரும் கையுமாக வேலையில் மூழ்குகிறார் மெக்கானிக் சத்யா!
- ரூபாவதி
படங்கள்: கமல்
0 comments:
Post a Comment