இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, September 11, 2013

25 சென்ட் நிலத்தில், ஒரு ஏக்கர் மகசூல்.

ஊரான் ஊரான் தோட்டத்திலே...
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா...
காசுக்கு ரெண்டா விக்கச் சொல்லி...
கடுதாசி போட்டான், வெள்ளைக்காரன்’
-வியர்வை சிந்தி விளைச்சல் எடுக்கும் விவசாயிக்கு, விலை நிர்ணயம் செய்யும் உரிமை... நாடு அடிமைப்பட்டுக்கிடந்த வெள்ளைக்காரன் காலத்தில் மட்டுமல்ல... இன்றைய சுதந்திர பூமியிலும் இல்லை என்கிற ஆதங்கத்தை, இதைவிட அழகாகச் சொல்ல முடியாது.
என்றாலும், அன்று தொடங்கி... இன்று வரை சிலபல யுக்திகளைக் கையாளும் விவசாயிகள், தங்கள் விளைபொருளுக்கு நிரந்தரமான விலையைப் பெற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் பசுமைக் குடிலில் வெள்ளரிக்காய் உற்பத்தி செய்து, நேரடி விற்பனை மூலம் நிரந்தர வருமானம் ஈட்டி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், ஜே. கிருஷ்ணாபுரம், மோகன் செல்லக்குமார்.
கிராமத்துக்கு வெளியே, வளைந்து நெளிந்து செல்லும் தார்சாலையின் இருபுறங்களிலும் வரிசை கட்டி நிற்கின்றன, தென்னைமரங்கள். அவற்றுக்கு இடையே 'பளிச்' என காட்சி தரும் பண்ணை வீடுகளை ரசித்துக் கொண்டே சென்றால்... மோகன் செல்லக்குமாரின் பசுமைக் குடில் வந்துவிடுகிறது.
தனித்தனிச் சுவர்கள் போல அமைக்கப்பட்ட வலைகளின் முனையில் மஞ்சள் பூக்கள் அழகு காட்ட... காய்த்துத் தொங்கிக் கொண்டிருந்த வெள்ளரிப் பிஞ்சுகளைப் பறித்துக் கொண்டிருந்த மோகன் செல்லக்குமார் நம்மை வரவேற்றுப் பேசினார்.
முட்டுக்கட்டை போட்ட பெற்றோர்!
''நாங்க பரம்பரையா விவசாயக் குடும்பம். ஆறு ஏக்கர்ல தென்னை, மக்காச்சோளம், காய்கறிங்கனு மாத்தி மாத்தி சாகுபடி செய்வோம். எனக்கு சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம். ஆனா, வீட்ல அதுக்கு ஆதரவு இல்லை. 'படிச்சு நல்ல வேலையில சேர்ந்து கை நிறைய சம்பாதி, விவசாயத்துக்கெல்லாம் மதிப்பு இல்லை’னு சொல்லி பி.டெக். படிக்க வெச்சாங்க. பெத்தவங்க ஆசைப்படி படிச்சு, டிகிரி வாங்கின கையோட, சென்னையில இருக்கிற ஐ.டி கம்பெனியில வேலைக்குச் சேர்ந்து ரெண்டு வருஷம் சம்பளம் வாங்கினேன். லீவுல ஊருக்கு வரும்போதெல்லாம், விவசாய ஆசைய வீட்டுல சொல்லுவேன். வழக்கம் போல மறுத்துட்டாங்க. 'விவசாயத்துக்கு வரவேண்டாம்னு சொல்றதுக்கு என்ன காரணம்?’னு வாக்குவாதம் பண்ணுனப்போ, 'விவசாயத்துல நிரந்தர வருமானம் கிடைக்காது’னு சொன்னாங்க. அந்த பதில்ல எனக்கு உடன்பாடு இல்ல. 'புது தொழில்நுட்பங்களைக் கடைபிடிச்சா... விவசாயத்திலயும் நிரந்தர வருமானத்தை நிச்சயம் பாக்கலாம்’னு சொல்லி வீட்டுல உள்ளவங்கள சம்மதிக்க வெச்சேன்.
பச்சைக்கொடி காட்ட வைத்த, பசுமைக் குடில்!
அதுக்கப்பறம், நிறைய பேர்கிட்ட விசாரிச்சப்ப... 'பசுமைக் குடில் அமைச்சு, காய்கறிகளை வளர்த்தா நல்ல லாபம் பார்க்கலாம்’னு சொன்னாங்க. உடனே, அதை அமைச்சுட்டேன். 50 சதவிகிதம் அரசு மானியத்தோட 25 சென்ட் இடத்துல பசுமைக் குடிலை அமைச்சோம். ஒரு ஏக்கர் நிலத்துல கிடைக்கிற விளைச்சல் 25 சென்ட் பசுமைக் குடில்ல கிடைக்குது.
இந்த ரெண்டு வருஷத்துல... மல்லி, தக்காளி, குடைமிளகாய், குண்டுமிளகாய்னு நாலு வெள்ளாமை செஞ்சுட்டோம். பசுமைக் குடில் வெள்ளாமையில நல்ல வருமானம் கிடைக்கறதை வீட்ல எல்லாரும் தெரிஞ்சுக்கிட்டதும், வேலையை விட்டுட்டு, விவசாயம் செய்றதுக்கு எனக்கு பச்சைக்கொடி காட்டிட்டாங்க.
வெள்ளரி சாகுபடி செஞ்சதுல நல்ல வருமானம். அதனால, திரும்பவும் வெள்ளரியையே போட்டாச்சு'' என்று முன்கதையை விரிவாகவே சொன்ன மோகன் செல்லக்குமார், வெள்ளரிப் பிஞ்சுகளை எடை போட்டு அட்டைப் பெட்டிகளில் அடுக்கிக்கொண்டே, பசுமைக் குடில் வெள்ளரி சாகுபடி முறை பற்றி சொல்லத் தொடங்கினார். அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஒரு யூனிட்டுக்கு 21 பாத்திகள்!
'பசுமைக் குடில் விவசாயத்தில், ஆயிரம் சதுர மீட்டர் (25 சென்ட்) என்பது ஒரு யூனிட். இதை அமைக்க 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் 50 சதவிகிதம் மானியம் கிடைத்துவிடும்.
தேர்வு செய்த நிலத்தில், உழுது பசுமைக் குடில் அமைத்துக் கொள்ள வேண்டும். இரண்டரை டன் தொழுவுரம், 5 கிலோ அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து இறைத்து... 4 அடி இடைவெளியில் ஓரடி உயரம், இரண்டரை அடி அகலம், 110 அடி நீளம் என்ற அளவில் மேட்டுப்பாத்திகளை அமைக்க வேண்டும். ஆயிரம் சதுர மீட்டரில் 21 பாத்திகள் அமைக்கலாம். பிறகு, சொட்டுநீர்க் குழாய்களை அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்திகளின் ஒரு புறத்தில் கொடிகள் படர ஏதுவாக, 11 அடி உயரத்துக்கு நைலான் கயிறு மூலம் பந்தல் போல அமைத்துக்கொள்ள வேண்டும். மேட்டுப்பாத்திகளில், இரண்டு அடிக்கு ஒரு வீரிய விதை என நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒரு யூனிட்டுக்கு 1,200 விதைகள் தேவைப்படும் (ஒரு விதை மூன்று ரூபாய் 50 காசு என்ற விலையில், அனைத்து விதை விற்பனை மையங்களிலும் கிடைக்கிறது).
வளர்ச்சிக்கேற்ப கூடுதல் உரம்!
நடவு செய்த 15-ம் நாளில், கைகளால் களை எடுத்து, கொடிகளை நைலான் பந்தலில் படர விட வேண்டும். 15-ம் நாளில் இருந்து, 35-ம் நாள் வரை தினமும் 500 கிராம் நீரில் கரையக்கூடிய 19:19:19 பயோ உரத்தை சொட்டுநீரில் கலந்துவிட வேண்டும். 30, 55 மற்றும் 75-ம் நாட்களில் 250 கிராம் நுண்ணுயிர் உரத்தை சொட்டுநீரில் கலந்து விட வேண்டும். 35-ம் நாளில் கைகளால் களை எடுத்து, அன்றிலிருந்து 50-ம் நாள் வரை, தினமும் 700 கிராம் அளவுக்கு 19:19:19 பயோ உரத்தை சொட்டுநீரில் கலந்துவிட வேண்டும். 40 நாட்களுக்கு மேல் கொடிகளில் பழுத்த இலைகள் மற்றும் அதிகப்படியான கிளைகளை ஒடித்துவிட வேண்டும். அப்போதுதான் போதுமான வெளிச்சமும், காற்றோட்டமும் கிடைக்கும்.
50-ம் நாளுக்குமேல் தினமும் ஒரு கிலோ அளவுக்கு திரவ உரம் கொடுத்து வர வேண்டும். உயர ரக வீரிய விளைச்சல் தரக்கூடிய இந்தப் பயிரில், 45-ம் நாளில் இருந்து, தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை வாரத்துக்கு மூன்று முறை என அறுவடை செய்யலாம். ஒரு யூனிட்டில் ஒரு போகத்துக்கு சராசரியாக 6 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும்.
பூச்சிகள் தாக்காது!
பசுமைக் குடிலுக்குள் சாகுபடி செய்வதால், பழ ஈக்கள், சாறு உறிஞ்சும் பூச்சிகள், துளைப்பான்கள்... என எந்தப் பூச்சிகளின் தொல்லையும் இருக்காது. ஒவ்வொரு முறை குடிலுக்குள் நுழையும்போதும், 'பிளீச்சிங் பவுடர்’ கலந்த நீரில் பாதங்களை நனைத்து விட்டுத்தான் செல்ல வேண்டும். இதன் மூலமாக, பயிரை நோய் தொற்றிலிருந்து காப்பாற்ற முடியும். பூஞ்சணம், இலைக்கருகல், அசுவிணிப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல்கள் வந்தால், 100 மில்லி நீம் கலவையை, 10 லிட்டர் நீரில் கலந்து, கைத்தெளிப்பான் மூலம் புகைமூட்டம் போல தெளிக்க வேண்டும்.’
சாகுபடி, பாடம் முடித்த மோகன்செல்லக்குமார், ''கோயம்புத்தூர், திருப்பூர், மேட்டுப்பாளையம்னு இந்த வெள்ளரிக்கு உள்ளூர் சந்தைகள்லயே விற்பனை வாய்ப்பு இருக்கு. ஆனா, நிரந்தர விலை கிடைக்கறதில்லை. பாதி வருமானத்தை கமிஷனாவே பிடுங்கிக்குவாங்க. இணையத்துல அதைப் பத்தி தேடினப்ப, அரபுநாடுகளுக்கு காய்கறி ஏற்றுமதி செய்ற நபரோட தொடர்பு கிடைச்சுது. அவருக்கு ஒரு பெட்டி வெள்ளரிப் பிஞ்சுகளை 'சாம்பிள்’ அனுப்பினேன். அவர் திருப்தி அடைஞ்சு ஆர்டர் கொடுத்தார். அவருக்குத்தான் இப்போ, வெள்ளரிப் பிஞ்சுகளை அட்டைப்பெட்டிகள்ல அடைச்சு அனுப்பிட்டிருக்கேன். கிலோ 37 ரூபாய்னு வருஷம் முழுக்க எடுத்துக்கிறார்.
25 சென்ட் நிலத்துல, ஒரு போகத்துல கிடைக்கற 6 டன் வெள்ளரியில இருந்து, 2 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. எல்லா செலவும் போக ஒன்றரை லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும்'' என்ற மோகன் செல்லக்குமார்,
''சாஃப்ட்வேர் கம்பெனி வேலையை விட்டதைப் பத்தி இப்ப எங்க வீட்ல யாரும் கவலைப்படல. அதைவிட அதிக வருமானத்தை சொந்த ஊர்ல இருந்துகிட்டே பசுமைக் குடில் மூலமா எடுத்தாச்சு. பக்கத்துல இன்னொரு பசுமைக் குடிலையும் அமைக்கப் போறேன். நேரடியா ஏற்றுமதி பண்ற யோசனையும் கைவசம் இருக்கு'' என்றார், நம்பிக்கை பொங்க!
தொடர்புக்கு,
மோகன் செல்லக்குமார்,
செல்போன்: 96884-89477..

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites