இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, December 6, 2014

வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

 அதற்கு நம் திறமை என்ன என்பதையும் அதனை நாம் எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றோம் என்பது தான் முக்கியம்.

எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.பெண்கள் வீட்டு வேலை போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல்.

காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்கள் தங்களுக்கு உடுத்த உடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை!அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று கண்கவர் தையல் கலைகளாக நம்மை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது. 

ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். அந்தந்த ஊர்களில் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக இப்பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கின்றனர்...

நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் கூட தலையணை உறை, டர்க்கி டவல் மற்றும் சிறிய டவல்களும் தைத்து விற்கலாம்.

ஒருவர் மற்றும் இருவர் பயன்படுத்துவது என பல்வேறு நீள அளவில் தலையணைகள் உள்ளன. அதற்கேற்ற நீளங்களில்துணிகளை வெட்டி கொள்ள வேண்டும். வெட்டிய துணிகளை 3 புறமும் தைத்து கொள்ள வேண்டும். 4வது புறத்தில் தலையணை திணிக்க திறப்பு இருக்கும். தலையணை திணித்தவுடன், அது வெளியேறாமல் இருப்பதற்காக உள்புறமாக துணியை மூடிபோல் மடித்து தைக்க வேண்டும். தைக்கப்பட்ட நூல் பிசிறுகளை நீக்கினால் தலையணை உறை தயார். தலையணை உறையிலும் பெயிண்டால் அழகிய ஓவியங்கள் மற்றும் கருத்துள்ள வாக்கியங்களால் அழகு படுத்துவதன் வாயிலாக வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தலாம்.. உழைப்பும் தொழில் நேர்த்தியும் போதும். நெருக்கமில்லாமல் தைத்தால் பிரிந்து விடும், அடுத்து நம்மிடம் வாங்க மாட்டார்கள். நல்ல நூலில், நெருக்கமாக தைத்தால் பிரியாது. வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.

உள்பாவாடை தயாரித்தல்:


பாவாடை தயாரிக்கும் வேலை எளிதானது. கட்டிங், தைப்பது ஈஸி. தைத்த பின் நாடா கோர்க்காமல், தைக்கும்போதே நாடாவுடன் தைத்தால், பாவாடையின் இடுப்பு பகுதி தரம் குறையாமல் இருக்கும். 

குறைந்தபட்ச இன்ச் 36க்கு குறையாமல் இருந்தால் நல்லது. 26 இன்ச் இடுப்புள்ளவர்கள்கூட எளிதில் நாடாவை சுருக்கிக் கட்டிக் கொள்ள முடியும். பெண்களின் இடுப்பு பருமனுக்கேற்ப அதிகபட்சம் 44 இன்ச் வரை தைக்கலாம்.

பாவாடையின் கீழ் பகுதியில் சன்னமாக ஒரு லேஸ் வைத்தால் எடுப்பாக இருக்கும். சின்ன டிசைனில் மெஷின் எம்ப்ராய்டரி செய்தால் மதிப்பு கூடும். அதே போல் பாவாடையின் உள்புறம் இரண்டு தையல்கள் முடிந்தால் ஓவர் லாக் அடித்தால் தரம் நன்றாக இருக்கும்..இன்றைய நவீனக் காலத்தில் பாவடையில் அழகிய எம்ப்ராய்டரிகள் போட்டு உடுத்துவது பேஷன் ஆகி விட்டது..முடிந்தால் அந்த சேலை பார்டர் நிறத்தில் லேஸ் வைத்து தைத்து கொடுத்தால் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளலாம்..

சுடிதார் ஜாக்கெட் தைக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்...

என்னதான் அழகாக தைத்தாலும், உள்புறம் கொடுக்கும் லைனிங் துணி தரமில்லாவிட்டால், சுடிதாரின் உழைப்பும், அணியும் சவுகரியமும் குறைந்துவிடும். தரமாக தயாரிப்பது தொழில் வெற்றிக்கு முக்கியமானது. 

சுடிதார் தைப்பதற்கு அடிப்படை கட்டிங் செய்வது தான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். அதில், டாப்ஸின் முன்புற மேல்பகுதி டிசைன் மற்றும் சுடிதாரின் மாடல் இடம்பெற்றிருக்கும். அதன்படி வெட்டி தைக்க வேண்டும். இதில் மீடியம்(எம்), லார்ஜ்(எல்), எக்ஸ்ட்ரா லார்ஜ்(எக்ஸ் எல்), டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ்(டபுள் எக்ஸ் எல்) என்று தனித்தனி அளவுகள் உள்ளன.

சுடிதாரில் டாப்ஸ், பேன்ட் என்று 2 பாகங்கள் உள்ளன. டாப்ஸில் சோல்டர், உயரம், உடல் சுற்றளவு, இடுப்பு, பாட்டம் அகலம், கை உயரம், கை அகலம், பேன்டில் இடுப்பு சுருக்கு, பெல்ட் பிளிட்ஸ், உயரம், லூஸ், பாட்டம் அகலம் என்று தனித்தனி அளவுகள் உள்ளன. சில டாப்ஸ்கள் கை இல்லாமலும் (ஸ்லீவ்லெஸ்), சில முழுக்கையாகவும்(புல் ஸ்லீவ்ஸ்) இருக்கும். அதற்கு நிலையான அளவுகள் உள்ளன. 

சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்து கொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் சுடிதார் ரெடி.

அடுத்தபடியாக வெவ்வேறு வெரைட்டியில் இருந்து வெவ்வேறு டிசைன்களை எல்லாம் வெட்டி எடுத்து ப்ளைன் சேலையில் ஓட்டினால் டிசைனிங் சேலை ரெடி..இன்று இதுவும் சக்கை போடும் பிஸ்னெஸ் ஆகி விட்டது...

சேலைக்கேற்ப ஜாக்கெட் தேடியது அந்தக் காலம். ஆடம்பரமான ஜாக்கெட், அதற்கு மேட்ச்சாக சேலை தேடுவது இந்தக் காலம்! கழுத்தில், கைகளில், முதுகில் என ஜாக்கெட்டில் ஏதாவதொரு வித்தியாசத்துடன் தைத்து அணிவதையே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். டிசைனர் சேலைகள் எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு டிசைனர் ஜாக்கெட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.ரவிக்கையில் ஜர்தோசி வேலைப்பாடுகள் , பூ வேலைப்பாடுகள் , டிசைன்கள் செய்து கொடுத்து ஒரு ரவிக்கைக்கு ரூபாய் 5000/- வரை வாங்குகின்றனர்...இன்றைக்கு இது தான் பேஷன்..

மனிதன் உயிரோடு இருக்கும் வரை உடைகள் அவசியம்...சந்தை வாய்ப்புள்ள இந்த தொழிலை வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப செய்து கொடுக்கும் பொழுது பணத்தை கொட்டும் தொழில்...

எந்த ஒரு தொழிலும் ஜெயிக்க வேண்டுமென்றால் மனதில் திகுதிகுவென எரியும் ஆர்வமும், ,அதை செயல்ப்படுத்த கடின உழைப்பும், வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த , வித்தியாசமான சிந்தனையும் இருந்தால் இந்த தொழில் வெற்றிக்கனியை கொடுக்கும் தொழிலாகும்.

- ரோஸ்லின்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites