இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 15, 2013

என் வண்டி எனக்கு குழந்தை

My car my baby!
விதம் விதமான பயணிகள், வித்தியாசமான மக்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் கோயம்பேடு மாநகரப் பேருந்து நிலையத்தில், தனித்து நின்று  கவனம் ஈர்க்கிறார் ஒரு பெண். அவர் ஜோதி கமலாபாய். ஆண்களால் நிரம்பி வழிகிற பேருந்து ஓட்டுனர் பணியில் அரிதான ஒரே பெண். கோயம்பேடு  டூ பிராட்வே செல்கிற 15பி பேருந்தின் ஓட்டுனர்!

“மதியம் 1:50க்கு டியூட்டி முடியும். டியூட்டி டைம்ல மொபைல் எடுக்க மாட்டேன். காத்திருங்க...’’ என வரச் சொன்னவர், நொடி பிசகாமல் 1 மணி 50  நிமிடங்களுக்கு நம் முன் ஆஜராகிறார். 8 மணி நேரம் தொடர்ந்து வேலை பார்த்த அலுப்பு அவரது முகத்தில் தெரிந்தாலும், அது வார்த்தைகளில்  வெளிப்பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக பேசுகிறார்.

‘‘நாகர்கோயில் பக்கம் மார்த்தாண்டம்தான் எனக்கு சொந்த ஊர். எம்.ஏ., கம்ப்யூட்டர் டிப்ளமா படிச்சிருக்கேன். எங்கப்பா ராஜைய்யன், டிரைவிங் ஸ்கூல்  வச்சிருந்தார். அங்கே நானும் கார் ஓட்டக் கத்துக்கிட்டேன். படிப்பு முடிச்சதும் வேலைவாய்ப்பு அலுவலகத்துல பதிவு பண்ணி வச்சிருந்தேன். திடீர்னு  ஒரு நாள் அங்கேருந்து அழைப்பு. பஸ் டிரைவர் வேலைன்னு தெரிஞ்சப்ப முதல்ல கொஞ்சம் பயமாகவும் பதற்றமாகவும்தான் இருந்தது. 

உள் மனசு ‘உன்னால முடியும்’னு சொல்லவே, ஏதோ ஒரு தைரியத்துல அந்த வேலைக்குத் தயாரானேன். சென்னை குரோம்பேட்டையில ரெண்டு  மாசப் பயிற்சி கொடுத்தாங்க. அதுவரைக்கும் அதிகமா பஸ்ல பயணம் பண்ணினதுகூட இல்லை. பஸ் ஓட்டற பயிற்சி ரொம்பப் புது அனுபவமா  இருந்தது. ‘உனக்கு இந்த வேலையெல்லாம் வேணாம்மா... விட்டுட்டு வந்துடு’ன்னு சொன்னாங்க பலரும். முன் வச்ச காலைப் பின்  வைக்கிறதில்லைங்கிற வைராக்கியம் எனக்கு...’’ - விடாமல் வழிகிற வியர்வையைத் துடைத்தபடி பேசுகிற ஜோதி கமலாபாய்க்கு, முதல் நாள் பணி  அனுபவம் பசுமையாகப் பதிந்திருக்கிறது.

‘‘15பி பஸ்... கோயம்பேடுலேருந்து பிராட்வே ரூட். சென்னையும் சென்னையோட பயங்கரமான டிராஃபிக்கும் எனக்குப் புதுசு. ஏரியா தெரியாது. நான்  நம்பற ஜீசஸ்கிட்ட என்னையும், என்னை நம்பி வண்டியில வர்ற மக்களையும் நல்லபடியா காப்பாத்து’ன்னு வேண்டிக்கிட்டு, வண்டியை எடுத்தேன்.  பகல் 1 மணிக்கு முடிய வேண்டிய டியூட்டி, 4 மணிக்குத்தான் முடிஞ்சது. அவ்ளோ மெதுவா ஓட்டிக்கிட்டுப் போனேன். 

வேலையில சேர்ந்து 5 வருஷமாச்சு. இப்பவும் தினமும் காலையில வண்டியை எடுக்கிறதுக்கு முன்னாடி, கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிட்டுத்தான்  ஸ்டியரிங்கை தொடுவேன். வேகமா வண்டி ஓட்டறதை விட, பாதுகாப்பா ஓட்டறதுதான் எனக்கு முக்கியம்’’ என்கிற ஜோதி, எரிபொருள் சிக்கனம்  செய்ததற்காக விருது வாங்கியவர். ‘‘என் வண்டிங்கிறது என் குழந்தை மாதிரி. வண்டிக்கு வலிக்காம ஓட்டறதுதான் என் கொள்கை. இதுவரை என்  வண்டியில ஒரு சின்ன கீறல்கூட விழுந்ததில்லை. 

விபத்து நடக்கற மாதிரி ஓட்டினதில்லை. ‘எங்களைவிட சூப்பரா ஓட்டறீங்க’ன்னு ஆண் டிரைவர்களே பாராட்டற அளவுக்கு வளர்ந்திருக்கேன்...’’ -  பெருமையுடன் பகிர்ந்து கொண்டாலும் அதன் பின்னணியில் ஏகப்பட்ட வலிகளை சந்தித்திருக்கிறார்.  ‘‘என் வண்டியில முதல்முறை ஏறும்  எல்லாருக்கும், ‘ஒரு பொம்பளை பஸ் ஓட்டறதா’ங்கிற ஆச்சரியம். உடனே பக்கத்துல வந்து நின்னுக்கிட்டு, தலையிலேருந்து, கால் வரைக்கும் வச்ச  கண் எடுக்காம பார்த்துக்கிட்டே இருப்பாங்க. 

மொபைல்ல போட்டோ எடுப்பாங்க. டிரைவர் சீட்டுக்கு பின்னாடி உள்ள சீட்ல உட்கார்ந்துக்கிட்டு கத்திக் கத்திப் பேசுவாங்க. அதெல்லாம் டிரைவரோட  கவனத்தைச் சிதறச் செய்யும்னு யாரும் யோசிக்கிறதே இல்லை. பிரேக் போடும்போது, வேணும்னே மேல வந்து விழுவாங்க. கியர்ல கை வச்சிருந்தா,  கையைத் தொட்டுப் பேசுவாங்க. ரன்னிங்ல இருக்கிற வண்டியை, திடீர்னு ஒரு இடத்துல நிறுத்தச் சொல்வாங்க. நிறுத்தலைன்னா, ‘நான் யார்  தெரியுமா’ன்னு மிரட்டுவாங்க. 

‘வீட்டுக்குப் போய் சேர மாட்டே’ன்னு சாபம் விடுவாங்க. இன்னும் ஒருபடி மேல போய், ‘ச்சீய்... இதெல்லாம் ஒரு பொழைப்பா? நாங்க என்ன உன்  சம்பளத்துல பாதியையா கேட்டோம்? வண்டியைத்தானே நிறுத்தச் சொன்னோம்’பாங்க. வெயில், மழைன்னு எல்லா நாள்களும் நாங்க உழைக்கணும்.  பெண்ணுக்குரிய இயல்பான உடல்நலப் பிரச்னைகள் இருந்தாலும் வண்டி ஓட்டணும்... உள்ளுக்குள்ள வலிச்சாலும், நான் எதையுமே வெளியே  காட்டிக்க மாட்டேன். 

வண்டிக்குள்ள உள்ள அத்தனை பேரையும் பத்திரமா கொண்டு போய் சேர்க்கறதுலதான் என் கவனமெல்லாம் இருக்கும். அங்கே அடக்கி வச்சிருந்த  அத்தனை கோபமும் அழுகையும் டியூட்டி முடிச்சு வீட்டுக்கு வந்ததும் வெடிக்கும். கணவர்கிட்டயும் குழந்தைகிட்டயும் ஆத்திரத்தைக் காட்டிட்டு, அடுத்த  நாள் அதை நினைச்சு வருத்தப்பட்டதெல்லாம் உண்டு. எனக்கு ஒரே ஒரு பையன் - டோனி. நினைவு தெரிஞ்சு நான் அவன்கூட அதிக நேரம்  செலவழிச்சதே இல்லை. 

உடம்பு சரியில்லாதப்பகூட அவன்கூட இருந்து பார்த்துக்க முடியாது. இத்தனை கஷ்டங்களையும் சகிச்சுக்கிட்டுத்தான் வெளியே வேலைக்கு  வரோம்ங்கிறதைப் புரிஞ்சுக்காம, சில பயணிகள் அத்து மீறி நடந்துக்கிறதும், அசிங்கமா கமென்ட் அடிக்கிறதும்தான் வேதனையான விஷயம். இது  எல்லாத்தையும் மறந்து, நான் என் வேலையைத் தொடர என் சக டிரைவர், கண்டக்டர்களோட சப்போர்ட்தான் காரணம். குறிப்பா கண்டக்டர்கள்...  முடிஞ்ச வரை பயணிகள் பிரச்னை பண்ணாதபடி பார்த்துப்பாங்க...’’ - ஜோதியின் வார்த்தைகள் பயணிகளைக் கட்டாயம் யோசிக்க வைக்கும்.

‘‘படிப்புக்கும் பார்க்கிற வேலைக்கும் சம்பந்தமே இல்லையேன்னு எத்தனையோ பேர் கேட்டிருக்காங்க. ஆனா, எனக்கு என் தொழில்தான் தெய்வம்.  வேலைக்குச் சேர்ந்த புதுசுல, ஒரு மழை நாள்ல வண்டி ஓட்டிட்டிருந்தேன். நான் மெதுவா ஓட்டறதைப் பார்த்துட்டு, வண்டியில இருந்த ஒரு அம்மா,  ‘பொம்பளை ஓட்டுது... தெரியாம இந்த வண்டியில ஏறிட்டேன்’னு என் காதுபடவே பேசினாங்க. 

பின்னாள்ல, நான் வண்டி ஓட்டறதைப் பார்த்துட்டு, என் பக்கத்துல வந்து, என் தலையில கை வச்சு, ‘நீ நல்லா இருப்பேம்மா’ன்னு ஆசீர்வாதம்  பண்ணினவங்களும் இருக்காங்க. அந்த மாதிரி நபர்களோட ஆசியும் வாழ்த்தும்தான் என்னை வழி நடத்துது...’’ என்கிறவருக்கு, டிரைவிங்  இன்ஸ்ட்ரக்டர் பணிக்கான பதவி உயர்வே கனவு...கனவு நனவாகட்டும்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites