இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, September 14, 2013

கலைத் தொழிலை காப்பாற்றுங்கள்

73 வயது என்றால் நம்ப முடியவில்லை. கிரேஸ்லின் லியோனின் பேச்சு, பார்வை என எல்லாவற்றிலும் அத்தனை தெளிவு. அதையெல்லாம் தாண்டி  அசத்துகிறது அவரது கைத்திறன். பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் கிரேஸ்லின். சுற்றுச்சூழலுக்கு உகந்த  பனை ஓலையில் தட்டு, கூடை, சைக்கிள் கூடை, கிலுகிலுப்பை, தொப்பி, ஹேண்ட் பேக், பர்ஸ் உள்ளிட்ட பல பொருள்களையும் செய்கிறார்.  கைகளால் பின்னியது என்று நம்ப முடியாத அளவுக்கு ஒவ்வொன்றிலும் அத்தனை நேர்த்தி! 

பனை ஓலைக்குப் பின்னே பல கதைகள்!


பாராட்டுகளைப் பணிவாக ஏற்றுக் கொண்டபடி, அதன் பின்னணியில் உள்ள சோகக் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கிரேஸ்லின்.  ‘‘ஏழாவதுக்கு மேல படிக்க வீட்ல வசதியில்லை. மணப்பாடுதான் எனக்குப் பூர்வீகம். அங்கே பனையோலையில பொருள்கள் செய்யறதுதான்  பெரும்பாலான மக்களோட வாழ்வாதாரமே. ஒரு ரூபாய் வருமானம் வந்துச்சுன்னா, அதுல பத்து பைசாவை மணப்பாடு பெண் தொழிலாளர்கள் பனை  ஓலை கூட்டுறவு சங்கத்துக்கு கமிஷனா கொடுப்போம். 

அந்தப் பைசா அப்படியே சேர்ந்துக்கிட்டே வரும். கல்யாணத்துக்கோ, வேற அவசரத் தேவைக்கோ பணம் வேணுங்கிறப்ப அதை வாங்கிக்கலாம். அதை  ‘டவுரி பணம்’னு சொல்வோம். என்னோட 14வது வயசுலேருந்து பனை ஓலை பின்றேன். சென்னைக்கு வந்தேன். என் கணவர், என்னோட  கைவேலையைப் பார்த்து, டவுரி பணம் கூட வேண்டாம்னு சொல்லிட்டு, என்னை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ‘சுற்றுச்சூழலைக் காப்பாத்துவோம்’னு உலகம் முழுக்க பிரசாரம் பண்றோம். 

ஆனாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உபயோகிக்கிறதுல நம்ம மக்களுக்கு இன்னும் ஒரு தயக்கம் இருக்கவே செய்யுது. பனை ஓலை  பொருள்களை உபயோகிக்கிறதுல அந்தத் தயக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்கிறதைப் பார்க்கறேன். கல்யாணத்துக்குப் பிறகும் நான் பனை ஓலைப்  பொருள்கள் செய்யறதை விடலை. நினைவு தெரிஞ்சு நான் செய்யற எந்தப் பொருளுக்கும்  இதுதான் விலைன்னு நிர்ணயம் பண்ணினதில்லை.  என்னோட வறுமையும் திறமையும் தெரிஞ்சு, என்னைத் தேடி வந்து, விரும்பிக் கேட்கறவங்களுக்குக் கொடுப்பேன். 

அவங்களா அதோட மதிப்பு தெரிஞ்சு கொடுக்கறதை மறுக்காம வாங்கிப்பேன். அன்புக்கு விலை வைக்க முடியுமா சொல்லுங்க...’’ என்கிறவரின்  வார்த்தைகளிலும் அதே அன்பின் பிரதிபலிப்பு.‘‘எங்க ஊரைச் சேர்ந்த பத்து பேர், சென்னையில பனை ஓலைப் பொருள்கள் பண்ணிட்டிருந்தாங்க.  செய்து வச்ச பொருள்களை வாங்க இங்கே ஆளில்லை. கையில உள்ள காசைப் போட்டு, ராத்திரி, பகலா பின்னி வச்ச பொருள்களை, சீண்ட  ஆளில்லாம, எலி கடிச்சுப் பாழானதுதான் மிச்சம். 

அவங்களுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே... விரக்தியில, அந்தப் பெண்கள் எல்லாரும் வீட்டு வேலை செய்யப் போயிட்டாங்க. எனக்கு  இதைவிட்டா வேற எதுவும் தெரியாது. மாற்றுத்திறனாளியான என் கணவருக்கோ, எனக்கோ அரசாங்கத்துலேருந்து வேற எந்தவிதமான சலுகைகளும்  இல்லை. மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவங்களுக்கு இந்தத் தொழிலை நான் கத்துக் கொடுக்க தயாரா இருக்கேன். ஆனா, அதுக்கான  ஆர்வமோ, பொறுமையோ யாருக்கும் இல்லை. 
Save the art business
இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு இன்னிக்கே ஒரு தொழிலைக் கத்துக்கிட்டு, நாளைக்கே பணம் பார்க்கணுங்கிற அவசரம்தான் இருக்கே தவிர, ஒரு  கலையைக் கத்துக்கணும்னோ, அதுல நிபுணத்துவம் பெறணும்னோ எந்த எண்ணமும் இல்லைங்கிறதைப் பார்க்கிறப்ப வருத்தமா இருக்கு. இந்த 73  வயசுலயும் என்னால ஒரு சின்ன பிசிறுகூட இல்லாம பின்ன முடியும்னா, அதன் பின்னணியில இருக்கிறது என் பசியும் வறுமையும்தான். ஓலையை  எண்ணி எண்ணி நான் பின்றதில்லை. பட்டினி கிடந்த வேளைகளையும், எதிர்காலத்தைப் பத்தின பயத்தையும் எண்ணி எண்ணிப் பின்றேன். 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில இந்தப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நம்மூர் மக்களுக்குத்தான் இதோட மவுசு தெரியலை.  எனக்குப் பிறகு இந்தத் தொழில் காணாமலே போயிடுமோங்கிற கவலைதான் பெரிசா இருக்கு. இத்தனை வயசுக்கு மேல, இந்தத் தொழிலை வச்சு நான்  லட்சங்களை சம்பாதிக்கப் போறதில்லை. என்னோட லட்சியமெல்லாம், இந்தக் கலையை ஆர்வமும் தேவையும் உள்ள அடுத்த தலைமுறைப்  பெண்களுக்குக் கொண்டு போய் சேர்க்கணுங்கிறது தான்...’’ - கண்களில் ஏக்கம் தேக்கிப் பேசுகிற கிரேஸ்லின், ஆர்வமுள்ளோருக்கு மூலப்  பொருள்களுக்கான தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு, இலவசமாக பயிற்சி அளிக்கக் காத்திருக்கிறார். (தொடர்புக்கு: 93809 46043)

-கிருஷ்ணமூர்த்தி
நன்றி குங்குமம்தோழி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites