இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, September 14, 2013

உழைக்கத் தயாரா? உதவத் தயார்!

எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத்  தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.‘படிச்சிருந்தாலாவது வேலைக்குப் போகலாம்’ எனப் படிக்காத பெண்களும்,  ‘படிச்சிருந்து என்ன செய்ய... வீட்டை விட்டு வேலைக் குப் போக அனுமதியில்லை’ எனப் படித்த பெண்களும், ‘படிப்பும் இருக்கு. ஏதாவது  செய்யணும்கிற துடிப்பும் இருக்கு. வழிதான் தெரியலை’ எனப் புலம்புகிற பெண்களும் நம்மிடையே பரவலாக உண்டு. 

இந்த மூன்று தரப்பினரின் ஏக்கங்களையும் போக்கி, பொருளாதார சுதந்திரத்துக்கு வழி காட்டுகிற அமைப்பு ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர்  சங்கம்’ - Women Entrepreneurs Association of Tamil Nadu [WEAT]. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறைப் பேராசிரியர்  மணிமேகலையின் முயற்சியில் உருவாகியிருக்கும் இந்த அமைப்பு, உழைக்கக் காத்திருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவக் காத்திருக்கிறது. 

‘‘குறுந்தொழிலில் பெண்கள் பத்தி 99ம் வருஷம் ஒரு பேராய்வு பண்ணினேன். சுயதொழில் செய்கிற பெண்களைப் பத்தின பெரிய புள்ளிவிவரங்கள்  எதுவும் இல்லாதது தெரிய வந்தது. ரொம்பவும் சிரமப்பட்டு, ஒட்டுமொத்த திருச்சியிலயும் 550 பெண் தொழில்முனைவோரைக் கண்டுபிடிச்சோம்.  அந்த  550 பேர்ல, 143 பெண்களை மட்டும் வச்சு நடத்தின ஆய்வுல, சில உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி பெரும்பாலான பெண்கள், மரபு சார்ந்த  தொழில்களான தையல், ஊறுகாய், அப்பளம் செய்யறது மாதிரியான வேலைகள்லதான் அதிகம் ஈடுபட்டிருக்கிறது தெரிஞ்சது. 

அடுத்து அவங்கள்ல பல பேர் வங்கிக் கடனே வாங்காதவங்க. அப்படியே வாங்கணும்னு நினைச்சு முயற்சி பண்ணினவங்களும் ஏதோ காரணங்களால  கடன் இல்லாம மறுக்கப்பட்டவங்க. 2005ல நான் மகளிர் துறை இயக்குனரா பொறுப்பெடுத்துக்கிட்டதும் இந்த விஷயங்களுக்காக ஏதாவது செய்ய  வேண்டிய அவசரத்தை உணர்ந்தேன். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ரிப்ளை கார்டு அனுப்பி, நேர்ல சந்திக்க விருப்பம் சொன்னோம். வெறும் 35  பேர்கிட்டருந்து தான் பதில் வந்தது. அது கடைசியா 7 பேரா குறைஞ்சது. 2006ல உருவான தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்துக்கு இது  7வது வருடம்...’’ - அமைதியாக அறிமுகம் செய்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் மணிமேகலை.

‘‘பெண்கள்னா பியூட்டி பார்லர் வைக்கவும், வத்தல் வடாம் விற்கவும்தான் லாயக்குங்கிற கருத்தை உடைக்கிறதுதான் எங்க சங்கத்தோட பிரதான  நோக்கம். தொழில்னு வரும்போது, பெரும்பாலான பெண்கள், ஆண்கள் அளவுக்கு அதுல தொடர்ந்து நிற்கறதில்லை. குடும்ப சூழல், கணவரோட  சப்போர்ட் உள்ளிட்ட மற்ற காரணங்களையெல்லாம் பொறுத்ததா இருக்கு அவங்களோட தொழில் ஆர்வமும் ஈடுபாடும். அரிதாக சில பெண்கள்,  கணவரோட ஆதரவோட தொழில் பண்றதும் உண்டு. அந்த மாதிரிப் பெண்கள், தொழில்ல நிலைச்சு நிற்கறதையும் பார்த்தோம். ஆண்களுக்கு தொழிலும்  சம்பாத்தியமும் வாழ்க்கையோட முக்கிய அங்கமா இருக்கு.

அதுவே பெண்கள்ல பலரும் ஏதோ ஒரு காரணத்துக்காக தொழில் முனைவுக்குத் தள்ளப்படறாங்க. அந்த வகையில எங்க சங்கத்துல 75 சதவிகித  உறுப்பினர்கள் ஆண் துணையில்லாத காரணத்தால தொழில்முனைவுக்கு வந்தவங்க. கணவனை இழந்தவங்க, கணவரால கைவிடப்பட்டவங்க, விவாகரத்தானவங்க, கணவர் இருந்தும், அவர் மூலம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவங்கன்னு... பலரும்  இதுல உறுப்பினர்கள். வயது, கல்வித் தகுதின்னு எதையும் கணக்குல எடுத்துக்காம, முதல் கட்டமா அவங்களை தொழில் முனைவுக்குத்  தயார்படுத்தினோம். 

திருச்சியில உள்ள சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தோட இணைஞ்சு, தொழில் பயிற்சி கொடுத்தோம். 15 நாள்களுக்கு ஒரு முறை அவங்களுக்கு  விழிப்புணர்வு முகாம் நடத்தி, கருத்தாளர்களைக் கூப்பிட்டுப் புதுப்புதுத் தொழில்களைப் பத்திப் பேச வைக்கிறோம். கூட்டத்துக்கு வர்ற பல பெண்கள்,  ஏதோ ஒரு தொழில் தொடங்கணுங்கிற எண்ணத்தோட வருவாங்க. ஆனா, என்ன தொழில், எப்படி தொடங்கறதுங்கிற பயமும் கேள்விகளும்  அவங்களுக்கு நிறைய இருக்கும். வெற்றிகரமான சுயதொழில் முனைவோரா இருக்கிற பெண்களைக் கூப்பிட்டு, அனுபவங்களைப் பகிர்ந்துக்க  சொல்வோம். 

அது மற்ற பெண்களுக்கும் ஊக்கமா அமையும். காலங்காலமா பெண்களுக்குப் பழகிப் போன தையல், உணவு சார்ந்த தொழில்களையும் தவிர்க்காம,  அதுக்கான பயிற்சிகளையும் கொடுக்க ஆரம்பிச்சோம். அதோட அடுத்தகட்டமா, பெண்களால இன்ஜினியரிங் துறை சார்ந்த தொழில்களையும் செய்ய  முடியும்னு நிரூபிக்க, வெல்டிங் பயிற்சி கொடுத்து, வேலை வாய்ப்புக்கு வழி செய்தோம். கம்ப்யூட்டர் பயிற்சியிலேருந்து, கால் டாக்சி டிரைவிங்  வரைக்கும் எதையும் விட்டு வைக்கலை. திருச்சியோட முதல் கமர்ஷியல் பெண் கால் டாக்சி டிரைவர் எங்களால உருவாக்கப்பட்டவங்கதான். 

இன்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பொருள்கள், பாக்குமட்டை பொருள்கள், பேப்பர் பொருள்கள் தயாரிக்கவும், சிறுதானிய உணவுப் பொருள்கள்  தயாரிக்கவும்கூட பயிற்சிகள் கொடுக்கறோம். வெறுமனே பயிற்சி கொடுக்கிறதோட இல்லாம, பல்வேறு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களோட  இணைஞ்சு அவங்களோட பொருள்களை சந்தைப்படுத்தவும் வழிகளை உருவாக்கித் தரோம். வருடம் ஒரு முறை மாநில அளவிலான கருத்தரங்கு  நடக்கும். அதுல எல்லா மாவட்டங்கள்லேருந்தும் எங்க சங்க உறுப்பினர்கள் கலந்துப்பாங்க. 

புதுசா தன்னோட மாவட்டத்துல கிளை தொடங்க நினைக்கிறவங்களுக்கும் உதவி செய்யறோம். இந்தக் கருத்தரங்குல என்ன தொழில் செய்யலாம்,  எப்படிச் செய்யலாம், அதுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, எப்படி விற்கறதுங்கிற அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். புதுசா பயிற்சி  எடுத்துக்கிட்டு, தொழில் தொடங்கினவங்களுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கிறோம். சுருக்கமா சொன்னா, எந்த ஐடியாவும் இல்லாம எங்கக்கிட்ட  வர்றவங்களையும் அவங்களோட தனிப்பட்ட திறமையைக் கண்டு பிடிச்சு, வழிகாட்டி, மூலப்பொருள்கள் முதல் வங்கிக் கடன் வரைக்கும் வாங்க  உதவி செய்து, தொழில் தொடங்கின பிறகு பிரச்னைகள் வந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு பாடம் எடுத்து, மேலாண்மைத் திறன் வரைக்கும் கத்துக்  கொடுக்கறோம். 
Ready to work? Ready to help!
வீட்டையும் தொழிலையும் பேலன்ஸ் பண்ணவும் பாலின சமத்துவம் பத்தித் தெரிஞ்சுக்கவும்கூட ஆலோசனைகள் உண்டு. ஆணுக்கு இணையா,  பெண்ணாலயும் எந்தத் தொழிலையும் தைரியமாகவும், தடையில்லாமலும் தொடர்ந்து நடத்த முடியும்னு நிரூபிக்கிற அந்தப் பயணத்துல விருப்பமுள்ள  எந்தப் பெண்ணும் இணையலாம்’’ - அன்பும் அக்கறையுமாக அழைக்கிறார் மணிமேகலை. (தொடர்புக்கு: ( 0431-4200040/ 94887 85806/ 96007  79081)

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites