சிதம்பரம் கவரிங்
நாளுக்கு நாள் விலை ஏறிக்கொண்டே இருக்கிறது தங்கம். எனவே, தங்க நகை போலவே டிசைன், அதே ஜொலிப்பு உள்ள விலை குறைவான கவரிங் நகைகளுக்கு மவுசு கூடிக்கொண்டே வருகிறது.
கவரிங் நகைகள் எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது என்றாலும், அதற்கு தாய் வீடு என்னவோ சிதம்பரம்தான். பெரும் போட்டி வந்தபிறகும் அந்த பெருமையை இன்றும் தக்க வைத்திருக்கிறது சிதம்பரம். தமிழகத்தின் பல நகரங்களிலிருந்தும் கவரிங் நகைகளை சிதம்பரத்திலிருந்துதான் கொள்முதல் செய்கின்றனர்.
சிதம்பரத்தில் கவரிங் நகைகளை செய்வதற்கென்றே பல குடும்பங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அப்பாபிள்ளைத் தெரு, இளமையாக்கினார் கோயில் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு போன்ற இடங்களில் கவரிங் நகைகள் முழுமூச்சாக தயாராகி வருகின்றன.
இங்கு நேரடியாக வாங்கும்போது ஒரிஜினல் கவரிங், மைக்ரோ கவரிங், சாதாரண கவரிங் என கவரிங் ரகங்களைப் பார்த்து வாங்க முடியும். அதேபோல் உங்களுக்குப் பிடித்த டிசைனை பேரம் பேசியும் வாங்க முடியும் என்கிறார் சிதம்பரம் நகர விஷ்வகர்மா சங்கத் தலைவர் ஆர்.பி.சுந்தரமூர்த்தி.
சிதம்பரம் கவரிங் என்று அடைமொழியோடு அழைக்கப்படுவதற்கான காரணத்தையும், மற்ற நகரங்களில் வாங்குவதற்கும், சிதம்பரத்தில் வாங்குவதற்கும் உள்ள சிதம்பர ரகசியத்தையும் அவரிடம் கேட்டோம்.
''இப்ப கவரிங் நகை செய்யும் தொழில் எல்லா ஊர்களிலும் வந்துவிட்டது. ஆனா, ஒரிஜினல் கவரிங் இங்கேதான் கிடைக்கும். அதற்குக் காரணம், சிதம்பரத்தின் தண்ணீர். இங்கு செய்யப்படும் நகைகள் அவ்வளவு சீக்கிரம் கறுக்காது, தோல் உரியாது. அதேபோல அணிந்துகொள்வதால் சருமப் பிரச்னைகள் இருக்காது.
பெண்கள் விதவிதமான டிசைன்களை விரும்புவதால் ஆண்டு முழுவதுமே கவரிங் நகைகளைத் தயாரிக்கிறோம். தற்போது சிதம்பரத்தில் இது குடிசைத் தொழில் போலவே ஆகிவிட்டது. முன்பு கவரிங் செயின் மட்டும்தான் செய்தோம். ஆனால், தற்போது வளையல், ஆரம், மோதிரம், கொலுசு போன்றவையும் அச்சு அசல் தங்க நகைகளைப் போலவே செய்கிறோம்.
பொதுவாக திருட்டுப் பயம் இல்லை என்பதால் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு தங்க நகைகளைப் போலவே கவரிங் நகைகளையும் மக்கள் விரும்பி அணிந்துகொள்ளத் தொடங்கியுள்ளனர். இதனால் கவரிங் நகைகளுக்கு இன்னும் மவுசு கூடுகிறது'' என்றார்.
வெளிமாவட்டங்களில் இருந்து வரும் விற்பனையாளர்கள் மொத்தமா வாங்கிச் சென்று சுமார் 30 சதவிகிதத்துக்கும் மேல் லாபம் வைத்து விற்பனை செய்கிறார்கள். தவிர, இங்கு செய்யப்படும் சில பிராண்டட் கவரிங் நகைகளுக்கு ஒரு வருடம் கேரண்டியும், ரீ சேல் மதிப்பும் இருக்கிறது. தங்க நகைகளை மாற்றிக்கொள்வது போல பழைய கவரிங் நகையை கொடுத்துவிட்டு, புதிதாக நகைகளைகூட வாங்கிக்கொள்ள முடியும்.
மணப்பெண் அலங்கார நகைகள் என்று தனியாக செட் நகைகளும் கிடைக்கிறது. விலையைப் பொறுத்தவரை, குறைந்தது 25 ரூபாயில் இருந்து 1,000 ரூபாய் வரையிலும் டிசைனுக்கு ஏற்ப இருக்கிறது. குடும்பத் தலைவிகள், கல்லூரி மாணவிகள் சிலர் இங்கு வந்து மொத்தமாக வாங்கிச் செல்கிறார்கள். அந்த வகையில் சிறந்த சுயதொழில் வாய்ப்பையும் கொடுக்கிறது.
இந்த கவரிங் நகைகளை பாலீஸ் போட்டுக்கொண்டால் போதும். ஐந்து வருடங்களுக்கு அழியாமல் இருக்கும். தங்கத்திற்கு மாற்று கவரிங் நகைகள்தான் என்றாகிவிட்டது. அடுத்தமுறை சிதம்பரம் சென்றால் ஆளுக்கொரு கவரிங் நகை வாங்கிக்கொள்ள மறக்காதீர்கள்.
தொகுப்பு: மா.நந்தினி,
படங்கள்: இ.ராஜவிபீஷிகா
2 comments:
நான் வியாபாரியாக ஆலோசனை கூறுங்கள்
Please send your Mobile
Post a Comment