திண்டுக்கல்லில் இருந்து மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சின்னாளப்பட்டி. சின்ன ஊராக இருந்தாலும் சின்னாளப்பட்டி சுங்குடி சேலை என்பது இன்றைக்கு உலகம் முழுக்கப் பிரபலம். ஆரம்பத்தில் இந்த ஊரில் எளிய டிசைனில் காட்டன் சேலைகளைத் தயாரித்து விற்றனர். ஆனால், காலப்போக்கில் விசைத்தறிகளின் ஆதிக்கம் பெருகவே, இன்றைக்கு துணி உற்பத்தி என்பதைவிட, திருப்பூரிலிருந்து துணி வாங்கி, அதை சுங்குடி புடவையாக மாற்றி விற்பதே இப்போது இங்கு பிரதானமான தொழிலாக இருக்கிறது. கடந்த இரு தலைமுறைகளாக சின்னாளப்பட்டியில் சுங்குடி சேலை உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ரவியிடம் பேசினோம்.
''சுங்குடி புடவையின் பிறப்பிடம் மதுரைதான் என்றாலும் அதிகமான உற்பத்தி, விற்பனை எல்லாமே இப்போது சின்னாளப்பட்டிதான். இதற்காக திருப்பூரில் இருந்து சுத்தமான காட்டன் துணிகளை வாங்குகிறோம். பின் சாயம் போடுவது முதல் ஒரு வாரம் தண்ணீரிலேயே பிராசஸ் வேலைகளை இங்கேயே செய்கிறோம். சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே சின்னாளப்பட்டி அமைந்திருப்பதால், தண்ணீருக்கு என்றைக்கும் பஞ்சமில்லை. தவிர, எங்கள் ஊர் தண்ணீருக்கு விசேஷ குணம் உண்டு. இந்த தண்ணீரில் நனைத்து சாயமிடும்போது, தேவையான அளவு துணி சுருங்கிவிடும். இதனால் மேற்கொண்டு அந்த துணி சுருங்குவதற்கு வாய்ப்பில்லை. இதனால் பலரும் எங்களைத் தேடி வந்து சுங்குடிப் புடவைகளை வாங்கிக்கொண்டு போகிறார்கள்.
பொதுவாக சுங்குடிப் புடவை என்றால் வயதானவர்கள் உடுத்துவது என்றிருந்த நிலை மாறி, இப்போது இளம்பெண்களும் கட்டத் தொடங்கி இருக்கின்றனர். கல்லூரிப் பெண்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மொத்தமாக ஆர்டர் கொடுக்கும்போது அவர்கள் கொடுக்கும் டிசைன்களிலும் அல்லது எங்களிடம் இருக்கும் டிசைன்களுக்கு ஏற்ப செய்து கொடுக்கிறோம். பாரம்பரிய டிசைன்கள் மட்டுமில்லாமல், தற்போது பெண்கள் விரும்பும் வகையில் பல்வேறு டிசைன்களிலும் சுங்குடிப் புடவைகளை தயார் செய்து தருகிறோம்'' என்றார் ரவி.
சின்னாளப்பட்டி சுங்குடிப் புடவைகளின் தனிச்சிறப்பு என்னவெனில், அவை முழுக்க முழுக்க காட்டன் புடவைதான். எனவே, வெயில் காலத்திற்கு இந்த புடவைகளை பெண்கள் விரும்பி உடுத்துகின்றனர்.
இந்த சேலைகளின் விலை மிகக் குறைவுதான். ஓரடுக்கு, மூன்றடுக்கு சரிகை என சரிகையைப் பொறுத்து விலை வேறுபடும் என்றாலும், 150 ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 500 ரூபாய் விலைக்குள் வாங்கிவிடலாம். எனவேதான், இங்கு விற்பனை என்பது எல்லா நாட்களிலும் கனஜோராக இருக்கிறது. மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகம், உத்தரபிரதேசம், அசாம், நாகலாந்து என வடமாநில வியாபாரிகளும் இங்கிருந்து புடவைகளை வாங்கிச் செல்கின்றனர்.
என்னதான் மாடர்னாக மில் சேலைகளை உடுத்துபவர்களாக இருந்தாலும் சுங்குடி சேலையை ஒருமுறை கட்டிப் பார்த்தால், அதில் கிடைக்கும் சௌகரியத்தை அனுபவித்தவர்கள் அந்த புடவையைத் தொடர்ந்து நாடவே விரும்புவார்கள். கொடைக்கானலுக்கோ திண்டுக்கல்லுக்கோ போகிறவர்கள் சின்னாளப்பட்டிக்கு ஒருமுறை போய் ஒன்றிரண்டு சுங்குடிச் சேலையை வாங்கி வரலாமே!
- க.அருண்குமார்,
படங்கள்: வீ.சிவக்குமார்.
0 comments:
Post a Comment