கொல்கத்தா,-
மீன் ஏற்றுமதி, 2014–ஆம் ஆண்டுக்குள் 470 கோடி டாலரை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, தற்போது 300 கோடி டாலராக உள்ளது. ஆக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீன் ஏற்றுமதி 57 சதவீதம் வளர்ச்சி காணும் என தெரிகிறது. மீன்பிடி தொழிலில் ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ஒடிசா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன. இந்திய கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மொத்த மீன்களில் ஏறக்குறைய 10 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலக அளவில்...
உலக அளவில் 2012–ஆம் ஆண்டில் மொத்தம் 15.73 கோடி டன் மீன்கள் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் கடலில் பிடிக்கப்படும் மீன்களின் அளவு 9 கோடி டன்னாகவும், மீதமுள்ளவை பண்ணைகளில் வளர்க்கப்படுபவையாக இருக்கும். உலக நாடுகளின் மொத்த மீன் ஏற்றுமதி 13,800 கோடி டாலராக இருக்கும் என்றும், இதில் சீனா, நார்வே மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் என அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது.சர்வதேச அளவில் பிடிக்கப்படும் மீன்களில் 85 சதவீதம் உணவாக பயன்படுத்தப்படுகிறது. 15 சதவீத மீன்கள் வேறு சில நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன. உலக மீன் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு சுமார் 5 சதவீதமாக உள்ளது. சர்வதேச மீன் ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 2 சதவீத அளவிற்கே உள்ளது. ஏற்றுமதியாகும் மீன்களில் கடல், ஆறு மற்றும் ஏரி, குளங்களில் பிடிக்கப்படும் மீன் வகைகள் அடங்கும்.
கடல் பகுதியில் மீன்பிடி தொழில் மந்தகதியில் வளர்ச்சி கண்டு வரும் நிலையில், உள்நாட்டு நீர்நிலைகளில் பிடிக்கப்படும் மீன்களின் அளவு ஆண்டுக்கு சராசரியாக 6 சதவீதம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதன் விளைவாக 2016–ஆம் ஆண்டில் நாட்டின் மீன் உற்பத்தி 1.30 கோடி டன்னாக உயரும் என அசோசெம் ஆய்வறிக்கை கூறியுள்ளது.
இந்திய கடல் பகுதிகளில் 1,700–க்கும் அதிகமான மீன் இனங்கள் உள்ளன. இவற்றுள் 200 இனங்கள் வர்த்தக ரீதியில் பெரும் லாபம் ஈட்டித் தரக்கூடியவையாகும். மீன்பிடி தொழிலில் 1.50 கோடிக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். மீன் வளர்ப்பு துறையை பொறுத்தவரை சீனாவிற்கு அடுத்தபடியாக நம் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. நம் நாட்டில் பொதுவாக மீன் உணவில் மதிப்புக் கூட்டிய பொருள்களுக்கு அதிக வரவேற்பு இல்லை. உயிருடன் உள்ள மீன்கள் அல்லது புதிதாக பிடித்து வரப்படும் மீன்கள்தான் அதிகம் விரும்பப்படுகின்றன.
கருவாடு
இந்திய கடல் பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்களில் பதப்படுத்தப்படும் மற்றும் கருவாடாக மாற்றப்படும் மீன்கள் 16 சதவீதமாக உள்ளது. சுமார் 10 சதவீத மீன்கள் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு சதவீதத்திற்கும் குறைவான மீன்கள் சமைக்கப்பட்டு டின்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றன. பத்து லட்சம் டன்னுக்கும் குறைவாக மீன்கள் ஏற்றுமதியாகின்றன. உள்நாட்டு தேவைப்பாடு 75 லட்சம் டன்னாக உள்ளது. இது 2016–ல் 1 கோடி டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
Thnxs:http://www.dailythanthi.com/node/31038
0 comments:
Post a Comment