இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, December 19, 2011

சர்க்கரை ஆலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

 நேற்று காலை சுற்றுலாவாக மதுரை பாலமேடு அருகிலுள்ள சக்கரையாலைக்கு சென்றோம். மாணவர்கள் படிப்பு கவலையை மறந்து பிற நாட்களைவிட உற்சாகமாக வந்தனர். முகத்தில் தெளிவும் மகிழ்ச்சியும் வெளிப்படுத்திய மாணவர்களுக்குப் போட்டியாக வானமும் தன் அழகை வெயில் மறைத்து,மேகங்கள் சூழ ,இதமான காற்றைத் தந்தது, மாணவர்களை விட ஓட்டுனர் உற்சாகமடைந்து நிதானமாக இயற்கை காற்றை சுவாசித்து, தூசிகள் நிறைந்த நகரை விட்டு இயற்கையைத் தேடி பறந்தோம்.
        பசுமைகள் தார் சாலையின் இருபுறமும் எங்கள் கண்களுக்கு விருந்தாக , எங்களின் மகிழ்ச்சி மேகங்களுக்கும் ஓட்டிக் கொள்ளவே அவைகளும் எங்களுடன் இருட்டிக் கொண்டு வந்தன. குற்றாலச் சாரலை உணர்ந்தோம். குளிர்ந்த காற்றுடன் சக்கரையாலையை அடைந்தோம். வரிசையாக எம் மாணவர்கள் கரும்பு எப்படி சக்கரையாக மாற்றமடைகிறது என்பதை பார்த்து வியந்தனர்.
 

      இதோ மேலே உள்ளப்படம் லாரிகளிலிருந்து டன் கணக்கில் கரும்புகள் கிரேன் மூலம் சாறு பிழிவதற்கு அனுப்பப்படுகின்றன.ஒரு நாளுக்கு 2400 டன் கரும்புகள் அரைக்கப்படுகின்றன. இந்த கிரேன் அப்படியே லாரியிலுள்ள கரும்பைத் தூக்கி,  அரைக்க அனுப்புகிறது. அதனால் லாரிகள் வரிசையில் வெகு நேரம் நிற்பது குறைகிறது .
     இது மில் ஹவுஸ் எனப்படும் அரைக்கும் பகுதி. கரும்பு சக்கையாக பிழிந்து சாறு தனியாகவும் சக்கைத் தனியாகவும் அனுப்பப்படுகிறது. இச்சக்கைகள் மீண்டும் மீண்டும் அரைக்கப்படுகின்றன.

   பாருங்கள் மேலேயுள்ளப்படத்தில் எப்படி கரும்பு சக்கையாகப் பிழிந்து எடுக்கப்படுகிறது. நன்கு சாறுப் பிழியப்பட்ட இச்சக்கைகள் , காகித ஆலைகளுக்கு காகிதம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. சக்கரையாலையின் மிசின்களை இயக்க பாயிலர் பயன்படுகிறது. இந்த ஆலைக்குத் தேவையான மின்சாரம் தாயாரிக்கவும் இந்த பாய்லர் பயன்படுகிறது. பாயிலர்கள் மூலம் ஸ்டீரீம் பாய்ச்சப்பட்டு , ஜெனிரேட்டர் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு ,இம் மிசின்களை இயக்குகிறார்கள். இவ்வாறு பிழியப்படும் கரும்புச்சாறு பாகு ஆகும் வரை கொள்கலன்களில் வெவ்வேறு வெப்ப நிலைகளில் கொதிக்கவைக்கப்படுகின்றன.

    இவ்வாறு பிழிந்து எடுக்கப்படும் சாற்றிலுள்ள மாசுக்கள் நீக்க ஒரு கட்டத்தில் இச்சாறுடன் சுண்ணாம்புக்கல்லும் சல்பர் வாயுவும் செலுத்தப்படுகிறது. அதனால் இச்சாற்றிலுள்ள அசுத்தங்கள் வடிக்கட்டப்பட்டு சுத்தமான சாறு மட்டும் அதற்கு அடுத்துள்ள கொள்கலன்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன. மேலேயுள்ளப்படம் கொதித்து வரும் சாற்றுடன் சுண்ணாம்பும் , சல்பரும் சேரும் இடமாகும்.

    சுண்ணாம்பு நீர் இந்த கலைன் வழியாக பைப்புகளில் கலக்கப்பட்டு , சல்பர் வாயுவுடன் , கொதிக்கும் சாற்றில் கலக்கப்பட்டு , தூசுக்கள் வடிக்கட்டுதல் முறையில் நீக்கப்படுகின்றன. அடுத்த நிலையில் சாறு கொஞ்சம் பாகு நிலைக்கு தள்ளப்பட்டு , அதிலுள்ள இனிப்பு முழுவதும் பாகு தன்மையாடையும் வரை காய்ச்சப்படுகிறது. அதற்கு என பிரசர் அளவுகள் குறிக்கப்படுகின்றன. கண்ணாடியில் வைத்து அதன் தன்மையை சரிப்பார்க்கின்றனர். 



சல்பர் கலந்த பின் பாகு தன்மையுடன் வெளிவரும் கரும்பு ச்சாறு...

   பின்பு இச்சாறு மிகப்பெரிய சுழலும் டிரம்மில் செலுத்தப்படுகிறது. அந்த டிரம்மில் மிகச்சிறிய துளைகள் உள்ளன. அவைகள் மூலம் சாறு பாயும் போது சக்கைகள் , கல், மண் மற்றும் பிற கழிவுகள் டிரம்மின் மேற்பரப்பில் ஓட்டிக் கொள்கின்றன. மேலேயுள்ள படத்தில் அந்த கழிவுகள் ஓட்டியுள்ளதைப்பார்க்கலாம்.அவைகள் உரமாக பயன்படுத்தப்படுகின்றன. அப்பகுதி விவசாயிகள் இதனை கிலோ நூறுவுக்கு வாங்கி இயற்கை உரமாக பயன்படுத்துகின்றனர்.




   மேலேயுள்ள படத்தில் பாகு சக்கரை தன்மைக்கு பின் ,மொலாஸ் எனப்படும் நிலைக்கு மாற்றப்படும் போது உள்ள தன்மை சோதிக்கப்படுகிறது. இந்த மொலாஸ் சாராயத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு நல்ல காசுக்கு விற்க்கப்படுகின்றன. சக்கரையாலையில் எதுவுமே வேஸ்ட் இல்லை . இதற்கு என தனி மின்சாரம் தேவையில்லை. அனைத்தும் பாய்லர் மூலம் ஜெனரேட்டரை இயங்கச் செய்வதன் மூலம் பெறப்படுகிறது. 




 பாகு சீனியாக மாற்றப்பட்டு அரைக்கப்படு வருகிறது. அவைகள் தரம் பிரிக்கப்பட்டு , மிகவும் பொடியாக உள்ள சீனி மட்டும் மூடை மூடையாக கிலோ கணக்கில் சாக்கில் பிடிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கீழேயுள்ள படம் தான் சீனி யாகி வரும் கடைசிக் கலன் ஆகும் 


    அங்கிருந்து விடைப்பெற்று , பாலமேட்டிற்கு அருகிலுள்ள சாத்தியார் அணைக்கட்டிற்கு ஆனந்தமாக பயனித்தோம். இயற்கை எங்களுக்கு மேலும் ஆனந்தம் அளிக்கும் விதமாக மழையைப் பொழிந்தது. பேருந்தில் இருந்த வண்ணம்  மழையினை ரசித்தனர். பத்து நிமிடம் கணத்த மழை . பூமி குளிர்ந்து எங்களுக்கு வழிவிட்டது. மழையினை  சாலையின் இருபுறம் உள்ள மலையையும் ரசித்து வந்தனர்.”

வரிசையாக அமர்ந்து சாப்பிட்டோம். அணைக்கட்டையும் , அதன் சுற்றுப்புறம் , இயற்கையை ரசித்தோம்.அணைக்கட்டின் அருகில் சென்று இயற்கை அரண்களாக மலைகள் அமைந்து எப்படி நீர் தேக்கப்படுகிறது என்பதை வியப்போடு பார்த்தனர். நான் அவர்களுடம் புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.


பயணம் இனிமையாக முடிந்தது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites