இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, November 12, 2012

கொள்ளுவின் மருத்துவத் தன்மையைப் பற்றி தெரிந்து கொள்வோம்


இளைத்தவனுக்கு எள்ளைக் கொடு

பெருத்தவனுக்கு கொள்ளைக் கொடு 

என்பது நம் முன்னோர்கள் வாக்கு. இதிலிருந்தே இதன் மருத்துவத் தன்மையைத் தெரிந்துகொள்ளலாம்.

இந்தியா முழுதும் பரவிக் காணப்படும் குத்துச்செடி வகையைச் சார்ந்தது. இதில் நாட்டுக் கொள்ளு, காட்டுக் கொள்ளு என இரு வகைகள் உள்ளன. இதில் கருமை, செம்மை, வெண்மை என மூன்று பிரிவுகள் உள்ளன. இன்னும் ஒருவகை பேய்க்கொள்ளு என்று அழைக்கப்படுகிறது.

கொள்ளுவை ஒரு உணவாகவே நம் முன்னோர்கள் சாப்பிட்டு வந்தனர். இடைப்பட்ட காலத்தில் கொள்ளுவின் பயன்பாடு குறைந்து போனது. காரணம் கொள்ளுவில் உள்ள சத்துக்கள் பற்றி இடைக்கால மக்கள் தெரிந்துகொள்ளாமல் போனதுதான்.

கொள்ளுவை காணம் என்ற பெயரிலும் அழைக்கின்றனர்.

குடல் வாதங் குன்மமுண்டாங் கொள்மருந்தோ நாசம்

அடலேறு பித்தமிக ஆகுங்-கடுகடுத்த

வாதநீ ரேற்றமொடு மன்னுகுளிர் காய்ச்சலும்போகுஞ்

சாதிநறுங் கொள்ளுக்குத் தான்

(அகத்தியர் குணபாடம்)

உடல் வலுப்பெற 

சிலர் நோய்வாய்ப்பட்டதாலும், சத்தான உணவுகள் கிடைக்காததாலும் நோஞ்சான் போல் காணப் படுவார்கள். இவர்கள் கொள்ளுவை வறுத்து கஞ்சியாகச் செய்து தினமும் மூன்று வேளையும் குடித்து வந்தால் உடல் நன்கு வலுப்பெறும், புத்துணர்வு பெறும். 

கொள்ளுவை அரிசியுடன் சேர்த்தும் கஞ்சி செய்யலாம். மேலும் கொள்ளுவை வறுத்து துவையலாகவும் பயன்படுத்தலாம். 

நன்கு பசியைத் தூண்ட

சிலருக்கு வாயுக்களின் சீற்றத்தால் எப்போதும் வயிறு மந்தமாகவே இருக்கும். சிறிது சாப்பிட்டால் கூட நாள் முழுவதும் பசியே தோன்றாது. சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தும் சாப்பிட முடியாமல் தவிப்பார்கள். இவர்கள் கொள்ளுவை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாகவோ, கொள்ளுவை வறுத்து துவையலாகவோ அல்லது ரசம் செய்தோ சாப்பிட்டு வந்தால் நன்கு பசி உண்டாகும்.

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் என்பது ஒரு நோய் என்றால் சிரிப்பார்கள். மலச்சிக்கல், மனச்சிக்கல் இரண்டுமே நோய்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகும். மனச்சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் தானாகவே வந்துவிடும். மலச்சிக்கல் இருந்தால் மனச்சிக்கலும் கூடவே வரும்.

இந்த மலச்சிக்கலைத் தீர்க்க கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை சட்னியாகவோ கஞ்சியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

சிறுநீர் பெருக்க

சிறுநீர் நன்கு பிரிந்தால்தான் உடலில் உள்ள தேவையற்ற நீர்கள் வெளியேறும். சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். இரத்தம் சுத்தமடையும். 

சிறுநீரகச் செயல்பாட்டிற்கு கொள்ளு சிறந்த மருந்து. கொள்ளுவை தினமும் உணவில் சேர்த்து வந்தால் சிறுநீர் நன்கு பிரியும். 

இடுப்பு வலி மூட்டு வலி மாற

இடுப்பு வலி, மூட்டு வலியால் அவதியுறுபவர்கள் கொள்ளுவுடன் பூண்டு, மிளகு சேர்த்து ரசம் செய்து அருந்தி வந்தால் இடுப்பு வலி, மூட்டு வலி நீங்கும்.

பெண்களுக்கு

நீண்ட நாட்களுக்கு மாதவிலக்கு வராமல் இருப்பதும், அதிகமான உதிரப்போக்கும் இருப்பதற்குக் காரணம் உடலில் வலு இல்லாமையே. இவர்கள் கொள்ளுவை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மேற்கண்ட தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம்.

கொள்ளுவில் புரதச் சத்து, கொழுப்பு சத்து, நார்ச்சத்து, வைட்டமின் சத்து தாதுப் பொருட்கள் நிறைந்துள்ளன.

இருமல் சளி நீங்க

1 பங்கு கொள்ளுக்கு 10 பங்கு நீர்விட்டு காய்ச்சி அது பாதியாக சுண்டியவுடன் அதனுடன் இந்துப்பு சேர்த்து நன்றாகக் கடைந்து கொடுத்து வந்தால் இருமல், சளி நீங்கும்.

கொள்ளுவை அரைத்து வீக்கக் கட்டிகள் மேல் பூசி வந்தால் வீக்கம் குறையும்.

கொள்ளு இரசம்

வற்றிய உடம்பு தூணாம் வாதமும் பித்துங் குக்கி

சுற்றிய கிராணி குன்மஞ் சுரம்பல சுவாச காசம்

உற்றடர் கண்ணன் புண்ணோ டுறுபிணி யொழியும் வெப்பைப்

பெற்றிடுங் காணச் சாற்றாற் பெருஞ்சல தோடம் போம்

கொள்ளு இரசம் உடலை வலுவாக்கும். மாதவிலக்கை சீர்படுத்தும். கை கால் மூட்டு வலி, இடுப்பு வலியைப் போக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். ஆண்மை சக்தியைப் பெருக்கும்.

உடல் பருத்து (தொளதொளவென்று) தசை இறுக்கமில்லாமல் இருப்பவர்கள் கொள்ளுவை கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால் தசைகள் இறுகி வலுப்பெறும். தேவையற்ற நீர் வெளியேறும். 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites