இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 2, 2012

மற்றவர்களின் மைனஸ் எங்கள் ப்ளஸ்!



   

   
உப்பில்லாத உணவு குப்பையிலே என்பது பழமொழி.
 மசாலாப் பொருட்கள் சேர்க்காத உணவு மகத்தான
 உணவே அல்ல என்பது புதுமொழி. இன்றைய
 தேதியில் நம் வீட்டில் தயார் செய்யப்படும் எந்த
 வகையான உணவாக இருந்தாலும் சரி, அவற்றில் 
மசாலாப் பொருட்களை சேர்க்காமல் தயார் 
செய்யப்படுவதே இல்லை. வீட்டில்தான் என்றில்லை.
 ஓட்டல்கள், உணவகங்களிலும்கூட மசாலாப் பொருட்களின் பயன்பாடு வெகு வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் துறை 
அடுத்த 10 ஆண்டுகளில் 30-40 சதவிகித வளர்ச்சி அடையும் என்று ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. சுவையான உணவைச் சாப்பிட வேண்டும் என்கிற எண்ணம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் பெருகி வருவதும் ஓட்டல்கள் மற்றும் சிறிய ரக உணவகங்களின் எண்ணிக்கை பெருகி வருவதும் இதற்கு முக்கியமான காரணங்கள்.
மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் தொழில் இன்று எப்படி இருக்கிறது? இதன் எதிர்காலம் எப்படி இருக்கும்?
என பல கேள்விகளை மசாலா பொருட்கள் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஏ.டி.பத்மசிங் ஐசக்கிடம் கேட்டோம்.விளக்கமாக நமக்கு பதில் சொன்னார் அவர்.


இன்றைக்கு மசாலா பொருட்கள் சந்தை இந்தியாவில் எப்படி உள்ளது?
''உணவுப் பொருட்கள் சந்தையில் மசாலா பொருட்கள் சந்தை மிகப் பெரியது. கடந்த சில ஆண்டுகளில் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. உள்நாடு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இந்திய மசாலா பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதற்கு முக்கியக் காரணம், உணவுப் பழக்கவழக்கத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுதான். விதவிதமான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். அதனால்தான் மசாலா பொருட்களின் சந்தை இத்தனை அபார வளர்ச்சி கண்டு வருகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு மசாலா பொருட்கள் வியாபாரம் என்பது பிராண்ட் இல்லாமல் உள்ளூரில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இன்றோ 'ஆச்சி மசாலா கொடுங்க' என்று கேட்டு வாங்கும் அளவுக்கு அது பிராண்ட் பொருளாக மாறி இருக்கிறது.''
கோத்ரெஜ் நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்தை எவ்வாறு உங்கள் வெற்றிக்குப் பயன்படுத்திக் கொண்டீர்கள்?
''கோத்ரெஜ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் வேலை செய்தேன். ஒரு தொழிலின் வளர்ச்சிக்கு மார்க்கெட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து கொண்டேன். எல்லாத் தொழிலுக்கும் மார்க்கெட்டிங்தான் உயிர் நாடி. நமது பொருட்களை மக்கள் 
மனதில் நினைவில் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அதிலும் குறிப்பாக பிராண்டிங் என்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் கற்றுக் கொண்டேன். உங்கள் பிராண்ட்டை நீங்கள் நிலைநிறுத்தினால் மட்டுமே மார்க் கெட்டில் எப்போதும் நீங்கள் முன்னனியில் இருக்க முடியும். தவிர, தரமான பொருளை வாங்கும் விலையில் கொடுக்க வேண்டும் என்பதையும் கற்றுக் கொண்டேன். எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கமும் அதுதான்.''
ஃபுட் பிராசஸிங் துறை மேலும் வளர வாய்ப்புகள் எப்படியிருக்கிறது?
''விவசாயப் பொருட்களைப் பதப்படுத்தத் தேவையான கருவிகள், சாதனங்கள், இயந்திரங்கள் இந்தியாவில் போதுமான அளவுக்கு இல்லை. இதனால் 30% விவசாயப் பொருட்கள் வீணாகப் போகின்றன. எனவே ஃபுட் பிராசஸிங் துறைக்கான தொழில் நுட்பத்திற்கு இந்தியாவில் மிகப் பெரிய அளவில் தேவை இருக்கிறது. கோல்ட் ஸ்டோரேஜ் வசதிகளை இன்னும் அதிகப்படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசுதான் எடுக்க வேண்டும்.''
மத்திய அரசு மெகா ஃபுட் பார்க்குகளை அமைக்க திட்டமிட்டு வருகிறது. இதை நீங்கள் எப்படிப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளீர்கள்?
''இதை நாங்களும் நன்றாகவே பயன்படுத்திக் கொள்வோம். இது வரையில் மூலப் பொருட்களை கொள்முதல் செய்து கோல்ட் ஸ்டோரேஜில் பதப்படுத்தி தேவைப்படும் போது பயன்படுத்தி வந்தோம். இனி விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்கவுள்ளோம்.''
தற்போது இட்லி, இடியாப்பம், பிரியாணி போன்ற பதப்படுத்தப்பட்ட பாரம்பரிய உணவுப் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்தத் தொழிலில் எஸ்.எம்.இ.க்களுக்கு வாய்ப்பு உள்ளதா?
''இதில் எஸ்.எம்.இ.க்களுக்குத் தான் அதிக வாய்ப்புகள் உள்ளன. உலகின் ஒவ்வொரு பகுதி மக்களும் ஒவ்வொரு விதத்தில் சமைக் கிறார்கள். டேஸ்ட் என்பது பகுதிக்குப் பகுதி மாறுபடுகிறது. அந்தந்தப் பகுதி மக்களுக்கு என்ன விதமான டேஸ்ட் பிடிக்கும் என்பது அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் எஸ்.எம்.இ.களுக்குத்தான் தெரியும். இந்த வாய்ப்புகளை அவர்கள் நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மக்கள் விரும்பும் சுவையோடு தரமும் கட்டாயம் இருக்க வேண்டும். தற்போது ரெடி டூ ஈட் உணவுப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இதற்கான சந்தை வாய்ப்புகள் அதிகம்.''
பொதுவாக எஸ்.எம்.இ.களுக்குத் தடையாக இருப்பது என்ன?
''தாங்கள் தயார் செய்யும் பொருட்களை ஒரு பிராண்ட்டாக மாற்ற வேண்டும் என்று எஸ்.எம்.இ.கள் நினைப்பதில்லை. அதனால் அதில் கவனம் செலுத்துவதுமில்லை. தொடர்ந்து நம் பிராண்ட்டை மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும். பிராண்ட் இருந்தால் நமது பொருட்களில் கலப்படம் நடக்காது. காரணம், தரமான பாக்கெட், பெயர் இருக்கும் போது கடைக்காரர்கள் கலப்படம் செய்ய மாட்டார்கள். எனவே பிராண்ட்டை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு தனித் தொகையை ஒதுக்க வேண்டும். அடுத்து, எஸ்.எம்.இ.களுக்கு போதுமான முதலீடு கிடைப்பதில்லை. அரசு வங்கிகளிலிருந்து கடன் பெறும் முறை எளிதாக்கப்பட வேண்டும். தற்போது இருக்கும் நடைமுறையை வைத்து சாதாரண மக்கள் கடன் வாங்குவது என்பது கடினமே. தவிர, எஸ்.எம்.இ.களுக்குத் தேவையான மார்க்கெட்டிங் நெட்வொர்க்கையும் அமைத்துக் கொள்வதிலும் அவர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.''
பிராடக்ட் டைவர்சிஃபிகேஷனை உங்கள் நிறுவனத்தில் எந்த அளவு நடைமுறை படுத்தியிருக்கிறீர்கள்?
''பிராடக்ட் டைவர்சிஃபிகேஷன் முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் பிராடக்ட் லைன். அதாவது, ஒரே ஒரு தயாரிப்பை மட்டும் தயார் செய்து விற்காமல் ஒன்றோடு ஒன்று தொடர்புடைய பல்வேறு பொருட்களைத் தயார் செய்து விற்பது. உதாரணமாக, நாங்கள் சாம்பார் பொடி மட்டும் விற்காமல் அனைத்து வகையான மசாலாப் பொடிகளையும் தயார் செய்து விற்கிறோம். எண்ணெய், நெய், ஆட்டா போன்று அது சார்ந்த பொருட்கள் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் ஒன்று சரிந்தால்கூட மற்றொன்று நமக்கு கை கொடுத்துக் காப்பாற்றும். தவிர, நம் நிறுவனம் எதிர்காலத்தில் பெரிய நிறுவனமாக வளரவும் உதவும். அதே போலத்தான் பிராடக்ட் டைவர் சிஃபிகேஷனும். எங்கள் அடுத்தகட்ட வளர்ச்சியாக பிஸ்கட், மினரல் வாட்டர், ஹேர் ஆயில், ஸ்நாக்ஸ், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் (சைவம் மற்றும் அசைவம்) சந்தையில் அடுத்த ஆண்டில் நுழைய இருக்கிறோம்.
''நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன புதுமையான திட்டங்கள் வைத்திருக்கிறீர்கள்?
''கூடிய விரைவில் ஆச்சி கிச்சன் வரவுள்ளது. இதில் ஆச்சி பிராடக்ட்ஸ் மட்டுமல்லாது, ஆச்சி பிராடக்ட்ஸ் மூலமாகத் தயாரித்த இட்லி, தோசை போன்ற உணவுப் பொருட்களும் நேரடியாக விற்கவுள்ளோம். எங்களது பிராடக்ட்களை உலகளவிலான தரத்துக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே எங்கள் லட்சியம். அடுத்த ஐந்தாண்டுகளில் லட்சியத்தை எட்டிவிடுவோம்.''
போட்டியாளர்களிடமிருந்து தனித்து நிற்க என்ன யுக்திகளை கடை பிடித்தீர்கள்?
''அவர்களுடைய மைனஸ்தான் எங்களுக்கு ப்ளஸ். பெரும்பாலும் அவர்கள் நகரத்தில் கவனம் செலுத்தினார்கள். நாங்கள் அதை எங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டோம். எங்கள் கவனம் அனைத்தையும் கிராமத்தின் மீது செலுத்தினோம். அது எங்களுக்கு வெற்றியைக் கொடுத்தது.''





- என்.திருக்குறள்அரசி,
படங்கள்: 'ப்ரீத்தி' கார்த்திக்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites