இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, October 6, 2011

வெட்டை நோயைக் குணப்படுத்தும் கோவைக்காய்

அடிக்கடி காய்ச்சல், எப்போதும் சளித் தொந்தரவு, எந்த உணவையும் ருசித்துச் சாப்பிட்ட முடியாமை, நீரிழிவு, எப்போதும் உடலில் சூடு, ஜலதோஷம், சொறிசிரங்கு, பித்தக் கோளாறுகள் போன்ற குறைபாடுகளைக் களைவதில் முதலிடத்தில் இருக்கும் காய்கறிகளின் கோவைக்காயும் ஒன்றாகும்.
காரணம்?
இது கத்தரிக்காயை விடக் கசப்புச் சுவையுடையது. இந்தக் குணத்தால் மேற்கண்ட வியாதிகளைக் குணப்படுத்திவிடுகிறது.
கோவைக் காயைச் சமைத்தே சாப்பிடலாம். இல்லையெனில் நறுக்கப்பட்ட இக்காய்த் துண்டுகளை வெயிலில் காயப்போட்டு, அவற்றின் மீது உப்பு இட்டு மோரைத் தெளித்து மீண்டும் காயப்போட்டு வற்றல்களாக எடுத்துவைத்துக் கொண்டு பொரித்துச் சாப்பிடலாம்.
இந்தியாதான் இதன் தாயகம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் வீடுகளில பயிர் செய்யப்படுகிறது.
கோவைக்காயின் வேர்கள், தண்டுகள், கீரைகள், பழங்கள் முதலியவற்றைத் தோல் வியாதிகள், நீரிழிவு, வாய்ப்புண், வயிற்றுப்புண், ‘பிரான்கைட்டிஸ்’ போன்ற நோய்களைக் குணப்படுத்த மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
கோவைக் கீரையும் கசக்கும். ஆனால், அது மருத்துவக் குணம் நிரம்பியது. மற்ற கீரைகளுடன் இதைச் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உணவுகள் விரைந்து ஜீரணமாகும்.
அடுத்த வேளை உணவு மிகவும் ருசியாய் இருக்கும். நாக்கு செத்துப்போனவர்கள் சர்க்கரையையும், உப்பையும் அதிகமாகச் சேர்த்துக் கொள்வார்கள். கோவைக்காயையும், கோவைக் கீரையையும் இவர்கள் சாப்பிட்டால் இவர்கள் நாக்கு மீண்டும் சக்தியுடன் உயிர் பெற்றுவிடும்.
இக்கீரை கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். இக்கீரையின் கஷாயம் இருமல், நீரடைப்பு முதலியவற்றை உடனே குணமாக்கும். சீதபேதியைக் குணப்படுத்த இதன் இலைச்சாற்றை மிகவும் விருப்பத்துடன் அருந்த வேண்டும்.
வெட்டை நோயைக் குணப்படுத்த இக்காயின் இலைச் சாறுடன் அதே அளவு நல்லெண்ணெய், முதல் நாள் நீராகாரம் முதலியவற்றைச் சேர்த்து அருந்த வேண்டும். பத்து நாட்கள் இதுபோல் ஒரு வேளை அதிகாலையில் அருந்தி வந்தால் வெட்டை நோய் முற்றிலும் குணமாகும்.
இலைச் சாறுடன் நல்லெண்ணெயும் சேர்த்துக் காய்ச்சிய தைலத்தைப் படர்தாமரை மீது பூசி வந்தால் படர்தாமரை விரைவில் குணமாகும்.
கோவைக்கொடியின் வேரில் நீரில் கரையாத ஒரு வகை மரப்பிசின் இருக்கிறது. அதனால் இந்த வேரிலிருந்து எடுக்கப்படும் சாற்றை நீரிழிவு நோயாளிகளுக்குச் சித்த மருத்துவர்கள் கொடுக்கிறார்கள்.
கோவைப்பழம் மிகவும் ருசியானது. அதில் நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து முதலியவை உள்ளன. சிந்தனையாளர்களும், ஊர் விட்டு ஊர் சென்று பணிபுரிபவர்களும் இதைப் பயன்படுத்தினால் மலச்சிக்கல் ஏற்படாது. மூளையும் உடலும் சுறுசுறுப்புடன் திகழும், நன்கு பசியெடுக்கும். நோஞ்சான் குழந்தைகள் நன்கு வளர இதில் உள்ள இரும்புச் சத்து பயன்படுகிறது.
இரத்தத்தைச் சுத்தப்படுத்தி நோய்க்கிருமிகளை அண்டவிடாதபடி செய்துவிடுவதால்தான் சித்த மருத்துவர்கள் கோவக்காய், கோவக்காய் இலை முதலியவற்றையும் பயன்படுத்திப் பெரும்பாலான நோய்களைக் குணப்படுத்தி, கைராசியான மருத்துவர் என்னும் பட்டத்தையும் தக்க வைத்துக்கொள்கிறார்கள்.
கோவக்காய், கீரை, பழம் முதலியவற்றை எல்லா வயதினரும் நன்கு உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழலாம்.
எந்த நோய்க்காரரும் விலக்கக்கூடாத காய் இது!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites