இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

கொப்பரை தேங்காய்.. கொழிக்குது காசு!

தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தியாக கூடியது. நம் நாட்டில் விளையும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் தொழிலை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். நல்ல லாபமும் கிடைக்கும் என்கிறார் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம்  எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த கொப்பரை உற்பத்தியாளர் பஞ்சலிங்கம். அவர் கூறியதாவது: காய வைத்த தேங்காய் பருப்புதான் கொப்பரை. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தென்னை சாகுபடி அதிகளவில் உள்ளது. எனவே கொப்பரை தயாரிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். 10 ஆண்டாக இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கொப்பரை தயாரிப்பில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம்.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் அடிக்கடி மழை மற்றும் குளிர் நிலவுவது, கொப்பரை உற்பத்திக்கு பாதகம். மற்ற மாவட்டங்களில் தென்னை சாகுபடி குறைவாக இருந்தாலும், கொப்பரை காய வைப்பதற்கு ஏற்ற சீதோஷ்ண நிலை நிலவுகிறது. அங்கு உள்ளவர்கள் இப்பகுதியில் தேங்காய் வாங்கி கொப்பரை தயாரிப்பில் ஈடு பட்டால் நல்ல வருமானம் பார்க்கலாம். தேங்காய் விலை ஏற்ற, இறக்கம்உள்ளது. கொப்பரை உற்பத்தி செய்ய செலவு ஒரு தேங்காய் விலையோடு, கூடுதலாக ரூ.1.50 ஆகும். தேங்காய் விலையை பொருத்து உற்பத்தி செலவை கணக்கிடலாம்.

உற்பத்தி செய்யப்படும் கொப்பரைக்கு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் விலை நிர்ணயிக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து சமையல் எண்ணெய் இறக்குமதி அளவை பொருத்து கொப்பரையின் விலை இருக்கும். விலை குறையும் போது இருப்பு வைத்து, ஏறும்போது விற்றால் நல்ல லாபம் கிடைக்கும். அதே போல் கொப்பரை விலை ஏறினால், தேங்காய் விலை ஏறுகிறது. கொப்பரை விலை குறையும் போது தேங்காய் விலையும் குறைகிறது. கொப்பரை விலை குறையும்போது தேங்காய்களை வாங்கி போட்டால், கொப்பரை உற்பத்தி செலவு குறையும்.

தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் கிராம கூட்டுறவு வங்கி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் அவ்வப்போது கொப்பரைக்கு ஆதார விலை நிர்ணயித்து, தென்னை விவசாயிகளிடம் இருந்து கொப்பரைகளை கொள்முதல் செய்துகிறார்கள். அங்கு ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்வதில்லை. நிர்ணயிக்கப்படும் விலை குறைவாக உள்ளது. ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்து, கிலோவுக்கு ரூ.60ஐ உடனடியாக கொடுத்தால் தென்னை விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

கட்டமைப்பு வசதி!

மரத்தில் இருந்து பறித்து வரும் தேங்காய்களை சேமித்து வைக்கவும், உரிக்கவும், மட்டை, ஓடுகளை தேக்கி வைக்க குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் இடம். கொப்பரை காய வைக்க தேவையான களம் அமைக்க 25 சென்ட் இடம். தேங்காய் மட்டும் வாங்கி கொப்பரை தயாரிக்க, களத்துக்கான இடம் மட்டும் போதுமானது. களத்தில் படும் வெயிலின் சூட்டை தக்க வைக்க தரையில் கடப்பா கல் பதிக்க வேண்டும். கடப்பா கல் பதித்தால் தான் அதன் மேல் பரப்பப்படும் கொப்பரை விரைவில் காயும். இவ்வாறு களம் அமைக்க ஒரு லட்ச ரூபாய் செலவாகும்.

உற்பத்தி செலவு!

1000 தேங்காய்களில் அதிகபட்சம் 150 கிலோ கொப்பரை கிடைக்கும். ஒரு கிலோ கொப்பரை உற்பத்தி செய்ய குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.60 வரை செலவாகிறது. மாதம் 900 கிலோ உற்பத்தி செய்யலாம். உற்பத்தி செலவுக்கு குறைந்தபட்சம் ரூ.45 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.54 ஆயிரம் தேவை.

வருவாய்!

கொப்பரை விலை கிலோ ரூ.55 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோவுக்கு லாபம் ரூ.5 முதல் ரூ.15 வரை கிடைக்கும். கொப்பரை விற்பனை மூலம் மாத லாபம் ரூ.4,500 முதல் ரூ.13,500 கிடைக்கும். இது தவிர தேங்காய் உரித்த மட்டைகள், ஓடுகளையும் விற்கலாம். 900 கிலோ கொப்பரை உற்பத்தி செய்வதன் மூலம் கிடைக்கும் 6 ஆயிரம் மட்டை மற்றும் ஓடுகள் மூலம் ரூ.12 ஆயிரம் வருவாய் கிடைக்கும். கொப்பரை உற்பத்தியில் மாத மொத்த லாபம் ரூ.16,500 முதல் ரூ.25,500 வரை கிடைக்கும்.

சந்தை வாய்ப்பு!

கேரளாவில் தேங்காய் எண்ணெய்தான்  சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் தேங்காய் எண்ணெய் பயன்பாடு அதிகளவில் உள்ளதால் இத்தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள எண்ணெய் உற்பத்தியாளர்கள் கொப்பரை வாங்க காத்திருப்பதால் எப்போதும் கொப்பரைக்கு கிராக்கி உள்ளது. அவர்களே வந்து வாங்கி செல்வார்கள். தேங்காய் மட்டைகள் மூலம் நார் உற்பத்தி செய்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருள்கள் தயாரிப்பவர்கள், மட்டைகள் வாங்க முன்பதிவு செய்கிறார்கள். தேங்காய் ஓடுகளை பாய்லரில் எரிக்கவும், கொசுவர்த்தி தயாரிக்கவும், கரியாக்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்பவர்களும் உள்ளனர். இவர்களும் நேரடியாக  வந்து வாங்குகிறார் கள்.

தயாரிப்பது எப்படி?

தமிழகத்தில் 75 சதவீத தென்னை மரங்கள் நாட்டு வகையை சேர்ந் தவை. இவை கொப் பரை உற்பத்திக்கு ஏற்றவை. குலை தள்ளிய காய்களை பறித்து, 55 நாட்கள் கிடப்பில் போட்டு வைத்து, பின்னர் மட்டையை உரித்து தேங்காய் எடுக்க வேண்டும். அதை இரண்டாக உடைத்து வெயிலில் 2 நாள் காய வைக்க வேண்டும். பின்னர் ஓட்டில் இருந்து பருப்பு தனியாக வெளியேறும் வகையில் வளைந்து கொடுக்கும். அதை கத்தியால் நெம்பினால் பருப்பு மட்டும் தனியாக வந்துவிடும்.

அவற்றை நல்ல வெயிலில் 3 நாளும், இளம் வெயிலில் 5 நாளும் காய வைத்தால் தேங்காய் பருப்பில் ஈரப்பதம் 10 சதவீதமாக குறையும். காயவைத்த தேங்காய் பருப்பை கையில் வைத்து அழுத்தி பார்க்க வேண்டும். அப்போது அது உடைந்தால் தேவையான அளவுக்கு காயவில்லை என்பதை தெரிந்து கொள்ளலாம். கொப்பரை உடையாமல் வளைந்து கொடுத்தால் போதுமான அளவு காய்ந்து விற்பனைக்கு தகுதியாகி விட்டது என்பதை அறியலாம்.
உரித்த தேங்காயை 3 நாளுக்குள் உடைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் வெப்பத்தில் தேங்காய் ஓடு வெடித்து, உள்ளே அழுகி விடும். கொப் பரையை 50 கிலோ, 100 கிலோ மூட்டைகளில் கட்டி வைக்கலாம். 3 மாதம் வரை இருப்பு வைத்து விற்கலாம். இருப்பு வைக்கப்படும் ஒவ்வொரு நாளும், 50 கிலோ மூட்டையில் கால்கிலோ எடை குறையும். உற்பத்தி செய்த சில நாட்களுக்குள் விற்பது நல்லது. கொப்பரையில் தண்ணீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஒரு காயில் பூசணம் பிடித்தால் மற்றவற்றுக்கும் பரவி விடும்.  கொப்பரை தயாரிப்பில் சல்பர் கெமிக்கல் பயன்படுத்துவது முக்கியமானது. ஒரு பாத்திரத்தில் சல்பர் வேதிப்பொருள் அரை கிலோ போட்டு,  பற்ற வைத்தால் புகையும். புகை மூட்டத்தில் ஆயிரம் உடைத்த தேங் காயை ஒரு இரவு மூடி வைத்தால் தேங்காயில் உள்ள ஈரப்பதத்தை சீக்கிரம் எடுத்துவிடும். பூசணம் பிடிக்காது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites