இன்றைய தேதியில் இந்தியாவின் மிக முக்கியமான வண்ண மீன் வளர்ப்பு மையம் என்றால் அது சென்னைதான்! கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வண்ண மீன் வளர்ப்புத் தொழில் இரண்டு மடங்காக வளர்ந்திருப்பது மிகப்பெரிய வளர்ச்சி.
‘நம்மால் எப்படி திடீரென்று மீன் வளர்ப்புக்குப் போகமுடியும்’ என்று யோசிக்கிறீர்களா..? இதோ வழிகாட்டுகிறார் மாதவரத்தில் உள்ள ‘மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய’த்தின் பேராசிரியர் ஃபெலிக்ஸ்.
வண்ண மீன் வளர்ப்புத் தொழிலில் இருக்கும் வருமானம் மிகமிக அதிகம். ஆனால், அதற்கேற்ற அளவுக்கு இங்கு இந்தத் தொழில் வளராமல் இருப்பதற்குக் காரணம் மக்களிடம் சரியான விழிப்பு உணர்வு இல்லாததுதான். இன்றைய நிலையில் நமக்குத் தேவையான அளவில் சுமார் 70 சதவிகிதத்தை மட்டுமே நம்மால் உற்பத்தி செய்ய முடிகிறது.
மிகக் குறைந்த முதலீட்டில், மிகக் குறைந்த இடத்தில் வண்ண மீன்களை வளர்க்கலாம். முப்பதாயிரம் ரூபாயும் ஒரு சென்ட் இடமும் இருந்தால் இந்தத் தொழிலில் இறங்கிவிடலாம். பெண்களுக்கு மிகவும் ஏற்ற தொழில் இது! மணிக்கணக்கில் உழைக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. காலையில் இரண்டு மணி நேரம், மாலையில் இரண்டு மணி நேரம் என்று ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் உழைத்தால் போதும், ஒருவர் மாதத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதிக்கலாம்” என்றார்.
”மீன் வளர்ப்பு பற்றி ஒன்றுமே தெரியாதவர்கள் இந்தத் தொழிலில் இறங்கினால் கஷ்டப்பட வேண்டியிருக்குமோ?” என்று அவரிடம் கேட்டோம்.
”பயந்து நடுங்குகிற அளவுக்கு இது கடினமானதல்ல. சில நாட்களிலேயே இந்தத் தொழிலைக் கற்றுக் கொள்ளலாம். வண்ண மீன்களை வளர்ப்பது எப்படி என்கிற பயிற்சி வகுப்பை நாங்களே அடிக்கடி நடத்துகிறோம். இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து, கற்றுக்கொண்டு அக்கறையோடு இந்தத் தொழிலைச் செய்தால் நிச்சயம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம்.
தமிழ்நாட்டில் எந்தப் பகுதியை எடுத்துக் கொண்டாலும் வண்ண மீன்கள் வளர்க்கத் தேவையான சீதோஷ்ண நிலையே உள்ளது. வண்ண மீன்களில் ஆயிரத்துக்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன. வெளிநாடுகளைச் சேர்ந்த இந்த மீன்கள் கடந்த 50 ஆண்டுகளில் ஏறக்குறைய நம் நாட்டு மீன்களாக மாறிவிட்டன. மீன்களின் நிறம் நன்றாக இருக்க வேண்டுமெனில் நிறைய சூரிய ஒளி வேண்டும். இயற்கையிலேயே இது நமக்கு அதிகமாக இருக்கிறது.
அடுத்து நல்ல தண்ணீர் வசதி. பூமியிலிருந்து எடுக்கப்படும் நல்ல தண்ணீரைக் கொண்டு வண்ண மீன்களை வளர்க்கலாம். வண்ண மீன்களை வளர்ப்பதாக இருந்தால் நீங்கள் மீன் வளர்க்க நினைக்கும் இடத்தில் கிடைக்கும் தண்ணீரை எங்களிடம் கொடுத்தாலே, அதில் உள்ள அமிலத்தன்மை, காரத்தன்மை பற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்துச் சொல்லிவிடுவோம். தண்ணீரின் தன்மைக்கேற்ப என்ன மாதிரியான மீன்களை வளர்க்கலாம் என்பதையும் நாங்கள் சொல்வோம்” என்றார்.
”இது மிக எளிமையானது. சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் கிணற்று உறையினால் தொட்டிகளைக் கட்டி, மீன்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிடலாம். மீன்களுக்குத் தேவையான உணவை எப்படித் தயார் செய்வது என்பது குறித்தும் நாங்களே கற்றுத் தருகிறோம். மீன்களுக்குச் சில வகையான நோய்கள் வரும். அப்படி வந்தால் அதை எப்படி குணப்படுத்துவது என்பது பற்றியும் சொல்லித் தருகிறோம்” என்றவர், அடுத்து முக்கியமான பிரச்னையான விற்பனை பற்றிச் சொன்னார்.
”மீன்களை வளர்த்தபிறகு எங்கே போய் விற்பது என்கிற கவலையும் வேண்டாம். நீங்கள் சென்னையில் இருக்கும்பட்சத்தில் வண்ண மீன்களை வாங்குவதற்காகவே கொளத்தூரில் பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவர்களே வாங்கிக்கொள்வார்கள். இல்லையெனில், வண்ண மீன்களை விற்பனை கடைகளிடம் கொடுத்துவிடலாம்” என்றார் அவர்.
வண்ண மீன்களை வளர்த்தால் நல்ல வருமானமுண்டு என்பது ஒரு பக்கமிருக்க, இந்தத் தொழிலை இன்னும் வளர்க்க மத்திய அரசாங்கம் பல உதவிகளைச் செய்து வருகிறது. அதில் முக்கியமான விஷயம் மானியம். வண்ண மீன்களை வளர்ப்பவர்களுக்கு மானியம் உள்பட பல விதமான உதவிகளைச் செய்வதற்காகவே ‘கடல்சார் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகம்’ என்கிற ஓர் அமைப்பை மத்திய அரசாங்கம் அமைத்திருக்கிறது. அரசின் மானியத்தோடு வண்ண மீன்களை வளர்க்க நினைக்கிறவர்கள் இந்த நிறுவனத்தோடு தொடர்பு கொள்வது அவசியம். இந்த நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சதீஷ் அதுபற்றி விளக்கினார்.
”கடல்சார் பொருள் ஏற்றுமதி வளர்ச்சிக் கழகத்தின் அலுவலகம் தமிழ்நாட்டில் சென்னையிலும் தூத்துக்குடியிலும் இருக்கிறது. இரண்டு இடங்களில் எங்கு வேண்டுமானாலும் தொடர்புகொள்ளலாம். நாங்கள் மூன்று நிலைகளில் வண்ண மீன்கள் வளர்ப்புக்கான மானியத்தைக் கொடுக்கிறோம். முதல் நிலை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கானது. மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் வண்ண மீன் வளர்க்க நினைக்கும் ஒருவருக்கு 1.5 சென்ட் நிலம் இருந்தால் போதும். இரண்டாவது நிலையில் இருப்பவர்களுக்கு 5 சென்ட் நிலமும் மூன்றாவது நிலையில் இருப்பவர்களுக்கு 10 சென்ட் நிலமும் இருக்க வேண்டும்.
வண்ண மீன்களை வளர்ப்பவர்களுக்கு 50% மானியம் கொடுக்கிறோம். முதல் நிலையில் இருப்பவர்களுக்கு 75 ஆயிரமும் இரண்டாம் நிலையில் இருப்பவர்களுக்கு 2 லட்சமும், மூன்றாம் நிலையில் இருப்பவர்களுக்கு 7.5 லட்சமும் மானியமாகக் கொடுக்கிறோம். இந்த மானியத்தை மீன் வளர்ப்பவர்களிடம் நாங்கள் முதலிலேயே கொடுக்க மாட்டோம்… நேரடியாகவும் தரமாட்டோம். வங்கியில் வாங்கிய கடனை அடைக்கும் முகமாக அவர்களிடம்தான் பணத்தைக் கொடுப்போம்” என்றார் அவர்.
வண்ண மீன்களை தமிழகத்தின் பல பகுதிகளில் சிறிய அளவில் வளர்த்து வந்தாலும், சென்னையில் உள்ள கொளத்தூர்தான் பெருமளவில் உற்பத்தி செய்யும் தலைமைக் கேந்திரமாக இருக்கிறது. கொளத்தூரைச் சுற்றி விநாயகபுரம், லட்சுமிபுரம், காவங்கரை, பட்மேடு என பல இடங்களில் வண்ண மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இவர்கள் ‘தமிழ்நாடு வண்ண மீன் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலச் சங்கம்’ என்கிற ஓர் அமைப்பையும் தொடங்கி இருக்கிறார்கள். இந்த அமைப்பின் தலைவர் ஆர்.ராஜராஜனைச் சந்தித்தோம்.
”நிறைய வளர்ச்சி உடைய இந்தத் தொழிலுக்கு அரசாங்கத்தின் சரியான கவனிப்பு இல்லாததால் வளராமலே இருக்கிறது. எங்களுக்குத் தரப்படும் மின்சாரத்துக்கு கமர்ஷியல் கேட்டகிரியில் கட்டணம் வசூலிக்கிறது மின் வாரியம். கிட்டத்தட்ட 7 ரூபாய்க்கு மேல் மின்சாரம் கட்டுவதால் எங்களுக்குக் கிடைக்கும் கொஞ்சநஞ்ச லாபம் கரன்ட் பில் கட்டுவதற்கே சரியாகப் போய்விடுகிறது. சிறுதொழிலுக்கு விதிக்கப்படும் கட்டணமே எங்களிடம் மின் வாரியம் வசூலிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்றார் அவர்.
இந்தத் தொழிலில் இருப்பவர்கள் குறையாக சுட்டிக் காட்டும் விஷயங்கள் சில ஒருபக்கம் இருந்தாலும், வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு நிச்சயமாக வண்ணமீன் வளமான வாழ்க்கையைக் கொடுக்கும்!
0 comments:
Post a Comment