மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதியுடைய இரு பொறை நிலம் உகந்தது. மண்ணின் கார அமிலத்தன்மை 6.6-7.0 வரை இருத்தல்வேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் மழையளவு வருடத்திற்கு 150 செ.மீ உள்ள அனைத்து இடங்களிலும் பயிரிடலாம். கோகோ பயிர் நன்கு வளர குளிர்ந்த தட்பவெப்பநிலையும், நிழலும் இருத்தல் அவசியம். தென்னை மற்றும் பாக்குத் தோப்புகளில் ஊடுபயிராக வளர்க்க மிகவும் ஏற்றது.
பருவம் : ஜுன் - ஜுலை மற்றும் செப்டம்பர் - அக்டோபர்
விதையும் விதைப்பும்
பயிர்ப்பெருக்கம் : கோகோ செடியை விதைகளிலிருந்த இனப்பெருக்கம் செய்யலாம். நன்கு பழுத்த பழங்களிலிருந்து விதைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து கம்போஸ்ட், மேல்மண், தோட்டத்து மண் கலந்த நிரப்பிய பாலித்தீன் பைகளில் ஊன்றவேண்டும். பிறகு பாலித்தீன் பைகளை நிழற்பாங்கான இடத்தில் வைத்துப் பராமரிக்கவேண்டும். நாற்றுக்கள் 6 மாத வயது அடைந்தவுடன் நடுவதற்குத் தயாராகிவிடும்.
நடவு : தோட்டங்களில் 3 x 3 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீள, ஆழ, அகலமுள்ள குழிகளைத் தோண்டி நாற்றுக்களை நடவேண்டும். நட்ட செடிகளுக்கு தற்காலிகமாக நிழல் அளித்துப் பாதுகாக்கவேண்டும். பசுந்தழை, இலைமக்கு கொண்டு நிலப்போர்வை அமைத்து மண் ஈரம் காக்கவேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் ஒரு முறையும் பின்பு நிலத்தின் ஈரத்திற்கு ஏற்ப நீர்ப்பாய்ச்சவேண்டும். கோடைக்காலத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
பின்செய்நேர்த்தி : தேவைப்படும் போது இலேசாகக் கொத்தி களை எடுக்கவேண்டும். நோயுற்ற, குறுக்காக வளர்ந்த மற்றும் காய்ந்த கிளைகளை அவ்வப்போது வெட்டிவிடவேண்டும். இளம் செடிகளுக்கு தற்காலிகமாக நிழல் கொடுக்க வாழை போன்ற மரங்களை நட்டு நிழல் ஏற்படுத்திக்கொடுக்கலாம். நிரந்தரமாக நிழல்தர பலா, சில்வர் ஓக் போன்ற மரங்களைப் பயிரிடலாம்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
அறுவடை
கோகோ செடிகள் நட்ட 4 ஆம் ஆண்டில் காய்ப்புழு வரும். ஆனால் மிக நல்ல விளைச்சல் செடிகள் நட்ட 6 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கும் மே - ஜுன் மற்றும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் காய்களை அறுவடை செய்யலாம்.
மகசூல் : ஒரு ஏக்கருக்கு 500 கிலோ உலர்ந்த விதைகள்.
கோகோ பழங்களை பதனப்படுத்துதல்
கோ கோ பழங்களை அறுவடை செய்து உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து நொதிக்க வைக்க அதாவது புளிக்க வைத்து காயப்போட்டு உலர்ந்த விதையாகத் தான் விற்பனைக்குக் கொடுக்க வேண்டும். இப்படி உலரச்செய்வது தான் பதனப்படுத்துதல் ஆகும். முதலில் மரத்தில் இருந்து அறுவடை செய்த பழங்களை நிழலான ஒரு இடத்தில் இரண்டு நாட்கள் குவித்து காற்றோட்டமாக காய வைக்க வேண்டும். இதனால் காயில் அதாவது அறுவடை செய்த பழத்தில் உள்ள நீர்ச்சத்து ஓரளவு குறைந்து விடும். விதைகள் சீராக முதிர்ச்சி பெற்று விடும். கோ கோ பழத்தில் 80 சதம் நீர்ச்சத்தும் 15 சதம் சர்க்கரையும் உள்ளது. இந்த நீர்ச்சத்தை குறைக்கவே முதலில் உலர்த்த வேண்டும். பிறகு பழங்களை உடைத்து உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து நொதிக்க வைக்க வேண்டும். அதாவது புளிக்க வைக்க வேண்டும்.
ஏன் நொதிக்க வேண்டும்?:
கோ கோ விதைகளை மூடியுள்ள பிசுபிசுப்பான வெள்ளை நிறமான கூழ் போன்ற சதையை நீக்க வேண்டும். அடுத்து விதையில் இருக்கும் முளைப்பைக் கொன்று விட வேண்டும். பருப்புக்கு மேல் உள்ள விதை உறையை இளக்கமடையச் செய்ய வேண்டும். விதைப்பருப்பில் உள்ள கசப்பு தன்மையை வெகுவாக குறைக்க வேண்டும். சிறந்த நறுமணத்தையும் நல்ல சுவையும் அதிக அளவில் பருப்புக்கு கிடைக்க வேண்டும். எனவே பழத்தில் இருந்து எடுத்த விதைகளை நொதிக்கச் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
கோ கோ பழத்தில் இருந்து விதைகளை எப்படி எடுப்பது? : அறுவடை செய்த பழங்களை 2 நாட்கள் நிழலில் குவியலாக போட்டு உலர்த்திய பின் காய்களை உடைக்க வேண்டும். கெட்டியான மர உருளை மூலம் அல்லது மரச்சுத்தியல் மூலம் பழத்தின் மீது அடித்தால் பழத்தின் ஓடு தேங்காய் உடைபடுவது போல உடைந்து விடும். பழங்களை கத்திக் கொண்டோ அரிவாள் கொண்டே வெட்டி பிளக்கக் கூடாது. இதனால் உள்ளே இருக்கும் பருப்பு சேதம் அடையும். விற்பனைத் தரம் குறைந்து விடும். எனவே காயை மரக்கழியால் உடைப்பது அவசியம். பழத்தை உடைத்துஉள்ளே உள்ள பசையுடன் ஈரமாக உள்ள கோ கோ விதைகளை கைவிரல்களால் வெளியே எடுக்க வேண்டும். இவ்வாறு எடுத்த பிறகு உடைந்த விதைகள், முளை விட்ட விதைகள், முழு வளர்ச்சி பெறாத விதைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி விட வேண்டும். நல்ல விதை மட்டும் நொதிக்க வைக்க வேண்டும்.
எப்படி நொதிக்க வைப்பது?:
பழத்தில் இருந்து எடுத்த ஈர விதைகளை மூங்கில் கூடை அல்லது மரப்பெட்டிகளில் கொட்டி நொதிக்கச் செய்ய வேண்டும். விதைகளை மூங்கில் கூடையில் கொட்டி அதன் மீது வாழை இலையினால் நன்றாக பரப்பி சணல் சாக்கு போட்டு மூட வேண்டும். இந்த கூடையைத் தரைப்பகுதியில் இருந்து கொஞ்சம் உயரத்தில் இருக்குமாறு தரையில் நான்கு பக்கமும் செங்கல் வைத்து அதன் மேல் கூடையை வைக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் வைத்திருக்க வேண்டும். வாழை இலையைக் கொண்டு மூடுவதின் நோக்கம் என்ன என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். வாழை இலைக் கொண்டு ஈரவிதைகள் மூடும் போது அதிக உஷ்ணம் ஏற்பட்டு புழுக்கம் ஏற்படும். இந்த வெப்பத்தில் விதைகள் மேல் மூடி இருக்கும் பிசுபிசுப்பான வெள்ளை நிற தாவர கூழ் உருகி மூங்கில் கூடையின் அடிப்பகுதியில் உள்ள இடைவெளி வழியாக கீழே இறங்கும். மூங்கில் கூடைக்குப் பதில் மரப்பெட்டியிலும் நொதிக்க வைக்கலாம். அதிக அளவு விதைகள் இருக்கும்போது மரப்பெட்டிகளைப் பயன்படுத்தலாம். பெட்டியின் அடிப்பகுதியில் ஓட்டைகள் இருக்க வேண்டும் அல்லது கூழ் வெளியேறும் வகையில் குறிப்பிட்ட இடைவெளி கொடுத்து சட்டங்கள் அடித்த பெட்டி இருக்கலாம். பழங்களை பறித்து இரண்டு நாட்கள் நிழலில் காயப்போட்டு 3வது நாள் ஈரவிதைகளை எடுத்துக்கூடையில் நொதிக்க விடுகிறோம். 5வது நாள் மூடை மேல் உள்ள கோணிப்பையை எடுத்து விட்டு வாழை இலையையும் எடுத்து விட்டு விதைகளை நன்கு கிளறி விட வேண்டும். கிளறி விட்டு முன் போல் வாழை இலையைப் போட்டு சாக்கு கொண்டு மூடி வைக்க வேண்டும். இதே போன்று 7வது நாளும் கிளறி விட வேண்டும். 9வது நாள் விதைகளை வெளியே எடுத்து தார்பாலின் அல்லது சிமின்ட் தரையில் கொட்டி பரப்பி வெயிலில் காய விட வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் காய வேண்டும். அவ்வப்போது கிளறி விட வேண்டும். 14வது நாள் உலர்ந்த விதைகள் தயாராகிவிடும். எடுத்து சுத்தமாக சணல் சாக்கு பையில் போட்டு கட்டி விற்பனைக்கு அனுப்ப வேண்டும். கோ கோ விதைகளைப் பொறுத்தவரை முக்கியமானது தரம். எனவே 14வது நாள் நன்கு உலர்ந்த பின் தட்டையான விதைகள், சுருங்கிய விதைகள் உடைந்த விதைகள், விதைத்துகள்கள், கல், மண் ஆகியவற்றை நீக்கி சுத்தம் செய்த பிறகு தான் சேமிக்க வேண்டும். இது மிகவும் முக்கியம். நல்ல தரமான கோ கோ விதைகளுக்கு சந்தையில் கூடுதல் விலை கிடைக்கும்
0 comments:
Post a Comment