இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, October 25, 2011

பொக்கே தயாரிப்பது எப்படி

பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் முதல் நோயாளிகள் நலம் பெற வாழ்த்துவது வரை பொக்கே முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகள், அலுவலக வரவேற்பறைகளில் மணமும், அழகும் கொண்ட ஜார் மற்றும் கப் பொக்கேவை தினசரி அமைப்பது பேஷனாகி விட்டது. இந்த காரணங்களால் பொக்கே தயாரிப்பது லாபகரமான தொழிலாக உள்ளது என்கிறார் கோவை ஆர்.எஸ்.புரத்தில் ஆர்கிட்ஸ் என்ற பெயரில் பொக்கே ஷாப் நடத்தி வரும் குருபரசிங். அவர் கூறியதாவது:

கண்ணை கவரும் பொக்கேக்களுக்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதை அறிந்து இத்தொழிலில் ஈடுபட முடிவு செய்தேன்.  கோவையில்ள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பொக்கே ஷாப்பில் வேலைக்கு சேர்ந்து தொழில்நுணுக்கங்களை கற்றேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு பொக்கே ஷாப் துவங்கினேன். தொழில் போட்டியை சமாளிக்க புதுமைகளை புகுத்தினேன். மலர்கள், வண்ணங்கள், கலை வேலைப்பாடுகளில் அதிக கவனம் செலுத்தினேன். இதனால் நான் தயாரித்த பொக்கே பலரையும் கவர்ந்தது. வாடிக்கையாளர்களும் பெருகினார்கள்.

சென்னை, பெங்களூர், ஐதராபாத், டெல்லி உள்பட பல நகரங்களில் எனக்கு வாடிக்கையாளர்கள் கிடைத்தனர். அவர்கள் இங்குள்ள உறவினர்கள், நண்பர்களின் வீட்டு விசேஷங்களுக்கு பொக்கே டெலிவரி செய்ய சொல்வார்கள். அதன்படி டெலிவரி செய்வேன். வெளியூர் வாடிக்கையாளர்கள் விருப்பத்துக்கேற்ப நள்ளிரவு 12 மணிக்கு பிறந்தநாள் பொக்கே, திருமண நாளில் மணிக்கொரு பொக்கே என்று கொடுப்போம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவில் உள்ள பெரு நகரங்களுக்கு பொக்கே டெலிவரி செய்யவும் ஆர்டர்கள் குவிந்தது.

அங்குள்ள பொக்கே ஷாப்களுடன் ஒப்பந்தம் போட்டு டெலிவரி செய்கிறோம். சிங்கிள் ரோஸ் பொக்கே செய்ய ஒரு நிமிடம், சார்ட், பஞ்ச், கூடை பொக்கே செய்ய அதிகபட்சம் 10 நிமிடம் போதும். குறித்த நேரத்தில் டெலிவரி செய்தால் ஆர்டர்கள் குவியும். பொக்கே செய்ய பலருக்கு கட்டண அடிப்படையில் கற்றுத் தருகிறேன்.

தயாரிக்கும் முறை!

சார்ட் பொக்கே: சார்ட் பேப்பரை ஒன்றரை அடி நீளம், ஒரு அடி அகலத்தில் வெட்டிக் கொள்ள வேண்டும். கீழ்பகுதி முனை இரண்டையும் வளைத்து, இணைத்து ஸ்டேப்ளர் போட வேண்டும். கீழ் பகுதியில் கைப்பிடி அமைக்க வேண்டும். அதற்கு சார்ட் பேப்பரை உருளை வடிவமாக தயாரித்து இணைக்க வேண்டும். சார்ட் பேப்பருக்குள் சைப்ரஸ் இலைகளை பரப்பி அதன் மேல் ஜெர்புரா, ரோஸ், கிளாட் லில்லி ஆகிய மலர்களை எடுப்பாக தெரியும் வகையில் அழகாக சொருக வேண்டும். பூக்கள் மேல் தண்ணீரை ஸ்பிரே செய்து, சலபன் பேப்பரால் மூடி, ஓரங்களில் ஸ்டேப்ளர் போட்டால் சார்ட் பொக்கே ரெடி. சார்ட் பேப்பர் மேல் சில்வர் பாயில் பேப்பரை சுற்றினால், வெள்ளியை போல் தகதகவென மின்னும்.

பஞ்ச் பொக்கே: சார்ட் பொக்கேயில் பூக்களை அடுக்க, காம்புகளின் முக்கால் பகுதி ஒடிக்கப்படும். பஞ்ச் பொக்கேயில் சைப்ரஸ் இலைகள் மற்றும் கார்னேஷன், ஏசியாடிக் லில்லி, ஓரியன்ட் லில்லி ஆகிய பூக்களை, அதன் காம்புகளை நீளமாக இருக்குமாறு ஒருசேர இணைத்து கீழ் பகுதியில் ரப்பர் பாண்ட் போட்டு, வாட்டர் ஸ்ப்ரே செய்து, சலபன் பேப்பரை சுற்றி, கீழ் பகுதியில் ரிப்பன் முடிச்சு போட்டால் பஞ்ச் பொக்கே.

கூடை பொக்கே: மூங்கில் குச்சிகளால் பின்னப்பட்ட சிறு கூடையின் உள்ளே புளோரல் போம் எனப்படும் நீர் உறிஞ்சி வைத்து பூக்களின் காம்புகளை சொருக பயன்படுத்தும், சதுர வடிவிலான செயற்கை மண் கட்டியை வைக்க வேண்டும். புளோரல் போம் வெளியே தெரியாத வகையில் அதில் சைப்ரஸ் இலைகளையும், பேர்ட் ஆப் பாரடைஸ், ஆந்தூரியம், ஓரியன்டல் லில்லி ஆகிய மலர்களையும் காம்போடு சொருகி, நீர் தெளித்து, சலபன் பேப்பரை சுற்றினால் கூடை பொக்கே. வாடிக்கையாளர்கள் சலபன் பேப்பரை அகற்றி வீடு, அலுவலகத்தின் டேபிள், வரவேற்பறை ஆகியவற்றில் வைத்து அழகு பார்ப்பார்கள்.

கிடைக்கும் இடங்கள்

ஜெர்புரா, கார்னேஷன், ஏசியாடிக் லில்லி, பேர்ட் ஆப் பாரடைஸ், ஓரியன்டல் லில்லி போன்றவை ஊட்டியிலும், ரோஸ், கிளாட் லில்லி பெங்களூரிலும், ஓரியன்ட் லில்லி, வெள்ளை நிற லில்லி, வெள்ளை நிற டியூப் ரோஸ், ஒயிட் ஏசியாடிக் லில்லி, ஆர்கிட் ஆகியவை தாய்லாந்திலும், ஆந்தூரியம், ஹைபிரிட் கிரைசாந்தமம் ஏற்காட்டிலும், எவர்கிரீன் இலை கொச்சியிலும், சைப்ரஸ் இலை ஊட்டி, பெங்களூரிலும் விளைகிறது. புளோரல் ஃபோம் சைனா கொச்சியில் உற்பத்தியாகிறது.

நவீன கூடை சீனாவிலும், சாதாரண மூங்கில் கூடை உள்ளூர் பூக்கடைகளிலும் கிடைக்கிறது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து பூக்கள், இலைகளை நேரடியாக இறக்குமதி செய்தால் விலை குறைவு. இங்குள்ள மொத்த பூ விற்பனை நிலையங்களிலும் அவை கிடைக்கின்றன. புதிதாக தொழில் துவங்குபவர்கள் மொத்த பூ விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி தொழில் செய்யலாம். 10 பூக்கள் கொண்ட ஒரு ஸ்டிக் என்ற கணக்கில் விற்கிறார்கள். டியூப் ரோஸ் டிசம்பரில் மட்டும் கிடைக்கும். மற்ற பூக்கள் எல்லா காலங்களிலும் கிடைக்கும்.

பராமரிப்பது எப்படி?

பொக்கேயில் பயன்படுத்தும் பூக்களின் காம்புகள் குறைந்தபட்சம் 35 இஞ்ச் முதல் 50 இஞ்ச் வரை இருக்கும். அவற்றின் காம்புகள் தண்ணீரில் 7 இஞ்ச் மூழ்கியிருக்குமாறு வைக்க வேண்டும். தினமும் பூக்களின் காம்புகளை அரை இஞ்ச் வெட்டி, தண்ணீருக்குள் வைக்க வேண்டும். இவ்வாறு பராமரித்தால் பொக்கேயை நீண்ட நாள் பயன்படுத்தலாம்.

சந்தை வாய்ப்பு 

சிறு நகரங்களில்கூட பிறந்த நாள், திருமண நாட்களில் பரிசு பொருட்கள் கொடுப்பதற்கு பதில் பொக்கே வழங்குகின்றனர். நோயாளிகளை நலம் விசாரிக்க செல்லும்போது, மேல்தட்டு மக்கள் பொக்கே வாங்கி செல்கிறார்கள். வரவேற்பு விழாக்களின் போதும் பொக்கேக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பொக்கே பேஷன் அதிகரித்து வருவதால் சந்தை வாய்ப்பு நிரந்தரமாக உள்ளது. புதுமைகளை புகுத்தி வித்தியாசம் காட்டினால் இந்த தொழிலில் ஜொலிக்கலாம்.

முதலீடு 

குறைந்தபட்சம் 10க்கு 20 அடி நீள அறை, விதவிதமான பூக்களை அடுக்க பக்கெட்கள், பக்கெட் வைப்பதற்கான படிக்கட்டு ஸ்டாண்ட், 2 டேபிள், பூக்களின் காம்புகளை வெட்டும் பிளவர் கட்டர், பூ வியாபாரிகளுக்கு அட்வான்ஸ். பொக்கே தயாரிக்க தேவைப்படும் பூக்கள் கொள்முதல், பூக்களை பராமரிக்க, பொக்கே தயாரிக்க, டெலிவரி செய்ய ஒரு ஊழியருக்கான மாத சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளும் உள்ளது.

தொழில் துவங்கி பிசினஸ் சூடுபிடிக்க 6 மாதமாகும். அதுவரை உற்பத்தி மற்றும் நிர்வாக செலவுக்கு சிறு நகரங்களில் தொழில் செய்தால் துவக்கத்தில் ரூ.1 லட்சம், பெரு நகரங்களில் உள்ளவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை தேவைப்படும்.

வருவாய் 

சிங்கிள் ரோஸ் பொக்கே ரூ.20, சார்ட் பொக்கே ரூ.100 முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கலாம். பூக்களின் வகைகள், உயரத்த்துக்கு ஏற்ப விலை மாறுபடும். பஞ்ச் பொக்கே ரூ.25 முதல் ரூ.5 ஆயிரம் வரை, கூடை பொக்கே ரூ.300 முதல் ரூ.5 ஆயிரம் வரை. டிரை பிளவர்ஸ் பொக்கே விலை வழக்கமான பொக்கேயைவிட 2 மடங்கு விலை அதிகம். ஒவ்வொரு பொக்கேயிலும் 30 சதவீதம் வரை லாபம் கிடைக்கும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites