சூரிய வெளிச்சம் அதாவது வெயிலின் பயன்கள் ஏராளம். தலைமுடி காய வைக்க, துணி காய வைக்க, பெயிண்ட் காய வைக்க, மின்சாரம் கிடைக்க, தாவரங்கள் ஸ்டார்ச் தயாரிக்க, நெல் மற்றும் தானியங்களை காய வைக்க, உலர்த்த, அதிகமாக உள்ள தண்ணீர் வற்ற, உப்பளத்தில் உப்பு தயாரிக்க, பூக்கள் மலர மற்றும் நேரத்தைக் கணக்கிட இப்படிப்பட்ட விஷயங்களுக்கு மட்டும் தான் சூரிய ஒளி பயன்படுகிறது என்று நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நம் உடலுக்கு அன்றாடம் தேவைப்படும் 90 சதவீத `வைட்டமின் டி' சத்து சூரிய ஒளி நம் உடலின் மீது படுவதால் தான் கிடைக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. மனிதர்கள் எப்பொழுதுமே வெயிலில் அதிக நேரம் நிற்க விரும்புவதில்லை. இது காலங்காலமாக உள்ளது தான். `வெயிலில் போனால் கறுத்துப் போய்விடுவாய்` என்று கூறி வெயிலில் வெளியே செல்ல அனுமதிப்பதில்லை.
விவசாயிகளும், தினக்கூலி வேலை செய்பவர்களும் வெயிலில் தான் இருந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. இவர்களைத் தவிர மற்ற எல்லாருமே வெயிலை விட்டு ஒதுங்கியே வாழ விரும்புகிறார்கள். அதனால்தான் சுமார் 10 கோடி மக்கள் உலகம் முழுவதும் `வைட்டமின் டி` சத்து குறைவுள்ளவர்களாக இருக்கிறார்கள்.
பூமியில் உள்ள அனைத்து சக்திகளும் இயங்குவதற்கு மூலகாரணமே சூரியன் தான். சூரிய ஒளி மட்டும் பூமிக்கு கிடைக்காவிட்டால் எந்த உயிரினமும் பூமியில் வாழ முடியாது. சூரியனிலிருந்து பூமி மீது விழும் சூரிய ஒளியில் அதாவது வெயிலில் நமக்கு எந்தவித வித்தியாசமும் தெரிவதில்லை.
வெயில் அதிகமாக இருக்கிறது, வெயில் குறைவாக இருக்கிறது என்று மட்டும்தான் சொல்வோம். சூரியனிலிருந்து வரும் சூரிய ஒளிக்கதிர்கள். பல விதமான மின்காந்த கதிர்களாகத்தான் (எலக்ட்ரோ மேக்னெடிக் ரேடியேசன்) பூமியின் மீது வந்து படுகிறது. இந்த மின்காந்தக் கதிர்கள் அவைகளின் வீரியத்திற்கேற்ப அவைகளின் சக்திக்கேற்ப பலவிதமாக பிரிக்கப்படுகின்றன.
அதிக வெயிலை, வெயிலின் கடுமையைச் சுட்டெரிக்கும் சூரியன் என்று தான் நாம் சொல்வோம். அந்த சுட்டெரிக்கும் சூரியனிலிருந்து வெளிவரும் ஒளிக்கதிர்கள் 1). எக்ஸ்ரே கதிர்கள், 2). அல்ட்ரா வயலெட் சி, பி, ஏ கதிர்கள், 3). இன்பிராரெட் கதிர்கள் இவை மூன்றும் நம் கண்களுக்குத் தெரியாது. 4.). நம் கண்ணுக்குத் தெரியக்கூடிய வெயிலும் சூரிய ஒளிக்கதிர் தான்.
ஆக சூரிய கதிர்கள் 4 வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பூமியைத் தாக்கும் அல்ட்ரா வயலெட் கதிர்களின் வீச்சு விண்வெளியிலுள்ள வாயுக்களாலும், மாசு படலத்தினாலும், மற்ற தடுப்பு சக்திகளினாலும் தடுக்கப்படாவிட்டால் அது பூமிக்கு வந்து சேரும்போது மனிதர்களின் சருமத்தை மிகவும் பாதிக்கும்.
இதைத்தான் நாம் `சன் பர்ன்` அதாவது வெயில் சுட்டெரிக்கிறது என்று சொல்வோம். அதேபோல மனிதர்களின் தோலிலுள்ள பிக் மென்ட்சை (மனிதன் கறுப்பா, சிவப்பா என்று காட்ட உதவுவது இதுதான்) பாதித்து தோலின் இயற்கையான நிறத்தை மாற்றி விடும். நான் ஏற்கனவே சொல்லியபடி சூரிய ஒளிக்கதிர்களிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி' கதிர்கள் தான் ஓசோன் படலத்தை உண்டாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இதே கதிர்கள்தான் உடலில் `வைட்டமின் டி` உருவாகவும் மிக மிக உதவியாக இருக்கிறது. பத்து சதவீதம் ஓசோன் மண்டலம் குறைந்தால் சுமார் இருபத்தைந்து சதவீதம் சரும புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தூரத்தில் சூரியன் இருக்கிறது. இத்தனை கோடி கிலோ மீட்டரை நம்மால் நினைத்துப் பார்க்கக்கூட முடியாது.
அதை விட்டு விடுங்கள். அவ்வளவு தூரத்திலிருந்து வரும் சூரியனின் வெப்பத்தை நம்மால் தாங்க முடியவில்லை. சூரிய ஒளியினால் நம் உடலுக்கு நன்மையும் இருக்கிறது. தீமையும் இருக்கிறது. சூரிய ஒளியின் மூலம் நமது உடலுக்கு `வைட்டமின் டி` கிடைக்கிறது. சூரிய ஒளியிலுள்ள அல்ட்ரா வயலெட் `பி` கதிர்கள் நமது உடலின் மீது படும்போது தோலிலுள்ள கொழுப்பு பொருள் உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு `வைட்டமின் டி` ஆக மாறி உடலுக்குள் செல்கிறது.
உடலில் தோலின் பாகம் எவ்வளவு வெயிலில் படுகிறதோ அவ்வளவு `வைட்டமின் டி' அதிகமாக உருவாகி உடலுக்குள் சேருகிறது. `வைட்டமின் டி' வேண்டுமென்பதற்காக சட்டை-பேண்ட் எல்லாவற்றையும் கழற்றி போட்டுவிட்டு வெயிலில் படுத்து புரள முடியாது. உடம்பில் துணியில்லாமல் வெயிலில் நின்றால் சுமார் 3 ஆயிரத்திலிருந்து சுமார் 20 ஆயிரம் யூனிட் வரை `வைட்டமின் டி` நமது உடலுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது.
சட்டை, பேண்ட்டுடன் என்றால் அதிக வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 நிமிடங்கள் வெயிலில் நின்றாலே போதுமானது. சூரியனையே பார்க்காதவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். எனக்குத் தெரிந்த 84 வயது தொழிலதிபர் ஒருவர் 24 மணி நேரமும் வீட்டுக்குள்ளேயே தான் இருப்பார். வெளியில் வருவதே கிடையாது.
வெளியில் வெயிலா, மழையா என்ன நடக்கிறது என்று கூட தெரியாது. இவர் மட்டுமல்ல இவரைப்போல் நிறைய பேர் வீட்டை விட்டு வெளியில் வராமல் ஏ.சி. ரூமிலேயே வீட்டிலும், ஆபிசிலும் காலத்தை ஓட்டி விடுகிறார்கள். வெயில் படாத இவர்கள் உடலுக்கு, பிறகு எப்படி `வைட்டமின் டி' கிடைக்கும்? இயற்கையான சூரிய ஒளி இலவசமாக எல்லோருக்கும் கிடைக்கிறது என்பதால், பொது மக்கள் இதைப்பற்றி அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை.
மணிக்கணக்கில் வெயிலில் போய் நிற்க வேண்டும் என்பதில்லை. பத்து நிமிடங்கள் நின்றால் கூட போதும். துணியில்லாமல்தான் நிற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தினமும் நாம் போட்டுக் கொள்ளும் துணிகளுடனேயே வெயிலில் நடமாடலாம். கொஞ்சம் முகம், கொஞ்சம் முதுகு, கொஞ்சம் கைகள், கொஞ்சம், கால்கள் இவைகள் மீது மட்டும்தான் சூரியஒளி படும். இது போதும்.
உடம்பு முழுக்க வெயில் பட வேண்டும் என்ற அவசியமில்லை. அதனால்தான் அந்தக் காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை `கொஞ்ச நேரமாவது வெயிலில் போய் விளையாடிவிட்டு வா' என்று சொல்வார்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் `வெயிலிலே போகாதேடா கண்ணா, கறுப்பாயிடுவே' என்கிறார்கள். அதனால் தான் நிறைய குழந்தைகள் `வைட்டமின் டி` சத்து குறைவுடன் இருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment