உயர் குருதியமுக்கம், மாரடைப்பு, பாரிசவாதம் என்பன அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்துகின்ற காரணிகளாக இருக்கின்றன.
இருதயம் எமது உடலிற்குத் தேவையான குருதியை உடல் முழுக்கச் செலுத்துகின்றது. இருதயம் தனக்குத்தேவையான பிராணவாயுவையும், சக்தியையும் இரத்தக் குழாய்களின் மூலம் பெறுகிறது.
இவ் இரத்தக் குழாய்களில் படிப்படியாக கொழுப்பு சிறுவயதிலேயே படிய ஆரம்பித்துவிடும். இவ்வாறு கொழுப்பு படிவதால் இரத்தோட்டம் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ தடைப்படும். இதனால் இருதயம் வேகமாக வேலைசெய்ய வேண்டி இருக்கும் போது அதற்கு மேலதிகமாக தேவைப்படும் பிராண வாயுவும், சக்தியும் கிடையாததால் மார்பு வலி ஏற்படும்.
(படத்தில் இதயவறைச் சுவர், கொழுப்பு படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால் அக்குருதிக்குளாய் மூலம் பிராண வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி முதிலில் பாதிக்கப்படுவதையும் ( Ischemia) பின்னர் அது சேதமாவதையும் (Injury) இறுதியாக இறந்து விடுவதையும் (Infarction) காண்கிறீர்கள்)
கொழுப்பு படிந்த குழாய்களில் குருதி கட்டிபடுவதால் அக்குருதிக்குளாய் மூலம் பிராண வாயுவையும், சக்தியையும் பெறும் பகுதி இறக்கும். இதுவே மாரடைப்பு எனப்படும்.
முழுமையாக அடைப்பு ஏற்படின் திடீர் மரணம் ஏற்படலாம். இதே போல் மூளைக்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டால் பாரிசவாதம் ஏற்படும்.
எமது அனைவரின் குருதியிலும் கொழுப்புகள் காணப்படுகின்றது. இவை குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக ஒரு சிலரின் குருதியில் காணப்படும். இது HYPER LIPIDAEMIA என அழைக்கப்படும்.
இதனைத் தவிர்க்க உங்கள் குருதியிலுள்ள கொழுப்பின் அளவை வருடத்திற்கு ஒரு தடவையேனும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும்.
குருதியில் கொழுப்பு அதிகஅளவில் காணப்படின் உணவில் கீழ் கூறப்படும் மாற்றங்களை ஏற்படுத்துவதாலும், தேக அப்பியாசத்தின் மூலமும் குருதியிலுள்ள கொழுப்பைக் குறைக்கலாம். இரண்டிற்கும் குருதியிலுள்ள கொழுப்பு குறையாவிடின் வில்லைகளைத் தொடர்ந்து பாவித்து இதனைக் குறைக்க வேண்டும்.
நீங்கள் அதிகஅளவு கொழுப்பு எண்ணையை உணவில் சேர்த்தால் அது உங்கள் இரத்தக்குளாய்களில் படிந்து இருதயத்துக்கு இரத்தம் செல்வதைத் தடுக்கும்.
இதனைத் தவிர்க்க
மிகக் குறைந்த அளவு மிருகக் கொழுப்பை உண்ணவும்/ தவிர்க்கவும்.
பொரித்த உணவுகளை உண்பதைக் குறைக்கவும்.
நெய், தேங்காய்ப்பால், CHEESE, BUTTER, MARGARINE, சிவப்பு இறைச்சி, ஊறுகாய், அச்சாறு, முட்டை மஞ்சள் கரு, ஈரல், மூளை ஆகியவற்றை உண்ணபதைக் குறைக்க வேண்டும்.
ஆடைநீக்கிய பால்மா (NON FAT) பாவியுங்கள்.
மீன் தேவையான அளவு உண்ணலாம்.
கூடியளவில் நார்த்தன்மையான உணவை உண்ணுங்கள்.
உதாரணம் பழங்கள், இலைக்கறிவகைகள், அவரையினம், கோவா, தானியங்கள்.
கொலஸ்ரோல் படிவு - வீடியோ விளக்கம்
Posted in: மாரடைப்பு
0 comments:
Post a Comment