இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, January 27, 2013

தள்ளிவைத்தனர்... தலைநிமிர்ந்தோம்!


 
கோவை டவுன் ஹாலில் இருக்கும் `தம் பிரியாணி ஸ்டால்` பிரியாணி, கொஞ்சமல்ல ரொம்பவே ஸ்பெஷல். காரணம் அந்தக் கடையின் உரிமையாளர்கள் அனைவரும் திருநங்கைகள்! ஒரு தொழிலை ஆரம்பித்து, வெற்றிபெறுவது ஆண்களுக்கே சவால்நிறைந்ததுதான். ஆனால் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையிலும் தன்னம்பிக்கையோடு சாதித்துக்காட்டியிருக்கிறார்கள் இவர்கள். கடைக்கு வருகிற வாடிக்கையாளர்களை இன்முகத்துடன் வரவேற்று, அவர்கள் உபசரிக்கிற பாங்குக்கே நூறு மார்க் கொடுக்கலாம். இந்தக் கடை தவிர, வீட்டு விசேஷங்களுக்கும் சமைத்துக் கொடுக்கிறார்கள். ஒரு திருமண வீட்டில் மும்மரமாக சமையல் தயாரிப்பில் இருந்த திருநங்கை கனகாவிடம் பேசினோம்...

``எங்க அம்மாதாங்க ரொம்ப நம்பிக்கையோட இந்த சமையல் தொழிலை ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கு பெத்தவங்க கிடையாது. கோவைதான் அம்மாவுக்கு சொந்த ஊர். இப்பவே எங்களைப் பார்த்தா மதிக்க மாட்டேங்கிறாங்க. அப்பலாம் நினைச்சுகூட பார்க்க முடியல. அப்படிபட்ட சூழ்நிலையிலையும் அம்மா வீட்லயும் ஹோட்டலயும் வேலைபார்த்து இன்னைக்கு எங்களையும் ஒரு நல்ல நிலைமைக்கு வச்சிருக்காங்க`` என்று வார்த்தைக்கு வார்த்தை அம்மா புகழ்பாடுகிறார் கனகா. அந்த அம்மா மனோவும் திருநங்கைதான். இவரைப்போன்ற திருநங்கைகளுக்கு அடைக்கலம் தருவதோடு வேலைவாய்ப்பும் தருகிறார் மனோ. பிரியாணிக்குத் தேவையான மசாலாவை வதக்கியபடியே தொடர்ந்தார் கனகா.

``நான் அம்மாகிட்டே வந்தது பதிமூணு வயசுல. எந்த வீட்டுல திருநங்கைகளுக்கு ஆதரவு தர்றாங்க? நான் திருநங்கைன்னு தெரிஞ்சதும் என்னைப் பெத்தவங்க வீட்டைவிட்டு வெளிய அனுப்பிட்டாங்க. அதுக்குப் பிறகு நான் ஒரு ஹோட்டல்லதான் வேலை பார்த்துட்டு இருந்தேன். எங்களைச் சுத்தியிருக்கற சமூகம் எங்களை கேலிப்பொருளாதான் பார்க்குது. ஐந்தறிவு ஜீவன்களுக்குக் கொடுக்கற அங்கீகாரத்தைக்கூட எங்களுக்கு தர்றதில்லை. நாங்க அனுபவிக்கற கஷ்டத்தையெல்லாம் வார்த்தையால சொல்லமுடியாதும்மா. ஒருநாள் நான் வேலை பார்த்துட்டு இருக்கும்போது அம்மா என்னைப் பார்த்தாங்க. என்கிட்டே எதுவுமே விசாரிக்கலை. அவங்களோட என்னைக் கூட்டிட்டு வந்துட்டாங்க. என்னோட சேர்த்து மொத்தம் பதினேழு திருநங்கைகள் அம்மாகூடதான் இருக்கோம். என்னை மாதிரியே என்கூட இருக்கற ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும்மா. எல்லாரும் ஒரே இடத்துக்கு வந்துட்டோமே தவிர, எங்க கஷ்டம் மட்டும் குறையவே இல்லை`` என்றவர், ஆரம்பத்தில் தாங்கள் சந்தித்த வேதனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

``சுத்தியிருக்கறவங்களோட கேலிப்பேச்சுகளோடு வயித்துப்பசியும் எங்களை வாட்டும். ஆனால் அந்த நிலையிலகூட பிச்சை எடுக்கவோ, பாலியல் தொழிலுக்கோ போகக்கூடாது, உழைச்சுதான் வாழணும்னு வைராக்கியத்தோட இருந்தோம். நாங்க குடியிருக்கறதுக்கு வீடு கேட்டாகூட தரமாட்டாங்க. வாரத்துக்கு ஒரு வீடுன்னு இருக்க இடம்தேடியே பலநாள் எங்களுக்குப் போச்சு. நாங்க குடியிருந்த இடங்களில் பக்கத்து வீடுகளில் போய் வேலை கேட்டோம். வீட்டு வேலை, சமையல் வேலை செய்து தர்றோம்னு சொன்னோம். சாதாரணமான பெண்கள் கேட்டாலே வேலை தர அவ்ளோ யோசிப்பாங்க. எங்களுக்கு சொல்லவா வேணும்? ரொம்ப யோசிச்சாங்க. சிலர் கேவலமா பேசினாங்க. ஆனா அந்த நிலையிலும் நாங்க நம்பிக்கையைத் தளரவிடலை. அப்போதான் உழைக்கணும்ங்கற எங்க ஆர்வத்தைப் பார்த்துட்டு நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு பக்கத்துல ஒரு அம்மா அவங்க வீட்டு விசேஷத்துக்கு முதல் முறையா சமைக்கச் சொன்னாங்க. அன்னைக்குத்தான் இருட்டா இருந்த எங்க வாழ்க்கையில சின்னதா ஒரு ஜன்னல் திறந்துச்சு. நாங்கதான் சமைக்கிறோம்னு வந்தவங்களுக்குத் தெரியாது. சாப்பிட்ட எல்லோருமே யார் சமைச்சது? ரொம்ப நல்லாயிருக்குன்னு கேட்டாங்க. நாங்கதான்னு தெரிஞ்சதுமே சிலர் பாராட்டினாங்க.. சிலர் முகம்சுளிச்சாங்க. கோபப்படறவங்க எப்பவுமே நல்ல விஷயங்களைப் பார்க்கறதில்லைனு சொல்லுவங்க. ஆனா நாங்க பாராட்டுகளை மட்டும் எடுத்துக்கிட்டோம், முகம் சுளிக்கறவங்களைப்பத்தி கவலைப்பட எங்களுக்கு நேரமில்லை. நம்பிக்கையோட எங்க பயணத்தைத் தொடர்ந்தோம். நாங்களே ஒவ்வொரு வீடா போய் வாய்ப்பு கேட்க ஆரம்பிச்சோம். எங்களைப் புரிஞ்சுகிட்டவங்க வாய்ப்பு கொடுத்தாங்க. கிடைச்ச வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கிட்டோம். அதுக்கு அப்புறம் எங்க சாப்பாட்டோட சுவையே எங்களுக்கு விசிட்டிங் கார்டா மாறிடுச்சு!`` என்றவரின் முகத்தில் வெற்றியின் பிரதிபலிப்பு.

``பதினைந்து வருஷமா வீட்லதான் கேட்டரிங் செய்தோம். நமக்குனு ஒரு கடை இருந்தா நல்லா இருக்குமேன்னு கலெக்டர் ஆபீசுல மனு கொடுத்தோம். `மகளிர் சுய உதவி காம்ப்ளக்ஸ்`ல எங்களுக்கு ஒரு கடை கொடுத்தாங்க. இப்ப மூணு வருஷமா இந்த `தம் பிரியாணி` கடையை நடத்திக்கிட்டு வர்றோம். வி.ஐ.பி வீட்டு விஷேசம், மில் ஓனர்கள், மினிஸ்டர்கள் வீட்டுக்கும் எங்க பிரியாணிதான். எங்க வாடிக்கையாளர் வட்டத்தைப் பெருக்கறதுக்காக நியூஸ்பேப்பர், லோக்கல் டிவி சேனல்களிலும் விளம்பரம் கொடுத்திருக்கோம். இன்டர்நெட்லகூட எங்களைப்பத்தின தகவல் இருக்கு. வெளியூர்ல இருக்கிறவங்ககூட தெரிஞ்சவங்க மூலமா கேள்விப்பட்டு எங்ககிட்ட ஆர்டர் தர்றாங்க. இத்தனைக்கும் நாங்க ஒரு கப் பிரியாணியை ஐம்பது ரூபாய்க்குதான் கொடுக்கிறோம். விலையக் குறைக்கறதுக்காக நாங்க என்னைக்குமே தரத்தைக் குறைச்சது இல்லை. பிரியாணி மட்டுமல்ல, வெரைட்டி ரைஸ், பரோட்டா, முட்டை அயிட்டங்களும் நாங்க செய்து தர்றோம். முதல் இருந்ததுக்கு இப்ப சமூகத்துல எங்களை கொஞ்சம் நல்ல கண்ணோட்டத்தோட பார்க்கறாங்க. எல்லாமே நாம நடந்துகிறதைப் பொறுத்துதாங்க இருக்கு. பத்து பேர் இருக்குற இடத்துல இரண்டு பேர் எங்களை கிண்டல் செய்தாலும் மீதி இருக்கிற எட்டுபேர் எங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க`` என்கிறார் கனகா. வெளியூர்களுக்கு சென்று சமையல் வேலை செய்யும்போது சட்டையும் கைலியும் அணிகிறார்கள். தலையில் துண்டு கட்டியிருக்கிறார்கள். மற்றபடி இவர்களது விசேஷங்களில் புடவை அணிகிறார்கள். தங்கள் வெற்றிக்கதையை சொல்கிறே வேளையில் மற்ற திருநங்கைகளைப் பற்றியும் வருத்தத்துடன் பேசினார் கனகா.

``எங்களுக்குள்ளே உழைக்கணும், முன்னேறணும்ங்கற முனைப்பு இருந்தது, அதனால ஜெயிச்சோம். ஆனா தொண்ணூறு சதவீத திருநங்கைகள் தவறாதான் பயன்படுத்தப்படுறாங்க. எங்களை மாதிரி பத்து சதவீதம் பேர்தான் தடைகளைத் தாண்டி வர்றாங்க. இந்த பத்து ஒருநாள் நூறாகும்னு ஒரு எதிர்பார்ப்பு இருக்குதுங்க. இப்போ இருக்கிற சூழ்நிலையில் நாங்க மத்தவங்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமா வாழ்ந்து காட்டணும்ங்கறதுதான் எங்க லட்சியம். ஒரு பெரிய ஹோட்டல் ஆரம்பிக்கணும், தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதும் எங்க பிரியாணி பெயர் வாங்கணும்னு கனவு இருக்கு`` என்று கண்களில் நம்பிக்கை ஒளிர கனகா முடிக்க, பிரியாணி தயாராகியிருந்தது. அந்த பிரியாணியைப் போலவே இவர்களது வாழ்க்கையும் மணக்கிறது!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites