திருமணம் தாண்டிய உறவுகள்
- என்ன காரணம்...
எப்படித் தடுப்பது..?
- என்ன காரணம்...
எப்படித் தடுப்பது..?
ஜெயா என்ற தோழியின் இந்தக் கடிதம் ஒரு சாம்பிள்...
தோழமை என்பது தோள்கொடுத்து உதவுவது. ஆனால் நட்பு பாராட்டி நெருங்கிய பெண்ணால் சிதைந்துபோன குடும்பத்து வேதனையை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இதை எழுதுகிறேன்... நாங்கள் குடியிருக்கும் காம்பவுண்டில் வசித்த அந்தக் குடும்பம், அன்பால் கட்டப்பட்டது! அந்தக் குடும்பத்தலைவனுடன் அலுவலக ரீதியாக தொடர்பு கொண்ட ஒரு பெண், நாளடைவில் அவருக்கு நெருக்கமானவராகவும் ஆகிவிட்டாள். அதுவரை மனைவி, குடும்பம் என்று இருந்தவர், அந்தப் புது வரவால் தலைகீழாக மாறிவிட்டார். அந்தப் பெண் சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு. நாளடைவில் கணவன் & மனைவிக்கு இடையே விரிசல் அதிகமானது.
அப்போதும் அந்தப் பெண், �மற்றவர்கள் தவறாகப் பேசுகிறார்கள் என்பதற்காக நாங்கள் ஏன் எங்கள் நட்பை விட்டுத்தர வேண்டும்?� என்று பேசினாளே தவிர, அந்தக் குடும்பத்தைவிட்டு ஒதுங்கிவிடவில்லை. அழகான குடும்பம், எங்கள் கண் எதிரிலேயே சின்னாபின்னமாகிவிட்டது. இத்தனைக்குப் பிறகும் அவர்களின் நட்பு தொடர்வதுதான் வேதனை!�� என்று வருத்தத்துடன் முடிந்திருந்தது அந்தக் கடிதம்.
* நம்மிடம் தொலைபேசியில் பேசிய சென்னை தோழி ஒருவர் பகிர்ந்துகொண்ட விஷயமும் பகீர் ரகம்.
��என் பையனை பள்ளியில் இருந்து அழைத்துவரும்போது அறிமுகமானவர் அந்தப்பெண். அவரது மகனும் என் மகனின் வகுப்புதான் என்பதால் அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். குழந்தைகள் தாண்டி, குடும்பம் குறித்தும் பேசுவோம். அவருடையது காதல் திருமணம். பாசமான கணவன், ஒரு மகன், ஒரு மகள் என்று அழகான குடும்பம்! கணவருக்கு தன் தொழிலை கவனித்துக்கொள்ளவே நேரம் போதவில்லை என்பதால் குழந்தைகளின் முழுப்பொறுப்பும் அந்தப் பெண்ணுடையதுதான். தனது மகனை ஒரு ஸ்போர்ட்ஸ் அகடமியில் சேர்த்துவிட்டார். மகனுடன் காலையில் அவரும் சீக்கிரம் கிளம்பி அகடமிக்குப் போய்விடுவார். பயிற்சி முடிகிற வரை காத்திருப்பார். அங்கிருந்து அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் செல்வார்.
நாட்கள் செல்லச் செல்ல தன் மகனுக்கு பயிற்சி கொடுக்கும் மாஸ்டரிடம் அவருக்கு நட்பு ஏற்பட்டது. தினமும் அந்த மாஸ்டருக்கு குளிர்பானம், சிற்றுண்டி என எடுத்துச் செல்லும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் நடுவே நெருக்கம் அதிகமாகிவிட, குழந்தைகளை நண்பர்கள் வீட்டில் விட்டுவிட்டு இருவரும் வெளியே செல்ல ஆரம்பித்தனர். அந்த மாஸ்டர் இல்லாமல் தன்னால் வாழவே முடியாது என்று இவர் முடிவு செய்தபோது, கணவருக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. தன்னை யாரும் தப்பு சொல்லக்கூடாது என்பதற்காக தன் கணவரைப் பற்றி மற்றவர்களிடம் தரக்குறைவாக சொல்ல ஆரம்பித்தார்.
இப்போது தன் மனைவியை டைவர்ஸ் செய்துவிட்டு, தன் மகனை அழைத்துக்கொண்டு இவருடன் புதுவாழ்க்கை தொடங்கத் தீர்மானித்துவிட்டாராம் மாஸ்டர். ஆனால் இவரது இரண்டு குழந்தைகளின் கதி? அதை நினைத்து தற்போது குழப்பத்தில் இருந்தாலும் அந்த மாஸ்டரைத் தவிர்த்து தனக்கு வேறு வாழ்க்கை இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். நாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்பதே தெரியவில்லை�� என்று வருத்தம் மேலிட முடித்தார் அந்த வாசகி.
ஊரின் எங்கோ ஒரு மூலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் கேள்விப்பட்ட சம்பவங்கள், இப்போது நமக்கு மிக அருகில் நடக்கத் துவங்கியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. திருமணம் தாண்டிய இந்த வகை உறவுகள் அதிகரிப்பதற்கு என்ன காரணம்? இதுபோன்ற உறவுச்சிக்கல்களை எப்படிக் களைவது என்ற கேள்வியுடன் சென்னையைச் சேர்ந்த உளவியல் ஆலோசகர் பிருந்தா ஜெயராமனைச் சந்தித்தோம்.
��இன்றைய சூழலில் நிச்சயம் அலசப்பட வேண்டிய விஷயம் இது. காதல் திருமணமோ, பெற்றோர் பார்த்து நடத்திவைக்கும் திருமணமோ... எதுவாக இருந்தாலும் கணவன் & மனைவி உறவை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை பெரும்பாலும் யாரும் செய்வதில்லை. திருமணத்துக்குப் பிறகு இருவருமே மற்றவரை �டேக்கன் ஃபார் கிராண்டட்� என நினைத்துவிடுகிறார்கள். இவர் என் கணவர்/மனைவிதானே என்கிற அசட்டை இயல்பாகவே வந்துவிடுகிறது. குழந்தை பிறந்ததும் நிலைமை இன்னும் மோசம். இருவரும் அப்பா & அம்மாவாக இருப்பார்களே ஒழிய, கணவன் & மனைவியாக இருக்கிற நேரம் குறைவுதான். தங்களின் பிறந்த நாள், திருமண நாள் என்று சில தங்களுக்கேயான பிரத்யேக தினங்களைக்கூட இருவரும் தனிமையில் கழிக்க முற்படுவது இல்லை.
திருமணத்துக்குப் பிறகு மாமியார், மாமனார், நாத்தனார் என்று புது உறவுகளின் அறிமுகம், அவர்களுடனான சிக்கல் என்று இன்னொரு வகையிலும் பிரச்னை தலைதூக்கும். இவை எல்லாவற்றுக்கும் நடுவில்தான் கணவன் & மனைவிக்குள் இருக்கும் நெருக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டியிருக்கிறது. மேலோட்டமான காரணங்களால் இருவருக்குமே தெரியாமல் இடைவெளி விழும்போது, எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத நபரால் அந்த இடைவெளி நிரப்பப்படுகிறது. கணவன் & மனைவி உறவு வலுவிழக்கும்போது வேறொரு புதிய உறவுக்கு அங்கே வாசல் திறக்கப்படுகிறது.
பொதுவா கணவன் & மனைவிக்குள்ளே இரண்டு முக்கியமான உணர்வுத் தேவைகள் கட்டாயம் இருக்கணும். �எனக்காக நீ� என்கிற பிணைப்புதான் முதல் தேவை.
ஒருவருக்காக இன்னொருவர் ஆத்மார்த்தமா விட்டுக்கொடுக்கறது, அவருக்காக செய்கிற எதையுமே உணர்வுப்பூர்வமா செய்யறது, இன்னொருத்தரோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கறது... இதெல்லாம்தான் அந்த உணர்வுப் பிணைப்பை வலுப்படுத்தும். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டாலே, �நமக்குள்ளே என்ன இருக்கு மனசு விட்டுப் பேசறதுக்கு� என்கிற எண்ணம் ரெண்டு பேருக்குமே வந்துடுது. �ஏன் இல்லை?� என்பதுதான் என் கேள்வி. திருமணமாகி ஐம்பது வருஷமானாலும் கணவன் & மனைவிக்குள்ளே பேசிக்கொள்ள ஆயிரம் விஷயங்கள் இருக்கும். அந்த விஷயங்களை நம்ம வசதிக்கு ஏத்தமாதிரி நாமதான் மறந்துடறோம்.
நீ இல்லைன்னா நான் இல்லை... இதுதான் ரெண்டாவது உணர்வு. நீ என் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை தம்பதிகள் ரெண்டு பேருமே ஒருத்தருக்கு ஒருத்தர் உணர்த்தணும். �நீ இல்லைன்னா என்னால எதையுமே ரசிக்க முடியலை, எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்க முடியலை�ன்னு தெரியப்படுத்தணும். அதுக்காக பக்கம் பக்கமா எழுதி வச்சு வசனம் பேசணும்னு இல்லை. அந்த அன்பையும் புரிந்துகொள்ளுதலையும் செயல்ல வெளிப்படுத்தணும். தன்னோட துணைக்கு எல்லாத்துலயும் முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கிறபோது திருமண உறவுல யாராலயும் எந்தச் சூழலிலும் சிக்கல் வராது. �உன்கிட்டே மறைச்சு சொல்ல என்னிடம் எதுவுமே இல்லை. உன்னைக் கேட்காம எந்த முடிவையும் நான் தன்னிச்சையா எடுக்கறது இல்லை...� இதை ரெண்டு பேருமே உணர்ந்து நடக்கிறபோதுதான் திருமண பந்தம் அதன் முழுமையைப் பெறும்.
திருமண உறவை வலுப்படுத்தறதுல சூழ்நிலைக்கும் முக்கிய பங்கு இருக்குது. இப்போ பெரும்பாலான வீடுகள்ல தனிக்குடித்தனம்தான். அதுலயும் கணவன், மனைவி ரெண்டு பேருமே வேலைக்குப் போறவங்களா இருந்துட்டா, அந்த இடத்துல அன்புக்குப் பஞ்சம் வந்துடுது. ரெண்டு பேருமே வேலையில பிஸியா இருக்கறதால குடும்பத்தோடு சேர்ந்து வெளியே போறதுகூட குறைஞ்சுடுது. பெரும்பாலான வீடுகளில் பண்டிகை நாட்களுக்கான ஷாப்பிங் தவிர இப்படி அனைவருமாக வெளியே செல்லும் வழக்கமே கிடையாது. யாராவது ஒருத்தர் வேலையில மட்டுமே பிஸியாகவும் இன்னொருத்தர் வீடே கதி என்று இருந்தாலும் சிக்கல்தான். �கழுத்தை நெரிக்கிற வேலைப்பளுவுக்கு நடுவில் கொஞ்சிக்கொண்டு இருக்கமுடியுமா?� என்று கேட்கலாம். அந்தக் கொஞ்சல்தான் வேலைப்பளுவில் கனத்துப்போன மனதுக்கு மருந்து என்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். கிடைக்கிற நொடிகளில்கூட அன்பைப் பரிமாறிக்கொள்ளலாம். இப்படி அன்பை உயிர்ப்பிக்கச் செய்யும் விழிப்புணர்வு இருவரில் ஒருவருக்கு இருந்தால்கூட போதும். ஆனால் இருவருமே அதை கவனிப்பதில்லை என்கிறபோதுதான் பிரச்னை தலைதூக்குகிறது.
அந்தக் காலம் போல இல்லை இப்போது. ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை பார்க்கிற இந்தக் காலத்தில் ஆண், பெண் பேசிக்கொள்வதை யாரும் தப்பென்று சொல்லமுடியாது. ஆனால் அதற்கும் ஒரு எல்லையை வரையறுத்துக்கொள்ள வேண்டும். என்னதான் நட்பு என்று நாம் சொல்லிக்கொண்டாலும் ஆண், பெண்ணுக்கிடையே ஈர்ப்பு இருப்பது இயற்கை. அப்படி இருக்கும்போது தங்கள் குடும்ப விவகாரத்தையோ, அந்தரங்கமான விஷயங்களையோ அடுத்தவரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது. கணவன் அல்லது மனைவிக்கிடையே ஏற்படுகிற சிக்கல், காலப்போக்கில் மாறிவிடும். ஆனால் இன்னொருவரிடம் ஆறுதலுக்காக அதைச் சொல்கிறபோதுதான் அந்தச் சிக்கல் உண்மையிலேயே விஸ்வரூபம் எடுக்கிறது. என்னைத் தவிர்த்து இன்னொருவரிடம் அப்படி என்ன பேச்சு என்ற சந்தேகம் வாழ்க்கைத்துணைக்கு ஏற்பட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். �இன்று எங்களுக்குள் தப்பே இல்லை� என்று சொல்லிக்கொண்டு அனைத்து விஷயங்களையும் இன்னொருவரிடம் பகிர்ந்துகொள்கிறபோது நாளடைவில் தப்பு நடக்கக்கூடும். அதன் பிறகு கணவன் அல்லது மனைவி இருவருக்குமே இன்னொருவர் செய்கிற சின்னச்சின்ன செயல்கூட வெறுப்பை ஏற்படுத்தும். அதனால் ஆறுதல் தேடுகிறேன், வேதனையைக் குறைக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத்துணை தவிர்த்த யாரிடமும், அவர்கள் எத்தனை நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்தாலும் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்�� என்று விளக்கமாகவே சொன்னார் பிருந்தா ஜெயராமன்.
திருமண பந்தம் தாண்டிய இன்னொரு உறவில் சிக்கிக் கொள்வதில் இருக்கிற அபாயங்களை வேதனையுடன் சுட்டிக்காட்டுகிற இவர், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகளையும் சொன்னார்...
��இப்படி ஏற்படுகிற தகாத உறவுகளுக்கு இரண்டுவிதமான காரணங்கள் உண்டு. உடல் தேவையை மையமாக வைத்து ஏற்படுகிற முதல் வகை உறவுக்கு ஆயுளும் குறைவு, அதில் இருந்து வெளிவருவதும் சுலபம். மனதை கட்டுப்பாட்டுடன் வைத்துக்கொண்டு, குடும்பத்துடன் அதிக நேரம் செலவழித்தாலே போதும். இதிலிருந்து எளிதில் மீண்டுவிடலாம். ஆனால் புதிய உறவிடம் உணர்வுப்பூர்வமான பந்தம் ஏற்படும்போது, இருவரும் கணவன் & மனைவி போலவே வாழத்தொடங்கிவிடுகிறார்கள். அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்கிற முடிவுக்கும் வந்துவிடுகிறார்கள். அப்போது குடும்பம், குழந்தை இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரிவதில்லை. இதுபோன்ற நேரத்தில் அந்தப் புதிய உறவில் இருக்கிற வாழ்க்கைத்துணையை மிக கவனத்துடன் மீட்டெடுக்க வேண்டும். இருவரும் பார்த்துக் கொள்ளவோ, பேசிக் கொள்ளவோ வாய்ப்பு ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறவர்களாக இருந்தால், வேறு கிளைக்கு மாற்றல் வாங்கிச் செல்லலாம். ஒரே தெருவாகவோ, ஊராகவோ இருந்தால் கூடுமானவரை புதிய இடத்துக்கு குடிபெயர்வது நல்லது. இப்படி ஒருவரையொருவர் பார்க்காமல் இருக்கிறபோது, அவர்களைப் பற்றிய நினைவுகள் மறக்கத் துவங்கி, தங்கள் குடும்பத்தின் மீது கவனம் திரும்பும்.
இதைவிட்டுவிட்டு, �எனக்கு அங்கேதான் மனநிம்மதி� என்று குடும்பத்தைப் பிரிந்து செல்கிற பெரும்பாலானோர் அந்த இன்னொரு உறவிலும் திருப்தியடையாத சம்பவங்கள்தான் அதிகம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல பந்தத்தில் இணையாதவரை அந்த இன்னொரு உறவும் இனிக்கத்தான் செய்யும். சேர்ந்து வாழ்கிறபோதுதான், �இவரிடம் இருக்கிற குறைகளுக்கு, நம் வாழ்க்கைத்துணை எவ்வளவோ மேல்� என்று தோன்றும். அப்போது எல்லாமே கைமீறிப் போயிருக்கும். இதுபோன்ற உறவுகளில் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். நம் அன்பின் அடையாளமான அந்தக் குழந்தைகளை அன்பின் பெயராலேயே வதைப்பது கொடுமை. எனவே கணவன், மனைவி இருவருமே தங்களுக்குள் இருக்கும் அன்பை வற்றவிடாமல் பார்த்துக்கொண்டாலே போதும்... அங்கே பிரிவுக்கோ, வேறொரு உறவுக்கோ இடமில்லை!�� என்று அக்கறையுடன் முடித்தார் பிருந்தா ஜெயராமன்.
இந்த ஆண்டிலாவது இத்தகைய செய்திகள் குறையட்டும்!
இந்த ஆண்டிலாவது இத்தகைய செய்திகள் குறையட்டும்!
0 comments:
Post a Comment