பெரிய படிப்பெல்லாம் ஒண்ணும் படிக்கலை. ஆனா, கைத்தொழில் கத்துக்கிட்டேன் இன்னைக்கு என்னை நம்பி நான் நம்பிக்கையுடன் சொல்கிறார் இருபதெட்டு வயதாகும் கலா.
என்ன தொழில் கத்துக்கிட்டீங்க என்று கேட்டால், " அவரின் பேச்சு வேகத்தோடு ஓட ஆரம்பிக்கிறது தான் கற்றுக்கொண்ட டிரைவிங் தொழிலை நோக்கி... வெறும் ஒன்பதாவது வகுப்பு வரைதாங்க படிச்சேன். அதுக்குபிறகு, வீட்ல படிக்க வைக்க வசதியில்லை. அதன்பின் ஐந்து வருடமா வீட்லதான் இருந்தேன் வீட்டு வேலைகளை மட்டும் செய்துக்கொண்டு, எங்க படிப்பு இல்லாம போச்சு, வேற எதுவுமே நமக்கு தெரியாது, எப்படி வாழ போறோம்னு யோசிச்சுட்டு இருந்தப்ப, ஏதாவது வேலைக்கு போகலாம்ன்னு தோணிச்சு. படிப்புதான் இல்லை தெரிஞ்ச வீட்டு வேலையை வைத்து முதலில் ஹோம் நர்ஸிங் வேலைக்குதான் ட்ரை பண்ணினேன். அப்படி நான் போனப்பதான் என் வாழ்க்கை பாதை(சாலை) வேறு ஒன்றை நோக்கி பயணம் செய்ய ஆரம்பமானது. ஆமாங்க, அனுசந்திரன்கிறவங்க படிக்காத பெண்களுக்கு சுயமா கைத்தொழில் அமைச்சு தருகின்ற டிரெஸ்ட் வச்சு நடத்திகிட்டு இருக்காங்க. அவங்ககிட்டதான் போய் வேலைகேட்டேன். அப்ப அவங்க என்கிட்ட டிரைவிங் தெரியுமான்னு கேட்டாங்க.
அப்பதான் நான் சொன்னேன் எனக்கு ரோடே ஒழுங்கா க்ராஸ் பண்ண தெரியாது அப்புறம் எங்க டிரைவிங் தெரியறது சொன்னவுடனே, அவங்க நீ டிரைவிங் கத்துக்கோன்னு சொல்லி எனக்கு டிரைவிங் கத்துக்கொடுத்தாங்க. என் மேலே எனக்கே நம்பிக்கை இல்லாதபோது அவங்க என்மேல வைத்த நம்பிக்கைதான் எனக்கு பயணத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கு. இருபதே நாளில் கத்துக்கிட்டேன். முதலில் ஆட்டோதான் ஓட்டினேன். சிலபேர் கிண்டல் கூட பண்ணினாங்க. வீட்டுல ரொம்பவே பயந்தாங்க. அப்பாவும் அண்ணனும் ஆட்டோலாம் ஓட்ட வேண்டாம்னு சொல்லி திட்டினாங்க. ஆனா, எங்கம்மாதான் என் பொண்ணு சிறப்பா வருவான்னு நம்பி எனக்கு பக்கபலமா இருந்தாங்க. சின்மயா வித்யாலயா பள்ளியில்தான் ஆட்டோ ஓட்டினேன். குழந்தைகளை பத்திரமா ஏத்தி கொண்டு போய் விடுறது. ரொம்பவே பொறுப்பு நிறைந்த வேலை. அந்த பொறுப்புதான் எனக்கு டிரைவிங்கோட நெளிவு சுளிவுகளைக் கற்றுக்கொடுத்தது. வாழ்க்கைமேல ஒரு பிடிப்பும் வந்ததுன்னும் சொல்லலாம். அதன்பின், அப்பா அண்ணா நம்பி விட்டுட்டாங்க.
ஐந்து வருடமா ஆட்டோ ஓட்டினேன். அப்பவே கார், வேன் எல்லாம் ஓட்டவும் விருப்பமெடுத்து கத்துக்கிட்டேன். லாரி, பஸ் தவிர மற்ற எல்லாவகை வண்டியும் ஓட்டுவேன். அதன்பின், என்னை Banyan organising அமைப்பில் வேலை பார்த்தேன். அங்க என்னோட வேலை ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. அதாவது, ரோட்டோரமா இருக்கிற மனநல பாதிக்கப்பட்டவங்களை கண்டுபிடித்து அவங்கள கொண்டு போய் சேர்க்கணும். நான் வண்டி எடுத்துட்டு கிளம்பி போய் எல்லா இடமும் சுத்துவேன். இதனாலயே எனக்கு சென்னை சிட்டி டிராபிக்கில் எப்படியெல்லாம் ஓட்டலாம்கிற அணுகுமுறை தெரிஞ்சது. மூன்று வருடங்கள் அந்த அமைப்பிலதான் வண்டி ஓட்டிட்டு இருந்தேன். இப்படி ஓடிக்கொண்டே இருந்தவரை... சடன்பிரேக் போட்டு கேட்டோம், திருமணம் பற்றி...
என்னோடது காதல் திருமணம்தான். என்னோட தைரியத்தையும் விடாமுயற்சியையும் பார்த்து நேசித்த வந்த காதல். கடவுளோட அருளால கிடைத்தவர் என் கணவர் அருள். என் அப்பா அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கிதான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆட்டோ, வண்டி ஓட்டுற பொண்ணு குடும்பத்துக்கு ஒத்துவராதுன்னு சொல்லி, அவரோட வீட்ல சம்மதிக்கலை. அதெல்லாம் தாண்டிதான் எங்க கல்யாணம் நடந்தது. அந்த நம்பிக்கையின் அடையாளம்தான் எங்க பையன் சபரீஷ். இன்னைக்குவரைக்கும் அவங்க வீட்ல ஏத்துக்கலை. கல்யாணத்துக்கு பிறகு கொஞ்சநாள்தான் வண்டி ஓட்டினேன். அதன்பின் நான் ஓட்டலை. என் பையன் பிறந்தபிறகுதான் என்ன பண்ணலாம்ன்னு யோசிச்சிட்டு இருந்தப்ப, இதுவரைக்கும் நான் கத்துக்கிட்ட டிரைவிங்க மத்தவங்களுக்கும் சொல்லி தரலாம் முடிவு எடுத்து என் கணவர்கிட்ட சொன்னேன். உன் விருப்பப்படி செய்யுன்னு சொன்னாரு.
அப்பதான் மாருதி கார் இண்டியாவில டிரைவிங் கத்துக்கொடுக்க ஆள் எடுத்துகிட்டு இருந்தாங்க. பொதுவா இதுபோன்ற பெரிய கம்பெனியில மெக்கானிசம் படிச்சவங்களதான் எடுப்பாங்க. ஆனாலும் நம்பிக்கையோடு இண்டர்வியுவில் கலந்துகிட்டேன். நான் கார் ஓட்டினதையும், கத்துக்கொடுத்த விதத்தையும் பார்த்து என்னை செலக்ட் பண்ணினாங்க. அந்த தன்னம்பிக்கை கொடுத்ததுதான் இங்கே இரண்டு வருடங்களாகியும் இன்னைக்கும் நிறையபேர் கலாகிட்டதான் கத்துக்கணும்கிற அளவுக்கு வளர்ந்திருக்கேன். இந்த வளர்ச்சிக்கும் என்னை நம்பி வாழ கத்துக்கொடுத்ததுக்கும் நான் என்னைக்குமே அனுசந்திரன் மேடத்துக்கு நன்றிகடன் பட்டிருக்கிறேன். அதுமட்டுமில்லை, பெண்களுக்கு மட்டுமல்ல நான் ஆண்களுக்கும் டிரைவிங் கத்துக்கொடுக்கிறேன். சமயங்களில், அவங்களே என்கிட்ட கத்துக்கணும்னு கேட்கிறாங்க. அதனால, வேலை அதிகமா இருந்தாலும், எனக்கு சந்தோஷம்தான். ஏன்னா, நம்ம வேலையை பிடிச்சுதான கேட்கிறாங்க. இந்த துறைக்கு வந்து பத்து வருடங்கள் ஆகுதுங்க, அதில எனக்கு ரொம்ப சந்தோஷம் தந்தது. 60 வயது அம்மா ஒருத்தவங்களுக்கு டிரைவிங் கத்துக்கொடுத்ததுதான். இன்னைக்கு அவங்களே தனியா கோயம்பேட்டிலிருந்து தி.நகர் வரை கார் ஓட்டிட்டு போறாங்க.
அந்தளவுக்கு கத்துக்கொடுக்கிறது ரொம்ப பிடிச்சிருக்குஏன்னா,ஒரு குருவுக்கான அங்கீகாரம் கத்துக் கொடுக்கிறதில தான் கிடைக்குது. அதே நேரத்தில், ஒவ்வொரு நாளும் நானும் புது விஷயங்களை கத்துக்கிறேன். அதோடு, காவல்துறை அதிகாரி லத்திகாசரண் அவர்கள்கிட்ட நல்லா டிரைவிங் பண்றதுக்கான சர்டிபிகேட் கூட வாங்கியிருக்கேன். சரி, உங்க இந்த துறையில உங்களோட ஆசை என்ன என்று கேட்டதற்கு... இன்னும் நல்லா கத்துக்கொடுக்கிறேன்னு நல்ல பேர் வாங்கனும். அப்புறம் சொந்தமா ஒரு கார் வாங்கனும்ங்க. இப்பகூட சமீபத்தில் திருவண்ணாமலை வரை குடும்பத்தோடு போனாம். சொந்தக்காரங்ககிட்ட வண்டி வாங்கிட்டு நானேதான் ஓட்டிட்டு போனேன். சீக்கிரமே சொந்தமா கார் வாங்க வாழ்த்துக்கள் கூறியபோது... கூடுதல் தகவல் ஒன்றை சந்தோஷமாய் கூறினார் என் கணவருக்கு கார் ஓட்ட கத்துக்கொடுத்ததே நான்தாங்க. அதுமட்டுமில்லை, பொதுவா கணவன் மனைவி இரண்டுபேருமே ஒரே தொழில் இருந்தாதான் விட்டுக்கொடுக்கிறதும் புரிதலும் இருக்கும்னு சொல்லுவாங்க. ஆனா, அந்த விஷயத்தில நாங்க இருவருமே வேறு வேறு துறைதான். ஆமாங்க, என் கணவர் எல்லோரையும் அழகு படுத்துற வேலையில இருக்கிறார். பியுட்டீசியன் வேலை அவரோடது. அவருக்கு திங்கள்கிழமை தாங்க லீவு அதனால நானும் அன்னைக்கேதான் லீவு எடுத்துப்பேன். ஏன்னா, வேறு வேறு துறையில் வேலை இருந்தாலும் மனசு ஒண்ணுதானங்க.
- லட்சுமி சுந்தரம்
0 comments:
Post a Comment