இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, January 3, 2013

எதுவும் வாங்கலாம்! எல்லாம் வாங்கலாம்!



புத்தகம் முதல் புத்தர் சிலை வரை, ஃபாரின் சென்ட் முதல் பனியன், ஜட்டி வரை அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்கவேண்டும் என்றால் நிச்சயம் நீங்கள் வரவேண்டிய இடம் புதுவையின்  சண்டே மார்க்கெட்டுக்குத்தான். 'இங்கு என்ன கிடைக்கும் என்று கேட்காதீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதை மட்டும் சொல்லுங்கள்’ என்கிறார்கள் இங்கு உள்ள வியாபாரிகள்.
திங்கள் முதல் சனி வரை பரபரப்பின்றி இருக்கும் புதுவை காந்தி வீதி, ஞாயிற்றுக்கிழமை வந்துவிட்டால் அடையாளம் தெரியாத அளவுக்குக் கடைகளாலும் மக்கள் கூட்டத்தாலும் நிரம்பி வழிகிறது. ஞாயிற்றுக் கிழமை அதிகாலையிலேயே கடைகள் முளைக்க ஆரம்பித்து விடுகின்றன. காலை ஒன்பது மணிக்குத் தொடங்கும் வியாபாரம் இரவு 10 மணி வரை பிஸியோ பிஸிதான்!
'எதை எடுத்தாலும் பத்து ரூபாய்!’ என்று ஒரு வியாபாரி ஒரு பக்கம் கூவ, இன்னொரு பக்கம் 'ஒண்ணு எடுத்தா ஒண்ணு இலவசம்’ என்ற குரல். எங்கு வாங்குவது என்று மக்கள் திணறித்தான் போகிறார்கள்.

வியாபாரம் நடக்கும் பாதையிலேயே ஒரு குழந்தைக்கு சட்டை பேன்ட்களைப் போட்டு அளவு பார்த்துக்கொண்டு இருக்கிறார் ஒரு பெண். எலெட்ரானிக்ஸ் கடையில் இருந்த ஒரு பழைய டி.வி.டி. பிளேயரைக் கையில் வைத்துக்கொண்டு 'வாங்கலாமா, வேண்டாமா?’ என்று ஆலோசனை நடத்துகிறது ஒரு குடும்பம். சற்றுத் தள்ளி ''சல்மான்ருஷ்டி நாவல்கள் இல்லையா?'' என்று பழைய புத்தகக் கடையில் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறார் இளம்பெண் ஒருவர். சிறிது தள்ளி உள்ள கண்ணாடிக் கடைக்காரரோ கடைக்கு வந்தவர்களுக்குத் தானே கண்ணாடி அணிவித்து, ''உங்களுக்கு ஏத்த மாதிரியே இருக்கு சார்'' என்று வியாபாரத் தந்திரத்தைப் பிரயோகிக்கிறார். இன்னொருபுறம் பழைய அலுமினியப் பாத்திரங்களை ஒரு கிலோ, இரண்டு கிலோ என்று எடை போட்டு வாங்கிக்கொண்டு இருக்கிறது பெண்கள் கூட்டம்.
துணி வியாபாரம் செய்துகொண்டு இருந்த பார்த்தசாரதியிடம் பேச்சுக்கொடுத்தேன். வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டே'' இருபது வருஷமா வியாபாரம் செஞ்சுக்கிட்டிருக்கேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் இங்க வந்திடுவேன். மத்த நாளில சைக்கிள்ல துணிகளை வெச்சுக்கிட்டுக் கிராமம் கிராமமா வியாபாரத்துக்குக் கிளம்பிடுவேன். அலைஞ்சு திரிஞ்சு ஒரு வாரம் முழுசும் விக்கிற துணிகளை இந்த சண்டே மார்க்கெட்டுல ஒரே நாளில் வித்துடலாம்.
எங்களை மாதிரி ஆளுங்களுக்கு வாடகை தந்து கடை வைக்கிற அளவுக்கு வசதி இல்லை. வெளிக்கடையில வாங்கறதை விட எங்ககிட்ட ஐம்பது, நூறு கம்மியாகத்தான் இருக்கும். ஆனாலும் இங்க கிடைக்கிறது எல்லாமேத் தரமான பொருட்கள்தான்'' என்கிறார்.
பழைய எவர்சில்வர் பாத்திரம் மற்றும் குக்கர்களை விற்றுக்கொண்டு இருந்த பாலுவோ, ''நான் இதே புதுவையில் பழைய இரும்புக் கடை வெச்சிருக்கேன். அங்கு வரும் பழைய பாத்திரங்களில் அதிகம் சேதம் ஆகாதவைகளை மட்டும் கொண்டுவந்து விக்கிறேன். ஞாயிற்றுக்கிழமை ஆனா நான், என் தம்பினு குடும்பமே இங்க வந்து வியாபாரம் செய்றோம்'' என்கிறார்.
- ஆ.நந்தகுமார்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites