இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, December 14, 2012

படிப்போடு தொழிலும் கற்றுத்தரும் பலே பள்ளி!




எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர், வீட்டில் ஃபியூஸ் போய்விட்டால் எலெக்ட்ரீஷியனைத் தேடி ஓடுகிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்தவரால் வாகனத்தின் பிரேக்கை சரி செய்ய முடியவில்லை. கல்வியை வாழ்க்கையோடு எங்குமே தொடர்புபடுத்த முடியாத அளவுக்கு வெறும் ஏட்டுச்சுரைக்காயாக நம் கல்வித்திட்டம் இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.

கல்வித்துறையில் இதுபோன்ற இருண்மையான நிலையை மாற்றுவதற்கான முயற்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கத்தான் செய்கின்றன. அவற்றில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது, கடலூர் சி.கே. ஸ்கூல் ஆஃப் பிராக்டிகல் நாலெட்ஜ் பள்ளியின் கல்வித்திட்டம். இளம் தொழிலதிபர் கெவின்கேர் சி.கே.ரங்கநாதன் நடத்தும் இந்தப் பள்ளியின் கல்வித்திட்டம் மாணவர்களை கல்வியாளர்களாக மட்டுமின்றி, தொழில்முனைவோராகவும் மாற்றுகிறது!

வெறும் 15 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்கியவர் சி.கே.ஆர். அவரது அப்பா, சின்னிகிருஷ்ணன் ஆசிரியராக இருந்து பின்னர் தொழில்முனைவோராக மாறியவர். இந்தியாவில் முதன்முதலாக பாக்கெட் ஷாம்பு அறிமுகப்படுத்தியது அவர்தான். அவருக்குப் பிறகு தொழிலுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட சி.கே.ஆர். இந்தியாவின் டாப் நிறுவனங்களில் ஒன்றாக தன் நிறுவனத்தை உயர்த்திக் காட்டினார். தன்னை வளர்த்தெடுத்த கடலூருக்கு நன்றிக்கடன் செய்யும் நோக்கில் தொடங்கியதுதான் சி.கே. ஸ்கூல் ஆஃப் பிராக்டிகல் நாலெட்ஜ் பள்ளி.

“25 வருடங்களா பாபா மெட்ரிகுலேஷன் ஸ்கூல்ங்கிற பேர்ல என் அம்மா நடத்திக்கிட்டிருந்த பள்ளிக்கூடம் இது. 4 வருஷம் முன்னாடி என் பொறுப்
புக்கு வந்துச்சு. வழக்கமா மதிப்பெண்ணை  முன்னிறுத்தி மாணவர்களை திட்டமிட்டு வார்த்தெடுக்கிற பள்ளிக்கூடமா இல்லாம, வாழ்க்கையோட தொடர்புடைய  கல்வியைத் தரணும்னு நினைச்சேன். படிச்சா வேலை கிடைக்கும்கிற காலம் எல்லாம் மலையேறிடுச்சு. படிப்புங்கிறது ஒரு அடிப்படைத் தகுதி. படிப்பைத்தாண்டி எதில திறமையை வளர்த்துக்கிடமோ, அதுதான் வேலையை பெற்றுத்தரும். இதுக்கு என் வாழ்க்கையே ஒரு படிப்பினை. அதனால, வழக்கமான பாடங்களோட ரெண்டு புதிய பாடத்திட்டங்களைச் சேத்தோம். பிசினஸ் மாடல் கிளாசஸ், லைப் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட். இதுக்கு ஒருநாளைக்கு 3 பீரியட் ஒதுக்குறோம்...’’ - உற்சாகமாகப் பேசுகிறார் ரங்கநாதன்.

‘‘ஒண்ணாம் வகுப்புல இருந்து 5ம் வகுப்பு வரை லைப் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட். மியூசிக், டான்ஸ், குக்கரி, அன்றாடம் வீடுகள்ல எதிர்கொள்ற வேலைகள்... ஃபியூஸ் போடுறது, பைப்லைன் மாட்டுறது, அபாகஸ், ஃபீல்ட் டிரிப்... போலீஸ் ஸ்டேஷன் பத்தின பாடம் நடத்தினா நேரா ஸ்டேஷனுக்கே கூட்டிட்டுப் போய் காட்டுறது, அடுத்து, கிராப்ட் ஒர்க்... எம்ப்ராய்டரி முதல் மார்பிள் ஸ்டோன்ல சிலை செய்றது வரைக்கும்... சிட்கோ இன்டஸ்டிரியில ஒரு பயிற்சி மையத்தையே ஆரம்பிச்சிருக்கோம். மாணவர்கள் செய்ற பொருட்களை சேகரிச்சு, வருஷத்துக்கு ஒருநாள் ஒரு சந்தை நடத்துவோம். அதுல மாணவர்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வாங்க. அதுல கிடைக்கிற தொகையில குறிப்பிட்ட சதவிகிதம் மாணவனுக்கே கொடுத்திருவோம்...’’ என்று வியக்க வைக்கிறார் பள்ளி முதல்வர் சந்திரசேகரன்.

6 முதல் 11ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பிசினஸ் மாடல் கிளாசஸ் நடத்தப்படுகிறது. 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவான முதலீட்டில் தொடங்க வாய்ப்புள்ள தொழில்கள் பற்றி நேரடி அனுபவங்கள் மூலம் இவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். நர்சரி, வண்ண மீன் வளர்ப்பு, லவ்பேர்ட்ஸ் வளர்ப்பு முதல் டீக்கடை வரை... எல்லாமே களப்பயிற்சிகள்தான். மாணவர்கள் தொழில் செய்வோரிடம் விவாதித்து ஒரு புராஜெக்ட் ரிப்போர்ட் ரெடி செய்கிறார்கள். ஒரு லிட்டர் பாலில் எத்தனை டீ போடலாம்? ஒரு டீக்கு எவ்வளவு சர்க்கரை போடவேண்டும்? எவ்வளவு லாபம் கிடைக்கும்? எல்லாம் ஃபிங்கர் டிப்சில் வைத்திருக்கிறார்கள். இதற்கென பாடப்புத்தகங்களே எழுதப்பட்டுள்ளன!

‘‘இதற்கெல்லாம் நேரம் எப்படிக் கிடைக்கும்னு கேட்கலாம். படிப்பிலும் எங்கள் மாணவர்கள் சளைத்தவர்கள் இல்லை. கடந்த பத்தாம் வகுப்புத் தேர்வில் மாவட்ட அளவில் நாங்கள்தான் முதலிடம். அதற்காக மாணவர்களை கசக்கிப் பிழிவதும் இல்லை. இயல்பான கல்வி. காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை. மொத்தம் 9 பீரியட். இதில் மூன்று பீரியட்கள் பிசினஸ், ஸ்கில், ஃபீல்ட் டிரிப் கிளாஸ். சனிக்கிழமையும் எங்கள் பள்ளி இயங்கும். 12ம் வகுப்பு முடித்துவிட்டு வெளியே வரும்போது மாணவன், முழுமையான ஒரு தொழில்முனைவோனாக வருகிறான்.

அதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. தனக்குக் கிடைக்காத வாய்ப்பு, இந்தத் தலைமுறை அடித்தட்டு, விளிம்புநிலைப் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு எங்கள் தாளாளர் உருவாக்கிய இந்தப் பாடத்திட்டத்துக்கு பெற்றோர் மத்தியிலும் நல்ல ஒத்துழைப்பு இருக்கிறது’’ என்கிறார் சந்திரசேகரன். மதிப்பெண்களுக்காக மாணவர்களை கசக்கிப்பிழியும் பள்ளிகளுக்கு மத்தியில், படிப்போடு சேர்த்து தொழில்களையும் பயிற்றுவித்து தொழில்முனைவோனாக்குவது பாராட்டத்தக்கது. இதைத்தான் மக்கள் பள்ளிகளிடம் இருந்து எதிர்பார்க்கிறார்கள்.
 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites