

பாடம் சொன்ன பசுமை விகடன்!
தண்ணீரால் சூழப்பட்டு, கிட்டத்தட்ட தீவு மாதிரி இருக்கும் தன் பண்ணையில் இருந்தபடி அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார் மீராஷா.

அன்று மணல்மேடு...இன்று பசுமைக் காடு!

பிறகு, மணல்ல விளையற கடலையை விதைச்சோம். சுமாரா வளர்ந்தது. அடுத்ததா 7 ஏக்கர்ல மாங்கன்னு, 6 ஏக்கர்ல தீவனச் சோளம், கோ-4 தீவனப் புல், ரெண்டு ஏக்கர்ல கடலைனு விதைச்சோம். 10 சென்ட்ல சொந்தத் தேவைக்காக காய்கறி சாகுபடி செய்ய ஆரம்பிச்சோம். மாங்கன்னுகளுக்கு இடையில தர்பூசணியை நட்டோம். வாய்க்கால் பாசனம் சரிப்பட்டு வராதுங்கிறதால எல்லாப் பயிருக்கும் தெளிப்புநீர்ப் பாசனத்தை அமைச்சிட்டோம். இப்ப எல்லாமே நல்லபடியே வளர்ந்து நின்னு எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்துக்கிட்டிருக்கு.
ஈ விரட்ட ஃபேன்... குளிர்ச்சியூட்ட ஸ்பிரிங்ளர்!
பண்ணைக்கு நடுவுல, மேடான இடத்துல 30 மாடுகளைக் கட்டுற அளவுக்கு நவீன வசதிகளோட ஒரு மாட்டுக் கொட்டைகையை அமைச்சோம். நவீன வசதிகளோட, சுகாதாரமான முறையில, இயற்கை விவசாயம் மூலமா விளைஞ்ச தீவனத்தைக் கொடுத்து, இயற்கையான வைத்திய முறைகளைப் பயன்படுத்தி, பால் அதிகமா கறக்கறதுக்காக ஊசி எதுவும் போடாம, பால் உற்பத்தி செய்யணும்ங்கிறதுதான் எங்களோட திட்டமா இருந்தது. அதுக்காக, முதல்ல, மூணு மாடுகளை வாங்கினோம். கொஞ்சம், கொஞ்சமா மாடுகளை வாங்கிச் சேர்த்ததுல இப்ப மொத்தம் 23 மாடுக இருக்குது. 20 மாடுக கறவையில இருக்கு. எல்லாமே ஜெர்சி, ஜெர்சி கிராஸ், பிரிஸீசியன் ரக மாடுகள்தான். வெளிநாட்டுக் கலப்பின மாடுகள்ங்கறதால கொசு, ஈ கடிக்காத மாதிரி ஃபேன், வெயில் நேரத்துல குளிர்ச்சி ஏற்படுத்துறதுக்காக 'மினி ஸ்பிரிங்ளர்’ (தெளிப்பு நீர்) அமைச்சிருக்கோம்.


மாட்டுச் சாணத்தை வெச்சு, மண்புழு உரத்தைத் தயார் பண்ணி அதையும் பயிர்களுக்குக் கொடுக்கிறோம். பக்கத்து ஊர்கள்ல வைக்கோல் குறைச்ச விலைக்கு கிடைக்கும். அதையும் வாங்கி சேமிச்சு வெச்சுகிட்டோம். மாடுகளை வெளியில மேய்ச்சலுக்கு அனுப்பறதில்ல. காலையிலயும், சாயங்காலமும் கொஞ்ச நேரம் உலாத்த விட்டு, மறுபடியும் கொட்டகையில கட்டிடுவோம். ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 7 கிலோ அடர்தீவனம், 12 கிலோ பசுந்தீவனம், 5 கிலோ உலர்தீவனம் (வைக்கோல்) கொடுக்குறோம்.
மாதம் 30,000 ரூபாய்!
வியாபாரிங்ககிட்ட பால் கொடுத்தப்ப கட்டுபடியான விலை கிடைக்கல. அதனால, ஒரு சொட்டுக்கூட தண்ணி கலக்காம, நேரடியா மக்களுக்கு கொடுக்க ஆரம்பிச்சோம். அரை லிட்டர், ஒரு லிட்டர் அளவுல பாக்கெட் போட்டு, வீடுகள்லயே கொண்டு போயி கொடுக்கிறோம். எங்களுக்கு வழிகாட்டியா இருந்த பசுமை விகடன்ல இருக்குற 'பசுமை’ங்கிற பேரை எங்க பண்ணைக்கும், பாலுக்கும் வெச்சுட்டோம். இப்ப, பெரியப்பட்டினத்து மக்கள் மத்தியில எங்க பசுமைப் பாலுக்கு நல்ல வரவேற்பு. தினமும் 200 லிட்டர் பாலை உற்பத்தி பண்றோம். போக, போக உற்பத்தியை அதிகமாக்குற எண்ணமும் இருக்கு. இப்போதைக்கு நாலு பேர் வேலை பார்க்கறாங்க.
வியாபாரிகளுக்குக் கொடுத்தா லிட்டருக்கு, 16 ரூபாய்தான் கொடுப்பாங்க. நேரடியா விக்கும்போது, லிட்டருக்கு 24 ரூபாய் கிடைக்குது. எல்லாச் செலவும் போக மாசம் 30 ஆயிரம் லாபம் கிடைக்குது. மாடு, கொட்டகை எல்லாம் சேத்து 10 லட்ச ரூபாய் செலவாச்சு. இப்ப 15 கிடேரி கன்னுக இருக்கு. இதுக அடுத்த 18 மாசத்துல தயாராகிடும். இப்படி ஒவ்வொரு வருஷமும் கிடைக்குற கன்னுகளை பெருக்கினா 4-ம் வருஷத்துல நாம போட்ட முதலீட்டை வட்டியோட எடுத்துடலாம்'' என்று நம்பிக்கை பொங்கச் சொன்னார் மீராஷா.

0 comments:
Post a Comment