இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, December 11, 2012

எந்த ஊரில் என்ன வாங்கலாம்.





திருப்பூரிலிருந்து ஈரோடு செல்லும் வழியில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஊத்துக்குளி. ஊரை கடந்து செல்லும் எந்த வாகனத்தையும் காற்றில் கலந்துவரும் நெய்வாசம் கணநேரத்தில் மயக்கி நிறுத்திவிடுகிறது. இந்த ஊரில் மட்டுமல்ல, இதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பத்து கிலோ மீட்டர் மக்களுக்கும் இதுதான் பிரதான தொழில். ஊரில் எல்லோரது வீடுகளிலும் ஏதாவது ஒரு வகையில் பால், வெண்ணெய், நெய் என வேலை நடந்துகொண்டே இருக்கிறது. பக்கத்திலேயே தொழில் நகரமாகிய திருப்பூர் இருந்தாலும்கூட, ஊத்துக்குளி மக்கள் அதை நம்பியிருக்காமல் தங்களுக்கென தனியாக இந்தத் தொழில் வாய்ப்பை உருவாக்கி கொண்டது ஆச்சரியம்தான். ஊத்துக்குளிக்கும் வெண்ணெய்க்கும் என்ன சம்பந்தம் என ஊத்துக்குளி கிராம சர்வோதய சங்கத்தைச் சேர்ந்த கே.சாமிநாதனிடம் கேட்டோம். 
''மாடு வளர்ப்புதான் இந்த ஊருக்குப் பிரதான தொழில். சராசரியாக வீட்டுக்கு இரண்டு மாடுகளாவது வைத்திருப்பார்கள். பாலைக் கறந்து சங்கங்களுக்குக் கொடுப்பதோடு, சிலர் வீடுகளிலேயே தனியாக வெண்ணெய் எடுக்கும் வேலையும் செய்கின்றனர். சாதாரணமாக ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் என்றால் பாலை காய்ச்சி மோராக்கி அதிலிருந்து வெண்ணெய் எடுப்பார்கள். ஆனால், ஊத்துக்குளியில் ஒரு நாளில் மட்டும் 5,000 கிலோ வரை வெண்ணெய் எடுக்கப்படுகிறது. பச்சைப் பாலை வாங்கி இதற்கென உள்ள ஒரு இயந்திரத்தில் ஊற்றுவோம். இந்த இயந்திரம் பாலிலிருந்து கிரீமை தனியாகப் பிரித்தெடுத்துத் தரும். இப்படி பிரித்தெடுத்த கிரீமை வேறொரு மர பீப்பாய் இயந்திரத்தில் கொட்டி பீப்பாயைக் கைகளால் சுற்றுவதன் மூலம் கிரீமிலிருந்து வெண்ணெய் தனியாகப் பிரிந்துவரும். இந்த வெண்ணெயை அளவுக்கேற்ப டின்களில் அடைத்து விற்பனைக்கு அனுப்பி விடுவோம். பிரிக்கப்பட்ட கிரீம் இல்லாத பாலை தனியாக ஓட்டல்களுக்கு விற்பனையும் செய்துவிடுகின்றனர்'' என்றார்.
ஊத்துக்குளி சுற்று வட்டாரத்தில் சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த தொழிலைச் சார்ந்து இயங்கி வருகின்றனர். கிராம சர்வோதயா சங்கங்களும், பல தனியார் சங்கங்களும் இந்தத் தொழிலில் இயங்கி வருகின்றன. எருமை பால் என்றால் எட்டு லிட்டர் பாலிருந்து ஒரு கிலோ வெண்ணெய் எடுக்க முடியும். அதுவே பசும்பால் என்றால் பன்னிரண்டு லிட்டர் பாலிலிருந்துதான் ஒரு கிலோ வெண்ணெய் எடுக்க முடியுமாம். எனவே, அடர்த்தி அதிகமாக இருக்கும் எருமை பாலிலிருந்து வெண்ணெய் எடுப்பதே அதிகமாக நடக்கிறது. எருமை பாலிலிருந்து எடுக்கும் வெண்ணெய் பளீர் வெண்மையாக இருக்கும்; பசும்பாலிலிருந்து எடுக்கும் வெண்ணெய் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். கிரீமிலிருந்து வெண்ணெயைப் பிரித்தெடுக்க மர பீப்பாயைத்தான் எல்லா இடங்களிலும் பயன்படுத்துகின்றனர். அப்போதுதான் வெண்ணெய் எளிதில் கெடாமல் இருக்குமாம். சாதாரணமாகப் பதினைந்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும் என்கின்றனர். இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஊத்துக்குளி வெண்ணெயில் எந்தவிதமான கலப்புகளும் கிடையாது என்கிறார்கள் வியாபாரிகள். இங்கிருந்து தமிழ்நாடு, புதுச்சேரி கேரளா தவிர, மஹாராஷ்ட்ரா போன்ற வட மாநிலங்களுக்கும் வெண்ணெயை அனுப்பி வைக்கிறார்களாம்.
தற்போது ஒரு கிலோ வெண்ணெய் 250 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. சீஸனுக்கேற்ப அவ்வப்போது விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும். இங்கிருந்து வாங்கிச் செல்லும் வியாபாரிகள் குறைந்தபட்சம் 30-லிருந்து 40 ரூபாய் விலை அதிகம் வைத்து விற்பனை செய்கின்றனர். பொதுவாக சங்கத்தின் மூலம் விற்பனை செய்யும் இடங்களில் மட்டுமல்ல, நேரடியாக விவசாயிகளின் வீடுகளில் இருந்துகூட வெண்ணெய் வாங்க முடிகிறது. இவர்களிடத்தில் கிலோ 220 ரூபாய்க்கு வாங்கலாம்.
மொத்தமாக வாங்குபவர்கள் மட்டுமல்ல, சுத்தமான வெண்ணெய் வாங்க விரும்புபவர்கள்கூட ஒருதரம் ஊத்துக்குளி சென்று வரலாம்.
- நீரை.மகேந்திரன்,
படங்கள்: க.ரமேஷ்

4 comments:

Sir please eny contact number sir

நல்ல தகவல்

ஊத்துக்குளி மக்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites