|
|
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது
உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது பருப்பு வகைகள். நம் உடலுக்குத் தேவையான
புரதச்சத்து பல வகையான பருப்புகளில் இருந்துதான் கிடைக்கிறது. நான்-வெஜ்
பிரியர்களுக்கு வேண்டுமானால்,
பருப்பின் அருமை தெரியாமல் இருக்கலாம். ஆனால், சைவ உணவு விரும்பிகளுக்கு பருப்பு இல்லை என்றால், சாப்பாடு இறங்காது. குழம்பு, சாம்பார், கூட்டு,
பொறியல் என பல வெரைட்டிகளிலும் பயன்படுத்தப்படும் இந்த பருப்புகளைத் தரம்
பிரித்து, சுத்தப்படுத்தி, தயார் செய்து கொடுக்கும் பருப்பு ஆலைகள்
(தால் மில்) இப்போது சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன.
சந்தை வாய்ப்பு! உலகளவில் பருப்பு வகைகளை உற்பத்தி செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இந்தியாவைப் பொறுத்தவரை அதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. நம்நாட்டைப் பொறுத்தவரை நபர் ஒன்றுக்கு ஆண்டுக்கு 2.8 கிலோ பருப்பு தேவை. பொதுவாக அரிசி மில்களை நடத்துபவர்களே பருப்பு ஆலைகளையும் சேர்த்து நடத்துகிறார்கள். தனியாக பருப்பு ஆலையை நடத்தினால் ஜெயிக்க அதிக வாய்ப்பு உண்டு. பருப்பு வகைகள்! பச்சைப் பயிறு, கொண்டைக் கடலை, பச்சை மொச்சை, கறுப்பு மொச்சை, துவரம் பருப்பு, வெள்ளைப் பட்டாணி, தட்டை பயிர், காராமணி, பச்சைப் பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகள் பல்வேறு விதங்களில் பயன்படுத்தப்படுவதால் பருப்பு ஆலையின் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இடம்! ஆண்டுக்கு 300 டன் பருப்பை உடைத்தெடுக்க 550 சதுர மீட்டர் இடம் தேவைப்படும். இதில் 500 சதுர மீட்டரில் நிலம் மற்றும் 50 சதுர மீட்டரில் கட்டடம் இருக்க வேண்டும். நல்ல சாலை வசதிகள், கழிவுகளை வெளியேற்றும் வசதிகள் போன்ற அம்சங்கள் இருக்குமாறு பார்த்து இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இடத்திற்கு ஆகும் மொத்த மதிப்பு, கிராமப் பகுதி எனில், இரண்டு லட்சம் ரூபாய் வரை ஆகும். நகர்ப்புறத்தில் இவ்வளவு பெரிய இடத்தைப் பிடிக்க இன்னும் நிறைய பணத்தைச் செலவழிக்க வேண்டியிருக்கும். இயந்திரம்! பருப்பை உடைத்தெடுக்கும் அளவிற்கேற்ப இயந்திரத்தின் பயன்பாட்டு செலவுகள் இருக்கும். சுத்தம் செய்யும் கிரேடர், செமி ஆட்டோமேடிக் மினி மில், ஒரு ஹெச்.பி. மோட்டார் ஒன்று என சுமார் ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகும். மின்சாரம், தண்ணீர்! ஆண்டுக்கு 300 டன் பருப்பை உடைக்கும் அளவிலான உற்பத்தித் திறனுக்கு இரண்டு ஹெச்.பி. மின்சாரம் தேவைப்படும். பருப்புகளைச் சுத்தம் செய்வதற்கும், ஊற வைப்பதற்கும் தண்ணீர் தேவைப்படும். இதற்கு ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் தேவைப்படும். இதர செலவுகள்! அலுவலகம் அமைக்க, எடை போடும் இயந்திரச் செலவுகள் என மொத்தம் 1.30 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். வேலையாட்கள்! சாதாரண வேலையாட்கள் மூன்று முதல் பத்து நபர்களும், ஒரு மேலாளரும் தேவை. செயல் முறை! பருப்புகளை பல்வேறு இடங்களிலிருந்து வாங்கிச் சேகரித்து, அதிலிருந்து கழிவுகள் மற்றும் கற்களை நீக்க வேண்டும். அதன்பிறகு 60-90 நிமிடங்கள் வரை தண்ணீரில் ஊறவிட்டு, பின்னர் வடிகட்டி, சூரிய ஒளியில் இரண்டு, மூன்று நாட்கள் காயவிட வேண்டும். காய்ந்தபின் பருப்பு வகைகளை இயந்திரத்தின் மூலம் உடைத்து தோலை தனியாகப் பிரித்தெடுக்க வேண்டும். இப்படி தயாராகும் பருப்பை தேவையான அளவுகளில் பாக்கெட் போட்டு விற்பனைக்கு அனுப்பி விடலாம். சின்ன மில் எனில் சோயா பீன்ஸ், பச்சை மொச்சை ஆகியவைகளை ஒரு மணி நேரத்தில் 100-130 கிலோ வரை உடைத்தெடுக்க முடியும். கறுப்பு மொச்சை, பச்சை பயிறு போன்றவற்றை ஒரு மணி நேரத்தில் 60-80 கிலோ வரை உடைத்தெடுக்க முடியும். காரணம், இதற்கான வேலைகள் அதிகமாக இருக்கும். அனுமதி! இத்தொழிலைப் பொறுத்த வரை பெரியளவில் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாது. தேவையற்ற தண்ணீரைத் தகுந்த முறையில் சுத்திகரித்து வெளியேற்றினாலே போதுமானது. எனினும், இத்தொழிலைத் தொடங்க மாநில மாசுக் கட்டுப்பாட்டு ஆணையத்திடமிருந்து தடையில்லா சான்றிதழ் வாங்க வேண்டும். முக்கிய காரணம் தூசி! சாதகங்கள்! இது உடல் ஆரோக்கியம் தரும் உணவுப் பொருள் என்பதால், பருப்பு வகைகளுக்கு மவுசு குறையாது. எனவே, பருப்பு ஆலைகளுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். பாதகங்கள்! பருப்பு வகைகளின் விலை ஏற்ற, இறக்கத்தைப் பொறுத்தே லாபம் அமையும். தரமான பொருட்களைத் தேடி வாங்க அலைய வேண்டும். தவிர, போட்டியாளர்களும் அதிகரித்து வருகின்றனர். இது போன்ற சில பாதகங்கள் இருந்தாலும், உணவு சார்ந்த பொருட்களுக்கு என்றும் தேவை இருக்கும் என்பதால் இந்த தொழிலில் துணிந்து இறங்கலாம். |
0 comments:
Post a Comment