கல்லுக்குடி இருப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குட்டி கிராமமான இது, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் சுற்றுப்பட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகளுக்குப் பரிச்சயமான கிராமம். திரும்பிய பக்கமெல்லாம் தென்படும் நாற்றுப்பண்ணைகள்தான் இக்கிராமத்தை உலகுக்கு அடையாளப்படுத்துகின்றன.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வறுமை தாண்டவமாடிய கிராமம் இது. தண்ணீர் பற்றாக்குறையால், ஊர் முழுக்கவே காட்டுக்கருவை மரங்கள்தான் மண்டிக்கிடந்தன. இன்றோ… நாற்றுப் பண்ணைகளாக மலர்ந்திருக்கின்றன. தனிநபர்கள் மட்டுமல்லாது, சுயஉதவிக் குழுக்களும் இக்கிராமத்தில் நாற்று உற்பத்தியில் ஈடுபட்டிருக்கின்றன.
அரை ஏக்கர் பரப்பு முதல், ஒரு ஏக்கர் பரப்பு வரையிலான சிறியதும் பெரியதுமான நாற்றுப் பண்ணைகள்… சுமார் எழுபது வகையான மலர் நாற்றுகள்… 65 வகையான மரக்கன்றுகள்… என்று இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான நாற்றுகள் விற்பனையாகின்றன.
அரை ஏக்கர் நிலத்தில் நாற்றுப் பண்ணை நடத்தி வரும் முத்து, ”கிணத்தை நம்பித்தான் விவசாயம் நடந்துகிட்டிருந்துச்சு. ஒரு கட்டத்துல தண்ணீர் மட்டம் குறைஞ்சுக்கிட்டே போயி, சுத்தமா வறண்டு போச்சு. அதனால, ஊரே விவசாயத்தை விட்டு ஒதுங்கிட்டோம். வனத்துறைக்காரங்க அப்பப்போ காடுகள்ல கூலி வேலைக்குக் கூப்பிடுவாங்க. அதை வெச்சுதான் பிழைப்பை ஓட்டிக்கிட்டுருந்தோம்.
90-ம் வருஷத்துல ரெண்டு மூணு பேர், போர் போட்டு தண்ணியெடுத்து நாத்துப் பண்ணை ஆரம்பிச்சாங்க. ஓரளவுக்கு வருமானம் வரவும், கொஞ்சம் கொஞ்சமா எல்லாரும் நாத்துப் பண்ணை வைக்க ஆரம்பிச்சோம். ஆனா, அத்தனைப் பேருக்கும் தனித்தனியா போர் போடறதுக்கு வசதியில்லாததால பத்து பதினஞ்சு பேரா சேர்ந்து போர் போட்டோம். கரன்ட் செலவை எல்லாரும் பகிர்ந்துக்கிறோம்” என்று நாற்றுப் பண்ணைகள் உதயமான வரலாறு சொன்னார்.
”நானும் என்னோட வீட்டுக்காரரும் சேர்ந்து அரை ஏக்கர்ல நாத்துப் பண்ணை போட்டிருக்கோம். குரோட்டன்ஸ் செடிகளையும், பழமரக்கன்னுகளையும் உற்பத்தி செய்றோம். குடும்பமே சேர்ந்து கடுமையா உழைச்சா… அதுக்கான பலன் கண்டிப்பா கிடைக்கும்” என்று அனுபவ வார்த்தைகளில் சொன்னார் உடைச்சி.
அவரைத் தொடர்ந்து பேசிய கருப்பையா, ”தரமானக் கன்னுகளை உற்பத்தி பண்றதாலதான் ரொம்ப தூரத்துல இருந்துகூட தேடி வந்து வாங்கிட்டுப் போறாங்க. வெளி மாநிலங்கள்ல இருந்தெல்லாம்கூட வர்றாங்க. திறந்த வெளியில இயற்கைச் சூழல்லயே தொழுவுரத்தை மட்டும் பயன்படுத்தி கன்னுகளை உற்பத்தி பண்றதால, எந்த இடத்துல கொண்டு போய் நட்டு வெச்சாலும், தாக்குப் பிடிச்சு வளந்துடும். பசுமைக் குடிலுக்குள்ள ரசாயன உரம் பயன்படுத்தி உற்பத்தி பண்ற கன்னுகளுக்கு உத்தரவாதம் கொடுக்க முடியாது.
மூன்றரை இஞ்ச் அகலம், 5 இஞ்ச் உயரம் இருக்குற பாக்கெட்ல வளர்ந்திருக்கற மூணு மாச வயசு கன்றுகள, குறைஞ்ச விலைக்குக் கொடுக்குறோம். மத்த பண்ணைகள்ல பெரிய பை நிறைய மண் போட்டு அதிக விலைக்கு விப்பாங்க. அதனால எந்தப் பிரயோஜனமும் இல்ல. இந்த மாதிரி கண்துடைப்பு வேலையெல்லாம் நாங்க செய்யாததாலதான் குறைஞ்ச விலைக்கு விக்க முடியுது.
எங்க ஊர்ல அதிகபட்சம் 5 ரூபாய் வரைக்கும்தான் கன்னுகளோட விலை இருக்கும். பெரும்பாலும், விதை மூலமாதான் உற்பத்தி செய்றோம். இங்க உள்ள மரங்கள்ல இருந்தே விதை எடுத்துக்குவோம். தேவைப்பட்டா வெளியிலயும் வாங்கிக்குவோம். மேடான பகுதியில இருந்து மண்ணை வெட்டி, ஒரு டன் 500 ரூபாய்னு விக்கிறாங்க. அதைத்தான் நாத்து உற்பத்திக்குப் பயன்படுத்துறோம். ஊர்ல மாடுகள் இல்லாததால தொழுவுரத்தை வெளியில இருந்து வாங்குறோம். மண், பாக்கெட் செலவு, மண் நிரப்ப, நடவு செய்யனு எல்லா செலவும் சேர்த்து, ஒரு கன்னு உற்பத்தி செய்ய, 2 ரூபாய் செலவாகுது. விக்கும்போது கன்னுக்கு ஒரு ரூபாய்ல இருந்து மூணு ரூபாய் வரை லாபம் கிடைக்கும். ஆனா, அதிக எண்ணிக்கையில விற்பனையாகறதால போதுமான அளவுக்கு வருமானம் கிடைச்சுடுது” என்று சந்தோஷமாகச் சொன்னவர், நாற்று உற்பத்தி செய்யும் முறைகளைப் பற்றியும் தெளிவாக எடுத்துச் சொன்னார்.
கன்று உற்பத்தி இப்படித்தான்!
கன்று உற்பத்திக்கு செம்மண் சிறப்பானது. நான்கு சால் புழுதி உழவு ஓட்டி, 7 அடி நீளமும் இரண்டரை அடி அகலமும் கொண்ட பார் அமைக்க வேண்டும். இதில் பரவலாக தேவையான விதைகளைத் தெளித்து அவற்றை மூடுமாறு தொழுவுரத்தைத் தூவ வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாக தினமும் தண்ணீர் விட வேண்டும்.
செம்பருத்தி, அரளி, மல்லிகை, முல்லை போன்ற மலர்கள் மற்றும் அலங்காரச் செடிகளுக்கு (குரோட்டன்ஸ்) பதியன் முறையில் கன்றுகளை உற்பத்தி செய்ய வேண்டும். நிலத்தைத் தயார் செய்து பாத்திகளை அமைத்து 4 முதல் 5 அங்குல நீளமுள்ள சிறியக் கிளைகளை, ஓர் அங்குல இடைவெளியில் நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
விதை நடவு செய்தாலும், பதியன் முறை என்றாலும், 15-ம் நாள் முளைப்பு வரும். 25-ம் நாள் கன்றுகளை பாலிதீன் பாக்கெட்டுகளுக்கு மாற்ற வேண்டும். மூன்றரை அங்குல அகலம், 5 அங்குல உயரம் கொண்ட மெல்லிய பாலீதீன் பாக்கெட்டில் (நாற்று உற்பத்திக்காகவே பிரத்யேகமாக விற்கப்படுகிறது), முக்கால் பங்கு செம்மண்ணும், கால் பங்கு தொழுவுரமும் நிரப்பி, இதில் வேர் முழுமையாக மறையும் அளவுக்குக் கன்றை ஊன்றி விட வேண்டும். தினமும் காலை தண்ணீர் தெளித்து வர வேண்டும். மூன்று மாத வயதில் கன்றுகளை விற்பனை செய்யலாம்.
0 comments:
Post a Comment