தீப்பெட்டிபோல வரிசையாகக் கடைகள், நெரிசலில் நீந்தும் மக்கள் என தி.நகர் ரெங்கநாதன் தெரு எப்போதும் பரபர பிஸிதான். தெருவுக்குள் நுழைந்ததுமே 'வாங்கம்மா... ஒரு மணி நேரத்தில் சுடிதார், ப்ளவுஸ் தெச்சுடலாம். ஷாப்பிங் போயிட்டு வர்றதுக்குள்ள சுடிதார் ரெடியா இருக்கும்மா!'' என வெரைட்டியான குரல்கள் கேட்க ஆரம்பித்துவிடும். 'மொத்த கடையையே புரட்டிப் போட்டு துணி எடுக்கும் பெண்கள், ஒரு மணி நேரத்தில் சுடிதார் தைக்க எப்படி ஒப்புக்கொள்கிறார்கள்?’ என்ற கேள்வியுடன் ரெங்கநாதன் தெருவில் விசிட் அடித்தோம். குரல் கம்ம கத்தி கஸ்டமர்களை அழைத்துக்கொண்டு இருந்த மீனா, ''ஏழு வருஷமா இந்த வேலை செய்யுறேன். வீட்டுக்காரருக்குச் சரியான சம்பாத்தியம் இல்லாததால் இப்படி வெயிலில் நின்னு கத்துறேன். ஆனால், உழைச்சுசம்பாதிக்கிறோம்ங்கிற திருப்தி இருக்கு. ஒரு பீஸுக்கு எனக்குப் 10 ரூபாய் கமிஷன். கஸ்டமர்களை எந்தக் கடைக்கு அழைச்சிட்டு போனாலும் கமிஷன் உண்டு. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 100 கஸ்டமர்கள் வரை பிடிப்போம். தீபாவளி, பொங்கல் நேரத்தில் 150 கஸ்டமர்கள் பிடிச்சிடுவோம். இப்படி நாங்க ஒருமுறை பிடிச்சு கொடுக்குற கஸ்டமர்கள், பிறகு அந்தக் கடையின் ரெகுலர் வாடிக்கையாளர் ஆகிட்டாங்கன்னா எங்களுக்கு கமிஷன் வராது. காலேஜ் பொண்ணுங்கதான் எங்க டார்க்கெட். ஏன்னா, அவங்கதான் நாங்க கத்துறதைப் பார்த்துட்டு, இரக்கப்பட்டு வருவாங்க. 'ச்சீ அந்தப் பக்கமா போ’னு சிலர் எரிச்சலாவும் பேசுவாங்க. அதை எல்லாம் பார்த்தா பொழப்பு நடத்த முடியுமா?'' என்கிறார்.
அடுத்து 'பிஸ்மி ஸ்டார் டெய்லர்ஸ்’ என்கிற ஒரு மணி நேர சுடிதார் தையல் கடைக்குச் சென்றோம். அதன் உரிமையாளர் ஆசாத், ''இந்தா வந்திர்றோம்னு சொல்லுவாங்க. ஆனா, நம்ம ஊர் லேடீஸ் ஷாப்பிங் போய்ட்டு வர்றதைப் பத்திதான் நமக்குத் தெரியுமே. சில பேர் காலையில் போய்ட்டு சாயங்காலம்தான் வெளியில் வருவாங்க. ஆனா, நாங்க சுடிதாரை ஒரு மணி நேரத்தில் தயார் பண்ணிடுவோம். வர்ற கஸ்டமர்களை அட்டென்ட் பண்ண ஐந்து நிமிஷம், துணியை கட் பண்ண ஐந்து நிமிஷம், தைக்க 20 நிமிஷம்னு ஒரு சுடிதார் தைக்க அதிகபட்சம் அரை மணி நேரம்தான் ஆகும்.
ஒரு கட்டிங் மாஸ்டருக்கு நான்கு டெய்லர் இருப்பாங்க. அவர் கட் செய்து தரும் சுடிதார்களை இவர்கள் தைப்பார்கள். மற்றபடி அயர்னிங், ஓவர்லாக், எக்ஸ்ட்ரா டிசைன்கள்னு கூடுதலா நேரம் ஆகும். அதைக் கஸ்டமர்களிடம் சொல்லிடுவோம். சாதாரண சுடிதாருக்கு 80 ரூபாயும், லைனிங் கிளாத் கொடுத்து தைக்க 140 ரூபாயும் வாங்குறோம். ஒரு நாளைக்கு 50-ல் இருந்து 100 சுடிதார்கள் வரை வரும். அதில் 20 முதல் 40 பேர் புது கஸ்டமர்களா இருப்பாங்க.
எங்கள் கடைக்கு டெய்லர் வரலைனாலோ, மெஷின் கோளாறுன்னாலோ பக்கத்து கடை டெய்லரை வெச்சு தைச்சு சமாளிப்போம். 'சரியா தைக்கலை’, 'சொன்ன நேரத்தில் தரலை’னு சமயங்களில் ஒண்ணு ரெண்டு பேர் பிரச்னை பண்ணுவாங்க.ஆனால், அதை எல்லாம் மீறி ஒருமுறை எங்ககிட்டே வந்தவங்க தொடர்ந்து எங்ககிட்டேயே வரணும்ங்கிற எண்ணத்தில் தான் வேலை செய்யுறோம்'' என்கிறார்.
சுடிதார் தைக்கக் கொடுக்க வந்த தேவி, ''துணி எடுக்க, அதைத் தைக்க, அதை வாங்கனு மூணு நாள் அலையற துக்குப் பதிலா ஒரே நாள்ல வேலை முடிஞ்சுடுது. முதல்ல சுடிதார் மெட்டீரியல் எடுத்துத் தைக்கக் கொடுத்துட்டு ஷாப்பிங் முடிச்சுட்டு வந்தேன்னா சுடிதார் ரெடியா இருக்கும். மறுநாள் புது சுடிதார் போட்டு வேலைக்குப் போனா ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், 'ரெடிமேடா?’னு விசாரிக்குறாங்க. இந்த சர்ப்ரைஸுக்காகவே இங்க வருவேன்'' என்கிறார்!
- பானுமதி அருணாசலம் படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
0 comments:
Post a Comment