இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, April 16, 2012

வாழை+தட்டைப்பயறு கூட்டணி

இயற்கை விவசாயத்துக்காக எந்தப் பயிற்சியிலேயும் இவர் கலந்து கொண்டதில்லை என்கிறார். முழுக்க முழுக்க 'பசுமை விகடன்’ புத்தகத்தை மட்டுமே படித்து விவசாயம் செய்கிறார். வாழையை மட்டுமே தனிப்பயிராக சாகுபடி செய்துகிறார். இவர், ஊடுபயிரையும் சாகுபடி செய்து கூடுதல் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று திருப்தியோடு சொல்கிறார், திருப்பூர் மாவட்டம், வே. வாவிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசிவமூர்த்தி.

இரண்டு நாள் கணிப்பொறி... ஐந்து நாள் கழனி!
கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த முடித்து, நண்பர்களோடு சேர்ந்து திருப்பூரில் சர்வீஸ் சென்டர் வைத்திருக்கிறார். வாரத்தில் இரண்டு நாட்கள்தான் அந்த வேலை. மீதி ஐந்து நாளும் விவசாயம்தான். பசுமை விகடனின் மகசூல் கட்டுரைகளில் வரருகின்ற விவசாயிகள்கிட்ட உடனடியாக பேசி, புதுப்புது விஷயங்களைத் தெரிந்து கொள்வதாக கூறுகிறார். முடிந்தளவுக்கு அந்தத் தொழில்நுட்பங்களைக் கடைபிடித்துதான் வெள்ளாமை செய்வதாக கூறுகிறார்.

உற்சாகம் கொடுத்த ஊடுபயிர் கட்டுரை!

2010 ஜனவரி 10-ம் தேதி இதழில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த போஸ் பற்றி வந்திருந்த செய்தியில்தான் வாழையில் உளுந்து, புடலை, தட்டை மாதிரியான ஊடுபயிர்களை சாகுபடி செய்யலாம் என்று தெரிந்து கொண்டதாக கூறுகிறார். அதுவரைக்கும் வாழையை மட்டுமே தனியாக சாகுபடி செய்துகொண்டிருந்த இவர் ஊடுபயிர் பக்கம் மாறுவதற்கு காரணமாக அமைந்தது அந்தக் கட்டுரை.

வெங்காய பூமி!
இவரின் நிலத்தில் நல்ல தண்ணீர் வசதியும் இருக்கிறது. தென்னை, வாழை, வெங்காயம் மூன்றும் நன்றாக வளருகிறது. தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் பகுதியிலும், இவர் பகுதியிலயும்தான் பெரிய வெங்காயம் அதிகமா விளைகிறது. ஆரம்பத்தில் வெங்காயத்தை மட்டும்தான் சாகுபடி செய்திருக்கிறார். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள், வாழை என்று மாறியிருக்கிறார். இப்பொழுது, ஒன்றரை ஏக்கரில் நேந்திரன் வாழை போட்டிருக்கிறார். அதில் ஊடுபயிராக நாட்டு ரக தட்டைப்பயறு இருக்கிறது. இப்பொழுது அறுவடை நடக்கிறது. ஊடுபயிராக இதை சாகுபடி செய்யும்பொழுது, களைகள் வருவதில்லை. அதோடு உயிர் மூடாக்காவும் பயன்படுகிறது. இதன் இலைகள் மட்கி உரமாகிறது. அறுவடை செய்தபின் காய்ந்த செடியை ஆடு, மாடுகளுக்கும் கொடுக்கலாம் என்ற ஞானசிவமூர்த்தி, சாகுபடிக் குறிப்புகளைச் சொல்லத் தொடங்கினார்.

மேட்டில் தட்டை, பள்ளத்தில் வாழை!
நிலத்தை சரி செய்து, 10 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி பரப்பி நன்கு உழவு செய்ய வேண்டும். பிறகு, நாலரையடி அகலம், முக்கால் அடி உயரத்துக்கு நீளமான மேட்டுப்பாத்திகளை வரிசையாக அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாத்திக்கும் இடையில் ஒன்றரை அடி இடைவெளி விட வேண்டும். பாத்தி அமைக்கும்போது இந்த இடைவெளி பள்ளமாக இருப்பதால், இதை வாய்க்காலாகப் பயன்படுத்தி தண்ணீர் பாய்ச்சிக் கொள்ளலாம்.
பிறகு, வாய்க்கால் மத்தியில் வாழைக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும். இப்போது வரிசைக்கு வரிசை ஆறடியும், மரத்துக்கு மரம் ஆறடியும் இடைவெளி இருக்கும். இப்படி நடவு செய்யும்போது, ஏக்கருக்கு 1200 கன்றுகள் வரை நடவு செய்ய முடியும். (இவர் 900 கன்றுகள் மட்டுமே நடவு செய்துள்ளார்.)

வாழைக்கன்றை நடவு செய்யும்போதே மேட்டுப்பாத்தியில் முக்கால் அடி இடைவெளியில் தட்டைப் பயறு விதைகளை விதைக்க வேண்டும். ஒரு ஏக்கருக்கு 12 கிலோ முதல் 15 கிலோ வரை விதை தேவைப்படும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து, வாய்க்கால்களில் தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தத்தைப் பாசனத் தண்ணீருடன் கலந்து விட வேண்டும். தட்டைப்பயறின் மகசூல் காலம் 60 முதல் 75 நாட்கள். 40 நாட்களில் பூவெடுத்து பிஞ்சு பிடிக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து அதிகாலை நேரத்தில் தோட்டம் முழுவதும் செழிம்பாக பனிப்புகை போலத் தெளிக்க வேண்டும். காய் பருவத்தில் பத்து லிட்டர் தண்ணீருக்கு 2 லிட்டர் அக்னி அஸ்திரம் என்ற அளவில் கலந்து தெளித்தால், பச்சைப்புழுக்கள் தாக்குதல் இருக்காது. 75 நாட்களில் தட்டையை அறுவடை செய்யலாம். ஏக்கருக்கு 500 கிலோ அளவுக்கு மகசூல் கிடைக்கும்.

குறைவான அளவில் கோழி எரு
தட்டைப்பயறு அறுவடை முடிந்த பிறகு மண்வெட்டியால் வாய்க்கால் வரப்புக்களை எடுத்துக்கட்டி, வாழை மரங்களுக்கு மண் அணைத்து விட வேண்டும். பிறகு, ஒரு டன் கோழி எருவைப் பாசனத் தண்ணீரில் கரைத்து விட்டு வரப்பு உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். கோழி எரு அதிகக் காரத்தன்மை கொண்டது என்பதால், அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. மரங்கள் வளர்ந்து நிழல் கட்டத் தொடங்கிய பிறகு களைகள் வளராது. 9-ம் மாதத்துக்கு மேல் பூவெடுக்கும். காய் பிடிக்கும் சமயத்தில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். 12-ம் மாதம் வாழைத்தார்களை அறுவடை செய்யலாம். சாகுபடிப் பாடத்தை முடித்த ஞானசிவமூர்த்தி, இப்போதான் பகுதி நிலத்தில் தட்டைப்பயறு அறுவடை முடிந்திருக்கிறது.

200 கிலோ வரைக்கும் மகசூல் கிடைத்திருக்கிறது. மொத்தத்தையும் அறுவடை செய்தால் 500 கிலோ அளவுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார். இப்போதைக்கு கிலோ 30 ரூபாய்க்கு விற்கிறது. இந்தக் கணக்குப்படி தட்டைப்பயறு மூலமாக 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். வாழை அறுவடை செய்யும்பொழுது ஒரு தார் 200 ரூபாய் என்ற விலைக்கு 900 தார்கள் மூலமாக 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மொத்தமாக, 41 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்கும். ஊடுபயிராக தட்டைப்பயறு போட்டதால் களையெடுக்கும் செலவு குறைந்ததோடு, கூடுதல் வருமானமும் கிடைத்திருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் விடை கொடுத்தார். 

தொடர்புக்கு,சு. ஞானசிவமூர்த்தி,
செல்போன்: 98422-69257.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites