இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, April 16, 2012

இன்ப அதிர்ச்சி தரும் இருமடிப் பாத்தி


இன்ப அதிர்ச்சி தரும் இருமடிப் பாத்தி !

இருமடிப் பாத்தி... உழவு, உரம் என்று பலவிதமானச் செலவுகளையும் குறைப்பதோடு, கூடுதலான லாபத்தையும் தரக்கூடிய இயற்கையான ஒரு தொழில்நுட்பம். இதன் பலனை, அனுபவித்துப் பார்த்தவர்களால்தான் சிலாகித்துச் சொல்ல முடியும். இதோ சிலாகிக்கிறார், திருச்சி மாவட்டம், துறையூர் தாலூகா, செங்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவசண்முகம். இவர், வேளாண் பொறியியல் துறையில் உதவிப் பொறியாளராக பணியாற்றிக் கொண்டே... விவசாயத்தையும் கையில் எடுத்திருப்பவர். முக்கியமாக, 'இயற்கை விவசாயக் காதலர்' என்பது குறித்துக் கொள்ள வேண்டிய விஷயம்! ''எனக்கு 4 ஏக்கர் நிலம் இருக்கு. ஒரு ஏக்கரில் நெல் இருக்கு. இரண்டு ஏக்கரில் சின்னவெங்காயம் போட்டிருக்கிறேன். 20 சென்ட் நிலத்தில் மஞ்சள், கருணைக்கிழங்கு போட்டிருக்கிறேன். 5 சென்ட் நிலத்தில் காய்கறி போட்டிருக்கிறேன். ஐந்து வருடமாக இயற்கை விவசாயம்தான்'' என்று முகவுரை தந்த சிவசண்முகம்,

''எப்பவும் வழக்கமான முறையில் பார் பிடித்துதான் வெங்காய நடவு செய்வேன். போன முறை, சோதனை முயற்சியாக... 75 சென்ட் நிலத்தில் மட்டும் இருமடிப் பாத்தி எடுத்து, வெங்காயம் போட்டேன். இயற்கை முறையில் செய்வதால் வழக்கமாக விளைச்சல் நல்லாவேதான் இருக்கும். இந்த முறை இருமடிப் பாத்திங்கற விஷயத்தையும் சேர்த்து செய்ததால்... கூடுதல் மகசூல். இதைப் பார்த்துவிட்டு, சுத்துப்பட்டு விவசாயிகள் அசந்துட்டாங்க. நல்ல நிறமாகவும் திரட்சியாகவும் இருக்கு வெங்காயம். நீர்ச்சத்தும் அதிகமாக இருப்பதால்... அதிக நாளைக்குக் கெட்டுப் போகாமலும் இருக்கும்!

இருமடிப் பாத்தியில் செலவு குறைவு!
வழக்கமான முறையில் வெங்காயம் போடுறப்போது... அதிகளவில் பிண்ணாக்கு, மேலுரம் என்று ஊட்டம் கொடுக்கணும். அதேமாதிரி களை எடுக்கற செலவும் அதிகமாக இருக்கும். இருமடிப் பாத்தி அமைக்கும்போது செலவு குறைவதோடு, வேலையும் குறைவு'' என்றவர், 75 சென்ட் நிலத்திற்க்கான இருமடிப் பாத்தி சாகுபடி முறை பற்றி விளக்க ஆரம்பித்தார். 'தேர்வு செய்த நிலத்தில், முக்கால் அடி ஆழத்துக்கு உழவு ஓட்ட வேண்டும். 20 அடி இடைவெளியில், ஒன்றரையடி ஆழத்தில் தெளிப்புநீர்க் குழாயைப் பதிக்க வேண்டும். தெளிப்புநீர்த் திறப்பான், 3 அடி உயரத்தில் இருக்க வேண்டும். 20 அடி தூரத்துக்கு ஒரு திறப்பான் அமைத்தால் போதும்.

4 அடி அகலம், 25 அடி நீளம், முக்கால் அடி ஆழத்துக்கு மண்ணைப் பறித்து, இருபுறமும் ஒதுக்கி வைக்க வேண்டும். குழியின் உள்ளே கடப்பரையால் குத்தி, மண்ணைக் கிளற வேண்டும். பிறகு, குழிக்குள் பாதி உயரத்துக்கு, கம்பஞ்சக்கை, எள்ளு சக்கை, மக்காச்சோள சக்கை மற்றும் இலை, தழைகள் என அனைத்தையும் போட்டு, அதன் மீது தொழுவுரத்தையும் போட்டு நிரப்ப வேண்டும். அதன்பிறகு, மேல் மண்ணைப் பரப்ப வேண்டும். இப்போது, தரையில் இருந்து முக்கால் அடி உயரத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்கப்பட்டிருக்கும். இதுபோல், இரண்டு அடி இடைவெளியில் வரிசையாகப் பாத்திகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பலதானிய விதைப்பு!
பாத்திகளில் சணப்பு, அவுரி, கம்பு, சோளம், எள், பச்சைப் பயறு, தட்டைப் பயறு உள்ளிட்ட பலதானிய விதைகளை சமவிகிதத்தில் கலந்து விதைக்க வேண்டும். 75 சென்ட் நிலத்துக்கும் சேர்த்து மொத்தமாக, 15 கிலோ விதை தேவைப்படும். அனைத்துப் பாத்திகளுக்கும் பொதுவாக... 10 அடி இடைவெளிக்கு ஒரு விதை வீதம் ஆமணக்கு விதையை ஊன்ற வேண்டும். தொடர்ந்து இருபது நாட்களுக்கு ஒரு முறை 7 லிட்டர் அமுதக்கரைசலை, 70 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியின் மீது தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

அமுதக்கரைசல் மட்டும் போதும்!
இரண்டு மாதங்களில் பலதானியப் பயிர்கள் சுமார் 4 அடி உயரத்துக்கு வளர்ந்திருக்கும். ஆமணக்குச் செடியை தொந்தரவு செய்யாமல், பலதானியப் பயிர்களை மட்டும் வேரோடு பறித்து, பாத்தி முழுவதும் பரப்ப வேண்டும். அதன் மீது கம்பு, எள், மக்காச்சோளச் சக்கைகளைப் போட்டு மூடாக்கு அமைத்து, அரை அடி இடைவெளிக்கு ஒரு விதை வெங்காயம் என்கிற கணக்கில் ஊன்ற வேண்டும். மூடாக்கின் மீது அழுத்திப் பதியுமாறு ஊன்றினால், போதுமானது. பலதானியத்துக்குத் தெளித்தது போலவே, தொடர்ந்து அமுதக்கரைசலைத் தெளிக்க வேண்டும்.
நடவு செய்த ஒரு மாதத்திற்க்குள் களைகள் முளைத்தால், அவற்றைக் கைகளால் நீக்க வேண்டும். அதன் பிறகு பெரும்பாலும் களைகள் முளைப்பதில்லை. நடுவில் நடவு செய்யப்பட்டுள்ள ஆமணக்குச் செடிகள் வெங்காயச் செடிகளை பனி மற்றும் வெப்பத்திலிருந்து காப்பாற்றுகின்றன. தவிர, உதிரும் ஆமணக்கு இலைகள் உரமாகவும் பயன்படுகின்றன. நடவு செய்த 70-ம் நாளுக்கு மேல், சின்ன வெங்காயத்தை அறுவடை செய்யலாம்.''

64 ஆயிரம் லாபம்!
''75 சென்ட் நிலத்திலிருந்து 4,500 கிலோ வெங்காயம் கிடைத்தது. ஒரு கிலோ வெங்காயம், 18 ரூபாய் என்று விற்றதில், 81 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைத்தது. 17 ஆயிரம் ரூபாய் செலவு போக, மீதி 64 ஆயிரம் ரூபாய் லாபம். ஊடுபயிராக போட்டிருந்த ஆமணக்கு மூலமாக 20 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வெங்காயம் அறுவடை முடிந்ததும், பாத்தியோட இரண்டு ஒரத்திலையும் மிளகாய் போட்டேன். ஒரே மாதத்தில் பூ பூத்து காய்க்கத் தொடங்கி விட்டது. இப்போது அதில் கடலையையும் நடவு பண்ணப் போறேன்'' என்றார்.

கோழிக்கால் நோய் இல்லவே இல்லை!
''இருமடிப் பாத்தியை ஒரு தடவை அமைத்தால், வருடக் கணக்காக சாகுபடி செய்துக்கலாம். ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை மூடாக்கை மட்டும் முழுமைப்படுத்தினால் போதும். உழவு, அடியுரம், பார் அமைக்கும் செலவெல்லாம் மிச்சம். பொதுவாக, வெங்காயத்தில் செம்பேன் தாக்குதலும், கோழிக்கால் நோயும்தான் பெரிய பிரச்னை. பெரியளவில் மகசூலை பாதித்துவிடும். ஆனால், மேட்டுப்பாத்தி முறையில் இந்தப் பிரச்சனைகள் கொஞ்சம்கூட இல்லை. அதேமாதிரி மழையால் வரும் பாதிப்புகளும் கம்மிதான். வழக்கமான முறையைவிட, ஏக்கருக்கு 18 ஆயிரம் ரூபாய் செலவைக் குறைச்சிருக்கு இந்த இருமடிப் பாத்தி. இனிமேல் இரண்டு ஏக்கரிலும் இருமடிப் பாத்தி அமைத்துதான் வெங்காயம் பயிர் செய்ய போகிறேன்'' என்றார்

தொடர்புக்கு
சிவசண்முகம்,
செல்போன்: 94433-02650. 

நெல்லியில் இருக்கு... நூறு நுட்பம் !

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites