இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, April 17, 2012

சவுக்கு மூங்கில் பதிமுகம் மலைவேம்பு

கரும்பு, மஞ்சள், தென்னை, வாழை... என்ற பணப்பயிர்கள் பட்டியலில் தற்போது மரப்பயிர்களும் இணைந்து விட்டன. 'விவசாயத்தையே விட்டு விலகலாம்’ என்று நினைப்பவர்களுக்கு மரப்பயிர்கள்தான் வரப்பிரசாதமாக உள்ளன. அதனால்தான் விவரமறிந்த விவசாயிகள், மரப்பயிர் சாகுபடிக்கு மாறி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 'கொங்கு’ குழந்தைசாமி, அவர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் அதிகளவில் மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருப்பவர்களில் ஒருவரும்கூட! ஈரோடு பகுதியில் ஜவுளித் தொழில் செய்து வரும் குழந்தைசாமி, தனது பங்குதாரர்களுடன் சேர்ந்து வாங்கிய தரிசு நிலத்தைப் பண்படுத்தி... பல வகை மரங்கள், கரும்பு, தென்னை... என சாகுபடி செய்து பொன் விளையும் பூமியாக மாற்றியுள்ளார். கொடிவேறி அணைக்கு அருகில் இருக்கிறது இவர்களுடைய 'ஸ்ரீ முருகவேல் பண்ணை’.

திரும்பிய திசையெல்லாம் சிறியதும், பெரியதுமாக பலவகையான மரங்கள் பசுமை காட்டிச் சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு புறம் கரும்பு, இன்னொரு புறம் தென்னை என செழிப்பாகக் காட்சி அளிக்கிறது, அப்பண்ணை. சவுக்கு மர அறுவடைப் பணியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த குழந்தைசாமியை சந்தித்தபோது, ''பாரம்பரியமான விவசாயக் குடும்பம் எங்களோடது. ஆனால், விவசாயம் கட்டுப்படியாகாததால், நான் ஜவுளி ஏற்றுமதித் தொழிலில் இறங்கிட்டேன். இருந்தாலும், 'பெரிய அளவில் லாபகரமாக விவசாயம் செய்யணும்’ என்கிற எண்ணம் எனக்குள்ள ஓடிகிட்டே இருக்கும். அதற்கேற்ற மாதிரியான இடத்தைத் தேடிக்கிட்டிருந்தப்போதுதான் இந்த இடம் அமைந்தது. மொத்தம் 230 ஏக்கர். நாங்க வாங்கும்போது கரடுமுரடாக, ஆடு, மாடு மேய்க்கக்கூட லாயக்கில்லாமல் தரிசாக கிடந்தது. கொஞ்சம், கொஞ்சமாக திருத்தி, விவசாயம் பண்ண ஆரம்பித்தோம். 

ஏழு கிலோ மீட்டரிலிருந்து தண்ணீர் !
230 ஏக்கருக்கும் சேர்த்து ஐந்து போர்வெல்லும், ஒரு கிணறும் இருந்தது. அதை வைத்து, முழு நிலத்துலயும் விவசாயம் செய்ய முடியலை. அதனால், ஆரம்பத்தில், 70 ஏக்கரில் கரும்பும், 40 ஏக்கரில் தென்னையும் போட்டோம். அதற்கேற்ற தண்ணீர் பத்தவில்லை. பண்ணைக்கு ஏழு கிலோ மீட்டர் தூரத்தில் கொடிவேறி அணை இருக்கிறது. அதில் இருந்து பிரியும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலில் இருந்து, 'கசிவு நீர்ப் பாசனத் திட்டம்’ மூலமாக குழாய் வழியாக தண்ணீர் எடுத்து வந்தோம். அதை சேமித்து வைப்பதற்க்காக 60 லட்சம் லிட்டர் பிடிக்கிற அளவிற்க்கு குளம் வெட்டியிருக்கோம். தண்ணீர் கிடைத்ததும், அடுத்தக் கட்டமாக யோசிச்சப்பதான் 'கோயம்புத்தூர் மரம் வளர்ப்போர் சங்கம்’ மூலமாக மரம் வளர்க்கறதுக்கான ஆலோசனை கிடைத்தது. 2006-ம் வருடத்தில் இருந்து, பழனி மலை பாதுகாப்பு சங்கத்திலயும் மேட்டுப்பாளையம் வனவியல் கல்லூரியிலும் கன்னுகளை வாங்கி, கொஞ்சம் கொஞ்சமாக நடவு செய்ய ஆரம்பித்தோம்.

80 ஏக்கர் நிலத்தில் 35 ஆயிரம் மரங்கள் !
13 ஏக்கரில் 22 ஆயிரத்து 672 சவுக்கு; ஏழரை ஏக்கரில் 1,044 தைல மரங்கள்; 17 ஏக்கரில் ஆயிரம் பதிமுகம்; 15 ஏக்கரில் 6 ஆயிரத்து 900 மலைவேம்பு; 12 ஏக்கரில் 3 ஆயிரத்து 120 முள்ளில்லா மூங்கில்; 5 ஏக்கரில் 1,280 நாட்டுவாகை; 6 ஏக்கரில் 1,500 மகோகனி; 2 ஏக்கரில் 200 செஞ்சந்தனம்; 1 ஏக்கரில் 200 குமிழ்; ஒன்றரை எக்கரில் 200 பென்சில் மரம் என்று நடவு செய்திருக்கோம். இதுபோக ஊடுபயிராக மரங்களுக்குள்ளாறவும், வரப்பு, வாய்க்கால் என்று மிச்சம் இருக்கும் இடங்களில் எல்லாம் சேர்த்து 50 சிசு, 100 ஈட்டி, 200 குமிழ், 50 பாப்புலர் (பிளைவுட் தயாரிக்க பயன்படும்), 10 சந்தனம், 5 ஒளிவேறி மரம் என்று 15 வகையான மரங்கள் நட்டிருக்கிறோம். மொத்தத்தில் 80 ஏக்கரில் 38 ஆயிரம் மரங்களுக்கு மேல் இருக்கு. எல்லாத்துக்கும் சொட்டுநீர்ப் பாசனம்தான்'' என்றார். 

தண்ணீர் கண்டிப்பாகத் தேவை !
''மரம் சாகுபடிக்கு தண்ணீர் தேவையில்லை என்றுதான் நிறைய பேர் நினைக்கறாங்க. ஆனால், அது தப்பு. தண்ணீர் இல்லாமல் மரம் வளர்க்கவே முடியாது. எந்த மரமாக இருந்தாலும், கண்டிப்பாக ஐந்து வருடம் வரைக்கும் தண்ணீர் கொடுக்கணும். 'மழையை மட்டும் நம்பி வளர்க்கலாம்’ என்று நினைத்தால், எதிர்பாக்கும் மகசூல் எடுக்க முடியாது. கேரளாவில் வருடத்திற்க்கு ஒன்பது மாதம் மழை பெய்யும். அதனால் அங்கு வேண்டுமானால்  தண்ணீர் பாய்ச்சாமல் மரம் வளர்க்க முடியும். தமிழ்நாட்டில் முடியவே முடியாது.

சொட்டு நீர்ப் பாசனம் நல்லது !
நாங்க, ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை, அதாவது பருவ மழை ஆரம்பிக்கறதுக்கு முன், ஒவ்வொரு மரத்திற்க்கும் மூன்று கிலோ ஆட்டு எரு அல்லது ஒரு கிலோ கோழி எரு கொடுத்துடுவோம். அதோட மரத்தில் இருந்து உதிரும் இலைகளும் மட்கி உரமாயிடும். வருடத்திற்க்கு ஒரு முறை மரங்களைக் கவாத்து பண்ணிடுவோம். ஓரளவுக்கு மரம் வளர்ந்ததுக்கு பிறகு கவாத்து செய்வதை நிறுத்திடுவோம். வாய்க்கால் பாசனத்தைவிட சொட்டுநீர் முறையில் மரங்கள் நன்றாக வளர்கிறது''
650 டன் சவுக்கு, 300 டன் தைல மரம் !
''இப்போ, சவுக்கு, தைல மரங்களை அறுவடை பண்ணிக்கிட்டிருக்கோம். சவுக்கு மரம் டன் 2 ஆயிரத்து 500 ரூபாய் என்று விலை பேசி 50 டன் வரை விற்றிருக்கிறோம். ஏக்கருக்கு சராசரியாக 50 டன் மகசூல் கிடைக்கிறது. மொத்தம் 13 ஏக்கரிலும் சேர்த்து 650 டன் மரம் கிடைக்கும். அதை விற்கும்போது, 16 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். தைல மரத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் கிடைக்கிறது. ஏழரை ஏக்கரில் 300 டன் மரத்திற்க்கு மேல் கிடைக்கும். இப்போது ஒரு டன் 2 ஆயிரத்து 50 ரூபாய் என்று பேப்பர் மில்காரங்க எடுக்கறாங்க. இது மூலமாக 300 டன் மரத்திற்க்கு 6 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.

மலைவேம்பில் 50 லட்சம் !
மூங்கிலும், மலைவேம்பும் அறுவடைக்குத் தயாராக இருக்கு. மூங்கிலில் ஏக்கருக்கு சராசரியாக 12 டன் கணக்கில் 12 ஏக்கருக்கும் சேர்த்து 144 டன் மரம் கிடைக்கும். 1 டன் குறைந்தது 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்க்கும். அந்தக் கணக்கில், 4 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் கிடைத்துவிடும். மலைவேம்பில், ஏக்கருக்கு சராசரியாக 1,600 கன அடி மரம் கிடைக்கும். 13 ஏக்கரில் இருந்து குறைந்தது 20 ஆயிரம் கன அடி மரம் கிடைக்கும். ஒரு கன அடி 250 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலே, மொத்தம் 50 லட்ச ரூபாய் கிடைத்துவிடும். 

உத்தேசக் கணக்கல்ல... உண்மைக் கணக்கு !
அடுத்த வருட ம் பதிமுகத்தை அறுவடை செய்யலாம். எப்படியும் ஏக்கருக்கு 5 டன்னுக்குக் குறையாமல் கிடைக்கும். 17 ஏக்கரில் இருந்து 85 டன் வரைக்கும் மரம் கிடைக்கும். ஒரு டன் 50 ஆயிரம் ரூபாய் என்று வைத்துக்கிட்டாலே, 42 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மற்ற மரங்கள் எல்லாம் அறுவடைக்கு வர இன்னும் நாள் ஆகும். அதனால் அந்தக் கணக்கையெல்லாம் இப்போது பார்க்க வேண்டாம். கண்ணு முன்னால் விளைந்து, விற்பனையாகிட்டு இருக்கறதை மட்டும் வைத்து கணக்குப் போட்டாலே... மொத்தம் 80 ஏக்கரில் இருந்து, ஒரு கோடியே 19 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.

ஆரம்பத்தில் சொட்டு நீர் அமைப்பு போடுவதற்க்காக 20 லட்ச ரூபாய் செலவாச்சு. அதன்பிறகு, உரம் வைப்பது, கவாத்து பண்றது, பராமரிப்பு...என்று இந்த ஐந்து வருடத்தில் மொத்தம் 36 லட்ச ரூபாய் செலவாகியிருக்கு. இதைக் கழித்தால், 83 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் நிகர லாபம். நான் உத்தேசமாக பேப்பரில் கணக்குப் போட்டுச் சொல்லலை. இப்போது, நேரடியாக பார்க்க முடியும். இனிமேல் மற்ற மரங்களுக்கு உரம் வைக்கிறது, பராமரிப்பு மட்டும்தான் செலவு. கவாத்து பண்ண வேண்டியிருக்காது. அதனால் அதையெல்லாம் அறுவடை பண்ணும் போது இன்னும் அதிக லாபம் கிடைக்கும். 'அதிக விலை கிடைக்குதே'னு நிலத்தை விக்க ஆசைப்படாம, மரங்களை வெச்சு விட்டா... அந்த நிலத்தோட மதிப்பைவிட அதிகமான வருமானத்தை மரம் கொடுத்துடும். மரம் என்னிக்கும் விவசாயிகளை ஏமாத்தவே ஏமாத்தாது'' என்று நெகிழ்ச்சியாகச் சொன்ன குழந்தைசாமி...

இனம் காக்கும் வனம் !
''நாங்க வியாபார நோக்கத்துலதான் மர சாகுபடியை ஆரம்பிச்சோம்.ஆனா, அதுக்கப்பறம் 'பசுமை விகடன்’ மூலமாவும், மரங்கள் பத்தின கருத்தரங்குகள் மூலமாவும் நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டோம். அதுல எங்களுக்கு விழிப்பு உணர்வு கிடைச்சிருக்கு.வருமானம் கிடைக்கறது இல்லாம, புவி வெப்பம் குறைத்தல், மழை ஈர்ப்பு, பல்லுயிர் பெருக்கம்னு மனிதகுலத்தை வாழ வைக்கறதுக்கு நாங்களும் கொஞ்சம் பங்களிக்கிறோம்கிறது எங்களுக்குப் பெருமையான விஷயம்.அதனால, கடம்பு, தேக்கு, வேங்கை, பூவரசன் மாதிரியான நாட்டுமரங்களை நடவு செஞ்சு 'அழியா வனம்’ உருவாக்குறத் திட்டமும் வெச்சுருக்கோம்'' என்றபடி விடை கொடுத்தார். சிலுசிலுக்கும் பசுமையை நுகர்ந்தபடியே புறப்பட்டோம்!

தொடர்புக்கு
'கொங்கு’ குழந்தைசாமி,
செல்போன்:  98427-43535.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites