இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, March 30, 2012

அரிய மண் வர்த்தகத்தில் சீனாவின் ஆதிக்கம்

மிக அருமையாகக் கிடைப்பதால் சில தனிமங்களும் (Elements)உலோகங்களும் (Metals) அரிய மண் (Rare Earth) என்ற சொற்கள் மூலம் குறிப்பிடப்படுகின்றன. Rare என்றால் அரிய. Earth என்றால் மண் என்று பொருள்.
அரிய மண் தனிமங்களும் உலோகங்களும் எண்ணிக்கையில் பதினேழாக (17)இருக்கின்றன. இவற்றுள் ஸ்கன்டியம்(Scandium) இற்றியம் (Yttrium) என்பனவும் அடங்கும். சுவீடன் நாட்டின் இற்றார்பி (Ytterby) என்ற கிராமத்தில் இவை முதன் முதலாக நிலத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டன.
இதன் காரணமாக இந்தப் பதினேழு தனிமங்கள் உலோகங்கள் ஆகியவற்றின் பெயர்கள் இந்தக் கிராமத்தோடு தொடர்புடையவையாக இருக்கின்றன. 1948ம் ஆண்டு வரை உலகின் அரிய மண் தேவையை இந்தியாவும் பிறேசிலும் பூர்த்தி செய்தன. 1950களில் தென்னாபிரிக்கச் சுரங்கங்களில் இருந்து அவை பெறப்பட்டன.
1980களில் அமெரிக்க மாநிலம் கலிபோர்னியா மவுன்ரின் பாஸ் (Mountain Pass) அரிய மண் சுரங்கங்கள் உலகின் அரிய மண் தேவையைப் பூர்த்தி செய்தன. இன்று நிலவரம் மாறிவிட்டது. உலகின் முழு அரிய மண் தேவையில் 97 விழுக்காட்டை சீனா வழங்குகிறது.
நவீன தொழில் நுட்பத்தில் என்றும் இல்லாதவாறு அரிய மண் தேவைப்படுகிறது. இதன் காரணமாகச் சீனா ஒரு ஆதிக்க நிலையில் இருக்கிறது. அரிய மண் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தும் சீனா தனக்குச் சாதகமான அரசியல் இராசதந்திர, வர்த்தக முன்னெடுப்புக்களை எளிதாக நிறைவேற்றுகிறது.

விண்வெளித் துறையில் (Aerospace) செய்மதிகள், ஒடங்கள், கட்டுமானங்கள், ஆய்வுகூடங்களுக்கு அரிய மண் அவசியம் தேவைப்படுகிறது. லேசர் கருவிகள், நுண் அலைக் கதிர் வடிகட்டிகள் (Micro wave Filters) படப்பிடிப்புக் கருவி ஆடிகள், அதியுயர் பிரதிபலிப்பு ஆடிகள் (High refraction Glasses), ஜபொட் போன்ற நவீன தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றின் தயாரிப்பிற்கு அரிய மண் மூலப் பொருளாக அமைகிறது. ஸ்மாட்போன்கள் (Smartphones) அரிய மண் இல்லாமல் தயாரிக்க முடியாது.
அதியுயர் தொழில் நுட்பக் கருவிகளான சுப்பர் கடத்திகள் (Super conducters), எக்ஸ் கதிர் குழாய்கள் (X ray Tubes),நெடுந்தூர ஏவுகணைப் பாகங்கள், ஸ்கான் கருவிகள், காற்றாடி மின்சாரம் தயாரிக்கும் எந்திரங்கள் போன்றவற்றின் தயாரிப்பிற்கும் அரிய மண் உலோகங்களும் தனிமங்களும் தேவைப்படுகின்றன.
புதிய தலைமுறை மோட்டார் வாகனங்கள் மின்கல மின்சாரத்திலும் எரிபொருளிலில் இயங்கும் எந்திரத்திலும் மாற்றி மாற்றி ஓடுகின்றன. இவை ஹைபிறிட் (Hybrid) வாகனங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஜப்பான் நிறுவனங்கள் தொயோட்டா (Toyota) ஹொன்டா (Honda) இந்த ரகக் கார்களைத் தயாரிக்கின்றன.
எரிபொருள் சேமிப்பு, சுற்று சூழல் பாதுகாப்பு ஆகிய காரணங்களுக்காக இந்த ரக வாகனங்கள் பெரும் சந்தை வாய்ப்பை பெற்றுள்ளன. அவற்றின் தயாரிப்பிற்கு அரிய மண் உலோகங்களும் தனிமங்களும் அவசியம் தேவைப்படுவதால் எதிர்வரும் காலத் தரை வாகனங்களின் வடிவமைப்பில் சீனாவின் கையோங்கும் நிலை இருக்கிறது.
இன்று அரிய மண் உலோகங்களையும் தனிமங்களையும் பெருமளவில் பாவிக்கும் நாடாக ஜப்பான் இடம் பெறுகிறது. ஜப்பான் இந்த அடிப்படையில் சீனாவில் தங்கி வாழும் நாடாக இருக்கிறது. சென்ற வருடம் தனது கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த சீன மீன் பிடிக் கப்பலை ஜப்பான் தடுத்து வைத்தது.
ஜப்பானுக்கான அரிய மண் ஏற்றுமதியை சீனா இதற்குப் பதிலடியாக நிறுத்தியது. உடனடியாக சீனக் கப்பலை ஜப்பான் விடுவித்தது. உலகின் அரிய மண் தேவை உயர்வதால் அவற்றின் ஏற்றுமதியை சீனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு விலையையும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக அரிய மண் உற்பத்தியை வேகமாக தொடங்க வேண்டிய நிலையில் தொழில் நுட்ப நாடுகள் இருக்கின்றன.
மத்திய அவுஸ்திரேலியா, தெற்கு கனடா, வியற்நாம், மலேசியா போன்ற நாடுகளில் அரிய மண் வகைகள் இருக்கின்றன. உடனடியாக உற்பத்தியைத் தொடங்க முடியாத காரணத்தால் தொடர்ந்து சீனாவில் தங்கியிருக்க வேண்டியுள்ளது. அரிய மண் வகைகள் சிலவற்றில் றேடியம் (Radium) மற்றும் தோறியம் (Thorium) இருக்கும் காரணத்தால் மக்கள் ஆரோக்கியத்திற்கும் சுற்றுச் சுழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அரிய மண் கதிர் வீச்சினால் பாதிக்கப்பட்டோர் புற்று நோய் தாக்கத்துக்கு உட்படுகின்றனர். குழந்தைகள் உடற் குறைபாடுகளுடன் பிறக்கின்றன. தயாரிப்பின் போதும் கழிவுகளை கொட்டும் போதும் மேற்கூறிய ஆபத்துகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் ஆகியவை மிகவும் இறுக்கமான உற்பத்தி விதிமுறைகளை அமுல் படுத்துகின்றன. சீனாமீது அந்த வகைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்துவது கடினம் மாத்திரமல்ல இயலாததும் கூட.
பாவித்த அரிய மண் மறுசுழற்சியை ஜப்பான் அண்மையில் தொடங்கியுள்ளது. செலவு மிக அதிகம் என்றாலும் ஜப்பான் மறுசுழற்சிக்கு முன்னுரிமை கொடுத்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மேற்கு நாடுகள் சீனா மீது சில பாரிய குற்றச்சாட்டுக்களைச் சுமத்தின.
இதற்குப் பதிலடியாகச் சீனா அரிய மண் ஏற்றுமதியை மட்டுப் படுத்தியது. அமெரிக்காவும் ஜரோப்பிய ஒன்றியமும் குற்றச் சாட்டுக்களை மீளப் பெற்றுள்ளன. மிகவும் விலை உயர்ந்த பொருளாக அரிய மண் இடம் பெறுகிறது நவீன தொழில் நுட்பத்தின் மூலப் பொருளாக இருப்பதால் சீனாவுக்கு அதியுயர் செல்வாக்கு இருக்கிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites