இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

செடி வளர்ப்பில் செல்வம்

அழகு, பயன் தரும் செடிகளை வளர்க்க அனைவரும் விரும்புகிறார்கள். வீடு, நிறுவனங்களில் இவை முக்கிய இடம் பிடிப்பதால் செடிகளுக்கு நல்ல கிராக்கி உள்ளது. செடி வளர்க்கும் முறையை கற்றுக் கொண்டு நாற்றுப்பண்ணை (நர்சரி) நடத்தினால் நல்ல லாபம் பார்க்கலாம் என்கிறார் கோவையில் ரோஜா ராஜா நர்சரி கார்டன் நடத்தி வரும் விஜயகுமார். அவர் கூறியதாவது: கோவையில் விளம்பர நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தபோது அழகு செடிகளுக்கான தேவை அதிகம் உள்ளது குறித்து அறிந்துகொண்டேன். 10 ஆண்டுகளுக்கு முன் கோவை அவிநாசி சாலையில் நாற்று பண்ணை தொடங்கினேன். முதலில் குறைந்த விலையுள்ள அழகு, பழ செடிகளை விற்றேன். பின்னர் படிப்படியாக அனைத்து வகை செடிகளையும் விற்க தொடங்கினேன். ஒரு செடியை ரூ.1 லட்சம் வரை கொடுத்து வாங்க பலர் தயாராக இருக்கிறார்கள். ரோஜா உள்ளிட்ட மலர்செடிகள், புல் வகைகள், லில்லி, தாமரை, ஆர்கிட்ஸ், அந்தூரியம், சைக்கஸ் பல்வேறு வகை செடிகளை விற்கிறோம்.

புதுவகை செடிகளை கேட்கும் வாடிக்கையாளர்களுக்கு உலகின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைத்து தருகிறோம். திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச நாற்று பண்ணையை தொடர்பு கொண்டு ஒரு மாதத்தில் செடியை வாங்கி கொடுப்போம். ஆண்டு முழுவதும் தங்கு தடையின்றி செடிகளை விற்று வருகிறோம். தாவரங்கள் பற்றிய அடிப்படை விஷயங்களை ஓரளவு தெரிந்து கொள்வது செடி வளர்ப்புக்கு அவசியம். மாதம் அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.
பூந்தொட்டிகள்: பூந்தொட்டிகள் அதிக எண்ணிக்கையில் வாங்க வேண்டும் என்றால் சிவகங்கை, மானா மதுரை பகுதிகளில் மண்பாண்டம் உற்பத்தியாளர்களிடம் வாங்கலாம். கொய்யா, நெல்லி, சப்போட்டா ஆகியவை ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியிலும், பெரிய குளத்திலும், மல்லி செடி மதுரையிலும், பாதையோர வேலி செடிகள், வண்ண மலர் கொடிகள், பல்லாண்டு காலம் பூக்கும் குத்து செடிகள், கல்வாழை, டாலியா, லில்லி, சம்பங்கி, சவுக்கு, காகிதப்பூ, பைன், குப்ரசுஸ், வைரோஸ்டீஜியா, வெட்ரியாவாலிபிலிஸ், முல்லை, மல்லி, காகிதப்பூ, நறுமணம் நிறைந்த செடிகள், அழகான இலை அமைப்பு கொண்ட செடிகளை கேரளா, கர்நாடகா, வடமாநிலங்களில் வாங்கலாம்.

வளர்க்கும் முறை

ஆர்கிட், அந்தூரியம் ஆகிய செடிகளை குறிப்பிட்ட வெப்பநிலையில் பாலிஹவுசில் தான் வளர்க்க வேண்டும். செம்மண், மணல் சிறிதளவு சேர்த்து தொழு உரம், தென்னை நார்க்கழிவு மண், மண்புழு உரம் ஒரே அளவு சேர்த்து செடி வைத்தால் 45 நாட்களில் வேர் பிடித்து விடும். வெயில் அதிகம் படாத வகையில் நிழல் வலையில் வைக்க வேண்டும். செடி அதிகம் வளராமல் இருக்க குறிப்பிட்ட சில தினங்களுக்கு ஒரு முறை கிளைகளை வெட்டி விட வேண்டும். கோடை காலத்தில் காலை, மாலை வேளைகளில் முறையாக தண்ணீர் விட்டு பராமரிக்க வேண்டும். பகல் பொழுதில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது. ரோஸ் செடிகளை வெயிலில் வைக்க வேண்டும்.
பூச்செடிகளுக்கு மறைமுக வெயில் தேவை.

25 தினங்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், இயற்கை உரம், வேப்பம்புண்ணாக்கு சமஅளவு கலந்து உரமிட வேண்டும். செடிகளில் தண்ணீர் ஈரப்பதம் எப்போதும் இருக்க வேண்டும். கோடை காலத்தில்தான் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மழைக்காலத்தில் செடிகள் செழிப்பாக இருக்கும். நோய் இருந்தால் கிளைகளை வெட்டி வெயில் இல்லாத நேரங்களில் மருந்து தெளிக்க வேண்டும். பூந்தொட்டிகளை குறிப்பிட்ட தினங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.  அழகு செடிகளைப் பயிர் பெருக்கம் செய்வதற்கு தண்டு துண்டு முறை, பதியம் போடுதல், பாகம் பிரிப்பு, மொட்டு கட்டுதல், ஒட்டு கட்டுதல் போன்ற முறைகளை கையாளலாம்.

பதியம் போடுதல்: கார்னேஷன், செவ்வந்தி, ரோஜா, கொய்யா, மாதுளை, எலுமிச்சை, மேற்கிந்திய செர்ரி, லிட்சி, குரோட்டன்ஸ், ரம்பூட்டான், கறிப்பலா போன்றவை இம்முறையில் வளரக் கூடியவை.

தண்டு துண்டு முறை:  திராட்சை, மாதுளை, பேரி, மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், லோக்வட், அத்தி, கிவி கறிப்பலா.

ஒட்டு கட்டுதல்: பெருநெல்லி, மா, சப்போட்டா, பலா, துரியன், ஆப்பிள், பேரி, வெண்ணெய் பழம், மேற்கிந்திய செர்ரி, சீதாப்பழம், ரம்பூட்டான், பெர்சிமன், ஆப்ரிகாட், லோக்வட்.

மொட்டு கட்டுதல்: அழகுச் செடிகளில் ‘ஜி’ வடிவ மொட்டு அல்லது ‘கேடய’ மொட்டு முறையில் பெருநெல்லி, இலந்தை, ஆரஞ்சு, சாத்துக்குடி, பீச், ப்ளம், வெண்ணெய் பழம், லிட்சி, லோக்வட், ஆப்ரிகாட் ஆகியவற்றை பெருக்கம் செய்யலாம்.

இதற்கான ஆலோசனைகளை வேளாண் பல்கலைக்கழகம் அல்லது வேளாண்துறையின் தோட்ட கலைத்துறையில் பெறலாம்.

கட்டமைப்பு, முதலீடு

செடிகளை வளர்க்க 4 சென்ட் இடம். அவற்றை வெயிலில் இருந்து பாதுகாக்க நிழல் வலைக்கூண்டு அமைக்க ரூ.40 ஆயிரம். பனிக்கூடாரம் அமைக்க ரூ.50 ஆயிரம். பூக்கும் செடிகளுக்கான மறைமுக வெயில் தரும் கூடாரம் ரூ.30 ஆயிரம். பூந்தொட்டிகள் 200. பூச்செடிகளை வைக்க பாலிதீன் கன்டெய்னர் தேவைக்கு ஏற்றவாறு வாங்க ரூ.12 ஆயிரம். செடிகளை வெட்ட கத்தரிக்கோல் உள்ளிட்ட கருவிகள், இடத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலி, மண் சமப்படுத்தும் கருவி, தண்ணீர் இறைக்கும் மோட்டார், பைப் என மொத்தம் ரூ.2 லட்சம் தேவை. பல்வேறு வகை செடிகளுக்கு ஆரம்ப முதலீடு ரூ.10 ஆயிரம். மிக அதிக விலையுள்ள செடிகளை ஆர்டரின் பேரில் வாங்கி கொடுத்தால் போதும். செடிகள், 2 தொழிலாளர்களுக்கான மாத சம்பளம், மின் கட்டணம், உரம், இட வாடகை, போக்குவரத்து செலவுக்கு என மாதம் செலவு ரூ.30 ஆயிரம். செடிகள் டெலிவரி செய்ய சிறு வாகனம் ஒன்று இருந்தால் நல்லது. இத்தொழிலுக்கு தேசிய தோட்டக்கலை இயக்குனரகத்தில் மானியத்துடன் கடன் பெற முடியும்.

லாபம் எவ்வளவு?

புங்கம், புன்னை, குல்மோகன், வாகை, சரக்கொன்றை, தான்றிக்காய், பெல்லாரி போன்றவற்றுக்கான விதைகளை விதைப்பண்ணை மற்றும் வேளாண் பல்கலை.யில் பெறலாம். 2 மாதம் வளர்த்து ரூ.50க்கு  விற்கலாம். இதில் ஒரு செடியில் ரூ.15 முதல் ரூ.18 வரை லாபம் கிடைக்கும். கிறிஸ்துமஸ் மரம் ரூ.450க்கும், கொய்யா, நெல்லி, மெர்ரி, பலா, சைனா ஆரஞ்சு ரூ.250 முதல் ரூ.300க்கும், கேன்சரை கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட சைக்கஸ் செடி ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கலாம். ரோஸ் செடிகளை ரூ.20 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யலாம். சிவப்பு, வெள்ளை, மெரூன், பிங்க், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் கிரிம்சன் கலர்களில் ரோஜா செடிகள் கிடைக்கும். ரோஜா செடிகளை பெங்களூரில் விலைக்கு வாங்கி விற்கும் போது ஒரு செடிக்கு ரூ.8 முதல் ரூ.20 வரை லாபம் கிடைக்கும். இல்லாவிட்டால் நாமே பதியம் செய்து ரோஜா செடிகளை உற்பத்தி செய்து விற்கலாம். இவ்வாறு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். பேச்சபோடியம் என்ற ஒரு வகை கிழங்கு செடி ரூ.25 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இதில் 30 சதவீத லாபம் கிடைக்கும்.

பேர்ட் ஆப் பாரடைஸ் அழகு வகை செடியை ரூ.200க்கு வாங்கி அதிக உயரம் வளர்த்து பக்குவப்படுத்தி விற்றால் ரூ.5 ஆயிரம் வரை விற்கலாம். ஆனால் இது கிடைப்பது அரிது. எலுமிச்சை, பெருநெல்லி, ஆரஞ்சு, சீதாப்பழம், துரியன், லிட்சி, மங்குஸ்தான், மேற்கிந்திய செர்ரி, தாட்பூட் பழம், பிளிம்பி கெரம்போலா கரோனடா, சோக்வர், பால்ஸா போன்றவைகளுக்கு விதை தேவை. இதற்கான விதை வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் விதை பண்ணைகளில் கிடைக்கும்.  எலுமிச்சை விதை 10 கொண்ட பாக்கெட் விலை ரூ.50. செடிகளாக்கி விற்பனை செய்தால் ஒரு செடியை ரூ.200 முதல் ரூ.400 வரை விற்கலாம். செடியின் உயரம் மற்றும் எலுமிச்சை காய் விடுதல் வளர்ச்சியை பொருத்து செடியை அதிக விலைக்கு விற்கலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites