இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 6, 2015

பீட்ரூட்

உயிரினங்களுக்கு அடிப்படை ஆதாரம் மண். மண் இயற்கை நமக்கு கொடுத்த அருட்கொடை. பயிரின் நல்ல சீர்மிகு விளைச்சலுக்கு வளமான மண் அவசியம். பயிரின் வளர்ச்சிக்கும், மகசூலுக்கும் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் மண்ணில் இருந்து கிடைப்பதால் பயிர் தனக்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள மண்ணின் வளத்தை உயர்த்தி, பெருக்கி பாதுகாத்து பராமரிக்க வேண்டியது விவசாயிகளின் கடமை. பல்வேறுவகைகளில் மண் இருந்தாலும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு விதமான காய்கறிகள் ஏற்புடையதாக இருக்கின்றன. காய்கறிகள் பல மண்ணிற்கு மேல் விளைபவையாகவும் சில மண்ணிற்கு கீழ் விளைபவையாகவும் இருக்கின்றன.
மண்ணிற்கு கீழ் விளைபவை அனைத்தும் பொதுவாக கிழங்கு வகைக் காய்கள் என சொல்லப்பட்டாலும் கேரட், முள்ளங்கி, டர்னிப், பீட்ரூட் போன்றவை வேர்க்காய்கறிகளாகும். இந்த வேர் காய்கறிகள் குளிர்பகுதி காய்கறிகளாக இருந்த போதிலும், மித வெப்பநிலை பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகின்றது.

சீனப்பொடியேசி குடும்பத்தைச் சேர்ந்த பீட்ரூட் மலைப்பகுதியிலும், சம வெளிப்பகுதியிலும் சாகுபடி செய்யப்படுகின்ற வேர்க்கிழங்கு காய்கறியாகும். இதன் வேர் கிழங்கு சர்க்கரை சத்து மிகுந்து சிவப்பாக காணப்படும். இதன் இலைகளையும் சமைத்து உண்ணலாம். களிமண் நீங்கலாக எல்லாவகை மண் வகைகளிலும் பீட்ரூட் வளரக் கூடியது என்றாலும் மிருதுவான மணற்பாங்கான தோட்ட மண் பீட்ரூட் சாகுபடிக்கு ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை pH 6 முதல் 7 ஆக இருத்தல் நல்லது. வெப்பநிலை 18o C முதல் 25o C வரை இருந்தால் வளர்ச்சி சீராக இருக்கும்.
பீட்ரூட் பயிரின் ஆணிவேர் பருத்து கிழங்கு போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்த வேர்ப்பகுதிதான் நாம் சமைத்து உண்ணும் பகுதி. இதன் இலைகளையும் கீரையாக சமைத்து உண்ணலாம். இதைத் தவிர பீட்ரூட் உணவிற்கு இயற்கையான வண்ணமூட்டியாகவும் இருக்கின்றது. அத்துடன் மருத்துவதிற்கும் உதவி புரிகின்றது. இதனை தமிழில் செங்கிழங்கு எனவும், அக்காரக் கிழங்கு எனவும் அழைப்பார்கள். ஆனாலும் ஐரோப்பாவில் பெரிதும் விரும்பி உன்ணப்பட்டு வரும் பீட்ரூட் பெரும்பாலும் தமிழிலும் அவ்வாறே அழைக்கப்படுகிறது.
100 கிராம் சமைத்த பீட்ரூட்டில் என்னென்ன சத்துக்கள் உள்ளன?
சக்தி 43 கிலோ கலோரி
மாவுப்பொருள் 9.96 கி
சர்க்கரை 7.96
நார்சத்து 2.0 கி
கொழுப்பு 0.18 கி
புரதம் 1.68 கி
வைட்டமின்கள்
வைட்டமின் A 2%
B1 3%
B2 2%
B3 2%
B5 3%
B6 5%
வைட்டமின் C 4%
நுண் சத்துக்கள்
சுண்ணாம்பு 2%
இரும்பு 6%
மக்னீஷியம் 6%
மங்கனீசு 14%
பாஸ்பரஸ் 5%
பொட்டாஷியம் 6%
சோடியம் 5%
துத்தநாகம் 4%
இத்தனை சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை சாலட் உணவிலும், சூப்பிலும் பெரிதும் சேர்க்கின்றனர். ஐஸ்க்ரீம், ஜெல்லி, தக்காளி சாஸ் போன்றவை நன்கு சிவந்த நிறமாக வருவதற்கு பீட்ரூட் இயற்கை நிறமூட்டியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆழந்த பர்பிள் கலந்த சிவப்பு நிறத்தை உடைய பீட்ரூட் பச்சையாக, வதக்கி, வறுத்து, வேகவைத்து உணவாக உட்கொள்ளப்படுகின்றது. கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் பீட்ரூட் ‘சூப்’ மிகவும் பிரபலம். நீராவியில் வேக வைத்தே, நேரடியாக வேக வைத்தோ பீட்ரூட் இலைகள் கீரைகள் போன்று பல்வேறு விதங்களில் சமைத்து உண்ணப்படுகின்றது. பீட்ரூட் சாறு உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது.

பீட்ரூட்டில் இருக்கும் பீட்டானின் எனும் சிவப்பு நிற நிறமியை மனித உடலினால் உடைத்து ஜீரணிக்க இயலாது. அதனால் பீட்ரூட் உணவு அருந்திய பின் வெளியேறு சிறுநீர், மலம் போன்ற கழிவுகளில் பீட்டானின் சிவப்பு காணப்படும். பீட்ரூட் சாற்றை அருந்தும் போது அதிலுள்ள நைட்ரேட் உப்புகள் உமிழ் நீருடன் வேதிவினை புரிந்து நைட்ரைட் உப்புகளாக மாறி நமது ரத்த நாளங்களுக்குள் உட்புகுந்து, அங்கு பிராண வாயுக்களின் பற்றாக்குறையை போக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கி மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவை அதிகரிக்கின்றது.
கி.மு 800-ம் நூற்றாண்டில் உலக பேரதிசயங்களில் ஒன்றான பாபிலோனின் தொங்கும் தோட்டங்களில் பீட்ரூட் காணப்பட்டதாக வரலாற்று நடுகல் சொல்கின்றன. கிரேக்க தெய்வமான அப்பல்லோவின் கோவிளிலும் பீட்ரூட் காணப்பட்டதாம். சரித்திரத்தினை பின் நோக்கிப் பார்க்கும் போது பீட்ரூட் இப்போதைக்கு இருக்கும் உருண்டையான தோற்றத்தில் இல்லையாம். ஒல்லியாக நீளமாக இருந்தததாம். இப்போது நாம் உபயோகிக்கும் உருண்டை வடிவமான பீட்ரூட் ஜெர்மனியிலும், இத்தாலியிலும் உருவாக்கப்பட்டவை ஆகும். 19-ம் நூற்றாண்டில் மத்திய, வடக்கு ஐரோப்பாவில் பீட்ரூட் ஒரு பிரபலமான உணவு. நமக்கு பீட்ரூட் ஒரு இங்கிலீஷ் வெஜிடபிள் தான். வந்தேறியாக இருந்தாலும் இன்று இந்திய சமையலைகளில் பீட்ரூட் பிரதானமானதொரு இடத்தை பிடித்துள்ள வேர்க்கிழங்குதான்.

டெட்ராய்ட் டார்க் ரெட், கிரிம்சன் குளோப், ஏர்லி ஒண்டர், ஊட்டி-1, ரெட் பால், கிஸ்பி எகிப்தியன் போன்ற ரகங்கள் அதிக விளைச்சலை கொடுக்கக் கூடியது. பீட்ரூட் வளர அதன் வளர்ச்சி காலம் முழுவதும் சீரான மண் ஈரம் இருப்பது அவசியம். இதற்கு சுமார் 300 மி.மீ அளவிற்கு தண்ணீர் தேவைப்படும். பீட்ரூட் சாகுபடிக்கு மண்ணை உழவு செய்யும் போது ஏக்கருக்கு 12 மெட்ரிக் டன் அளவிற்கு மக்கிய தொழு உரம் இட வேண்டும். மேலும் அடியுரமாக 35 கிலோ தழைச்சத்து 110 கிலோ மணிச்சத்து மற்றும் 70 கிலோ சாம்பல் சத்து ஆகிய்வற்றை இடவேண்டும். விதைத்த 25 நாட்களுக்குப் பிறகு மேலுரமாக 35 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.
பீட்ரூட் சாகுபடிக்கு ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் ஏற்ற பட்டமாகும். மண் மிக மிருதுவாக பொடி பொடியாக இருக்குமாறு 2-3 முறை உழுது பண்படுத்த 30 செமீ இடைவெளியில் பார்கள் பிடிக்க வேண்டும். பார்களில் செடிக்க செடி 10 செ.மீ இடைவெளியில் விதைகள் நடவு செய்யவேண்டும். பீட்ரூட் விதை 1 அல்லது அதற்கு மேல் விதைகளைக் கொண்ட விதைப்பந்தாக இருக்கும். ஒரு விதைப் பந்திலிருந்து இரண்டு மூன்று செடிகள் முளைத்து வருவது இயல்பு. தேர்வு செய்த ஒரு செடியை மட்டும் விட்டுவிட்டு மற்ற செடிகளை அகற்றி விட வேண்டும். விதைத்த 20 வது நாள் குத்துக்கு ஒரு செடி மட்டும் இருக்குமாறு மற்றவைகளை கலைத்து விடுவது என்பது மிகவும் முக்கியமான பின் செய் நேர்த்தி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். களையெடுக்காத பயிர் கால் பயிர். ரசாயன களைக்கொல்லியை பயன்படுத்துவதனால் பீட்ரூட் சாகுபடியில் எதிர்விளைவுகளால் மகசூல் கணிசமாக பாதிக்கப்படும். ஆகவே சிறிய அளவிலான களைக் கொத்தினைப் பயன்படுத்தி களை நீக்கம் செய்து பின் செடிகளுக்கு மண் அணைக்கவேண்டும்.
பயிர் பாதுகாப்பு பெரிய அளவில் இல்லையென்றாலும் பூச்சி நோய் தாக்குதலைப் பற்றி அறிந்து கொள்வது மிக அவசியம்.

வண்டுகள் மற்றும் இலைச்சுருட்டு புழுவைக் கட்டுப்படுத்த மாலத்தியான் பூச்சி கொல்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி வீதம் கலந்து செடியின் இலைப்பகுதி முழுவதும் படும்படியாக காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் டைத்தேன் ம்45 கலந்து தெளிக்க வேண்டும். அல்லது ஏக்கருக்கு 1 கிலோ மேன்கோசெப் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். வேரழுகல், டெளனி மில்டியூ நோய்களைக் கட்டுப்படுத்த செரகான் 2 கிராம் மருந்தை 1 கிலோ விதையுடன் கலந்து நேர்த்தி செய்து நடவு செய்யலாம். அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் இண்டோபில் Z 78 கலந்தும் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
நாம் பயிரிடும் ரகத்தினைப் பொருத்தும் பருவகால சூழ்நிலையைப் பொருத்தும் விதைத்த 50 நாள் முதல் 90 நாட்கள் வரை அறுவடை செய்யலாம். நன்கு விளைந்த பீட்ரூட் கிழங்கு இலைகளுடன் ஒட்டியிருக்கும்பகுதி மண்ணுக்கு மேல் தெரியும். ஏக்கருக்கு 15 மெட்ரிக் டன் அளவில் மகசூல் எடுக்கலாம்.
மனிதனுக்கு சத்துணவு சம்பந்தமாக கடந்த 50,60 ஆண்டுகளில் வியத்தகு மாற்றங்கள் உண்டாகியுள்ளன. ஊட்டச் சத்துகளில் வைட்டமின்கள் உலோக, உப்பு சத்துகள், புரத சத்து அவற்றில் அடங்கியுள்ள அமொனோ அமிலங்கள் முதலானவை பகுத்து ஆராயப்பட்டு சத்துணவு எனும் கோட்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு உடல் நிலைகளுக்கும், வேலைத் திறனுக்கும் தக்கவாறு மனிதனுக்கு தேவைப்படும் ஊட்டச் சத்துக்களின் அளவை கணித்து மனிதன் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. உணவு ஊட்டச்சத்தியல் நிபுணர்கள் மருத்துவமனைகளில் மட்டுமின்றி தனிப்பட்டும் ஆலோசனைகள் கொடுக்கின்றனர்.

சத்தான சரிவிகித உணவில் நாள்தோறும் சுமார் 300 கிராம் காய்கறிகளை அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மாவு சத்து, புரத சத்து, கொழுப்பு சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகியவை காய்கறிகளில் நிறைந்துள்ளன. ஆகவே காய்கறிகளை தினசரி தேவையான அளவு நம் உணவில் சேர்த்தால் பலவிதமான நோய்களின் தாக்குதலில் இருந்து நம்மை காத்திட இயலும். ஆகவே தான் காய்கறிகளைத் தவிர்த்து அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களை எளிதில் வேறு எந்த உணவில் இருந்தும் பெற இயலாது. உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான முக்கியமான தாது உப்புக்களான சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை காய்கறிகளை தவிர்த்து வேறு எந்த உணவுப் பொருளிலும் நம்முடைய உடலுக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை.
அத்துடன் நமது இரைப்பையில் உணவு செரிக்க உற்பத்தியாகும் அமிலத்தை சம நிலைப்படுத்த காய்கறிகள் தேவைப்படுகின்றன. காய்கறிகள் ஊட்டச் சத்துக்களைக் கொடுப்பதுடன் உணவிற்கு சுவையையும் சேர்ப்பதால் நமது உணவில் காய்கறிகள் மிக அவசியம்.
வளர்ந்த நாடுகளில், அவர்களின் முக்கிய உணவு இறைச்சி வகைகளைச் சார்ந்திருந்தாலும் ஆண்டொன்றிற்கு ஒருவர் 70 முதல் 102 கிலோ வரையில் காய்கறிகளும் சாப்பிடுகின்றனர் என ஒரு புள்ளி விபரம் கூறுகின்றது. ஆனால் இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகளில் ஒரு தனிமனிதனின் சராசரி ஆண்டு நுகர்வு 22 முதல் 40 கிலோ மட்டுமே. மேலை நடுகளுடன் ஒப்பிடும்போது நம்முடைய காய்கறி விளைச்சல் திறனிலும் பின் தங்கியுள்ளோம். காய்கறி நுகர்விலும் பின் தங்கி உள்ளோம்.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நம்முடைய விவசாய உற்பத்தி திறனை அதிகப்படுத்த வேண்டும். விவசாய உற்பத்திக்கு ஏற்ற விளைநிலங்கள் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறுகின்ற இன்றைய அவல நிலை அரசின் கடுமையான சட்டத்தினால் நீக்கப்படவேண்டும். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற சொல்லினை நினைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை வீட்டுமனை, தொழிற்சாலை, பன்னாட்டு வேளாண் பண்ணைகளுக்கு விற்பனை செய்யாமல் இயன்ற அளவில் திட்டமிட்டு விவசாயம் செய்ய வேண்டும். நம் நாடு மிகப்பெரிய விவசாய நாடு. நம் நாட்டின் வளர்ச்சி நிலையாக இருக்கவேண்டுமெனில் அதன் கொள்கை வடிவமைப்பு வேளாண்மையை சார்ந்தும் இருக்க வேண்டும்.
உலக பொருளாதாரத்தில் நிலையான நீடித்த இடம் இருக்க வேண்டுமெனில் நமது நாடு ஒரு வேளாண் நாடு என அறிவித்து சிறப்பு வேளாண் மண்டலங்கள் அமைத்து வேளாண் பாராளுமன்றம் என தனியே நிறுவி தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட வேண்டும். அவ்வாறு இருந்தோமேயானால் உலகிற்கே உண்டி கொடுத்து அந்நிய செலவாணியையும் அறுவடை செய்ய இயலும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites