'வழ வழ….கொழ கொழ என என்ன வெண்டைக்காய்போல' என சொல் வழக்கு உண்டு. ஆனால் இப்போது வெண்டைக்காயை நறுக்கும்போது அந்த வழ வழ கொழ கொழ இருப்பதில்லை. என்ன காரணம்? ஏன் இப்படியானது? அம்மா அரிவாள்மனையில் வெண்டைக்காய் அரியும் போது வெட்டிய காம்பு பகுதியின் துண்டுகளை எடுத்து முகம் பூராவும் ஒட்ட வைத்து விளையாடிய அனுபவம் தற்போதைய தலைமுறையினருக்கு நிச்சயம் கிடைத்திருக்காது. ஏனெனில் ஒட்டும்தன்மையுடன் இருந்த நாட்டு வெண்டை மறைந்து வீரிய ஒட்டு வெண்டை வந்துவிட்டது.
பச்சைப் பசேல் என தனியாக சாயம் போட்டது போல பளிச்சிடும் வீரிய ஒட்டு வெண்டை பழைய சுவையின் அருகில் கூட வராது. ஆனால் இன்றைக்கு பெருகி நிற்கும் மக்கள் தொகைக்கும், குறைந்து வரும் விவசாயத்திற்கும் மாற்றாய் நிற்பவை வீரிய ஒட்டு ரகங்களும், அதற்கு கொட்டும் ரசாயன பூச்சி மருந்துகளும், உப்பு உரங்களுமே. நல்லவை போய் அல்லவை வந்து தலைவிரித்து ஆடும் இந்தக் காலகட்டத்தில் வெண்டைக்காய் மட்டும் விதிவிலக்கா என்ன?
உலக அளவில் எல்லோராலும் பயன்படுத்தப்படும் வெண்டைக்காயின் அறிவியல் பெயர் ‘அபெல் மோசஸ் எஸ்க்யுலெண்டஸ்’ ஆகும். இது மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த பயிராகும். இந்த வெண்டைக்காயை பிலிப்பைன்ஸ் நாட்டவர்களும், அமெரிக்கர்களும் ஓக்ரா OKRA என அழைக்கின்றனர். ஆனாலும் இதன் ஆங்கிலப் பெயர் லேடீஸ் ஃபிங்கர் (Ladies finger) என்பதுதான். வெண்டைக்காய் மூளைக்கு நல்லது என்பதும், வெண்டை சாப்பிட்டால் கணக்கு நன்றாக வரும் என்பதும் நம் மக்களின் நம்பிக்கை.
பொதுவாக மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச் சத்து, தாது உப்புகள், வைட்டமின்கள் ஆகியவை காய்கறிகளில் நிறைந்துள்ளன. ஆகையால் காய்கறிகளை நமது உணவில் சேர்த்தால் பல நோய் தாக்குதல்களிலிருந்து நம்மை காக்க இயலும். தினசரி உணவில் நாள்தோறும் 300 கிராம் அளவிற்காவது காய்கறிகள் கண்டிப்பாக சேர்த்துக் கொள்வது அவசியம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் உணவில் ஊட்டச்சத்துக்களை காய்கறிகள் மூலமாகவே எளிதில் பெற்றிட இயலும். உடலின் ஆரோக்கியத்திற்குத் தேவையான முக்கிய தாது உப்புக்களான கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியவை காய்கறிகளில் தவிர வேறு எந்த உணவுப் பொருட்களிலும் நம் உடலுக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை.
நம் இரைப்பையில் உணவு செரிக்க உற்பத்தியாகும் அமிலத்தை சமநிலைப்படுத்த காய்கறிகள் தேவைப்படுகின்றன. காய்கறிகள் வெறும் ஊட்டச்சத்தை மட்டும் கொடுப்பதோடு இருந்துவிடாமல் உணவில் சுவையையும் சேர்க்கின்றன. தனிமனித காய்கறி உபயோகிக்கும் அளவு வளர்ந்த நாடுகளில் ஆண்டுக்கு, நபர் ஒன்றிற்கு, 20 கிலோ முதல் 102 கிலோ வரை உள்ளதாகும். ஆனால் நம் நாட்டில் ஒரு ஆண்டில் உணவில் சேர்க்கப்படும் காய்கறிகளின் அளவு 22 கிலோ முதல் 40 கிலோ மட்டுமே என ஒரு புள்ளி விபரம் சொல்கின்றது. இத்தனைக்கும் சைவ உணவு சாப்பிடும் மக்கள் இந்தியாவில் பெரிய அளவில் இருக்கின்றனர். நமது மக்கள் தொகைக்கு ஏற்ப நம்மால் போதுமான அளவு காய்கறிகளை உற்பத்தி செய்ய இயலவில்லை என்பதே நிதர்சனம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தானியப்பயிர், பயறு வகைப்பயிர் போன்றவற்றை பயிரிடுவதைக் காட்டிலும், காய்கறிகளைப் பயிரிடுவதால் பல மடங்கு அதிகம் உற்பத்தி கிடைக்கும். ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்தால் சராசரியாக 2.5 மெட்ரிக் டன் மகசூல் எடுக்கலாம். ஆனால் காய்கறி சாகுபடி செய்யும்போது சராசரியாக 15 முதல் 20 மெட்ரிக் டன் வரையிலும் மகசூல் கிடைக்கும் வாய்ப்பு இருக்கின்றது.
நம் நாட்டின் காய்கறித் தேவையை பூர்த்தி செய்ய காய்கறி பயிரிடப்படும் நிலப்பரப்பை அதிகரிக்க வேண்டும். விளைச்சல் திறனையும் அதிகரிக்க வேண்டும். இதுவரை நாட்டு ரகங்கள், தேர்வு செய்யப்பட்ட ரகங்கள் ஆகியவை பெரியதாக பயிரிடப்பட்டு வந்தது. இதன் மகசூல் திறன் குறைவு. ஆனால் சுவையும், தரமும் அபாரமானது. பூச்சி நோய் தாக்குதலும் உண்டு. ஆனால் இவைகளால் பெருகிவரும் தேவையை ஈடுகட்ட இயலவில்லை. அதனால் தான் வீரிய ஒட்டு ரகஙக்ள் கண்டறியப்பட்டது. காய்கறிகளில் தான் வீரிய ஒட்டு ரகங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கப்பட்டு பயிரிடப்படுகின்றன.
இன்றைக்கு நுகர்வோரில் விருப்பம் ஒரே சீரான அழகிய தோற்றமுடைய காய்கறிகள்தான். சுவைமிக்க இயற்கையில் விளைவிக்கப்பட்ட, ஆனால் ஒழங்கற்ற புறத் தோற்றமுடிய காய்கறிகளை பெரும்பான்மையோர் விரும்பி தேர்வு செய்யவில்லை. ஆகவேதான் உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்கள் அதன் அதிக விளைச்சல் தரும் தன்மையாலும், நோய், பூச்சி தாக்குதலுக்கு எதிர்ப்பு சக்தி கொண்டிருப்பதாலும், ஒரே சீராக காய்க்கும் தன்மை கொண்டவை என்பதாலும், விவசாயிகளாலும், நுகர்வோர்களாலும் பெரிதும் விரும்பப்படுகின்றது. புதிய வேளாண் தொழில் நுட்பம், அறுவடைக்கு பிந்தைய செயல்பாடுகள் ஆகியவை காய்கறி உற்பத்தியில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை.
வெண்டைக்காய் போலவே வெண்டைக்காய் தோன்றிய இடத்தைப் பற்றியும் ஒரு வழ வழ கொழ கொழ தன்மையே உள்ளது. இதனை தெற்காசிய நாடுகளில் தோன்றியதாகவும், எத்தியோப்பியா மற்றும் மேற்கு ஆப்ரிக்கா பகுதிகளில் தோன்றியதாகவும் இருவேறு கருத்துக்கள் உண்டு. 12,13 வது நூற்றாண்டுகளில் எகிப்தியர்களும், மூர்களும் வெண்டைக்காயின் அரேபிய பெயரைப் பயன்படுத்தியதற்கு சான்றுகள் உள்ளன. வரலாறு எப்படியாவது இருக்கட்டும். வெண்டை வெப்பத்தை விரும்பும் பயிர் என்பதில் இரண்டாவது கருத்து இல்லை. வெண்டைக்கு நீண்ட நேர வெப்ப நாட்கள் தேவை. பனி மூட்டங்கள் வெண்டையின் வளர்ச்சியைப் பாதிக்கும். குளிர் காலத்திலும், குளிர் பிரதேசங்களிலும் நல்ல முறையில் வளராது.
வெண்டை எல்லாவகையான மண் வகைகளிலும் நன்கு வளரும். மண்ணின் pH எனும் கார, அமிலத்தன்மை ஓரளவிற்கு தாங்கி வளரும். நல்ல உரச்சத்து உள்ள மண் வகையில் செழித்து நன்றாக வளரும். வெண்டைக்கு இரண்டு பட்டங்கள் உண்டு. ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலும், பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் பயிரிடலாம். பொதுவாக தமிழகத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகின்றது.
100 கிராம் வெண்டைக்காயில் என்னென்ன சத்துகள் உள்ளன என தெரிந்து கொள்வோம்.
சக்தி | 33 கிலோ கலோரி |
மாவுச் சத்து | 7.45 கிராம் |
சர்க்கரை | 1.48 கிராம் |
நார்ச்சத்து | 3.1 கிராம் |
கொழுப்பு | 0.19 கிராம் |
புரதம் | 2.00 கிராம் |
வைட்டமின்கள்
வைட்டமின் A | 5 % |
வைட்டமின் B1 | 17% |
வைட்டமின் B2 | 5% |
வைட்டமின் B3 | 7% |
வைட்டமின் C | 28% |
வைட்டமின் E | 2 |
வைட்டமின் K | 30% |
தாது உப்புக்கள்
சுண்ணாம்பு | 8% |
இரும்பு | 5% |
மக்னீஷியம் | 16% |
பொட்டாஷியம் | 6% |
துத்த நாகம் | 6% |
தண்ணீர் | 90.17 கிராம் |
கோ2, எம்.டி,யு 1, ஆர்க்கா அனாமிகா, அர்க்க அபஹாய், பார்பானி இராந்தி, கோ 3, பூசாசவான், வர்சா உப்கார் என பல்வேறு ரகங்களும் தனியார் வீரிய ஒட்டு ரகங்களும், முள் வெண்டி, சிகப்பு வெண்டி போன்ற பாரம்பரிய ரகங்களும் உள்ளன. காய்கறி பயிர் சாகுபடிக்கு நிலம் தயாரித்தல் முக்கியமான வேலை. களையைக் கட்டுப்படுத்த நல்ல ஆழமான உழவும், நிலம் நன்கு காய்வதும் அவசியம். மூன்றிலிருந்து நான்கு முறையேனும் நிலத்தை கட்டிகளின்றி நன்கு உழவு செய்யவேண்டும். கடைசி உழவிற்கு முன் ஏக்கருக்கு 10 முதல் 15 டன் அளவிற்கு நன்கு மக்கிய தொழு உரம் இடுதல் வேண்டும். 45 செ.மீ அதாவது 1 ½ இடைவெளியில் வரிப்பாத்திகள் அமைக்கப்பட வேண்டும்.
விதைகள் விதைக்கப்படும் முன்னர் ஒரு கிலோ வெண்டை விதைக்கு 2 கிராம் கேப்டான் அல்லதுதிராம் கொண்டு கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் விதைகளை நன்கு ஆறிய அரிசி கஞ்சி அல்லது மைதா மாவு கஞ்சியுடன் 400 கிராம் அசோஸ்பைரில்லம் உயிர் உரத்தைக் கலந்து அதில வெண்டை விதையையும் போட்டு கலவை வெண்டை விதையில் புரண்டு ஒட்டச் செய்து நிழலில் உலரவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளைச் செடிக்கு செடி, ஒரு அடி (30 செமீ, இடைவெளியில் சுமார் ¾ அங்குல ஆழத்தில் இரண்டிரண்டு விதைகளாக நடவு செய்து, நட்டவுடன் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்சலாம். அதனைத் தொடர்ந்து மண்ணின் தன்மை, தட்ப வெப்ப சூழ்நிலை இவற்றை அனுசரித்து குறைந்தது வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
வெண்டை சாகுபடிக்கு அடியுரமாக 20 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய உரங்களை வரிகளின் ஒரு பக்கமாக இட்டு மண்ணுடன் நன்கு கலந்து விடவேண்டும். அத்துடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம், 2 கிலோ பாஸ்போ பாக்ட்ரீயம் இயற்கை உயிர் உரத்தை 20 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும். களை எடுத்தவுடனும், வளர்ச்சி பருவத்திலும் செடிக்குச் செடி மேல் உரம் இட்டு மண் அணைத்து தண்ணீர் பாசனம் செய்ய வேண்டும். 19:19:19 இலைவழி தெளிப்பு உரத்தினை ஒரு சதவிகிதம் அளவில் தயார் செய்து விதைத்த 30 நாட்கள் கழித்து 10 நாட்கள் இடைவெளியில் மூன்றுமுறை தெளிப்பது அவசியம். மியூரியேட் ஆப் பொட்டாஷ் MOP நீரில் கரையும் உரத்தை 1 லிட்டர் தண்ணீருக்கு 17 கிராம் கலந்து 35,40,65 வது நாட்களில் தெளிப்பதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்தலாம். களைகள் முளைக்கும் முன் விதைத்த மூன்றாம் நாள் பீளுக்குளோரலின் 2 லிட்டர் தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த 30 வது நாள் கைக்கிளை ஒன்று எடுக்கப்பட வேண்டும்.
வெண்டைக்காயில் அதிகம் காணப்படும் பூச்சி காய்த்துளைப்பான் தான். காய்துளைப்பானைக் கட்டுப்படுத்த பல்வேறு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் உள்ளன. ஏக்கருக்கு 5 இனி கவர்ச்சி பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து, அழித்து கட்டுப்படுத்தலாம். காய் புழுக்களால் தாக்கப்பட்ட வெண்டைக்காய்களை சேகரித்து அழித்து விட வேண்டும். ஏக்கருக்கு டிரைகோகிரம்மா ஒட்டு உண்ணிகள் 40000 எண்ணிக்கையில் விட வேண்டும். நனையும் கார்பரில் தூள் 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இறுதிகட்ட நடவடிக்கையாக மோனோ குரோட்டாபாஸ் படு மற்றும் ஊடுறுவும் நஞ்சை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி கலந்து தெளிக்கலாம். இயற்கையாக மட்டும் சாகுபடி செய்ய நினைக்கும் விவசாயிகள் 50 கிராம் வேப்பங்கொட்டை பொடியை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளித்து கட்டுப்படுத்தலாம். சாம்பல் நிற வண்டை கட்டுப்படுத்த கார்போபியூரால் எனும் குருணை மருந்தை ஏக்கருக்கு 5 கிலோ இடலாம். நூற்புழு தாக்குதலை தடுக்க ஏக்கருக்கு 200 கிலோ நன்கு பொடியாக்கப்பட்ட வேப்பம்புண்ணாக்கை பார்களில் தூவி பின்னர் விதை நடவு செய்யலாம். அல்லது போரேட் 10 ஜி குருணை மருந்து 1 கிலோ இடலாம். அசுவிணிப் பூச்சியைக் கட்டுப்படுத்த 2 மில்லி டைமெத்தோயட் நஞ்சை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
வெண்டையில் பெரிய அளவில் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தக் கூடியது YMD என அழைக்கப்படும் மஞ்சள் நரம்பு தேமல் நோய் எனப்படும் நச்சுயிரு நோய் ஆகும். இந்த நோய் வெள்ளை ஈ எனும் பூச்சியினால் ஒரு செடியிலிருந்து மற்றொரு செடிக்கு பரப்பப்படுகின்றது. ஆகவே முதலில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தி இந்த நோய் பரவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி வேப்ப எண்ணை மற்றும் 2 மில்லி மோனோ குரோட்டாபாஸ் கலந்து தெளித்து வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம். இந்த நோய் கோடைகாலங்களில் வெண்டையை அதிகம் தாக்கும். பர்பானி இராந்தி, ஆர்கா அனாமிகா, போன்ற மஞ்சள் நரம்பு தேமல் நோயைத் தாங்கி, எதிர்த்து வளரக்கூடிய ரகங்களைத் தேர்வு செய்தும், YMD எனும் நோயை தவிர்க்கலாம்.
வெண்டையில் சாம்பல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் நனையும் கந்தக தூளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் வீதம் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.
வெண்டைக்காய் விவசாயத்தின் மிகப் பெரிய சவாலே அறுவடைதான். நடவு செய்த 45வது நாள் முதல் அறுவடைக்கு வரும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அறுவடை செய்வது மிக முக்கியம். காய்கள் முற்றுவதற்குள் அறுவடை செய்து விட வேண்டும். முற்றிய காய்களை சந்தை படுத்தவே இயலாது. ஆகவே கவனமாக அறுவடை செய்ய வேண்டும். காய்கள் ஒடிக்கும் போது காயில் உள்ள மெல்லிய உரோமம் போன்ற சுணப்பு கைகளை புண்ணாக்கி விடும். ஆகவே வெண்டைக்காய் பறிக்க கைகளில் ரப்பர் உறை அணிந்து கொள்வது மிகவும் அத்யாவசியம்.
ஏக்கர் ஒன்றிற்கு 90 முதல் 100 நாட்களுக்குள் 6 முதல் 8 மெட்ரிக் டன்கள் வரை மகசூல் கிடைக்கும். ஏக்கர் ஒன்றிற்கு முதல் அறூவடையில் சுமார் 100 கிலோ மகசூல் கிடைக்கும். பின்னர் படிப்படியாக உயர்ந்து அறுவடைக்கு 300 கிலோ வரை உயரும். பின்னர் படிப்படியாக குறைந்து 100 கிலோ வரைக்கும் குறையும். சுமார் 24 முறை காய் பறிக்கலாம். சராசரி 250 கிலோ என கணக்கிட்டால் குறைந்தது 6000 கிலோ மகசூல் எளிதாக கிடைக்கும். குறைந்த பட்ச விலை ரூ 5 லிருந்து அதிகபட்சம் 25 ரூபாய் வரை விலை கிடைக்கும். சராசரி விலையாக ரூ 15 என வைத்துக் கொள்ளலாம்.
வெண்டை சாகுபடி வரவு – செலவு
தொழு உரம் 2 டிராக்டர் லோடு – ரூ 1500
2 மணி நேர உழவு – ரூ.1200
1 ½ கிலோ விதை – ரூ.1300
பாத்தி போட – ரூ.900
நடவு கூலி 3 ஆட்கள் X 150 – ரூ.450
களை எடுப்பு – ரூ.900
வேப்பம் புண்ணாக்கு ரசாயன உரம் – ரூ.2300
பூச்சி கொல்லி – ரூ.600
தெளிக்க கூலி – ரூ.250
இன கவர்ச்சி பொறி – ரூ.650
காய் பறிப்பு கூலி 1 கிலோவிற்கு 1.50 பைசா வீதம் – ரூ.9000
விற்பனை கமிஷன் 10% - ரூ.9000
வண்டி வாடகை 24 X 250 – ரூ.6000
தண்ணீர் பாய்ச்ச கூலி (5000 X 3 மாதம்) ரூ.15000
மொத்தம் – 49,000
ஒரு ஏக்கருக்கு மகசூல்
ஒரு பறிப்புக்கு 250 கிலோ வீதம் 25 பறிப்புக்கு 6000 கிலோ
கிலோ சராசரி விற்பனை ரூ.15 என கணக்கிட்டு மொத்த வரவு – ரூ.90000
செலவு வகையில் ரூ.49000
நிகர லாபம் ரூ.41000
ஆனால் இதில் உள்ள எந்த செலவுகளும் குறையவே குறையாது. ஆனால் விற்பனை விலை என்பது எவராலும் கணிக்க முடியாத ஒன்று. வெண்டைக்காய் பறிப்பு கூலி கூட கிடைக்காமல் செடியை கால்நடைகளை மேயவிட்டு அழித்தோ அல்லது ரோட்டோவேட்டர் கலப்பைக் கொண்டு மடக்கி உழவு செய்துவிட்ட விவசாயிகளும் இருக்கின்றனர். சராசரி விலை 25 ரூபாய்க்கு மேல் கிடைத்து ஏக்கருக்கு லட்ச ரூபாய்க்கு மேல் நிகர லாபம் கண்ட விவசாயிகளும் உள்ளனர். காய்கறி விவசாயம் ஒரு சூதாட்டம் என்பதில் துளியும் சந்தேகமில்லை. ஆனாலும் காய்கறி விவசாயம் தொடரத்தான் செய்கின்றது என்பதும் உண்மை.
0 comments:
Post a Comment