ஏ
ற்ற இறக்கங்களும்…எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த மனித வாழ்க்கையைப் போன்றதுதான் காய்கறி சாகுபடியும். வெயில்,பனி,மழை, காற்று, புயல் என பருவகாலச் சூழ்நிலை, அதிக உற்பத்தி, குறைந்த உற்பத்தி என்னும் சூழ்நிலை, பூச்சி நோய்த் தாக்குதல் எனும் எதிர்ப்பாராத சூழ்நிலை ஆகியவற்றுடன் போராடினாலும் எப்படியும் நிகரலாபத்தை கொடுக்கக் கூடியது காய்கறி சாகுபடி. அன்றாட தேவைக்கான உற்பத்தி என்பதாலும், சரியான விற்பனை வாய்ப்பு வலைப்பின்னல் (network) இன்று குக்கிராமம் வரை வந்துவிட்டாலும் அதிக அளவில் வேலைப்பளு இருந்த போதிலும் விவசாயிகளால் பெரிதும் விரும்பப்படுகின்றது. பெரிய அளவில் செய்பவர்களும் உண்டு. சிறிய அளவில் செய்பவர்களும் உண்டு.
உணவு தானிய உற்பத்திக்கு இணையாக விவசாயிகளால் கைக்கொள்ளப்படுகின்ற காய்கறிச் சாகுபடியில் பந்தலில் சாகுபடி செய்யும் பீர்க்கன் எனும் கொடி வகைக் காயை குறித்துப் பார்க்கும் முன்னர் பந்தல் சாகுபடி என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம். வீட்டுத் தேவைக்கு வேலியில் படரவிட்டு கொடிவகை காய்கறிகளை சாகுபடி செய்யலாம். ஆனால் சந்தைக்கு காய்கறி அனுப்புவதற்கு திட்டமிட்டு சாகுபடி செய்யும் விவசாயிகளால் அவ்வாறு வேலிப்பயிராக மட்டும் சாகுபடி செய்திட இயலாது. தரையில் படரவிட்டு கொடிவகைக் காய்கறிகளை, குறிப்பாக புடலை, பாகல், பீர்க்கு, அவரை, கோவை போன்றவைகளை சாகுபடி செய்ய அநேக இடர்பாடுகள் உள்ளன. இவைகளை பந்தலில் சாகுபடி செய்தால் மட்டுமே நல்ல அறுவடை, நல்ல பராமரிப்பு செய்வது எளிது.
தமிழக அரசின் தோட்டக்கலைத் துறையினர் பந்தல் அமைத்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 50% மானியத் தொகை வழங்குகின்றது. துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழும் வேளாண்மைத் துறை பந்தல் அமைக்க மானியம் கொடுக்கின்றது. பொதுவாக பந்தலை கல் தூண்கள் கான்கீரீட் தூண்கள், இலுப்பை மரம், மூங்கில் மரம், ஒதியமரம் போன்றவற்றை கட்டி அதில் காய்கறி கொடிகளைப் படர விடலாம். பந்தல் அமைப்பதில் பல்வேறு முறைகள் இருக்கின்றன. கல் தூண்கள் நிறுத்தி அதன்மேல் ஜி.ஐ. GIகம்பிகளை இழுத்துக் கட்டி பந்தலாக்குவது இருப்பதிலேயே அதிக செலவு பிடிக்கும் விஷயம். ஆனால் மிக நீண்ட காலம் உழைக்கும். திராட்சை பழம் உற்பத்திக்கு இதுபோன்ற பந்தல் அமைப்பார்கள். உற்பத்தித் திறனும் அதிக எடையும் கூடிய காய்கறி சாகுபடிக்கு இந்த வகை பந்தல் ஏற்றது. ஆனால் இதற்கான ஆரம்பக் கட்ட முதலீடு மிகவும் அதிகம். சிலர் இந்த பந்தலின் செலவினை குறைக்கும் பொருட்டு கல்தூண்களுக்கு மாற்றாக ஒதிய மரம், இலுவை மரம், கல் மூங்கில் குச்சிகள், காங்கிரீட் தூண் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். ஜி.ஐ GI கம்பிகள் விலை கூடுதலாக இருப்பதால் நைலான் கயறு அல்லது நைலான் வலை போன்றவற்றையும் சிலர் பயன்படுத்துகின்றனர். முதலீட்டு வசதிக்கு ஏற்ப அவரவர் தேவைக்கு ஏற்ப பந்தல் அமைக்கலாம்.
கல்கால் நட்டு ஜி.ஐ கம்பிகள் வாங்கி பந்தல் அமைப்பது என்பது இன்றைய விலைவாசியில் முதலீடு அதிகமுள்ள விஷயம். இந்தச் செலவை வெகுவாக குறைத்து மகசூலையும் குறைவில்லாமல் கொடுக்க, கூடாரப் பந்தல் எனும் அமைப்பு உள்ளது. ஒருமுறை இந்த கூடார அமைப்பை நிறுவியபின்னர் மூன்று பயிருக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபோன்ற கூடார பந்தல் அமைக்க அரை ஏக்கர் நிலத்திற்கு 12 அடி உயர யூகளிப்டஸ் எனும் தைலமரம் 12 உயரத்தில் 500 எண்ணிக்கை, 14 கேஜ் ஜி ஐ கம்பி 25 கிலோ, பார்சல் கட்டப் பயன்படும் சுட்லி டேப் 40 கிலோ தேவைப்படும். இந்த பந்தலை மூன்று வெள்ளாமைக்குத் தொடர்ந்து பயன்படுத்தியபின் பிரித்து எடுத்தால் வேறு நிலத்திலும் கொட்டாரம் போடலாம். இந்த சாமான்களை வைத்து சுமார் 20 க்கு மேற்பட்ட முறை கொட்டாரம் போடலாம். குறைந்தது 60 முறை சாகுபடி செய்யலாம். இந்த முதலீட்டை ஒரு வெள்ளாமைக்கு கணக்கிட்டால் 1000 ரூபாய் கூட வராது. குறைந்தது 4 சால் உழவு செய்து நிலத்தை கட்டிகளின்றி நன்கு புழுதியாக்கி அரை ஏக்கருக்கு மூன்று டிசிபர் தொழு உரம் போட வேண்டும். நிலத்தை கிழக்கு மேற்காக 6 அடி இடைவெளி, 5 அடி இடைவெளி என்பது கூடாரம் அமைப்பதற்கான இடம், 5 அடி இடைவெளி என்பது விதை நடவு செய்வதற்கும், தண்ணீர் பாசனம் செய்ய வாய்க்கால் அமைப்பதற்கும் தேவைப்படுகின்ற இடம். கூடாரம் அமைக்க உள்ள 6 அடி இடைவெளியில் உள்ள மண்ணை வழித்து இழுத்து 5 அடி இடைவெளியில் இரண்டுபுறமும் நீளமாக கரை போன்று அமைக்க வேண்டும். இதற்கு இடையில் 2 அடியில் வாய்க்கால் கிடைப்பது போல பார்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மண் வேலை பூர்த்தியாகிவிட்டது. 6 அடி இடத்தில் இரண்டு எல்லையிலும் 10 அடி இடைவெளியில் தைல மரங்களை ஊன்றி மேல்பகுதியினை இணைத்து கட்ட வேண்டும். மரத்தில் ¾ அடி மண்ணுக்குள் புதைந்திருக்கும். மேலே 10 அடி உயரத்தில் எதிர் எதிர் மரத்தை இணைத்து ஆங்கில எழுத்து A போன்று வருமாறு கட்டிவிட வேண்டும். A-ன் மேல் பகுதியில் ஸ்டே கம்பியினை கிழக்கு மேற்காக இழுத்து அத்தனை குச்சிகளையும் அழுத்திப் பிடிப்பது போன்று கிழக்கிலும், மேற்கிலும் ஸ்டே அடித்துக் கட்ட வேண்டும். இப்போது இந்த கொட்டார பந்தலில் நடு உயரம் 8 அடி இருக்கும். இப்போது பக்கவாட்டில் தெரியும் மரத்தில் அரையடிக்கு ஒரு சுட்லி டேப் வீதம் கீழ்மேலாக இழுத்துக் கட்ட வேண்டும். இப்போது கூடார பந்தல் சாகுபடிக்கும் தயார்.
இடைமட்ட பந்தல் அமைத்தால் கிடைக்கின்ற பரப்பளவைவிட அதே அளவு நிலத்தில் கூடார பந்தல் அமைத்தால்கொடி படருவதற்கான பரப்பளவு அதிகம் கிடைக்கும். தரையிலிருந்தே கொடி படருவதற்கு வாய்ப்பு இருப்பதால் பந்தலில் கொடியை தூக்கிகட்டும் வேலையும், தளிர் கிள்ளும் வேலையுமில்லை. காய் பறிக்கும் வேலை மிக எளிது. காய்களின் தோற்றமும் ஒன்று போல இருக்கும். காய்கள் வளையாமல் நேராக இருக்கும்.காய்கள் தொங்குவதால் சரியான பக்குவத்தில் காய்களை பறிக்கலாம். பூச்சி மருந்து தெளிப்பதற்கு, உரம் போடுவதற்கும், தண்ணீர் பாய்ச்சுவதும் எளிது. 10 அடிக்கு ஒரு வாய்க்கால் இருப்பதால் தண்ணீருக்கான தேவையும் மிகக் குறைவு. குறைந்த பரப்பளவு நிலம் மட்டுமே தண்ணீர் பாய்வதால் களைகள் முளைப்பதும் குறைவு. கொடிகளின் மீது சூரிய ஒளி படுகின்ற பரப்பளவு அதிகமிருப்பதால் ஒளிச்சேர்க்கை அதிக அளவில் நடக்கும்.
ஆரம்ப கட்டத்தில் சாதாரண பந்தலோ, கூடார பந்தலோ அமைப்பது சற்று சிரமமான காரியம் போன்று தோன்றினாலும் காய்கறி சாகுபடியின் வருமானம் ஈட்ட துவங்கியபின் ஆரம்பக் கட்டச் செலவும், வேலைப்பாடும் மறந்துவிடும். அவரவர் தேவை, வசதி, சூழ்நிலைக்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
இந்தப் பந்தலில் பல்வேறு காய்கறிகளை சாகுபடி செய்தாலும் பச்சைப் பசேலெனச் சுவை மிகுந்த பீர்க்கன் எனும் Ribbed guard சாகுபடி செய்வதைக் குறித்துப் பார்க்கலாம். முதலில் நிலத்தை நன்கு புழுதிபட உழவு செய்யவேண்டும். கடந்த பயிரின் கழிவுகள் இருந்தால் ரோட்டோவட்டர் கலப்பை கொண்டு இரண்டு முறை உழவு செய்து கழிவுகளை மண்ணுடன் கலக்க வேண்டும். பின்னர் 5 கலப்பை அல்லது இரட்டை கலப்பை கொண்டு நிலத்தின்மேல் மண் கீழும், கீழ் மண் மேலும் வருமாறு புரட்டி உழவு செய்யவேண்டும். ஏக்கருக்கு 10 மெட்ரிக் டன் நன்கு மக்கிய குப்பை உரத்தையும், 250 கிலோ சூப்பர் பாஸ்பேட் அல்லது எலும்பு உரம் அல்லது முசூரிபாஸ் உரத்தையும் அடியுரமாக இட்டு மீண்டும் ரோட்டாவேட்டர் கலப்பை கொண்டு மண்ணுடன் கலக்கி நிலத்தை தயார் செய்யவேண்டும். 1 கிலோ அசோஸ்பைரில்லம், 1 கிலோ பாஸ்போபேக்ட்ரீயம், உயிர் உரத்தை நன்கு மக்கிய 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து, அத்துடன் 100 கிலோ நன்கு தூளாக்கப்பட்ட வேப்பம் புண்ணாக்கையும் கலந்து, சுடோமோனஸ் 2 கிலோவும் சேர்த்து கடைசி உழவிற்கு முன் நிலத்தில் இடவேண்டும்.
பீர்க்கன் காய் சாகுபடி செய்ய ஏக்கருக்கு 300 லிருந்து 1000 கிராம் அளவிற்கு விதை தேவைப்படும். பீர்க்கனின் கோ1, கோ2 மற்றும் பி.கே.எம் 1 ஆகிய ரகங்களும், தனியார் நிறுவனங்கள் வீரிய விதைகளும் கிடைக்கின்றன. மணலும், மண்ணும் கலந்த வளமான நிலத்தில் நன்கு வளரும் பீர்க்கனுக்கு மிதமான வெப்ப நிலை மிகவும் ஏற்றது. ஆடி மற்றும் தைப்பட்டம் (ஜூலை மற்றும் ஜனவரி) நடவு செய்ய ஏற்ற பட்டமாகும். பீர்க்கன் விதையை 500 கிராம் அசோஸ்பைரில்லத்துடன் ஆறிய வடிகஞ்சி அல்லது மைதாமாவு கரைசலுடன் கலந்து நன்கு புரட்டி நிழலில் காய வைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் அளவிற்கு திராம் மருந்தையும் சேர்த்து கலந்து விதை நேர்த்தி செய்யலாம். வரிசைக்கு வரிசை 6 அடியும், செடிக்கு செடி 4 அடி இடைவெளியும் கொடுத்து 1 ½ அடி நீள, அகல, ஆழமுள்ள குழி எடுக்கவேண்டும்.
ஒவ்வொரு குழியிலும், நன்கு மக்கிய தொழு உரம் 10 கிலோவுடன், நிலத்தின் மேல் மண் அத்துடன் தழைச்சத்து இடவேண்டும். மண் பரிசோதனை அடிப்படையிலும் நிலத்திற்கு தேவைப்படும் சத்து, நுண் ஊட்டச் சத்து போன்றவைகளை இடலாம்.
ஒவ்வொரு குழியிலும் 4-5 விதைகளை, ஒரு அங்குல ஆழத்தில் ஊன்ற வேண்டும். விதைகள் முளைத்து வரும் வரை விதைக்குழிக்கு நீர் பாசனம் செய்ய வேண்டும். விதை சுமார் 8-10 நாட்களில் முளைத்து வரும். 3 ஆரோக்கியமான செடிகளை மட்டும் விட்டுவிட்டு மற்றச் செடிகளை பிடுங்கி விடலாம். பின்னர் மண்ணின்தன்மை, ஈரப்பதம், காற்று, வெயில் போன்ற தட்பவெப்ப சூழலை கவனத்தில் கொண்டு நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.
நிலத்தில் நேரடி விதைப்பிற்கு மாற்றாக குழி தட்டு நாற்றாங்காலில் உற்பத்தி செய்யப்படும் பீர்க்கன் நாற்றுகள் குழிக்கு இரண்டு வீதம் நடவு செய்யலாம்.
ரசாயன முறையில் பீர்க்கன்காய் சாகுபடி செய்யும் விவசாயிகள் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து 250:100:100 என்கின்ற அளவில் தண்ணீரில் கரையும் உரத்தை சொட்டு நீர் உரமிடும் கருவி மூலம் மூன்று நாட்களுக்கு கரைத்து அனுப்பலாம். இயற்கை விவசாயிகள் சொட்டு நீர் பாசன அமைப்பு அல்லது வாய்க்கால் மூலம் பஞ்சகாவ்யா அல்லது அமுதக்கரைசல் அல்லது ஜீவாமிர்தம் போன்றவற்றை உரமாக கொடுக்கலாம்.
தினசரி 1-2 மணி நேரம் சொட்டு நீர்ப் பாசன அமைப்பின் மூலம் பாசனம் செய்வது நல்லது பலனைக் கொடுக்கும். வளரும் செடியிலிருந்து கொழுகொம்பைத் தேடிப்பிடிக்க மெல்லிய ஸ்ப்ரிங் கம்பிபோன்ற அமைப்பு வெளிவரும். அப்போது மெல்லிய சணல் கயிற்றைப் பிணைத்து பந்தலில் ஏற்றிவிட வேண்டும். நிலத்தை களையில்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். 15 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு அல்லது மூன்றுகளை வெட்ட வேண்டியது தேவைப்படும். ஆண் மற்றும் பெண் பூக்கள் செடியில் தனித்தனியே அமைந்துள்ளது. பெண் பூக்களை விட ஆண் பூக்களே அதிகமாக காணப்படும். பெண் பூக்களை அதிகரித்தால் மட்டுமே நமக்கு மகசூல் கூடும். அதிக வெப்பமான சூழ்நிலையில் ஆண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையில் பெண் பூக்கள் அதிகமாகவும் இருக்கும். பெண் பூக்களை அதிகப்படுத்த எத்ரல் எனும் பயிர் ஊக்கியை 10 லிட்டர் தண்ணீரில் 2.5 மில்லி வீதம் கலந்து (250 ppm) தெளிக்க வேண்டும். எத்ரல் கரைசலை விதை இலைகளுக்கு அடுத்துஇரண்டுஇலைகள் உருவாகிய பின் ஒரு முறையும், பின்னர் வாரம் ஒருமுறை என்கின்ற கால இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இதனால் ஆண் பூக்களின் எண்ணிக்கை குறைந்து பெண் பூக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
பொதுவாக பீர்க்கனுக்கு மட்டுமன்றி காய்கறி பயிர்களை ரசாயன முறையில் உரம், பூச்சிகொல்லி,மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை பய்னபடுத்தி விளைவிக்கின்ற காய்கறிகளை விட இயற்கை முறையில் விளைவிக்கின்ற போதுதான் சுவை, மணம், சேமித்து வைக்கும் அளவு ஆகியவை அதிகரிக்கின்றது. பீர்க்கன் சாகுபடியின் மொத்த கால அளவு 140 நாட்கள். விதை ஊன்றிய பத்து நாட்களில் முளைத்துவிடும். 25-ம் நாள் களை எடுக்கலாம். 25ம் நாள் முதலே கொடி படரத் துவங்கும். 40-ம் நாள் பூ எடுத்துவிடும். பீர்க்கன் சாகுபடிக்கு மிதமான வெப்பநிலை இருக்கும் பகுதிதான் ஏற்றது. மிதமான வெப்ப நிலைதான் அதிகமான பெண் பூக்களை தோன்றச் செய்து மகசூலை அதிகப்படுத்தும். 55 வது நாளிலிருந்து பீர்க்கன் அறுவடைக்கு வந்துவிடும். 140 முதல் 150 நாட்கள் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் காய் அறுவடை செய்யலாம். ‘பெண் பிள்ளை வளர்த்தியோ, பீர்க்கன்காய் வளர்த்தியோ’ என கிராமத்து சொலவடை உண்டு. பீர்க்கு பார்க்க, பார்க்க வளரும்.
இயற்கை முறையில் பீர்க்கு சாகுபடி செய்ய அடி உரமாக மக்கிய தொழு உரம், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, சூடோமோனஸ், டிரைக்கோடர்மா கலந்து குழியில் இட வேண்டும். அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். களை எடுத்தபின் மக்கிய ஆட்டு எரு, அசோஸ்பரில்லம், பாஸ்போ பாக்ட்ரீயம் கலந்து மண்ணுடன் கலக்குமாறு இடவேண்டும். 30-வது நாளில் மண்புழு உரம் இடவேண்டும். இயற்கை முறை பயிர் வளர்ச்சி ஊக்கியாக ஒரு லிட்டர் தேங்காய் பாலுடன் ஒரு லிட்டர் மோரை கலந்து தேமோர் கரைசல் தயார் செய்து அந்த கரைசலை ஒரு வாரம் குப்பை மேட்டில் புதைத்து வைத்து பின்னர் பத்து லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி வீதம் கலந்து தெளிக்கலாம். விதைத்த 15-ம் நாள் 30ம் நாள் 45-ம் நாட்களில் தேமோர் கரைசல் தெளித்தால் பயிரின் வளர்ச்சி நன்கு இருக்கும்.
இலை கடிக்கும் வண்டுகள், காய்களைத் தாக்கும் ஈக்களின் புழுக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்த மாலத்தியான 50 EC ஒரு மில்லி அல்லது பெந்தியால் 100 EC ஒரு மில்லி பூச்சி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். DDT, லிண்டேன் தூவும் மருந்து, காப்பர் ஆக்ஸிகுளோரைடு, கந்தகத் தூள் போன்ற மருந்துகளை பீர்க்கனுக்கு பயன்படுத்தவே கூடாது. சாம்பல் நோயை கட்டுப்படுத்த கார்பண்டசிம் 0.5 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அடிச்சாம்பல் நோயைக் கட்டுப்படுத்த, நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் 10 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஒரு லிட்டர் தண்ணீரில் மான்கோசெப் 2 கிராம் கலந்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
இயற்கை முறையில் இலைப்பேன், அமெரிக்கன் காய்புழு, வெள்ளை ஈ, அசுவினி போன்றவைகளைக் கட்டுப்படுத்த ஒரு கிலோ வேப்பங்கொட்டையை இடித்து ஒரு லிட்டர் தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து கரைசலை தயார் செய்து கொள்ளவேண்டும். பின் இந்த கரைசலில் 300 மில்லி எடுத்து பத்து லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். அல்லது மூலிகை பூச்சி விரட்டு தயார் செய்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம்.
அரை ஏக்கர் நிலத்தில் கூடாரப் பந்தல் மூலம் பீர்க்கு சாகுபடி செய்ய ஆகும் வரவு செலவு கணக்கு.
உழவு - 800
அடியுரம் - 1000
பலதானிய விதைப்பு - 400
விதை மடக்கி உழ - 400
பீர்க்கன் விதை - 500
தைலமரம் - 3600
சிறிய தைல மரம் - 9300
பந்தல் அமைக்க - 1000
சுட்லி கயிறு - 2000
களை எடுக்க - 800
சொட்டு நீர் - 6000
இயற்கை இடுபொருள்
தயாரிப்பு, தெளிப்பு - 1600
அறுவடை செலவு - 1200
------------------------
28600
------------------------
மகசூல் 40000
400 கிலோ @ 10 ரூபாய்
நிகர லாபம் 11400
இதில் கொட்டார பந்தலுக்கான மூலப் பொருட்களின் மொத்த செலவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்த இயலும் என்பதனால் அடுத்த முறையிலிருந்து லாப அளவு அதிகரிக்கும். விற்பனை விலையும் மிக குறைந்த பட்சமாகவும், மகசூலும் மிகமிக குறைந்தபட்சமாகவே கணக்கிடப்பட்டுள்ளது.
காய்கறியை சந்தைப்படுத்துவதும் ஒரு கலை. வளைந்த, ஒழுங்கற்ற உருவ அமைப்புடைய, நோய் தாக்கிய, ஒடிந்த காய்களை நீக்கி, அழகாக அடுக்கி சிப்பமிடவேண்டும். காய்கறி வியாபாரிகளும், உபயோகிப்பாளரும் தரமான, தோற்றப்பொலிவை உடைய நல்ல நிறமுள்ள, பசுமை மாறாத காய்களையே பெரிதும் விரும்புவார்கள். ஆகவே அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம் (Post Harvest Technology) குறித்து கவனம் கொள்ள வேண்டியது நல்ல விலையை பெற்றுக் கொடுத்து நிகர லாபத்தை அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment