மழையை நம்பி பயிர் செய்யும் ராமநாதபுரம் விவசாயிகள், கத்திரி வெயிலுக்கு தாக்கு பிடிக்கும் மல்லிகை பூவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பூத்துக்குலுங்கும் மல்லிகை தங்களின் வாழ்க்கைதரத்தை மாற்றியுள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளனர்.
குண்டு குண்டான இதழ்கள், எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது போன்றவை ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை, கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தரும் மானாவாரி இனமாகும். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகை விவசாயம் லாபம் தரும் தொழிலாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதி விவசாயிகள்.
ஒரு ஏக்கர் இடத்தில், மல்லிகை பூச்செடி வளர்த்தால் ஆண்டு முழுவதும் தினசரி வருமானம் கிடைக்கிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 10 முதல் 20 கிலோ பூக்கள் கிடைக்கிறது. மூன்று மாத கால பராமரிக்கும் மல்லிகை நாற்றுகள் வெளிமாநிலத்திற்கு விற்பனைக்காக அனுப்பப்படுவதுடன், வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மண்ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை விவசாயிக்கு பலன் தருகிறது. இந்த மல்லிகைப்பூ செடிகள் 5 முதல் 6 மாதங்கள் வரை பூ கொடுக்கிறது. இப்பகுதி விவசாயிகள் இயற்கை உரங்களான சாணம், ஆட்டுச் சாணம், பஞ்சகாவியம் ஆகியவற்றை பயன்படுத்துவதால் மல்லிகைப் பூக்கள் பெரியதாகவும், எடை அதிகமானதாகவும் இருக்கிறது
காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும், அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைப்பதாக கூறும் விவசாயிகள், மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
Read more: http://www.ns7.tv/
0 comments:
Post a Comment