இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 13, 2015

சுரைக்காய்

குறைந்த பரப்பில் கூட நன்கு நிரந்தர அமைப்புகள் அமைத்து அதன் மூலம் சுரைக்காயை பலவித மண் வகைகளிலும் வளர்த்து 12 டன் வரை மகசூல் ஒரு ஏக்கரில் பெறலாம் என்றவுடன் செலவு அதிகமாகுமே என்று ஏங்க வேண்டாம். இதற்கு வங்கிகளின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதில் தப்பே இல்லை. சுரைக்காய்க்கு உள்ள சிறப்பே அது ஓராண்டு தாவரமாக, வேகமாக படர்ந்து செல்லும் தன்மை தான். இதனை தரையில் மற்றும் கூரைகளில் கூட படர விடலாம். மாட்டுக் கொட்டகை, பம்ப் ஹவுஸ், சேமிப்பு கூடம் இப்படி எங்கெல்லாம் கொடியை ஏற்ற முடியுமோ அங்கு கூட பந்தல் இன்றி சமாளித்து சற்று சம்பாதிக்க உதவும். இப்பயிர் வறட்சியை தாங்கி வளரும்.
சுரைக்காய்க்கு உப்பில்லை என்பது தவறு. அதில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் புரதம் 0.2 சதமும் கொழுப்புச்சத்து 0.1 சதம் கார்போ ஹைட்ரேட் 2.5 சதமும் தாது உப்புக்கள் 0.5 சதம் உள்ளன. சுரைக்காயில் பல ரகங்கள் உள்ளன. கோ.1, அர்கா பஹார், புசா சம்மர், புராலிபிக் நீளம் புசா சம்மர், புராலிக் உருண்டை மெகதூத் மற்றும் பூசா மன்ஞரி முதலியன குறிப்பிடத்தக்கவை.
நேரடியாக விதைப்பதை விட ஒரு ஏக்கருக்கு 1.200 கிலோவை பாலிதீன் பைகளில் நாற்று விட்டு வளர்த்தல் அல்லது குழித்தட்டு முறையில் வளர்த்து நடுதல் நன்று. விதைக்கு முன்பு அசோஸ்பைரில்லம் நுண்ணுயிர் ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் என்ற அளவில் ஆறின அரிசிக் கஞ்சியில் கலந்து கலவையில் நன்கு கலக்கி நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம். நடவு வயலுக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது தரமான மண்புழு உரம் 5 டன் மற்றும் 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இடவேண்டும்.
ஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் (800 கிலோ) 4 பாக்கெட் மற்றும் சூடோமோனாஸ் 5 பாக்கெட் (ஒரு கிலோ) என்ற அளவில் நன்கு மட்கிய தொழு உரத்துடன் 40 கிலோ வேப்பம் பிண்ணாக்கும் சேர்த்து கடைசி உழவிற்கு முன் இடவும். செடிக்கு செடி 2 .5 மீட்டர் வீதம் இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 மீட்டர் வீதம் இடைவெளியில் குழிகள் எடுத்து 7-10 நாட்கள் அந்த குழிகள் ஆற விட வேண்டும். ஒருஅடி நீளம், ஒருஅடி அகலம், ஒருஅடி ஆழம் உள்ள இக்குழிகள் தோண்டிட கருவிகள் உள்ளன. குழிக்கு ஒரு நாற்று நட்டால் நன்று.
பெண் பூக்கள் தோன்றிட எத்ரல் பயிர் வளர்ச்சி ஊக்கியை 2.5 மிலி எடுத்து அதனை சுத்தமான நீர் 10 லிட்டரில் கலந்து முதல் இரண்டு இலை உருவாகிய பின் முதல் முறையும் பின் வாரம் ஒருமுறை இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். உயர் விளைச்சல் ரகத்துக்கு ஏக்கருக்கு 120 கிலோ தழைச்சத்து 40 கிலோ மணி சத்து, சாம்பல் சத்து 40 கிலோ இட வேண்டும். 30 நாள் கழித்து தழைச்சத்து, சாம்பல் சத்துக்கள் மேலுரமாக இடவும். வண்டுகள் வந்தால் மீதைல் டெமடான் ஒரு மில்லியை 1 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை தெளிக்கக் கூடாது. மோனோக்ரோட்டா பாஸ் பயன்படுத்தக் கூடாது. மேலும் விபரங்களுக்கு 98420 07125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
டாக்டர் பா.இளங்கோவன்
தோட்டக்கலை உதவி இயக்குனர், உடுமலை.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites