படித்ததோ எட்டாம் வகுப்பு, சம்பாதிப்பதோ மாதம் ரூ.40 ஆயிரம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே எட்டாம் வகுப்பு வரை மட்டுமே பயின்ற விவசாயி ஒருவர், தமிழகத்தில் புகழ் பெற்ற ராமேஸ்வரம் மல்லிகையை நடவு செய்து மாதம் ரூ.40 ஆயிரம் வருமானம் ஈட்டி வருகிறார்.
ராமேஸ்வரம் மல்லி
குண்டு குண்டாக இதழ் தடிமனாக, எளிதில் உதிராமல், இரண்டு நாட்கள் இருந்தாலும் வாடி வதங்காமல் இருப்பது ராமேஸ்வரம் மல்லியின் தனிச்சிறப்பாகும். ராமேஸ்வரம் மல்லிகைச் செடி தங்கச்சி மடத்தில் உள்ள தாய்ச்செடியில் இருந்து பதியன்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த மல்லிகைப் பூக்கள், தமிழகத்தில் பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைக்கின்றன. உடுமலைப்பேட்டை, திண்டிவனம், சேலம், கோவை, சத்தியமங்கலம், மதுரை, நெல்லை என எந்தப் பகுதிக்குச் சென்றாலும், ராமேஸ்வரம் மல்லிகைக்குத்தான் மணக்கும் குணம் அதிகம்.
நீர் சிக்கனம்
இத்தகைய சிறப்புகளுக்குரிய மல்லிகை கத்திரி வெய்யிலுக்கு கூட நல்ல விளைச்சல் தருகின்ற மானாவாரி இனம். 6 மாதங்களுக்கு தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட தாக்குபிடித்து வளரும். கோடை மழை, பூச்சி தாக்குதல், மொட்டு உதிர்தல் போன்ற சிக்கல்களை மட்டும் சமாளித்து விட்டால் மல்லிகையிலும் சாதிக்க முடியும் என்பதை உடுமலைப்பேட்டை விவசாயி நிரூபித்துள்ளார்.
உடுமலைப்பேட்டையில் இருந்து ஆனைமலை செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ தொலையில் உள்ளது புங்க முத்தூர் கிராமம். அங்கு மானாவாரி பயிராக மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயி த. மலசீலன் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது:
“நான் 15 ஆண்டுகளாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ளேன். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். முன்பு தக்காளி, கத்திரி விவசாயம் செய்தேன். அதில் அதிக லாபம் கிடைக்கவில்லை.
அதனால் பிற விவசாயிகளைப் போல் இல்லாமல் மாற்றி யோசித்தேன். மக்களிடம் ராமேஸ்வரம் மல்லிகைக்கு அதிக வரவேற்பு இருப்பதை அறிந்தேன். ராமேஸ்வரம் சென்று அங்கிருந்து மல்லிகை பதியன்கள் வாங்கி வந்து மல்லிகை சாகுபடியைத் தொடங்கினேன்.
குறைந்த பரமாரிப்பு நிறைவான லாபம்
தொடக்கத்தில் 10 அல்லது 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். செடி நன்றாக வளர்ந்த பிறகு 6 மாதம் வரை தண்ணீர் இல்லாவிட்டாலும் கூட செடி தாக்குபிடிக்கும். மண் ணுக்கு ஏற்ற விளைச்சலை தரும் மல்லிகை 15 ஆண்டுகள் வரை வாழ்ந்து விவசாயிக்கு பலன் தருகிறது.
காய்கறி சாகுபடி மூலம் கிடைக்கும் வருவாயை காட்டிலும் அதிக வருவாய் மல்லிகை சாகுபடியில் கிடைக்கும். நல்ல விளைச்சலின்போது மாதம் ரூ.40 ஆயிரம் வரை இதில் சம்பாதிக்க முடிகிறது.
ஆண்டுக்கு இருமுறை கவாத்து செய்து முறையாக பராமரித் தால் நிலையான வருமானம் நிச்சயம்.
தமிழ் மாதங்களான மாசி, பங்குனி, சித்திரை, ஆவணி மாதங்களில் நல்ல விளைச்சல் இருக்கும். கார்த்திகை, மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் மல்லிகைக்கு மார்கெட்டில் அதிக தேவை இருக்கும்.
அப்போது ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை கிடைக்கும். முறையான பராமரிப்பு இருந்தால் மல்லிகையை நம்பி யார் வேண்டுமானாலும் துணிச்சலுடன் சாகுபடியில் இறங்கலாம்” என்கிறார் தன்னம்பிக்கை விவசாயி மலசீலன்.
அவரது அனுபவங்கள் பற்றி மேலும் அறிய 80120 08400 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
Post a Comment