இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, September 6, 2015

பால் பொருட்கள்

அபரிதமான பால் உற்பத்தி….ஆகவே இனி கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யும் பாலின் அளவை கட்டுப்படுத்துவதற்காக இனிமேல் வாரம் ஒருநாள் ஞாயிற்றுகிழமை மட்டும் பால் எடுக்க மாட்டோம். அன்று நீங்கள் உற்பத்தி செய்யும் பாலை என்னவாவது செய்து கொள்ளுங்கள் என 'ஆவின்’ அதிகாரிகள் வாய்மொழி கட்டளையிடவே கதிகலங்கிப் போனோம்.
ஆட்களுக்கு வார விடுமுறை விடலாம். ஆனால் ‘பால் கறக்கும் பசுக்களுக்கு’ வார விடுமுறை விட முடியுமா? ஒரு வேளை பால் கறக்காவிட்டால் பசுவும் கெட்டு, நம்மையும் கெடுத்துவிடும். இந்த அறிவிப்பு வந்ததும் எங்கள் முக நூல் குழுவான ‘கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையத்தில்’ ஒரு பதிவைப் போட்டேன். என் சக மாடுமேய்ப்பாளர்களும், நண்பர்களும் ஆலோசனைகளை அள்ளி வழங்கினார்கள். பாலின் மதிப்பைக் கூட்டுங்கள். அதன் ‘சேமிக்கும் காலத்தை அதிகப்படுத்துங்கள்’ என்பதே அதன் சாரம். அதை என்னென்ன செய்யலாம். எப்படியெல்லாம் உருமாற்றலாம் என செய்தி தேடியதில் கிடைத்தவற்றை இங்கே கொஞ்சம் பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

உணவில் வெண்மை நிறம் ஒதுக்கப்பட்ட வேண்டியது ஒன்று. தீட்டப்பட்ட வெண்மையான அரிசி, ஆலையில் இருந்து வரும் வெள்ளைச் சர்க்கரை, மைதா மாவு, ரவை என வெள்ளை லிஸ்டில் சிலர் பாலையும் சேர்க்கின்றனர். சிலர் விலக்குகின்றனர். பாலும், பாலின் பொருட்களும் பெரிதும் வெண்மையாகவே இருக்கின்றது. இந்த வெள்ளையின் ஒதுக்கல் பட்டியலில் பால் இருக்கிறதா இல்லையா என்பதல்ல நமது ஆராய்ச்சி. இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு ஒரு தீர்வுதான் இப்போதைய அவசர தேவை.
பழங்காலம் தொட்டே நாம் பாலை பாலாய் மட்டுமே பயன்படுத்துவதில்லை. வீட்டிலேயே தயிர், மோர், வெண்ணெய், நெய், சீம்பால் (கன்று ஈனும்போது கிடைக்கும் பால்) என கிராமப்புற பொருட்களை தயாரித்துக் கொண்டுதான் வந்தோம். நம் பார்வை உலகளாவியதாக விரிய, விரிய பால் படுபொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. வெளிநாட்டு பால் பொருள், வடநாட்டுப் பால் பொருள் எல்லாம் அவர்களுக்கு அவர்களின் உள்ளூர் உணவுதான். இதை எழுதப் போனால் அன்னிய நாட்டு அடிவருடி, தரகு முதலாளிகளின் கைக்கூலி என எவராவது பட்டை பூசிய மிசோராம் பேராசிரியர் காரசாரமாக பின்னூட்டும் போட்டு தாளித்துவிடப் போகிறார். நீங்கள் நல்லவரா கெட்டவரா என நாயகன் கேள்வியும் வரப்போகிறது. சுவையூட்டிய பால், கோவா, இனிப்பு கோவா, இனிப்பு தயிர், தயிர், மோர், ஸ்ரீகந்த், லஸ்ஸி, பன்னீர், பாலாடைக் கட்டி, ஐஸ் க்ரீம், குல்பி, பாலேடு, வெண்ணெய், நெய், ஊநீர்பானம் இனிப்பு வகைகளான குலோப்ஜாமூன், பால் அல்வா, பால் பாயசம், சன்னா, சம்சம், ரசகுல்லா, ரசமலாய் எனப் பெரிய பட்டியலே உள்ளது.
பாலை கறந்த ஆறு மணி நேரத்திற்குள் விற்பனை செய்ய முடிந்தால் நேரடியாக விற்பனை செய்யலாம். கறந்த பாலில் உள்ள நுண்ணுயிர்கள் நேரம் ஆக ஆக பெருகி, ஆறு மணி நேரத்திற்கு மேலானால் பாலைக் கெடுத்து விடுகின்றது. கறந்தவுடன் எவ்வளவு விரைவாக பயன்படுத்த இயலுமோ அவ்வளவு விரைவாக பயன்படுத்துவதே நல்லது. காலையில் கறந்த பாலை மாலையிலும்,மாலையில் கறந்த பாலை மறுநாள் காலையிலும் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பாலை 5 c வெப்பநிலைக்கு குளிரவைத்து விற்பனை செய்யலாம். இவ்வாறு பாலைக் குளிர வைப்பதால் அதனை 24 மணி நேரம் கெடாமல் பாதுகாக்கலாம். குளிர வைக்கப்படும் போது பாலில் உள்ள நுண்ணுயிர்கள் (பேக்டீரியாக்கள்) அழக்கப்படுவதில்லை. ஆனால் அவைகளின் எண்ணிக்கை அதிகமானது.

பாலை 4 நாட்களிலிருந்து 1 வாரம் வரை பாதுகாக்க வேண்டுமானால் பாஸ்சரைசேஷன் செய்யவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் இன்னொரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி 63 C அளவிற்கு சூடு செய்யவேண்டும். பாலை நேரடியாக சூடு செய்யக்கூடாது.
30 நிமிடம் சூடு செய்த பின்னர் அறை வெப்ப நிலைக்குக் குளிரச் செய்து பின்னர் 5 c அளவிற்கு குளிரச் செய்து பால் பாக்கெட்டுகளில் அடைத்து சீல் செய்து வைக்கலாம்.
கறந்த பால் 3 – 6 மணி நேரம் கெடாமல் இருக்கும்.
குளிரூட்டிய பால் 24 மணி நேரம் கெடாமல் இருக்கும்.
பாஸ்சரைசேஷன் பால் 4 முதல் 7 நாட்கள் கெடாமலிருக்கும்.
இந்த பாஸ்சரைசேஷன் செய்யத் தனியாக இயந்திரங்கள் உள்ளன.

100 மில்லி பசும்பாலில் என்னென்ன உள்ளன?
87.2 தண்ணீர்
மீதமுள்ள 12.5 திடப்பொருள்
இதில் 4% கொழுப்பு
மீதம் 8.5 கொழுப்பற்ற திடப்பொருள் SNF (Solid Not Fat)
இதில் 5% லேக்டோஸ்
3.5 % புரதம்
87.2 + 12.5 = 99.7 மட்டும் தானே வருகின்றது. மீதமுள்ள 0.3% சாம்பல்.
கருப்பு வெள்ளை கலந்த நிறமுறை HF எனப்படும் பிரீசியன் ரக பசுவின் பாலில் 3.5% கொழுப்பு உள்ளது.
சிவலை நிறத்திலுள்ள ஜெர்ஸி இனப் பசுக்களின் பாலில் 4.5% கொழுப்பு உள்ளது. சிமிழ் அல்லது திமில் அமைப்பு கொண்ட இந்திய இனக் கறவைப் பசுவில் 5.5% கொழுப்பு உள்ளது. ஆனால் கழுதைப்பாலில் 6.5% கொழுப்பு உள்ளது.
பால் பல்வேறு ஊட்டச் சத்துக்கள் அடக்கியதாக இருப்பதால் ஆரோக்கிய நல் வாழ்விற்கு பால் அவசியம் தேவைப்படுகின்றது. நம் நாட்டில் பால் உற்பத்தி பெருகி, இன்று உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஆனால் நம் கடந்தகால பால் வரலாறு அவ்வளவாகச் சுவைக்காது. அமெரிக்காவிலிருந்து பால் பெளடரை கப்பல் கப்பலாக இலவசமாக பெற்றோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பால் பெளடர், உலர் வெண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால் இன்று உலகில் சிறந்த பால் பொருட்கள் ஏற்றுமதியாளர் வரிசையில் இருக்கின்றோம். பால் விலையை அரசும் அரசின் நிறுவனங்களும் மட்டுமே நிர்ணயித்த காலம் மலையேறி இப்போது தனியார் நிறுவனங்களும் பால் தொழிலில் ஈடுபட்டு பாலுக்கு சற்று கூடுதலான விலை கொடுக்கின்றது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் நிலவி வரும் அபரிதமான பால் உற்பத்தி ‘பால் உற்பத்தியாளர்களை’ மாற்று சிந்தனையை நோக்கி தள்ளுகின்றது. ஆகவேதான் பால் பொருட்களைப் பற்றிய சிந்தனை எழுகின்றது.

பொதுவாக பாலினால் செய்யக்கூடிய பொருட்கள்
1. அதிக கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் - நெய், வெண்ணெய், க்ரீம்
2. அதிக புரதச் சத்துள்ள பால் பொருட்கள் - சீஸ், பீட்சா,பன்னீர்
3. குளிர்ந்த, உறைந்த பால் பொருட்கள் – நறுமணப்பால், பால் ஐஸ், ஊநீர் பானம், ஐஸ்கிரீம், குல்பி, மில்க் கேக்
4. பால் இனிப்பு பொருட்கள் – கோவா, பேடா, பர்பி, கலாகந்த், குலோப் ஜாமூன், ரசகுல்லா, ரசமலாய்
5. உறைமோர் ஊற்றித் தயாராகும் பால் பொருட்கள் – தயிர், மோர், லஸ்சி, ஸ்ரீகந்த், யோகர்ட்
அத்தனை தயாரிப்பு முறைகளும் பெரிய இயந்திரங்களின்றி சிறிய இயந்திரங்களைக் கொண்டு எந்த அளவிலும் செய்ய சாத்தியமானவை.
நெய், வெண்ணெய், க்ரீம் என மூன்றும் தயார் செய்ய, காய்ச்சாத பாலிலிருந்து க்ரீம் செபரேட்டர் எனும் கருவி கொண்டு பாலேடு எனும் க்ரீமை பிரிக்கலாம். இதனை நாட்டுப்புறத்தில் பாலை அரைப்பது எனக் கூறுவர். 4% கொழுப்பு சத்துள்ள 100 லிட்டர் பாலிலிருந்து 10 கிலோ க்ரீம் கிடைக்கும். பாலை க்ரீம் செப்பரேட்டர் இயந்திரம் மூலம் சுழற்றும் போது க்ரீமாகவும், கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவும் பிரிகின்றது.
க்ரீமானது நெய் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுகிறது. க்ரீம் நீக்கப்பட்ட பால் கட்டி தயிர், சுவையூட்டிய பால் தயார் செய்ய பயன்படுகின்றது.
வெண்ணெயில் பல வகைகள் உள்ளன. பதப்படுத்திய க்ரீம், நுன்ணுயிர்கள் சேர்க்கப்பட்ட க்ரீம், நுண்ணியிர்கள் சேர்க்கப்படாத க்ரீமிலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய், உப்பு சேர்த்த வென்ணெய், உப்பு சேர்க்காத வெண்ணெய் என நறுமணத்துடனும், நீண்டு நாட்களுக்கு கெடாமலுமிருக்கும். பின் டின் செய்து அல்லது பட்டர்பேப்பரில் பேக் செய்து -23 முதல் -29 C யில் வைத்தால் நீண்ட காலம் கெடாமல் வைக்கலாம்.
பசு அல்லது எருமைப்பாலிலிருந்து உருவாக்கப்பட்ட வெண்ணெய்க் கொழுப்பே நெய் ஆகும். மற்ற அனைத்து பால் பொருட்களைவிட நெய்யில் தான் கொழுப்பு அதிகம். வைட்டமின் ஏ, டியும் அதிகம்.  வீட்டில் பாலை காய்ச்சி பின்னர் உறை ஊற்றி உறைய வைத்து தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய்ப் பிரித்து, வெண்ணெயை காய்ச்சி நெய்யாக மாற்றுகிறோம். இது நாட்டு முறை. வீட்டளவில் உற்பத்தி செய்ய ஏற்றது. அடுத்தது க்ரிமெரி முறை (creamery method)/ எவர்சில்வர் பாத்திரத்தில் வெண்ணெயை நீராவியால் சூடுபடுத்த வேண்டும். மிதமான சூட்டில் வெண்ணெய் உருகும் வரை துடுப்பினால் கிளறிவிட வேண்டும். இம்முறையில் நெய் கருகாமல் ஒரே மாதிரி தரத்துடன் இருக்கும். அடுத்தது முப்பிரி நிலை Pre stratification method. வெண்ணெயை 80-85 C யில் 15-30 சூடுபடுத்தி அப்படியே விட்டுவிட வேண்டும். முதலில் தயிர் துகள்களும், இரண்டாவதாக கொழுப்பும், மூன்றாவதாக மோரும் பிரிந்திருக்கும். மோரை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் 110 – 120 c அளவு சூடு செய்தால் உருக்கிய நெய் கிடைக்கும். 100 லிட்டர் 4% கொழுப்புச் சத்து உள்ள பாலில் 4 கிலோ நெய் செய்யலாம்.

அடுத்தது அதிக புரத சத்துள்ள சீஸ் எனும் பாலாடைக்கட்டியும், பன்னீரும் நல்ல விற்பனை வாய்ப்புள்ள பொருட்கள். பாலாடைக்கட்டி (cheese) என்பது பாலை உறைய வைத்து, பாலிலுள்ள புரதத்தை தகுந்த முறையில் கெட்டியான கட்டிகளாக மாற்றுவது. உலகில் 400 க்கு மேற்பட்ட வகைகளில் சீஸ் தயாரிக்கப்படுகிறது. மொசரல்லா சீஸ் (Mozarella Cheese), காட்டேஜ் சீஸ் (cottage cheese) ரிகோட்டா சீஸ் (Ricotta cheese), செட்டார் சீஸ் (Chattar cheese) போன்றவை பிரபலமானவை. பாலை 4 C க்கு குளிர வைத்து, 1 லிட்டர் பாலுக்கு 20% லாக்டிக் அமிலம் 16 மில்லி சேர்த்து, 25 லிட்டர் பாலுக்கு 1 கிராம் சேர்க்க வேண்டும். பின் வெப்ப நிலை 4 C யிலிருந்து 27 c க்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திப், பாலுறைந்து, வே எனும் ஊநீர் பிரியும். பின்னர் இதில் உப்பு சேர்த்து 100 c கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதும் ரப்பர் போல மாறும். இதுதான் சீஸ். இதனை தொழில்முறையில் செய்ய வல்லுநர்களின் உதவி தேவை.
பாலைத் திரிய வைத்து தயாரிக்கப்படும் மிருதுவான பால் பொருள் பன்னீர் ஆகும். வாயகன்ற பாத்திரத்தில் 3% கொழுப்புச் சத்துள்ள பாலை எடுத்து 5 நிமிடம் 22 C க்கு சூடுபடுத்திப் பின் குளிரச் செய்து, அதில் 2% சிட்ரிக் அமிலம் சேர்த்து 30 நிமிடம் அப்படியே விட வேண்டும். பால் திரிந்து இளம் பச்சை நிறத்தில் ஊநீர் பிரியும். இதனை வடிகட்டி எடுத்தபின் கிடைப்பது பன்னீர். இதனை நூல் துணியில் கட்டி 3 மணி நேரம் கழித்து அழுத்தினால் மீத நீரும் வெளியேறும். பின்னர் இதனை செங்கல் துண்டுகள் போல அறுத்து 5 C யில் குளிர் நீரில் வைக்க வேண்டும். பின்னர் ¾ அங்குல க்யூபுகளாக வெட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.
குளிர்ந்த, உறைந்த நிலையில் பாலை விற்பனை செய்வதில் ஐஸ்க்ரிமும், நறுமணப்பாலும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளவை. நறுமணப்பால் (flavoured milk) தயார் செய்ய வெண்ணெய் பிரித்த பாலே சிறந்தது. பாலுடன் 7% சர்க்கரை சேர்த்து 63 C க்கு காய்ச்சி 30 நிமிடம் பதப்படுத்தி அத்துடன் நிறமூட்டும் பொருள், வாசனைப் பொருள் சேர்த்து பாதாம் பால், பிஸ்தா பால், ரோஸ் மில்க், சாக்லேட் பால், பூட்ரூட் பால் என பல வகையில் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். ஐஸ் க்ரீமிற்கு அழகான தமிழ் பெயர் பால்பனி குழைவு. அந்த வார்த்தையிலே அதன் அர்த்தம் தொனிக்கின்றது. 10 சதவிகித கொழுப்புச் சத்தும், 12 சதவிகிதம் இதர திடப்பொருளும் நிறைந்த ஐஸ்க்ரீம் மனித வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அதிகம் நிறைந்தது. சிறிய குடிசை தொழில் முதல் பெரும் நிறுவன அளவிற்கும் இந்தத் தொழிலை செய்யலாம். ஐஸ்க்ரீமின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து நல்ல வாய்ப்புள்ள பால் தொழிலாக உள்ளது. பாலிலிருந்து பல வகைகளில் ஐஸ்க்ரீம் தயார் செய்யலாம். நறுமண எஸன்ஸ், கலர் கலந்தது, கோகோ அல்லது சாக்லெட் கலந்தது, பழம் மற்றும் பழரசம் கலந்தது, பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உயர் வகை பருப்புகள் கலந்தது எனப்பல வகைகளில் தயாரிக்கலாம்.

ஒரு லிட்டர் ஐஸ்க்ரீம் தயார் செய்ய 700 மில்லி பால், 50 கிராம் வெண்ணெய், 50 கிராம் பால் பெளடர், 150 கிராம் சர்க்கரை, 3 கிராம் நிலைப் படுத்தும் பொருள் (சோடியம் அல்ஜினேட்), 2 கிராம் குழம்பாக்கும் பொருள் ஆகியவை தேவை. பெரிய அளவில் ஐஸ்க்ரீம் தயார் செய்ய பால் பதப்படுத்தும் இயந்திரம் Pasteurizerம் க்ரீம் செபரேட்டர், ஹோமோஜீனைஸம், குளிரூட்டும் சில்லர், ஐஸ்க்ரீம் ஃப்ரீஜர் போன்றவை தேவை. ஐஸ்க்ரீம் கலவையினுள் காற்றை உட்புகுத்துவதனால் அதன் அளவு அதிகரிப்பதுடன் ஐஸ்க்ரீம் மிருதுவாகவும், சிறுசிறு கட்டிகள் உருவாகாமலும் தடுக்கிறது.
இனிப்பு பொருட்கள் பலவற்றில் ஆதாரமே பால்தான். பால் ஸ்வீட்டுக்கு ஆதாரம் ‘கோவா’. கோவா எனப்படுகின்ற பால் பொருள் பாலை நன்கு சூடுபடுத்தி கிளறுவதன் மூலம் கிடைக்கின்ற திடப்பொருள். பாலின் அளவை 20% சுருக்கப்பட்டு தயார் செய்யப்படுவதே கோவா. கோவாவில் 20% கொழுப்பு சத்தும், 60-70 சதவிகித திடப்பொருளும் இருக்கும். 100 லிட்டர் பசும்பாலிலிருந்து 18-20 கிலோ வரை கோவா கிடைக்கும். வாயகன்ற தட்டையான பாத்திரத்தில் பாலை காய்ச்சிக் கொண்டே தொடர்ந்து கிளர வேண்டும். கோவா செய்வதற்கெனவே நீராவி சூட்டில் இயங்கும் பாத்திரங்கள் உள்ளன. பாலில் 2.5 பங்கு குறைந்தும் பால் பிரியத்துவங்கும்.

அப்போது பாலின்  நிறம் மாறும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருந்தால் தான் பால் கலவை கருகி, தீய்ந்து போய்விடாமல், பாத்திரத்தில் ஒட்டாமல் பிரியும். 0.1 சதவிகிதம் சிட்ரிக் அமிலம் சேர்த்தால் குருணை போன்ற கோவாவைப் பெறலாம். இந்த கோவாவை கொண்டுதான் மில்க் பர்பி, குலோப் ஜாமூன், காலா ஜாமூன், குல்கந்த், பேடா போன்ற பல்வேறு ஸ்வீட் வகைகள் தயார் செய்யப்படுகின்றது. பசும்பாலை பொங்கும்வரை சூடு செய்து எலுமிச்சை சாறு ஊற்றி பாலைத் திரிய வைத்து துணியில் வடிகட்டி ‘சன்னா’ பிரித்து அதிலிருந்து ரசகுல்லா செய்யலாம். சன்னாவை சிறு துண்டுகளாகப் பிய்த்து போட்டு சர்க்கரை தூவி இளஞ்சூட்டில் கிளறி ஏலக்காய்த் தூள் சேர்த்து எண்ணெய் தடவிய தட்டில் ஆற வைத்து அச்சில் ஊற்றி எடுப்பது சந்தேஸ்.
உறையூற்றி தயார் செய்யப்படும் பால் பொருட்களில் இனிப்பு தயிர் (யோகர்ட்) என்பது பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் பொருள். ஸ்டெப்டோகோக்கள், லேக்டோ பேசில்லஸ் நுண்ணுயிர்கள் பயன்படுத்தி இனிப்புத் தயிர் செய்யலாம். சாதா தயிருக்கும் இனிப்பு தயிருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. சாதா தயிரில் பாலிலுள்ள அளவே கொழுப்பு மற்றும் இதர திடப்பொருள் இருக்கும். ஆனால் இனிப்பு தயிருக்கு கொழுப்பு இல்லாத இதர திடப்பொருள் 11-12% அளவிற்கு உயர்த்தினால்தான் தரமும் மிருதுதன்மையும் உயரும். சாதாரண தயிருக்கு பல்வேறு நுண்ணுயிர் கலவையை உபயோக்கின்றோம். ஆனால் இனிப்பு தயிர் தயாரிக்க எஸ்.தெர்மோ பில்லஸ், எஸ்.பல்கேரிகல் ஆகிய நுண்ணுயிர்களை 1:1 என்கின்ற விகிதத்தில் கலந்து அந்த கலவையைப் பயன்படுத்த வேண்டும். சாதாரண தயிரில் நுண்ணுயிர் வளர்ந்து தயிராக 15 மணி நேரம், 37 C வெப்பநிலை தேவை. ஆனால் இனிப்பு தயிர் 42 C வெப்பநிலையில் 4 மணி நேரத்தில் தயிராகிவிடும்.

இனிப்புத் தயிருள்ள நுண்ணுயிர்கள் லேக்டோஸ் எனப்படும் பாலிலுள்ள சர்க்கரைப் பொருளைச் சிதைத்து குளுகோஸ் மற்றும் கேலக்ஸோஸ் ஆக மாற்றுகின்றன. லேக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் கூட இனிப்புத் தயிர் சாப்பிடலாம். இனிப்பு தயிர் குடல் அசைவுகளை கட்டுப்படுத்தி உணவு ஜீரணமாவதை மேம்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, புற்றுநோய், மலச்சிக்கல், ரத்தத்தில் கொழுப்பு சேர்வது போன்ற அபாயங்களிலிருந்து இனிப்பு தயிர் நம்மை பாதுகாக்கிறது.
சாதாரண தயிர் என்பது உறை ஊற்றி புளிக்க வைத்த பால் பொருள். நமது இந்திய உணவு வகைகளில் பெரிய பங்கு வகிக்கின்றது. வெண்ணெய், நெய், மோர் தயாரிக்க மூலப் பொருளாக இருக்கின்றது. தயிருடன் சர்க்கரை, ஐஸ்கட்டி, குளிர்ந்த நீர், சாட் மசாலா கலந்து தயாரிக்கப்படும் குளிர்பானம் லஸ்சி.இது வடக்கு, வடமேற்கு இந்தியாவில் மிக பிரபலமான குளிர்பானம். ஸ்ரீகந்த் என்பது தயிரிலிருந்து நீரை நீக்கிவிட்டு அதனுடன் சர்க்கரை, மணமூட்டி, நிறமூட்டி, கலந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை. இதனை சிறுசிறு கப்புகளில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம்.
நம்முடைய பலம், பலவீனம் இவற்றை நன்கு தெரிந்து விற்பனை வாய்ப்பை கவனித்து, எந்தப்பொருள் செய்யலாம் என முடிவெடுத்து அதற்கான பயிற்சி, கல்வி அறிவு, நிறுவனங்களை பார்வையிடல் அனுபவமிக்க பணியாளர்கள் போன்ற பணியை முடிவு செய்த பின், பால் பொருட்கள் தொழிலில் இறங்கலாம். பாலின் விலையில், உற்பத்தியில் திடீரென ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்தால் எழும் பாதிப்பு போல, பால் உப பொருட்கள், பால் படுபொருட்கள் உற்பத்தியில் இல்லை. உலகில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் கிராம குடிசைத் தொழில் வரையிலும் பல்வேறு அளவு, முதலீட்டில் பால் பொருட்கள் உற்பத்தித் தொழில் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. ஆகவே முறையாக திட்டமிட்டுச் செய்தால் பால்பண்ணை பொருட்கள் தொழிலில் வெற்றி நிச்சயம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites